தண்டிகாரர் – காதர்

ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில்

 முதற்பரிசு: ரூபாய் 1,000 வென்ற சிறுகதை 

ஊரில் தண்டிகாரர் என்று அழைக்கப்படும் மாதப்பன், தறியில் நெசவு நெய்துக்கொண்டிருந்தார். வானொலியில் “ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈசி ஊர்வசி” என்ற பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அப்போது தறிக்கு அருகில் வந்த அழகம்மை,
“ஏங்க, நிறுத்துங்க. கால் தான் வீங்கி கிடக்குதில்ல! அப்புறம் எதுக்கு இதை ஓட்டிக்கிட்டு கிடக்கீங்க? காக்குழியை விட்டு மேலே தூக்கி நட்டமா நில்லுங்க. மதனி கொடுத்த இந்த தைலத்தை வாங்கியாந்தேன்; இதைக் கால்ல தடவிட்டு, பாய்ல கால் நீட்டி வைங்க. உருளியில வெந்நீ வெச்சிருக்கேன். சித்த நேரத்துல வெக்கயானதும் முழுகிட்டு, அலப்பறை இல்லாம அமைதியா கிடப்பாதுக்கு பாருங்க. வெயிய சாஞ்சதுக்குப் பொறவு வேட்டி  வாப்பா வீட்டுல நேயம் பேசுதாகலம். உங்களை மதனி வரச் சொல்லுச்சு. வாப்பா வீம்பா பேசி ஏதாவது ஏடா கூடமாயிடுமோன்னு திகிலா கிடக்கிறாங்க. நீங்க பேசுனா வாப்பா அடங்குவாராம். அதான் கூப்பிட்டுச் சொன்னாங்க. போயிட்டு வாரும்.” என்றாள்.
அதற்கு மாதப்பன், “ஏலே, நான் தறி ஓட்டுறத நிப்பாத்த முன்னாடி, முதல்ல அந்த ரேடியோவ நீ நிப்பாத்து. கத்திக்கிட்டே கிடவு  ‘ஊர்வசி, ஏர்வசி’ன்னுட்டு! எப்ப பார்த்தாலும் ஏதாவது கூவிக்கிட்டே கிடைக்கு. என்னாண்ட வந்து ஏதாவது நொட்ட சொல்லு சொல்லிக்கிட்டே கிடக்கியே? உன் பயல்ட்ட எந்தப் பேச்சாவது பேசுதியா? நீ வக்கணை பண்ணியே… அவனை எடுபடாத படுகாளியா வளர்த்துட்ட. அவன் ஒழுங்கா காசு தேத்துனான்னா, நான் எதுக்கு இப்படி முட்டிக்கிட்டு உழைக்கணும்? முனிசிபாலிட்டில தண்டல்காரனா ஒழுங்கா பொழப்புல கிடந்தேன். எடுப்புன்ன இந்தப் பய வண்டி ஓட்டி உட போயி கீழே விழுந்து, அடிபட்டு பாதம் போயி நொண்டி நடக்கேன்!” என்றார்.
அதற்கு அழகம்மை, “ஏங்க, இப்படி கதறாதீங்க. அவன் காதுல விழப்போகுது. அவன் பொறுப்புக்கு போவாமையா கிடக்கான்? அதான் செங்காணி காட்டு வயலுல கங்காணி வேல பாக்குதானில்ல! விடியக் காலையில போன, உச்சிக்குத்தான் உட்டுக்கு வாரான். வந்தா.. பொழுதோடு தான் இந்த ரேடியோ, டிவி பொட்டியைப் பாக்குறான். இதைப் போயி குத்தமா சொல்லாதீக.” என்றாள்.
“எலே இ… இ… இது குத்தமில்லவே! அவன் படிச்ச படிப்புக்கும் பாக்குத வேலைக்கும் சம்பந்தம் இருக்குதாவே? அவன் கூட வெளையாடிட்டு, படிச்சதுக எல்லாம் வெளியூரு, வெளிநாடு போய்ச் சம்பாதிக்குதுக.
இவன் மட்டும்….
எலே நம்ம ஊரு பெட்டகை கூட பொறுப்பா படிச்சதுக்கான வேலை பாக்க வேற ஊரானாலும் பரவாயில்லன்னு போகுதுக. ஆனா, இது இங்கனக்குள்ள நாலு தெருவையும், நாலு காட்டையும், கொளத்தையும், ஆத்தையும் சுத்திக்கிட்டே கிடக்கு. பிரயோஜனமே இல்லாத கோட்டி பய!” என்றார்.
