(ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026இல் இரண்டாம் பரிசு ரூபாய் 5000 பெற்ற சிறுகதை)

ஷிப்ட் முடிந்து மெயில் பார்த்தேன், 2 மாத லீவ் கிடைத்த செய்தி!! கல்ஃப் வந்து 3 வருஷம் முடிந்து முதல் தடவ ஊருக்குப் போறேன். மதுரை பக்கத்துல மேலூர். ஊர் என்னமோ கிராமம் தான் ஆனா படத்துல வர வயல்வெளி பம்புசெட்டு ஒன்னும் கெடையாது. ஒரே ஒரு கண்மாய். அதுல தான் ஆடு மாடு நாங்க எல்லாம் குளிப்போம். பெருசா பொழப்பு தளப்புன்னு ஒன்னும் இருக்காது. அதான் பயலுக பாதி பேரு கம்பிகட்ட இங்குட்டு வந்துறானுங்க. என்னலாம் வாங்க முடியுமோ எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு ஊர் போய் சேந்தேன்.
ஒன்னோட அத்தாச்சிமாருங்க வரதுக்குள்ள உன் தங்கச்சிக்கு வாங்குனதெல்லாம் தனியா எடுத்து வை. அவளுக வந்தாளுங்கன்னா, எங்களுக்கெல்லாம் இத்துனூண்டு உங்க தங்கச்சிக்கு மட்டும் பெரிய செண்டு, பெரிய தைலம், முட்டாயினு மொனங்கியே எல்லாத்தையும் லவுட்டிட்டு போய்ருவாளுக என்று வழக்கமான பாட்டை பாட ஆரம்பித்தாள் அம்மா. ஊரில் சந்தைக்கு போயிட்டு எதாவது வாங்கிட்டு வந்தாலே தங்கச்சிக்கு எடுத்து வைக்கும் அம்மா. அத விட கொடும அந்த பிள்ள வாங்கிட்டு வர தின்பண்டத்த அதுகிட்டயே போகும்போது கொடுத்துவிடும். அப்டி இருக்கும்போது வெளிநாட்டுல இருந்து வாங்கிட்டு வந்தத எங்க அம்மா சும்மாவா விடும்!
ரொம்ப புத்திசாலித்தனம் என்று, எல்லாருக்கும் தனித்தனியாவே வாங்கிட்டு வண்டேன் என்று காளி, கார்த்தி, கௌசல்யா என்று மூன்று பெயர்கள் எழுதப்பட்ட மூன்று பார்சல்களையும் பெட்டியில் இருந்து எடுத்து அம்மா முன்பு வைத்துவிட்டு என்னுடைய சட்டையைக் கழட்டி அருகில் இருந்த கண்ணாடியில் மாட்டினேன். அப்பா தனக்கு வாங்கி வந்திருந்த கோல்ட் ஃபிரேம் வாட்ச்சில் மணியை மாற்றிக்கொண்டு இருந்தார். மூன்று பார்சல்களையும் பிரித்த அம்மா, அண்ணன்கள் இருவரின் பார்சல்களில் இருந்தும் மிட்டாய், தைலம், பாதாம் பருப்பு என்று எல்லாவற்றிலும் கொஞ்சத்தை அள்ளி தங்கையின் பார்சலில் போட்டாள்.
ஏண்டி, அவன்தான் எல்லாத்துக்கும் ஒரே மாதி வாங்கிட்டு வந்துருக்கான்ல இப்ப நீ ஏன் இந்த குட்டிக்கலாட்டா பண்ற? என்றார் அப்பா.
இவளுகளுக்கு என்ன கொறையாம்? என் புள்ளைங்க ரெண்டும் சம்பாரிச்சு கொட்றத நல்லா தனக்கர திங்கிறாளுக. பாவம் ஒத்த பொம்பளப் புள்ள 40 மயிலுக்கு அங்கிட்டு கெடக்கா. நாமதானே பண்ணணும் என்றவாறே மூத்த அண்ணனுக்கு வாங்கி வந்த சேவிங்க் ரேசரை எடுத்து தங்கையின் பார்சலில் போடவும் எனக்கே கோபம் வந்தது,
அம்மா! அம்மா! அது அண்ணே ஆசையா கேட்டுச்சுன்னு வாங்கிட்டு வந்தேன். அதான் மச்சானுக்கும் ஒண்ணு வாங்கிட்டு வந்துருக்கேன்ல. அப்றம் ஏன்?
