அழகிய பட்டுலு – கௌசல்யா ஞானேஸ்வரன்

 

அதிகாலை சிவப்பு நிறம் பரவி, சூரியன் தன்னை கிழக்கு வானில் வெளிக்காட்ட, பறவைகளின் இசை மிகுந்த சத்தங்கள் இதயத்தை மகிழ்விக்க, நம்பிக்கையும் புத்துணர்வையும் தரும் காலை பொழுதில், நீண்ட நேரமாகி கண் விழித்த ஆதவின் மனம் மறுநொடியே ஏக்கத்தில் நிரம்பி இருந்தது.
ஆதவின் அம்மா திவ்யா, “தங்க குட்டி, பட்டுக்குட்டி!” என்று கொஞ்சிக்கொண்டே, “இன்று உனக்குப் பிடித்த டிபன்!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் ஆதவோ, பக்கத்து வீட்டு நிமலன் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தான்.
அழகிய பளபளப்பான கன்னம் கொண்ட ஆதவ் குட்டி, எட்டு வயது சிறுவன். இண்டர்நேஷனல் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கிறான். அவனைப் பார்க்கும் கண்கள் முத்தமிட ஆர்வத்துடன் காத்திருக்கும். விழிகள் விரிந்த புத்திக்கூர்மையுடன், உற்சாகமாய் அவன் பேசும் மழலைச் சொல்லை கேட்டால், கேட்பவரின் மனம் உருகித்தான் போகும்.
இப்போது கோடை விடுமுறை ஆனாலும், பக்கத்து வீட்டில் இருக்கும் நிமலனை நினைத்தாலே, ஆதவிற்கு இனம் புரியாத கோபம் வந்துவிடுகிறது.
“அவனைப் பார்க்கக்கூடாது. பார்த்தால்கூட பேசக்கூடாது!” என முடிவெடுத்து அறையில் இருந்து வெளியே வரவும், “ஆதவ்!” என்று கத்திக்கொண்டே நிமலன் வரவும் சரியாக இருந்தது.
“ஆதவ்! நாங்க நேற்று டூர் போனோம். பட்டுலு குட்டியை கூட்டிட்டு போயிருந்தோம். இங்க பாரு, போட்டோ கூட எடுத்திருக்கோம்!” என்று பெருமையாக காண்பித்தான். வேண்டா வெறுப்பாக பார்த்த ஆதவுக்கும், சிரித்துக் கொண்டிருந்த பட்டுலு குட்டியை மிகவும் பிடித்துப் போனது. இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். நிமலன் அவன் தங்கை பட்டுலு குட்டியைப் பற்றி கதை கதையாய் பேசுவான்.
முன்பு, பட்டுலு குட்டி பிறக்குமுன், ஆதவும் நிமலனும் ஒன்றாகவே இவர்கள் வீட்டிலும், அவர்கள் வீட்டிலும் மாறிமாறி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நிமலனுக்கு தங்கை பிறந்ததும், அந்த குட்டி பாப்பா செய்யும் செயல்களை முதலில் ரசித்த ஆதவுக்கு, பின்னர் ஏதோ இழந்த உணர்வு மனதில் வந்து, தனக்கு தங்கை இல்லை என்பதே இனம் புரியாத ஏக்கமாக உள்ளத்தில் படர ஆரம்பித்தது.
நிமலன் தனது தங்கை பட்டுலு குட்டியை கொஞ்சிக் கொண்டு, “இது என்னோட பட்டுலு குட்டி!” என்று பெருமையாகச் சொல்வான். அது ஏனோ ஆதவுக்கு பிடிக்கவில்லை. தன் மனதுக்குள், “எனக்கும் தங்கை இருந்தால், நானும் இப்படி பெருமையாகக் கூறுவேன்…” என்ற வருத்தம் தோன்ற ஆரம்பித்தது. நிமலன் சென்றபின், “எனக்கும் பட்டுலு இருந்தா, நானும் எல்லாருக்குக் காட்டுவேன்…” என்று ஆதவ் மனதுக்குள் வருத்தமடைந்தான்.
ஆதவ் உணர்ச்சிகள் அவன் கண்களில் தெரிய, வாடிய முகத்தை கண்ட திவ்யாவும் ராகவ்வும், “ஏன் டா செல்லம்? என்னாச்சு? நாமும் டூர் போகலாமா? குட்டி கார் வேணுமா?” என கேட்டார்கள். ஆனால் ஆதவ் உடனே, “எனக்கு குட்டி பாப்பா வேணும்! எனக்கும் பட்டுலு பாப்பா இப்பவே வேணும்!” என்று அழத் தொடங்கிவிட்டான். அவனை சமாதானப்படுத்தினாலும் முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதவாறே தூங்கிவிட்டான்.
இவ்வளவு நாட்களாக, ஆதவின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனித்த திவ்யாவும் ராகவுவும் ஓர் முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால் அதைக் குழந்தை ஏற்றுக்கொள்வானா என்பது அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் மனமும் கடல் போல் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.
