தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு [குறள் எண்:1103]
இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது, மலேசியாவில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் “கண்ட இடத்தில் கடவுளைப்பற்றிப் பேசாதே!” என்று பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. பலர் இதைக் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்கள் கேட்டு மகிழ:
==========
https://www.youtube.com/watch?v=tvWncCJopZo
(Transcript from 27:37 to 28:56)
சும்மா கடவுளைக் கூப்பிடக்கூடாது! எனக்கு அது பிடிக்காது!
இவன் ஏழடி உயரம் இருப்பான். ஆறடி வாசக்கால் வச்சு வூடு கட்டுவான். உள்ளே போகும்போது இடிச்சுக்குவான்.
“ஆஆ…. கடவுளே…”
என்னடா கடவுள்?! ஏன்டா முட்டாளே! கூட ஓரடி தூக்கி வச்சுக் கட்டுனா சரியாப்போச்சு! சும்மா போய் “கடவுளே … கடவுளே …”-ன்னு நோண்டுறியே?!
ஏன்னா, கடவுளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, நாம! ரொம்ப ராங்! ஒருநேரந்தான் மனிதன் கடவுளை நினைக்கலாம். அந்த வழிபாடு … எடுத்துக்கொண்டால் நாம் உயர்ந்த அறிவாளிகள் ஆகிவிடுவோம் – என்பதை (தமிழ்நாட்டில்) எடுத்துக் காட்டுவேன் அவ்வளவுதான்!
கடவுளைப்பத்தி எங்கே … எந்த இடத்துலே சொல்றது … “கடவுளே”? … காலம்பற பாத்ரூமுக்குப் போவான். உட்காரும்போதே … “கடவுளே…”, “ஐயோ … ஆண்டவனே!” – கடவுளப்போயி அங்க வுடுறான், பாருங்க இவன் வேலைய! இந்த மாதிரியெல்லாம் கடவுளைப்பற்றிப் பேசக்கூடாது – என்று அங்கே (தமிழ்நாட்டில்) சொல்லுவேன்.
கடவுள் உண்டு! அவரைத் தொழு! கண்ட இடத்தில் கடவுளைப்பற்றிப் பேசாதே!
==========
சின்னஞ்சிறுசுகள் காதலில் திளைத்திருக்கும்போது கடவுளைப் பற்றியா நினைப்பு வரும்? கடவுளை நினைப்பதற்கு ஒரு நேரங்காலமில்லையா?
+++++
களவியல், கற்பியல் என்று காமத்துப்பால் இருவகைப்படும். பையனும் பெண்ணும் ஊராருக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து, கொஞ்சிப் பேசி, காதலில் திளைப்பதைக் களவியல் பேசுகிறது. மணமான பின்பு, திண்மையான வாழ்க்கை வாழ்வதைக் கற்பியல் பேசுகிறது.
“தாமரைக் கண்ணான் உலகு” என்று முடியும் இந்தக் குறள் களவியலில் வருகிறது. களவுக்கான பருவம் ஏறத்தாழ 13 முதல் 19 வயது வரை. இந்தப் பருவத்தில்தான் காதல் (Infatuation) மலரும். கண்ணொடு கண் பேசும். மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும். காதலில் வாடும் மனம் நிலைகொள்ளாமால் தத்தளிக்கும். காணாத பொழுதில்,
மயங்கினேன் … சொல்லத் தயங்கினேன் …
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ?
என்று ஏக்கம் வாட்டியெடுக்க, மனசு தவியாகத் தவித்திருக்கும்!
+++++
சின்னஞ்சிறுசுகள் பித்துப் பிடித்து சுற்றும் மனநிலையை, வள்ளுவர் காதல் சொட்டச்சொட்ட செதுக்கியிருக்கும் பகுதி களவியல். குறிப்பாக, இந்தக் குறள் இடம்பெறும் “புணர்ச்சி மகிழ்தல்” அதிகாரம், காதலன் தன் காதலியைப் பற்றி உருகியுருகிப் பாடுவதுபோல் அமைந்துள்ள அதிகாரம். இந்த அதிகாரத்தில் “தாமரைக் கண்ணான்” என்று கடவுளைப் பற்றி எழுத வள்ளுவருக்கு என்ன தேவை இருந்திருக்கப் போகிறது?
