ருக்மணி நடக்க துவங்கி அரை மணி நேரம் ஆகியும் எந்த வண்டியும் அந்த வழியே வர வில்லை. ருக்மணியின் ஊருக்கு காலை 8 மணிக்கும் மாலை 5 மணிக்கும் பேருந்து வசதி உள்ளது. ஆனால் அந்த பேருந்து தினமும் சரியான நேரத்துக்கு வந்து விடும் என உறுதியாக சொல்ல முடியாது. சில நாட்கள் பேருந்து வராமலும் போகலாம் என்பதால் ருக்மணி பேருந்தை எதிர்பார்ப்பதில்லை.
சிறு வயதில் அப்பாவுடன் நகரங்களுக்கும், தூரத்தில் உள்ள கோவில்களுக்கும் லாரி பிடித்து செல்லும்போது தான் ருக்மணிக்கு வண்டி பிடித்து போவது அறிமுகம் ஆனது.
அப்போதிருந்தே வண்டி பிடித்து செல்வது ருக்மணிக்கு பழகி விட்டது. சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது தூரத்தில் வாகனம் வரும்போது ஒருமுறை திரும்பி பார்த்தால் போதும், அவர்களாகவே வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொண்டு செல்வார்கள்.
ருக்மணி சிறிது நாட்கள் சித்தாள் வேலைக்கு சென்ற போது முத்து தான் ரெகுலராக அழைத்துச்சென்று கொண்டிருந்தான். ஒரு மாதம் போன பிறகு முத்து ருக்மணியை காணதது போல் விர்ரென சென்று விடுவான். இரண்டு மாதத்திற்கு பிறகு ருக்மணியும் சித்தாள் வேலையில் நின்று விட்டாள். இப்போது உள்ளூரில் எதாவது கூலி வேலை இருந்தால் போவது இல்லையென்றால் நூறுநாள் வேலைக்கு போவது என உள்ளூரிலேயே வேலை பார்த்துக்கொள்கிறாள்.
வெகு நேரமாகியும் வண்டி எதுவும் வராததால் நடையின் வேகத்தை கொஞ்சம் கூட்டிய போது பின்னால் ஒரு பைக் வரும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்த போது முத்து தான் வந்துகொண்டிருந்தான். ‘இவன் நிற்க மாட்டான்’ என நினைக்கொண்டிருக்கும்போதே பைக் வேகம் குறையும் சத்தம் கேட்டது. “அக்கா ஏறுங்க போலாம்” என ஏற்றிக்கொண்டு பைக் கிளம்பியது.
“என்ன முத்து..பார்க்காத மாதிரியே போவ..இன்னைக்கு என்ன அதிசயமா கூட்டிட்டு போற..?”
“இல்லக்கா..இப்போ எல்லாம் வீட்டுல கிளம்பவே நேரமாயிடுது…அடுச்சு புடிச்சு போனா தான் பஸ்ஸ புடிக்க முடியுது…அப்படி போனாலும் கூட சில நாள் பஸ் விட்டுருவேன்..அதான் நிக்கிறது இல்லக்கா..சரி கவுந்தப்பாடில என்ன வேலைக்கா?”
“பேங்க் வரைக்கும் போகோனுஞ்சாமி..புள்ளை ஊர்ல நோம்பி வருது…அழைப்புக்கு வர்றவங்க கிட்ட துணி எடுத்துக்க சொல்லி பணம் கொடுக்கோனுமில்ல..அதான் பேங்க்ல போய் எடுத்துட்டு வரலாம்னு வர்றேன்”
“பேங்ல பணம் நிறைய வச்சிருக்கற போல?”
“ஆமா…எனக்கு இலட்ச இலட்சமா வருமானம் வருது பாரு..எல்லாத்தையும் பேங்க்லயே போட்டு வச்சிருக்கேன். ரோட்டு வேல காசு…மாசம் ஆயிரம் ரூபா வர்றது..இதெல்லாம் தான் இருக்குது..அதை தான் எடுக்கனும்”
“அப்புறம் அந்த வட்டிக்கு கொடுக்கற பணம் எல்லாம்..ஓ..அதெல்லாம் பேங்க்ல போடறதில்லையா…சரிக்கா, சம்பாரிச்சு சம்பாரிச்சு புள்ளைக்கே கொடுக்கறயே..உன்ற மருமக சும்மா உடுமா?”