உங்கள மாதியா உங்க தங்கச்சி மாப்ள, ஏதாவது ஒரு நல்ல ஜாமான் வாங்கிட்டு வந்தாலும் அக்கா வீட்டுக்காரருக்கு கொடுத்துராராம். அதான் ரெண்டா போட்டேன், இவ்ளோ சலிச்சுக்கிட்டெல்லாம் நீ ஒண்ணும் கொடுக்க வேணாம். என் புள்ளைக்கு எனக்கு வாங்கிக் கொடுக்கத் தெரியும் என்று பார்சலை என் முன் வைத்தாள் அம்மா. சரி நமக்கு வாங்கிட்டு வந்தத அண்ணனுக்குக் கொடுப்போம் என்று இன்னொரு சூட்கேசைத் திறந்தேன்.
செல்வி!.. அம்மா… செல்வி! பர்வீன் இங்க வந்தாளாமா?
இங்க வரலயே அண்ணே !! என்றவாறே அம்மா எழுந்து வெளியே செல்ல நானும் பின் தொடர்ந்தேன்.
கும்புடுறேன் மாமா.
மாஷா அல்லாஹ். மகராசனா இருய்யா. இன்னைக்கித்தான் ஊர்ல இருந்து வந்தியா என்றார் மாமா. ஓட்டமும் நடையுமாக வந்திருப்பார் போல. மூச்சு வாங்கப் பேசினார். ஆனால் அவர் குரலில் ஒரு பதட்டமும் இருந்தது.
சரிம்மா இங்க வரலனா அந்த வீட்டுக்குத்தான் போயிருப்பா. நான் அங்க போயி ஒரு எட்டு பாக்குறேன். எல்லாம் என் நஸீப் ( தலைவிதி ) அல்லாஹ்தான் பாதுகாக்கணும் என்று பெருமூச்சு விட்டபடி, நடக்க உத்தேசித்தார்,
அண்ணே இருங்க, ஏங்க கொஞ்சம் அண்ணன் கூட போயிட்டு வாங்க என்றாள் அம்மா. அட ஏம்மா, மூணு வருஷம் கழிச்சு மாப்ள வந்துருக்கான். அவனப் பாருங்க, இதென்ன புதுசாவா நடக்குது. என் கெரகம் என்னோடா போட்டும்.
அம்மா அப்பாவை முறைக்க, செருப்பை தேடிக்கொண்டு இருந்த அப்பா சட்டென செருப்பு போடாமல் மாமாவின் பின் நடந்து போனார். இருவரும் பெரியபள்ளியை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள். வீட்டிற்குள் சென்று சட்டையைப் போட்டுக் கொனண்டு நானும் விருட்டெனக் கிளம்பினேன்.
கள்ளக்காரத் தெருவையும், தைக்கா தெருவையும் தாண்டி சி.எஸ்.சி ஸ்கூல் ரோட்டைக் கடந்தால் முருகன் சலூனை ஒட்டியது போல் இருக்கும் மேலூர் முகைதீன் பெரிய பள்ளிவாசல். அதற்கு அப்படியே பின்புறம் இருக்கிறது சாகுல் மாமாவின் வீடு. சாகுல் மாமா கல்ஃப் சென்று 10 வருடம் கடின உழைப்பில் கட்டிய வீடு, வீட்டின் முகப்புச் சுவரில் ‘மாஷா அல்லா’ என்று பச்சை நிற டைல்ஸ் ஒட்டப்பட்டிருக்கும், அதைச் சுற்றியும் வெள்ளை கலர் டைல்ஸ் இரண்டு பக்கச் சுவற்றிலும் ஒட்டப்பட்டிருக்கும். வீட்டின் மேல் ஜீனத்தம்மாள் மன்ஜில் என்று பெரிதாக எழுதப்பட்டிருக்கும். தினமும் அவற்றை அக்கா முன்புறம் இருக்கும் டைல்ஸை தண்ணீர் வைத்து துடைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்.
அவள் வீட்டை துடைப்பதைப் பார்த்தால் எதையோ தொலைத்துவிட்டு தேடுவது போல் இருக்கும் ஒவ்வொரு இன்ச்சாக துடைப்பாள். மாமா ஊர்ல இருந்தப்ப கட்டுன வீடுடா. இதான் உங்க மாமானு எத்தன நாள் இதுகூட பேசியிருக்கேன் தெரியுமா? இப்பவும் யாரும் இல்லனா இது கூடத்தான் பேசுவேன் என்று ஒரு புன்னைகையுடன் வீட்டைத் துடைத்துக்கொண்டே அக்கா சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது.