“தாமரைக் கண்ணான்” என்பதில் வரும் “ஆன்” விகுதி ஆண்பாலைக் குறிப்பதாகவே உரையாசிரியர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். அதற்கு, பரிபாடலில் வரும் “புவ்வத் தாமரை புரையும் கண்ணன் (தாமரைப்பூவை ஒத்த கண்ணை உடையவன்)” என்று திருமாலைப் பற்றிய குறிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், “தாம்வீழ்வார்” என்பதை “எதனால் தாம்வீழ்வார்” என்று எந்த உரையாசிரியரும் விளக்கவில்லை!
ஒரு பெண்ணிடம் தன் இதயத்தைத் தொலைத்த ஒரு பையன் இப்படித்தானே வீழ்ந்திருப்பான்?:
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே… இன்பம்… சொல்ல வா…
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
+++++
வள்ளுவருக்கும் உரையாசிரியர்களுக்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டு இடைவெளி! “தாமரைக் கண்ணான் உலகு” என்பது மணக்குடவர் சொல்வதுபோல் “இந்திரனது சுவர்க்கம்” என்றோ, பரிமேலழகர் சொல்வதுபோல் “தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம் (சிவந்த கண்களையுடைய திருமாலின் உலகம்)” என்றோ பொருள்பட வள்ளுவர் எழுதியிருக்கிறார் என்றால், அதை எழுதுவதற்கு காதல் பெருக்கெடுத்து ஓடும் களவியலா கிடைத்தது?
+++++
“ஆன்” என்னும் விகுதி ஆண்பாலைக் குறிப்பதாகப் பொருள் கொள்வதால், வேறுவழியில்லாமல் காதலுக்குள் கடவுளை உரையாசிரியர்கள் இழுக்கின்றனர். ஒருவேளை “ஆன் (ஆல்)” என்பதை மூன்றாம் வேற்றுமை உருபாகப் பார்த்திருந்தால் …? விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையிலேயே “ஆன் (ஆல்)” என்னும் மூன்றாம் வேற்றுமையுருபை “அறத்தான்(ல்) வருவதே இன்பம்” என்று வள்ளுவர் பாயிரத்திலேயே கையாண்டிருக்கிறார்.
இந்தக் குறளிலும் அவ்வாறே கையாண்டிருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணால், உலகு“ அல்லது “தாமரைக் கண்ணால் தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல், உலகு?“ என்று குறளின் பொருள் மாறிவிடும். இன்றைய தமிழில் இதன் பொருள், “(தன் காதலியின்) தாமரைக் கண்ணால் தாம்வீழ்வாருக்கு, (அவளின்) மென்தோள் (சாய்ந்து உறங்கும்) துயிலைவிட இனிதானதோ உலகு?”
காதல் வயப்பட்டவனின் மனம்,
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம், ஆடலாம்
ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
என்றுதானே காதல் மயக்கத்தில் ஆடிக் கொண்டிருக்கும்? மாறாக, பஜகோவிந்தமா பாடிக் கொண்டிருக்கும்?
+++++
தாமரைபோல மலர்ந்திருக்கும் காதலியின் விழியம்புதான் விடலைகளை வீழ்த்தும்! “மலரன்ன கண்ணாள்” என்று காதலியைக் காதலன் புகழ்ந்து பாடுவதாக வள்ளுவரே எழுதியிருக்கிறார்!
காதலில் கண்ணால் பேசுவதற்குத் தனியிடம் உண்டு! அதை, அன்றிலிருந்து இன்றுவரை எல்லாக் கவிஞர்களும் விதவிதமாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்!
இருநோக்கு இவள் உண்கண் (மைதீட்டிய விழியில்) உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து – வள்ளுவர்
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் – கம்பன்
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் – பாவேந்தர் பாரதிதாசன்
பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?…
பேசாத கண்ணும் பேசுமா?…
பெண் வேண்டுமா, பார்வை போதுமா?– கண்ணதாசன்
விழியில் விழுந்து,
இதயம் நுழைந்து,
உயிரில் கலந்த உறவே! – வைரமுத்து
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை;
காத்திருந்தால் பெண் கனிவதில்லை;
ஒரு முகம் மறைய, மறு முகம் தெரிய,
கண்ணாடி இதயம் இல்லை!
கடல், கை மூடி மறைவதில்லை! – நா. முத்துக்குமார்.
எனவே, காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞன் தன் காதலியின் தோள் சாய்ந்து துஞ்சும் இன்பத்தைப் பாடும்போது, “தாமரைக் கண்ணான்” என்று கடவுளை நினைத்துக் கொண்டிருப்பதாக வள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பேயில்லை!
.png)