“ஏங்க, நீங்களே இப்படி பேசுதீங்கனா,” என்று அழகம்மை சொல்லிக் கொண்டிருக்கும்போது, உள்ளே படுக்கை அறையில் இருந்த சங்கர் வெளியே வந்து ரேடியோவின் சத்தத்தை இன்னும் அதிகப்படுத்திவிட்டு மீண்டும் உள்ளே போனான்.
“பாத்தியாவே! நாம இப்படி கத்திக்கிட்டு கிடக்கோம். அதைக் கண்டுக்கிடாம அந்த ரேடியோ பாட்டுலயே முழுகிக் கிடக்கான். பாழாப்போன பய!” என்றார் மாதப்பன்.
மாதப்பன் பேசியதில் கோபம் கொண்ட அழகம்மை, படுக்கை அறைக்குச் சென்று படுக்கையில் கிடந்த சங்கரிடம்,
“எலே, எந்திரிவே! ஏலே, இப்படி பண்ணுதியே? அங்க அப்பாரு பாட்டு சத்தமா இருக்குன்னு வைராரு. நீ இன்னும் சத்தத்தைக் கூட்டிட்டு வார்ற!” என்றாள்.
  “மே… ஏம்மே… உனக்கு என்ன வேணும்? அப்பாரு என்னைக்கு எப்போதான் வையாம இருக்காரு? உட்டுட்டு போமே,” என்றான் சங்கர்.
“ஏலே, அவரு சொல்லுறதுலயும் ஒரு நியாயம் கிடக்குதடே. நீ தான் அவரைப் பூசரம் ஆக்குறே!”
“மே, என்னம்மா பேசுதே? இன்னைக்கா, நேத்தா? காலேஜ் படிக்கும்போது அந்த ஆக்ஸிடென்ட் ஆச்சே! அப்ப இருந்தே இப்படித்தான் வையுறாரு. இப்ப காலேஜ் முடிஞ்சு நாலு வருஷமாச்சு. இப்பவும் கத்துறாரு. எனக்குப் பழகிருச்சு, விடுமே!” என்றான்.
“எலே, என்ன ‘விடு’… காலேஜ் முடிஞ்சு நாலு வருஷமாச்சு. ஏதாவது நல்ல பொழப்பைப் பார்த்து நாலு காசு தேத்தினாதான், காலா காலத்துல ஆக வேண்டியதையும் செய்ய வேண்டியதையும் பண்ணோணும்!” என்றாள்.
  “மா, பேசாம போம்மா. களத்துல காயுற கச்சானா ராவுக்கு மூட்டை போட்டு, லோடு ஏத்தி, கணக்க சரிபார்க்கச் சொன்னாரு காகா. நான் ராவுக்குப் போனா நாளைப் பொழுதோடதான் வருவேன். பொழப்பு கிடக்குமே, அவரு கிடக்காரு. செத்த நேரம் நான் ஒறங்குறேன்… ப்ளீஸ் போம்மா.” என்றான்.
 அழகம்மையும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியே வந்தாள். காலுக்கு தைலம் தடவியபடி, பாயில் காலை நீட்டி அமர்ந்திருந்த மாதப்பன், அழகம்மையை முறைத்தார். அவரைப் பார்க்காதவாறு அவள் கொல்லைப்புறம் நோக்கிச் சென்றாள்.
 அடுத்த நாள் மாலை வீட்டிற்கு வந்த சங்கருக்கு ஆச்சரியம். காரணம், தறி ஓடும் சத்தமே இல்லை.
“அப்பாடா… அப்பா இல்ல போல!” என்று நினைத்துக்கொண்டு, “மா!” என்று அழைத்தபடி உள்ளே சென்றான்.
உள்ளே கூடத்தில், நாற்காலியில் மாதப்பன் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவரருகில் அழகம்மை அமர்ந்திருந்தாள். இருவரையும் பார்த்ததும் அமைதியாக மாடம் நோக்கிப் போனவனை,
“ஏலே, இங்க வாலே!” என்றாள்.
திரும்பி அழகம்மையைப் பார்த்தான். அவள் கையில் ஒரு தபால் உறை இருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆவலுடன் சென்று வாங்கி, பிரித்துப் படித்தான்.