“அதான் அனாதைனு எழுதி வச்சு பணம் வாங்க வெச்சுட்டாங்கல்ல..அப்புறம் அவங்களுக்கும் எனக்கும் என்ன வேண்டி கிடக்கு” என்றாள் குரலை சற்று உயர்த்தி.
குரலோடு சேர்ந்து சில கவலைகளும் உயர்ந்தது ருக்மணிக்கு… தன்மகள் புவனாவை ஆடம்பர வாழ்க்கை வாழ வைக்க முடியவில்லை என்றாலும்,அத்தியாவசியத்தை பூர்த்தி செய்து அவளை கவனித்துக் கொள்ளும் கணவன் கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்தாள்.
“இந்த புள்ள நல்லா இருக்கோணும்னு தானே கல்லும், மண்ணும் செமந்து கால் வயித்துக் கஞ்சிய குடிச்சாவது படிக்க வெச்சேன். இந்த புள்ள இப்படி குடிகாரனை தான் கண்ணாலம் கட்டுவேனு கட்டி சீரழியறாளே” என்று கண்ணீருடன் புலம்பினாள் ருக்கு.
“அவ கையில நாலு காசு இருந்தா அவ பொழப்பு ஓடிருன்னு நெனச்சு படிக்க வெச்சன்.. இப்ப அந்த நாலு காசும் பிராந்தி கடைக்கு தான் போவுது..இதுல ஆகாத பொம்பளைங்க சவகாசம் வேற..சொந்த பந்தம் ஆரும் இல்லாதனால கேட்கவும் ஆளில்ல” என்று முந்தானை தலைப்பில் கண்ணீரை துடைத்துக்கொண்டே மூக்கை சீந்தினாள் ருக்கு.
“பிராந்தி கடைக்கு போற காசுக்கு நீ ஏன் கஷ்டப்படுற? அவ பண்ண தப்ப அவளே அனுபவிக்கட்டும்னு விட வேண்டியது தானே”
“புள்ள கஷ்டப்படுறதை பாத்துட்டு எப்படி நாம சும்மா இருக்கறது சொல்லு. ஊர்ல எல்லா சிறுசுவளும் புது சட்ட போட்டிருக்கும் போது நம்ம பேரன் பேத்தி மட்டும்
பொக்குனு பார்த்துட்டு ஏங்கிட்டு நிக்கும்.. அதனாலதான் இந்த காசை எடுத்துக்கிட்டு போய் கொடுக்கலாமுன்னு வந்தேன்…”
இடைவெளி விட்டாள் ருக்கு. அந்த இடைவெளியில் பள்ளி வாகனம் ஒன்று அவர்களை கடந்து சென்ற பிறகு மீண்டும் தொடர்ந்தாள்.
“ஆனா என்ற மவன் தங்கராசு இதெல்லாம் கண்டுக்கறது இல்ல. ‘கவர்மெண்ட் காசு எல்லாமே சரியா தான் செலவாகுதா? நீ எப்பவும் யாரையும் கையேந்த வேணாம்’னு சொல்லி அநாதிப் பணத்துக்கு எழுதி வெச்சான்.. எனக்கு என்னமோ பணத்தை விட நாம் அநாதிங்கறது தான் சங்கடமா இருந்துச்சு ஒருவகையில அவஞ் சொல்றதுலையும் நாயம் இருக்கு”
” ஏக்கா இப்படி நீ குடுக்குறியே, எண்ணிக்காவது உன்ற மவனும் மருமவளும் வந்து கணக்கு கேட்டா என்ன செய்வே?”