சொத்துப் பிரச்சனைல சிவகங்கைல இருந்து மேலூர்க்கு குடி வந்தபோது, அக்காவும் சாகுல் மாமாவும் இல்லை என்றால் விக்கித்துத்தான் போய்ருப்போம். நல்ல பிள்ளடா இன்னைக்கி தானே வந்துருப்பிங்க. மதியம் சேத்து சமைக்கிறேன். இங்க வந்து சாப்டுங்க என்று சொன்னதும் அம்மா பூரித்து விட்டாள். சொன்னது மட்டும் இல்லாமல் நாங்க சங்கடப்படுவோம் என்று சமைத்ததை எங்க வீட்டிற்கே கொண்டுவந்து வைத்துவிட்டும் போய்விட்டாள் அக்கா.
ராசா, ரோட்டுப் பக்கமாவா போற? மாமாக்கு இந்த சாப்பட்ட கொடுத்துறேன். பாப்பா தூங்குறா. இல்லனா நானே போய்ருவேன். இதான் பர்வீன் அக்கா என்னிடம் பேசிய முதல் வார்த்தை. அக்கா தானேடா ஏன் கூச்சப்படுற. சும்மா ஜாலியா பேசுடா. உங்க அம்மா கூடலாம் எவ்ளோ வாயாடுற ! என்று என்னை இயல்புக்கு கொண்டு வந்ததும் அவள்தான். ஒடிசலான உடம்பு. கன்னத்தில் குழி விழும் சிரிப்பு. தலைமுடியை மட்டும் சேலைத் தலைப்பில் மூடி இருப்பாள்.
நான் பத்தாவது ஆர்.சி ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தேன் அங்க செபஸ்டின்னு ஒரு சார் ரொம்ப அழகெல்லாம் இல்ல. ஆனா வெள்ளச் சட்டை கருப்புப் பேண்டுதான் எப்பவும் போடுவாறு. அதுவும் இன் பண்ணிருப்பாரு பாரு அவரப் பாத்தாலே ஒரே வெக்கமா வரும், எப்படா என்ன பாப்பாருன்னு இருக்கும். அவருக்கு தெரியுமான்னு தெர்ல? அவருக்கு கல்யாணம் ஆன அடுத்த நாளே நான் பள்ளிக்கூடத்துக்குப் போறத நிறுத்திட்டேன். ரெண்டு வருஷம் கூட வீட்டுல இல்ல. உங்க மாமாவ கட்டி வச்சுட்டாங்க என்று தன் முதல் காதலை என்னிடம் வெட்கம் பொங்க பகிர்ந்துகொள்ளும் அளவு மாறி என் சொந்த சகோதரியை விட ஒன்றிப்போய் இருந்தாள்.
அப்பா சபரிமலைக்குச் செல்லும்போது அம்மாவுக்கு இணையாக அத்தனையும் செய்தாள் அக்கா, 20 பேருக்கு அன்னதானம் ஒற்றை ஆளாய் சமைத்தாள். துலுக்கச்சின்றத மறந்து குடியான வீடாவே மாறிடுவா போலயே! அக்காவின் காதுபடவே பேசினாலும் அக்கா ஒருபோதும் அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாள். அவள் எங்கள் வீட்டில் ஒருத்தியாய் இருந்தாள். அப்பா மலைக்குச் சென்றபின் ‘பிரதோஸை’ மடியில் போட்டுக்கொண்டு அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள்.அக்கா.
நல்லது பண்ற எந்த சாமியும் எனக்கு சரிதான்கா. எனக்காக உங்க சாமிக்கிட்ட வேண்டிக்க. சேலை முந்தாணியில் கண்களை துடைத்தபடி விசும்பினாள். அக்கா அழுவதை அன்றுதான் பார்த்தேன். அக்காவின் பிரதோஸ் பாப்பா அக்காவின் குழந்தை இல்லை என்றும் அது மாமாவின் சொந்தத் தங்கையின் நான்காவது பெண் குழந்தை என்றும், பிள்ளை இல்லாத அக்கா பிரதோஸை எடுத்து வளர்க்கிறாள் என்று பின் அம்மா என்னிடம் சொன்னாள். அக்காவை இன்னும் அதிகமாகப் பிடித்தது எனக்கு அன்றில் இருந்துதான்.