அடுத்த நொடியே முகம் மலர்ந்து, சிரித்துக்கொண்டே,
“மா… எனக்கு வேலை கிடைச்சிருச்சு, மா!” என்றான்.
“ஏலே, என்ன த சொல்லுத? மகமாயி துணை! என்ன வேலை? எங்க வே?” என்றாள்.
“மா, பேங்க்ல மே… நம்ம ஊருலயே கனரா பேங்க்ல கிளார்க் வேலை மே,” என்றான்.
“ஆத்தி மகமாயி!” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்து, சங்கரின் கையில் இருந்த கவரை வாங்கிக்கொண்டு பூஜை அறைக்குச் சென்றாள். அங்கே பூஜை மணி சத்தமும், அழகம்மையின் முணுமுணுப்பும் கேட்டன. சிறிது நேரத்தில் கற்பூரத் தட்டில் தீபம் ஏற்றி, திருநீறுடன் வந்து மகனுக்கும் கணவனுக்கும் தீபம் காட்டி, திருநீறு இட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
   சாய்வு நாற்காலியில் இருந்த மாதப்பன் தட்டுத்தடுமாறி எழுந்து, சங்கரைப் பார்த்து, “ஏலே, இனியாவது பொறுப்பா இருவே. மனசுக்கு சந்தோஷம்தான். நல்லா இரு,” என்று கூறிவிட்டு, சாய்ந்து சாய்ந்து நடந்து வெளிவாசலை நோக்கிப் போனார்.
சங்கரின் அருகில் இருந்த அழகம்மை, “ஏலே, என்னைக்கு வேலைக்குச் சேரணும்ல?” என்றாள்.
“வர்ற புதன்கிழமை மா,” என்றான்.
“ஆத்தி… என் மவன் பேங்குல வேலை செய்யுறான்!” என்று சந்தோஷப் பெருக்கில் இருந்தாள்.
 “மா, நான் கொஞ்சம் அந்த பேங்க் வரைக்கும் போகணும். நான் டிரஸ் மாத்திட்டு போறேன். அதுக்குள்ள கொஞ்சம் காபி போடுமா?” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்தான். ரேடியோவில் அப்பாவுக்குப் பிடித்த சிவாஜி நடித்த முத்துக்கு முத்தாக திரைப்படப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ரேடியோவின் சத்தத்தை இன்னும் அதிகப்படுத்திவிட்டு வாசலை நோக்கிப் பார்த்தான்.
வாசலில் அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அமைதியாக அங்கு சென்று, நின்று அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் பேச்சை கேட்டான்.
“ஏலே, என்னவ நினைக்க? என் மவன் கம்பியூட்டர் முன்னாடிதான் உட்காருவான். ஏசி காத்துலதான் இருப்பான். என் மவன் எண்ணி எண்ணிக் கொடுக்குற பணத்தத்தான் இந்த ஊருக்காரங்க செலவு செய்வாங்க வே. இனி இந்த ஊர்ல எவனுக்கு லோன் வேணும்னாலும் என் மவன் சொன்னாதான் கிடைக்கும். இனி இது தண்டல்காரன் ஊடு இல்லவே… பேங்க்காரன் ஊடு!” என்று மகிழ்ச்சியில் மாதப்பன் கத்தினான்.
அதைக் கேட்ட சங்கரின் கண்ணோரம் நீர் வழிந்தது. அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அமைதியாகக் கேட்டுவிட்டு வெளியே வந்து,
“மா… நான் கிளம்பறேன் மா,” என்றான்.
“ஏலே, இந்த வே… காபி கேட்டல்ல?” என்று காபி டம்ளரை நீட்டினாள்.
அதை வாங்கிக் குடித்துக்கொண்டே அம்மாவையும், தெருவையும், தன் வண்டியையும் மாறிமாறிப் பார்த்தான். பிறகு அப்பாவைப் பார்த்தான்.
மாதப்பன் தலை குனிந்தவாறு, தன் சட்டைப் பாக்கெட்டில் ஏதோ தேடுவது போல பாசாங்கு செய்தான்.
அதை உணர்ந்த சங்கர், “வர்றேன் மா… அப்பா, வாரேன்,” என்று கூறிவிட்டு தெருவில் நின்றிருந்த வண்டியை நோக்கிச் சென்றான்.
அங்கு பாக்கெட்டைத் தேடியபோது, பாக்கெட்டில் வண்டிச் சாவி இல்லை. அதை எடுக்க உள்ளே வந்தான்.