“நம்ம புள்ளை சீரழிச்சு கெடுக்குதேனு தான் நாம உசுரோட இருக்கற வரைக்கு நம்ம கைல என்ன ஆகுமோ அதை பண்ணுவோம்னு தான் பண்ணிட்டு இருக்கேன். இதை எப்படி இவங்களுக்கு புரிய வைப்பேனு தெரியலை…நூறு நாள் வேலை முடிச்சதுக்கு அப்புறம் பக்கத்துல ஹோட்டல்ல பாத்திரம் கழுவுற வேலையும் இருக்காம்.. அதை கேட்டு இருக்கேன்..அதுல கிடைக்கற காசை மகனுக்கு கொடுக்க வேண்டியது தான்”
“வேலை வேலைன்னு அலைஞ்சு ஒடம்ப கெடுத்துக்காதக்கா” என்று முத்து கூறவும் பேங்க் வாசலில் பைக் நிற்கவும் சரியாக இருந்தது.. முத்துவிற்கு நன்றி கூறிவிட்டு பேங்கில் நுழைந்தாள் ருக்கு, இரு ஜோடி கண்கள் அவளை எதிரே இருந்து நெருப்பு கணலுடன் கவனிப்பதை அறியாமல்.
கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த போது கவுன்ட்டருக்கு முன்னால் மூன்று பேர் வரிசையில் நின்றார்கள். அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டாள் ருக்கு. ஆனால் மனம் ஓர் இடத்தில் நிற்கவில்லை. தான் பணம் எடுப்பது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மருமகள் வாணிக்கு எக்காரணத்தைக் கொண்டும் தெரிந்துவிடக் கூடாது என்று மனம் அல்லாடியது. மகன் தங்கராசு பெரிய வசதியான வாழ்க்கை இல்லை என்றாலும், தனது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு உள்ளவன். ஆனால் மகளுக்கு கேள்விக்குறியான வாழ்க்கை; குடி, கும்மாளம், சீட்டாட்டம் என அனைத்து கெட்ட பழக்கங்களின் மொத்த உருவமாக இருந்தான் மருமகன் கோவிந்தன். மனதிற்குள் கேள்விகளையும் பதில்களையும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டும் கூறிக்கொண்டும் நகர்ந்தாள் ருக்கு. பாஸ்புக்கை கேசியரிடம் கொடுத்து 1500 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள், வீட்டில் வெடிக்கப் போகும் பூகம்பத்தை அறியாமல்.
பேங்க்கில் இருந்து வெளியே வரும் பொழுதே வியர்த்துக் கொட்டியது ருக்மணிக்கு. சேலை முந்தானையால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டே, வெயிலில் கண்களை சுருக்கி அண்ணாந்து சுட்டெரிக்கும் சூரியனின் திசை பார்த்து மணி 12 இருக்கும் என தோராயமாக கணக்கிட்டாள். இந்நேரத்துக்கு பேருந்து வருவதற்கு வாய்ப்பே இல்லை. காலையில் அழைத்து வந்த முத்துவைப் போல் தற்போது அழைத்துச் செல்லவும் யாரும் இல்லை. நடந்தே தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பொழுது அவளுக்கு மலைப்பாக இருந்தது. அதைவிடவும் அந்த 1500 ரூபாய் பணத்தை பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும்; மகனுக்கும், மருமகளுக்கும் தெரியாமல் டிரங்குப் பெட்டியிலோ, அஞ்சறைப்பெட்டியிலோ பணத்தை பத்திரப் படுத்தி, மகள் அழைப்பிற்கு வரும் பொழுது கொடுத்து அனுப்ப வேண்டும். இவை எல்லாமாக சேர்ந்து பாரத்தை அவள் உடலில் ஏற்றின. உடல் பாரம் காலில் இறங்க, ஒருவித வலியை மனதிலும், கால்களிலும் உணர்ந்தவளாக நடக்கத் தொடங்கினாள் ருக்மணி.