கண் விழித்த ஆதவ், பக்கத்தில் படுத்திருந்த ஒரு அழகிய பட்டுலு குட்டியைப் பார்த்தான். அவளை அழகாய் முத்தமிட்டான். அந்த பிஞ்சு குழந்தை கை, கால்களை ஆட்டிக்கொண்டு, அவனைப் பார்த்து கண் சிமிட்டி, அவன் முகங்களை வருடி மகிழ்ந்தது. 
நிமலன், அவன் பட்டுலு பாப்பாவுக்கு சொல்லிக் கொடுத்த பாடலை நினைவில் வைத்துக்கொண்டு, ஆதவ்வும் அந்தக் குழந்தைக்கு பாடல் சொல்லிக் கொடுத்தான்.
“ஒந்து ஒந்து காசு, யாரு குடுத்த காசு? மாமா குடுத்த காசு, மாயமா போச்சு!”
பின்னர் அவன், அந்த குட்டி விரல்களை ஒவ்வொன்றாக விரித்து, “பப்பு, காய், பூவா, ரசம், தயிர்…” என்று ஒவ்வொரு விரலாகச் சொல்லி, “குமாய குமாய கடைந்து, உனக்கொரு வாய், அண்ணாவுக்கு ஒரு வாய், அம்மாவுக்கும், அப்பாவுக்கும்…” என்று ஊட்டி, குழந்தையை கிச்சு கிச்சு செய்து சிரிக்க வைத்தான். அந்த பொக்கைவாய் சிரிப்பை காணும் ஆதவிற்கு அளவில்லா மகிழ்ச்சி!
தன் கைகளால் தன்கண்களை மூடியவண்ணம், “அண்ணாவை காணோம்! கண்டுபிடி!” என்று ஆதவ் சொல்ல, பட்டுலு பாப்பாவும் தனது பிஞ்சு விரல்கள் கொண்டு ஆதவ் விரல்களை எடுத்து, “அடடா! அண்ணாவை அழகா கண்டுபிடிச்சிட்டியே!” என்று கொஞ்சிக் கொண்டே.
“அம்மா, சீக்கிரம் பட்டுலு பாப்பாவை செல்போன்ல போட்டோ எடுங்க! நானும் நிமலனுக்கு காண்பிக்கணும்!” எனச் சத்தமாக கூச்சலிட்டவாறே… கண்விழித்தான். விழித்தவுடன், பக்கத்தில் படுத்திருந்த பட்டுலு குட்டி காணாமல் போயிருந்தது!
அவள் காணாமல் போனதும், வீடு முழுக்க ஓடிச் சென்று, “பட்டுலு குட்டி! உன்னை விட்டுட்டு அண்ணாவால் இருக்க முடியாது!” என அழ ஆரம்பித்தான். கனவு என்று தீர்மானிக்க முடியாமல் உணர்வுகள் குழம்பி, ஒருவிதப் பதற்ற நிலைக்கு ஆளானான்.
கனவு நிலையை நனவு நிலை என்று நினைத்த ஆதவின் நிலையைக் கவனித்த திவ்யா, “அதுவா? அவளை நம்ம பாட்டியும் தாத்தாவும் விளையாட ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போனாங்களே! நீயும் புறப்படு, நாம கூட்டிட்டு வந்துரலாம். அழ வேண்டாம்!” என்று சமாதானம் செய்தாள்.
ராகவ், “குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து முறைப்படி தத்து எடுப்பது எப்படி?” என்று தனது நண்பன் ஆனந்திடம் விசாரித்திருந்தான். அதன்படி ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தான். அதன்படி, ஆதவை அந்த ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்ற ராகவ், “உன் பட்டுலு குட்டி உள்ளே எல்லா பாப்பாக்களோட விளையாடிக்கிட்டு இருக்கா. நீயே போய் கூட்டிக்கொண்டு வா!” என்றார்.
மிக வேகமாக ஓடிய ஆதவ், அங்கு தவழ்ந்து கொண்டிருந்த அந்த அழகிய குழந்தையை தூக்கிக்கொண்டான். முத்துப்போல் பளீர் என்ற முகத்துடன், மின்னும் விழிகளுடன், புதிதாய் பூத்த பூப்போல மென்மையான அந்த பிஞ்சு, அவன் கன்னத்தை வருடி, கண் சிமிட்டி, பொக்கைவாய் சிரிப்புடன் சிரித்தாள்.
அந்தக் காட்சியை பார்த்த திவ்யாவிற்கும் ராகவ்விற்கும், மனம் நிறைந்து, தொண்டை குழிக்குள் நுறைக்குமிழி ஒன்று, இதயத்திற்குள் முட்டி மோதி மெல்ல வெடிக்க, கட்டுப்பாடுகள் தளர்ந்து விம்மி விட்டார்கள். நிறைந்த மனதின் பூரிப்பு உடல் முழுவதும் பரவ, குளிர்ந்த மழைச்சாரலாய் கண்ணில் நீர்வழிய சந்தோஷத்தில் மெய்சிலிர்த்தார்கள். 
பிறப்பால் வருவதல்ல பாசம். நேசத்தின் ஆழத்தில் அழகாய் மலரும் அன்பின் உறவு இது. இல்லம் தேடிய மழலை, மழலை தேடிய இதயம் இரத்தத்தால் இணையாத பந்தம் இதயத்தில் இணையும் இனிய தருணம். அன்பை அர்ப்பணிக்கும் உறுதியான உள்ளம் கொண்ட உண்மை குடும்பம். மனித நேயத்தின் மாபெரும் தொடக்கம்.

Leave a Reply

Categories