உள்ளே அழகம்மை பேசிக்கொண்டிருந்தாள்.
“என் பையன் தான் கால உடைச்சான்னு திட்டவும் செய்வேன்; அவன்தான் என் உசுருன்னு கொஞ்சவும் செய்வேன். கோட்டிக்காரனு வையுவேன், தங்கமேனும் கொஞ்சுவேன். படுகாளினும் கூவுவேன், பாட்டாளினும் கூவுவேன். சொக்காளின்னு சொல்லுவேன், பரதே…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கர், “மா… வண்டிச் சாவி எடுக்கணும்.” னு உள்ளே வந்தான்.
திரும்பி வெளியே வரும்போது, மாதப்பன் பின் வாசலை நோக்கி சாய்ந்து சாய்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார். சங்கர் அழகம்மையைப் பார்த்து சிரித்தவாறே வெளியே சென்றான்.
வேலைக்குச் சென்று இரண்டு நாட்களுக்குப் பின், வெள்ளிக்கிழமை காலையில் குளித்து தலை துவட்டிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து நடந்து வந்த மாதப்பன், ரேடியோவில் “திருச்செந்தூரின் கடலோரத்தில்…” பாடல் ஒலித்துக்கொண்டிருப்பதைக் கேட்டபடி படுக்கையறையை எட்டிப் பார்த்தார். அங்கே சங்கர் இல்லை.
உடனே ரேடியோவின் சத்தத்தை அதிகப்படுத்திவிட்டு சமையலறைப் பக்கம் சென்றார். அங்கே சங்கர், அடுப்பின் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்து அழகம்மையிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“மா… இந்த நாலு வருஷமா எனக்கு நிறைய வேலை கிடைச்சுதுமா. ஆனா வெளியூர்லதான் கிடைச்சது. நான் ஊர விட்டுப் போயிட்டா வீட்டை யாரும்மா பாப்பா? மாசமொரு முறை வந்து பார்த்தாலும் வீட்டுக்கானதை யாரு செய்வா? அப்பாரு வீட்டுக்குள்ளேயே சாஞ்சு சாஞ்சு நடந்து தறி ஓட்டி, ராவுல கால் வலியில துடிக்கிறத பார்த்த பிறகுதான் முடிவு செஞ்சேன். என்ன ஆனாலும் உள்ளூர்லதான் வேலை பாக்கணும். அப்பாவையும் உன்னையும் நல்லாப் பாத்துக்கணும்னு தான் காத்துக்கிடந்தேன்.
 அப்பாரு தண்டல்காரரா இருக்கும்போது இந்த ஊரு, பக்கத்தூரு, இந்த மாவட்டம் முழுக்க தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ்னு எல்லாம் சுத்தி வருவாரு. இப்போ பாரு… நம்ம ஊருக்குள்ளேயே வெளியே எதாவது போகணும்னா கூட எப்பயாவது தான் போறாரு. அதனால என் முதல் மாச சம்பளத்துல அப்பாக்கு ஒரு மூணுசக்கர வண்டி வாங்குறதுதான் முதல் வேலை மா” என்றான்.
சங்கர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சமையலறையின் வாசலில் நின்றிருந்த மாதப்பனின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
ரேடியோவில் “திருச்செந்தூரின் கடலோரத்தில்…” பாடல் ஓடிக்கொண்டிருந்தாலும், அவரின் காதுக்கு மகனின் குரல் மட்டும்தான் கேட்டது. கண்ணிமைகள் நடுங்கின. கண்கள் மெதுவாகக் கலங்கின. வேட்டியின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டன்.
 “எனக்காக… இந்தப் பையன் இவ்வளவு யோசிச்சிருக்கானா…” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
பல வருடங்களாக தறி ஓட்டிய கைகள், இன்று முதல் முறையாக நடுங்கின. காலில் இருந்த வலியைவிட, மகனின் பாசம் அவன் நெஞ்சை அதிகமாக உலுக்கியது.
சாய்ந்து சாய்ந்து நடந்து தறி இருந்த இடத்துக்குச் சென்றான்.அவன் மனசுக்குள் மகனின் வார்த்தைகள்தான் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தன.
“அப்பாக்கு மூணுசக்கர வண்டி வாங்குறதுதான் முதல்ல…”
அவன் உதடுகள் தன்னையறியாமல் சிரித்தன.