வீட்டை அடையும் பொழுது பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் மீதம் வைத்து விட்டுப் போன ராகிக்களியைத் தட்டத்தில் போட்டு, கொஞ்சம் பருப்பு சாம்பாரை அதன் மேல் ஊற்றியபோது வெளியே இருந்து “அம்மா” என்ற வார்த்தை கோபமாய் அந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தது. படபடப்பாய் வெளியே வந்து ருக்கு அங்கு நின்ற தங்கராசுவைப் பார்த்து சற்று ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தாள்.
“என்னப்பா இந்த நேரத்துல? எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லையா?” குழப்பத்துடன் கேட்டாள்.
“உன்னோட அக்கறை எல்லாம் இருக்கட்டும்…
இன்னைக்கு எதுக்கு பேங்க்ல போய் பணம் எடுத்துட்டு வந்த? எவ்வளவு எடுத்துட்டு வந்த?” என்று கோபம் குறையாமல் கேட்டான் தங்கராசு.
“அது…. அதுவந்து…. மழை காலத்துல வீடு முச்சூடும் ஒழுகுது. இரும்பு கதவு வேற கீழால துருப்புடிச்சு பேந்துக்கிட்டு நிக்குது, அதை எல்லாம் சரி பண்ணலைனா இந்த மழை காலத்துக்கு இருக்கவே முடியாது. சரி பண்ணியே ஆகணும். அதான் இருந்த காசை எடுத்து வந்தேன்” நாக்கு உலர்ந்தது அவளுக்கு.
“அதுதான் எவ்வளவுன்னு கேட்கிறேன்”
அவன் குரலில் இருந்த உக்கிரம் அவனுடையது அல்ல மருமகள் வாணியின் தூபம் என்பது ருக்மணிக்கு நன்றாகவே தெரியும்.
அவள் பதில் சொல்ல எத்தனிப்பதற்குள்
“அட சண்டாளி, என் தங்கமே…உனக்கு என்னாச்சு?” வாணியின் அம்மாவின் குரல் கேட்டு வெளியே ஓடி வந்தனர் தங்கராசும், ருக்மணியும். தலையில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தவளுக்கு அருகில் மல்லாந்து விழுந்து கிடந்தாள் வாணி. அவளது தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
தனது தம்பி கொடுத்த தகவலின்படி ருக்மணி பேங்கில் இருந்து பணம் எடுத்து வந்ததை அறிந்த வாணி, கணவனை உசுப்பேத்தி அனுப்பி விட்டு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை உடைந்து தொங்கிக் கொண்டிருந்த மர ஜன்னல் வழியே காதை வைத்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அங்கே வந்தாள் வாணியின் அம்மா. அம்மாவைப் பார்த்ததும் வேகமாக நகர முயன்றவள் வழுக்கி விழுந்திருந்தாள்.
தங்கராசும் ருக்மணியும் வெளியே ஓடி வந்தனர். வாணியை மடியில் கிடத்தி அழுது கொண்டிருந்தாள் அவள் அம்மா. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். கல்லுரியில் படித்துக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு சுந்தர் ஓடி தன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்தான்.
ருக்மணி வீட்டிற்குள் சென்று 1500 ரூபாய் பணத்தை கொண்டு வந்து தங்கராசின் சட்டை பாக்கெட்டில் திணித்து, “ஆஸ்பத்திரி செலவுக்கு வச்சுக்கோ” என்றாள். தங்கராசு தன் தாயை ஏறிட்டான், கண்கள் கலங்கின. “சீக்கிரம் கூட்டிட்டுப் போ”‘என்றாள் ருக்மணி.
வாணியை ஏற்றி தங்கராசு பின்னால் அமர்ந்து அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டான். கவுந்தப்பாடி ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கே அவளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு பிறகு மண்டையில் தையல் போடப்பட்டது. பிறகு ஊசி , மருந்து மாத்திரை என 6700 ரூபாய் செல்வாகிப் போனது. அம்மா கொடுத்த 1500 தன்னிடமிருந்த 5000 எல்லாம் சேர்ந்து 6500 இருந்தது. சுந்தரிடம் 200 வாங்கிக் கொடுத்துவிட்டு தங்கராசு ,வாணி, சுந்தர் மூவரும் வீடு திரும்பினர்.
இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்ற அரை மணி நேரத்துக்குள் மகள் புவனாவும் தன் கணவனுடன் அழைப்புக்காக வந்தாள். ருக்மணி நாளை சாந்தா மணியிடம் கடன் வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்திருந்தாள். அதற்குள் மகளும் மாப்பிள்ளையும் வந்துவிட , என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்தாள்.
“ஏம்மா ஒரு மாதிரி இருக்குற…நான் சந்தோஷமான செய்தி சொல்லலாம்னு வந்தேன்” என்றாள் புவனா.
“அடுத்த புதங்கிழம நோம்பினு தான் தெரியுமே”
“அதில்லம்மா. கடந்த மூணு வாரமா இவர் குடிக்கறத நிறுத்திட்டார்மா”
”நெசமாவா”
“ஆமாம்மா. ஒரு மாசத்துக்கு முன்னால் இவர் கூட்டாளி குடிக்கறதுனால ஈரல் கெட்டு மஞ்சக்காமாலை’ல கஷ்டப்பட்டதையும் அதுக்கப்புறம் அவங்க குடும்பம் படற கஷ்டத்தையும் பார்த்து குடிய விட்டுட்டார்”
ருக்மணி யின் மனம் மகிழ்ந்தது. அடுத்த நிமிடமே தன் மருமகளுக்கு என்ன ஆனதோ என கவலையுற்றாள். பின் புவனாவிடம் நடந்த விஷயத்தை சொன்னாள். அவள் பதறினாள். அதற்குள் பைக் சத்தம் கேட்கவே வெளியே வநதனர். தங்கராசு கைத்தாங்கலாக வாணியை வீட்டிற்கு கூட்டிச்சென்றான்.
புவனா அண்ணனைப் பார்த்து “டாக்டர் என்ன சொன்னாருண்ணா?. இப்போஎப்படி இருக்கு அண்ணி?” என்றாள்.
“பயப்பட ஒன்னுமில்ல. தையல் போட்டிருக்காங்க. மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்க. அஞ்சு நாள் கழிச்சு வரச்சொல்லியிருக்காங்க”
“சரிண்ணா. அடுத்த புதன் நோம்பினு அழைப்பு சொல்ல வந்தேன்..எல்லாரும் நேரமே வந்திடுங்க”
“சரிம்மா வாணி ரெஸ்ட் எடுக்கட்டும். நானும் அம்மாவும் வர்றோம்”
“அப்ப நாங்க கிளம்பறோம்” என்று புவனா கணவனுடன் தன் வீட்டுக்கு கிளம்பினாள். அன்று இரவு வாணி தான் செய்த தவறுக்கு வருந்தி தங்கராசிடம் மன்னிப்புக் கேட்டாள்.
புதன்கிழமை நோம்பி அன்று காலையில் தங்கராசும் ருக்மணியும் எட்டு மணி பஸ் பிடித்து கவுந்தப்பாடியில் இறங்கினர். கடைவீதிக்குச் சென்று குழந்தைகளுக்கு துணியும் பலகாரமும் வாங்கித் தன் தாயிடம் கொடுத்தான் தங்கராசு. ருக்மணி உளம் குளிர்ந்து அகம் மகிழ்ந்து தங்கராசுவைப் பார்த்தாள்.
இருவரும் கவுந்தப்பாடி பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போது ஈரோட்டில் இருந்து சக்தி செல்லும் தனியார் பேருந்தும் உள்ளே வந்தது. பேருந்திற்குள் ‘எதிர் நீச்சலடி..’ என அனிரூத் பாடிக்கொண்டிருந்தார். அங்கிருந்த நான்கைந்து பயணிகளோடு இவர்களும் ஏறிக்கொள்ள பேருந்து கிளம்பியது. இப்போது அனிரூத் ஓய்வெடுக்க ‘யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்…’ என வருண்பரந்தாமன் பாட தொடங்கினார்.