பிரதோஸ்க்கு மூன்று வயதாக இருக்கும்போது அக்கா மாசமாக இருப்பதாக முதலில் அம்மாவிடம்தான் சொன்னாள். மாமா பிரான்மலைக்கு கந்திரி கொடுப்பதாக வேண்டிக்கொண்டார். சொந்தத் தங்கையை விட நன்றாக அம்மா அக்காவை பார்த்துக்கொண்டாள். எல்லாம் பிரதோஸ் வந்த நேரம் என்று நிமிடத்திற்கு ஒரு முத்தம் கொடுப்பாள்.
மாமாவின் உதவியால் எனக்கு கல்ஃப்பில் வேலை கிடைத்தது. ஊருக்கு கிளம்ப 10 நாட்கள் இருக்கும் போதுதான் அக்காவிற்குக் கொட்டும் மழையில் வீட்டுலயே அபி பிறந்தான். அபி பிறந்த மூன்றாம் நாள் இவங்கெல்லாம் மனுஷங்களா? இப்டி அடுத்தவன் சொத்துக்கு அலையுறவன் எதுக்கு 5 வேள தொழுகணும். அல்லாதான் உங்கெளுக்கெல்லாம் கூலிய கொடுக்கணும். ஆவேசம் அடங்காமல் தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் அக்கா.
பச்ச ஒடம்புக்காரி ஏண்டி இப்டி ரோட்டுல நின்னு கத்துற ?
அப்பறம் என்னக்கா! ரத்தப்பாடுபட்டு அவர் கட்டுன வீட்டுல பங்கு கேட்டு வந்துருக்காணுக!
என்னடி சொல்லுற?
ஆமாக்கா எல்லாம் மூத்தவரு பொண்டாட்டி இருக்காளே அவுசாரி முண்டை எல்லாம் அவ பண்றதுதான்…
வீடு அவுங்க அம்மா பேர்ல இருக்காம், அதுனால அத மூணு பங்கா போடணுமாம். சொத்து வேணும்னா என் புருஷன்ட படுத்து வாங்கிட்டுப் போடி என்று மேற்கு நோக்கிக் கத்தினாள். நான் வெளியே வந்ததும் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். நீ போயி புள்ளையப் பாரு என்று அம்மா சொன்னதும் முணங்கிக் கொண்டே சென்றாள். கண்டிப்பாக அது கெட்ட வார்த்தையாகத்தான் இருக்கும் என்று தோணியது.
கொஞ்சமாது அல்லாவுக்குப் பயந்து நடக்கனும். மறுமை நாள்ல அவன்ட்ட பதில் சொல்லணும்றத மறந்துறக் கூடாது. இந்த ஊர்ல இருக்க எல்லாருக்கும் அந்த வீடு சாகுல் கட்டுனதுனு தெரியும். அப்டி இருக்கும் போது திடீருன்னு வந்து சொத்துல பங்கு கேக்குறது சரி இல்ல. மேலூர் ஜமாத்தின் பெரியவர்தான் முதலில் ஆரம்பித்தார்.
அதலாம் அப்டி சொல்ல முடியாது. எங்க அம்மா உயிரோட இருக்கும்போது கட்டுன வீடு, எங்கப்பா ஏதாவது கொடுத்துட்டுப் போய்ருக்கலாம். ஏன் நாங்களும்தான். அதுக்கு அப்பப்ப காசு கொடுத்தோம். அத மிச்சம் புடுச்சும் கட்டிருக்கலாம் ? என்றார் சாகுல் மாமாவின் அண்ணன் சலீம்.
அப்டிலாம் நெஞ்சுல ஈரம் இல்லாம பேசாதய்யா. உங்க அப்பன் ஒத்த ரூவா வச்சுட்டு போல. நீங்க எப்பவாது உங்க அம்மாவுக்குக் கொடுக்குற 50 ஓவாய வச்சு இத்தாத்தண்டி வீட்ட கட்டுச்சா? ஏண்டா மொகமது அவந்தான் தம்பி சொத்துக்கு ஆசைப்படுறான். உனக்கு என்ன கொல்லை! தங்கச்சிய நகை போட்டுக் கட்டிக் கொடுத்தான். அதக் குடிச்சே அழிச்ச. கடை வைக்கிறேன்னு கடன வச்சுட்டு ஓடித்தான் போன. அதையும் அவன்தானே கட்டுனான். 4 புள்ள பெத்ததத் தவர வேற என்ன பண்ண ? அதுகளுக்கு ஒழுங்காச் சோறு போடத் துப்பில்ல. ஒண்ண எடுத்து அவன்தான் வளக்குறான். நீலாம் அவனுக்கு எதிரா நிக்கலாமா? மீண்டும் ஜமாத்து பெரியவர் பேசினார்.