“என் கால் உடைஞ்சதால என் வாழ்க்கை முடிஞ்சிடல… என் பையன் இருக்கான்… அதுவே எனக்குப் பெரிய பலம்…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், கண்ணீரை மறைத்தபடியே மீண்டும் தறியை ஓட்டத் தொடங்கினான்.
“ஏலே, ஏக்கத்தைப் பாரு… முதல் சம்பளம் கோயிலுக்கும் அம்மாவுக்கும் இல்லையாமே, அப்பாருக்காம்ல்ல… பாருடே!” என்று சந்தோஷமாகச் சிரித்தாள்.
“சரிடே… அடுத்தடுத்த மாசம் அம்மாவுக்கு இந்த அடுக்களையை நல்லா அழகா மாத்திடு.”
“சரி மா.”
“அப்படியே இந்த வீட்டையும் அழகாக்கணும் டே. அப்பத்தான் உனக்கு கண்ணாலம் பேசணும் டே.”
“மா… போ மா…” என்று வெட்கப்பட்டான்.
“ஏலே, நான் நெசமாத்தான் சொல்லுதேன். வீட்டை அழகாக்கி, இந்த வீட்டுல மருமகள், பேரன், பேத்தி எல்லாரையும் பாக்கணும் டே,” என்றாள்.
“குறிப்பா அந்த தறியைக் கழட்டி, காகுழியை மூடணும் டே. அப்பத்தான் அப்பாரும் அடங்குவாரு; கால் வீக்கமும் வத்தி, ஒழுங்கா நடப்பாருடே,” என்றாள்.
“மா… கண்டிப்பா இந்த வீட்டைப் பங்களா மாதிரி கட்டாயம் மாத்துவேன். ஆனா, அந்த தறியை மட்டும் தொட மாட்டேன். அதே நேரம் அப்பாருவையும் தொட விட மாட்டேன். அதை அழகா, பத்திரமா, அப்படியே பளபளப்பா பாதுகாப்பேன். அது இருக்குற இடம் எனக்குக் கோயில் மாதிரி…! தறி எனக்குத் தெய்வம் மாதிரி மா…!
என் அப்பத்தா, தாத்தா எங்க அப்பாரு எல்லாம் நெஞ்சுது அதுலதான். அப்பா ஆக்ஸிடென்ட் ஆன பிறகும், என் படிப்பை நிறுத்தாம, ஒத்தக் காலுலயே நெஞ்சு என்னைப் படிக்க வெச்சு சோறு போட்டது இந்தத் தறிதான் மா.
நாளைக்கு என் புள்ளைகிட்ட சொல்லணும் மா… ‘இதுதான் பாவு… இது தான் சட்டம்… இது காக்குழிக் கட்டை… இதுதான் குறுக்குச் சால் கயிறு… இதையெல்லாம் உங்க தாத்தாவோட அப்பா தொட்டது டே. நாலு தலைமுறைக்கு சோறு போட்டுது, இன்னைக்கு நம்மள இந்த நிலைக்கு வாழ வச்சது இதுதான் டே. இது நமக்குச் சாமி மாதிரி’ன்னு சொல்லணும் மா. அடுத்த தலைமுறைக்கு இந்தக் கட்டுத் தறி தெரியாம போயிடக் கூடாது மா. அவிங்களுக்கு தறிப்பட்டறை தெரியும். ஆனா, தனி தறி தெரியும மா? இந்த வீட்டைப் பார்த்து ‘தண்டிகாரர் வீடு’ இல்ல… ‘தறிகாரர் வீடு’ன்னுதான் பேரு இருக்கணும் மா…” என்று கண்ணீர் வழியக் கூறினான்.
  அதைக் கேட்ட அழகம்மையின் கண்களிலும் நீர் வழிந்தது. அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்க, அவள் சமையலறையை விட்டு  வெளியே வந்தாள்.
 மாதப்பன் தறிக்கு அருகில்  விழுந்து கிடந்தான் “என்னங்க” என்று அழகம்மை ஓட “அப்பா” என்று சங்கரும் ஒடி மாதப்பனை எடுத்து மடியில் கிடத்தி “அப்பா அப்பா” என்றான் எந்த அசைவும் இல்லை, ரேடியோ வில் வீடு வரை உறவு..  வீதி வரை மனைவி… காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்ற பாட்டு இசைத்து கொண்டிருந்தது.

Leave a Reply

Categories