சலீமின் மனைவி ராவியா முகமதின் காதில் ஏதோ குசுகுசுத்தாள். சரிதான் நீங்க சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்குறேன், ஆனா புள்ள வளக்கத் துப்பில்லாம ஒண்ணும் புள்ளைய கொடுக்கல. அந்தாளுக்கு புள்ள பெக்கத் துப்பில்லன்னு கொடுத்தேன். நக்கலாய்ச் சொன்னான் முகமது.
ஒழுங்கா மரியாதையாப் பேசு. இல்ல வாய கல்லுல வச்சு ஒரசிப்புடுவேன் என்று முகமதை அடிக்கப் பாய்ந்தார் மாமா. நானும் அப்பாவும் மாமாவைத் தடுத்தோம்.
சபைல ஒழுங்காப் பேசணும். உன் இஸ்டத்துக்குப் பேசுறத கேக்க நாங்க இங்க வல்ல. அவனும் பேர் சொல்ல புள்ள பெத்துட்டான் தெரியும்ல! ஜமாத்தில் இருந்து வந்த இன்னொரு நபர் சொன்னார்.
மீண்டும் ராவியா முகமதின் காதில் குசுகுசுத்தாள். சரி, அதான் புள்ள பெத்துடாருல. என் புள்ளைய எண்ட கொடுங்க. உங்க சொத்து ஒன்னும் எனக்கு வேணாம். என் புள்ளைய நான் வளத்துக்குறேன். இதைக் கேட்டதும் மாமாவின் முகம் மாறத் துவங்கியது.
ஏய்! என்னப்பா, சொத்துப் பிரச்சனைய பேச வந்தா, நீ என்ன புள்ளப் பஞ்சாய்த்த இழுக்குற?
அதலாம் தெரியாது. இவ்ளோ ஆய்ருச்சுல. இனி அந்தாள் வீட்டுல ஒரு நொடி கூட என் புள்ள இருக்கக் கூடாது, புள்ளையக் கொடுங்க. நான் போறேன்.
3 வருஷம் அரும்பாடுபட்டு வளத்துருக்காங்க. எப்டிப்பா நீ கேட்டதும் கொடுக்க முடியும் ?
எவ்வளவு செலவு பண்ணாங்கன்னு சொல்லச் சொல்லுங்க. கொடுத்துட்டே கூட்டிப் போறேன் என்று சொல்லிவிட்டு சலீமின் மனைவியைப் பார்த்தான் முகமது. அவள் முகத்தில் நரகத்தின் ரேகை இருந்தது.
என் உயிரே போனாலும் என் புள்ளையத் தர மாட்டேன். அவனால ஆனதப் பாத்துக்கச் சொல்லுங்க. சாகுல் மாமா உரக்கச் சொன்னார்.
அதான் அவரு ஒரு புள்ள பெத்துருக்காருல. அப்பறம் என்னவாம்? தங்கச்சிக்குப் பொறந்த புள்ளதான் வேணுமாமா? இல்ல இவருக்குதான் அந்த புள்ள பொறந்துச்சா?
ஒரே பாய்ச்சல். அங்கிருந்த அத்தனை பேரையும் தாண்டி மாமா முகமதுவின் முகத்தில் சரமாரியாகக் குத்துவிட்டார். யாராலும் அவரைத் தடுக்க முடியவில்லை. முகமதுவின் மூக்கு, வாய் என்று முகம் முழுவதும் ரத்தம். மொத்தக் கூட்டமும் மாமாவைப் பிரித்து கொண்டு செல்ல ரத்தம் வடிய முகமது உரக்கக் கத்தினான்.
அது உனக்குத்தான் பொறந்துச்சுன்னு சொல்லுடா பொட்ட. என் புள்ள எனக்கு வேணாம். மாமா தனது இரு காதுகளையும் இறுக்கப் பொத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.
வீட்ட வேணா கொடுத்துருவோம், என் புள்ளைய நான் கொடுக்க மாட்டேன். பிரதோஸை இறுகக் கட்டிக்கொண்டு சொன்னாள் அக்கா. அந்தப் புள்ளைய கொடுக்கலனா இந்த வீட்டு உத்துரத்துல பொணமாத்தான் தொங்குவேன். அதுக்குமேல உன் விருப்பம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார் மாமா.
அன்னைக்கி சாயந்தரமே பிரதோஸைக் கூட்டிப்போக முகமதும் சலீமின் மனைவியும் வந்தார்கள். அவர்களிடம் போன மறுநொடி பிரதோஸ் கத்தி அழுதாள். என் புள்ளைய கொடுத்துருங்களேன். உங்க காலுல வேணா விழுகுறேன். சாகுலின் மனைவியின் காலைப் பிடித்து அழுதாள் அக்கா, அவளைச் சட்டை செய்யாமல் கடந்து போனார்கள் முகமதும் ராவியாவும். அத்தா! அத்தா! என்று பிரதோஸ் கத்துவது கேக்காத தூரம் போயிருந்தார் மாமா. மொத்தத் தெருவும் வேடிக்கை பார்க்க, சீலை விலகியது கூட உணராமல் மாரிலும், முகத்திலும் அடித்துக்கொண்டு அழுதாள் அக்கா. மயங்கிய அக்காவை கைத்தாங்கலாய் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் அம்மா.
கல்ஃப் போய்ச் சேர்ந்த மூன்றாவது நாள் அம்மா அழைத்தாள். பிரதோஸ் செத்துப் போய்ட்டாடா தம்பி. பர்வீனு அழ மாற்றடா. பித்துப் புடுச்ச மாதி இருக்காடா. பாவிப் பயலுக தங்கம் பெத்த புள்ளையக் கொன்னுட்டாங்களே, அம்மா கதறி அழுதாள்.
அக்காவிடம் பேச எனக்குத் தைரியம் இல்லை. மூன்று மாதத்தில் அக்கா பைத்தியம் போல் ஆகிவிட்டாள் என்றாள் அம்மா. வீடு மாறினால் சரி ஆகும் என்று மூன்று தெரு தள்ளி வாடகைக்கு வீடு எடுத்தார் மாமா. அபிக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பாள். திடீரென்று எழுந்து பழைய வீட்டின் முன் நின்று சொந்த வீட்டை பார்த்துக்கொண்டே இருப்பாளாம். அம்மா வந்ததும் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவாளாம்.
நாம புது வீடு கட்டி இங்க வந்த பின்னாடி, பர்வீனு நேர இங்க தாண்டா வரா, முன்ன மாதி இப்ப இல்ல. கடவுள் புண்ணியத்துல முழுசா சரியாய்ட்டா பழனிக்குப் பாத யாத்ரயா வந்து மொட்ட போடுறதா வேண்டிருக்கண்டா தம்பி. வேணும்னா நாகூருக்குக் கூட ஒரு தடவ போவோம். அவுங்க சாமியோ நம்ம சாமியோ அவளுக்குச் சரியானா போதும் என்றாள் அம்மா. அக்காவுக்குச் சரி ஆய்ட்டா நாமளும் கூட மொட்ட போட்டுக்கலாம் என்றுதான் ஊருக்கு வரும்போது வேண்டிக்கொண்டேன்.
ஜன்னல் துரு பிடித்து, மாடிக் கைப்பிடி சுவர் உடைந்து, முகப்பு டைல்ஸ் எல்லாம் அழுக்கேறி குப்பைகள் சூழ முற்றிலும் வேறு ஒன்றாக இருந்தது பர்வீன் அக்கா வீடு.
எந்த சாமியும் என் புள்ளையக் காப்பாத்தலயே!!
இந்தச் சனியன் என் மல்லியப்பூவ கருக்கிருச்சே, சண்டாளி புள்ளைய சைதான்னு தெருஞ்சும் கைல கொடுத்துட்டனே. கைகளில் இருந்த மண்ணை அள்ளி வீட்டின் மீது எறிந்தாள் அக்கா. அக்காவின் இடுப்பில் அபி அழுதுகொண்டு இருந்தான், திடீரென ஒரு வார்த்தை கூட பேசாமல் நீண்ட நேரம் வீட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அப்பா அபியை அக்காவிடம் இருந்து வாங்கிக் கொண்டார், மாமா அக்காவை இழுத்துக் கொண்டு சென்றார்.
எனக்கு அக்கா கடைசியாக அந்த வீட்டிடம் என்ன பேசிருப்பாள் என்று தோன்றியது. வீடும் அக்காவிடம் எதையோ பேசியது போல்தான் எனக்குத் தோன்றியது.


One Comment
நல்ல கதை