மனம் சட்டென்று அங்கிருந்து வெளியேறி 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. 1995-2005 வரையிலான 10 ஆண்டுகள் இந்தப் பயிற்சி வகுப்புகளை தனிப்பட்ட முறையிலும், பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களோடும் இணைந்து நடத்தி வந்திருக்கின்றேன்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாக, ஆளுடையபிள்ளை ஐ ஏ எஸ் அவர்களைத் தலைவராகவும், பேரா. ஜெயராமன் அவர்களை உறுப்பினர் செயலராகவும் கொண்டு நடந்து வந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் (Centre for Entrepreneur Development) CED ஈரோடு பொறுப்பாளராக செயல்பட்ட காலம் மறக்க முடியாதது.
ப்ரைமினிஸ்டர் ரோஜ்கார் யோஜனா (PMRY) என்ற திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர்களுக்கு நிர்வாகப் பயிற்சியும், நிதி மேலாண்மைப் பயிற்சியும் கொடுத்து வந்தோம். ஈரோடு மாவட்டத் தொழில் மையம் District industrial Centre (DIC)ம் மாவட்ட முன்னோடி வங்கியும் (Lead bank) இணைந்து பயனாளர்கள் பட்டியலைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாளில் ஈரோட்டில் இருந்த ஓரிரு பயிற்சி நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் தருவார்கள்.
21 நாட்கள் நடக்கும் அந்த நிகழ்வில் பயனாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றால், அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். எந்த விதமான பிணையுமின்றி ரூ 1 லட்சம் வங்கிக் கடன் பெறுவதற்கு அந்த சான்றிதழ் அவசியமானது. சுமார் 2000 பேர்களுக்கு அப்படியான பயிற்சியை வழங்கி, சான்றிதழும் தந்திருக்கின்றேன்.
SIDBI, ECGC, TEA LEAD BANK, இவர்களின் உதவியோடு, ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த 5 நாள் பயிற்சியை நடத்தினோம். எல் ஐ சி வணிக முகவர்களுக்கான பயிற்சியையும் நடத்தினோம்.
1999 ஆம் ஆண்டு மத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை தொழில் நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்தது. Technology upgradation Fund (TUF). அந்தக் காலகட்டத்தில் அது ஒரு டஃப் ஃபண்டாகவே இருந்தது வேறு கதை. அதன் மூலம் பழைய விசைத்தறிகளை தானியங்கி இயந்திரங்களாகத் தரம் உயர்த்த நிதி உதவிகள் தரப்பட்டன. அப்போது குமாரபாளையம் எஸ் எஸ் எம் தொழில் நுட்பக் கல்லூரி துணிநூல் தொழில் நுட்பப் பிரிவு, மத்திய அரசின் டெக்ஸ்டைல் கமிட்டியால் நடத்தப்பட்டு வந்த டெக்ஸ்டைல் செண்டர்ஸ், சித்ரா, போன்ற அமைப்புகளோடு நாங்களும் இணைந்து, நிர்வாகம், நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்புகளைக் கொடுத்து வந்தோம்.
ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அமைந்திருந்த கூட்டுறவு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுக்க சுமார் ஓராண்டு காலம், மாதத்திற்கு ஆயிரம் கிமீக்கு மேல் ஸ்கூட்டரிலேயே சுற்றியிருக்கிறேன். சித்ரா, டெக்ஸ்டைல் கமிட்டி, தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் அனைவரும் இணைந்து இவ்வளவு முயற்சி எடுத்தும் பெரிதான பலன் முதல் ஐந்து ஆண்டுகளில் கிடைக்காமல் போனதில் வருத்தமே. இன்றளவும் அந்தத் திட்டம் பெரும் நிறுவனங்களுக்குப் பயன்பட்ட அளவிற்குச் சிறு விசைத்தறியாளர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
‘மதுரை சி இ டி செண்டர’ எனப்பட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் செயலர் பேரா. ஜெயராமன் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து நடத்துவார். பின்னாளில் பல்கலைக்கழ்க நிர்வாகத்திற்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனையில் அவர் பொறுப்பில் இருந்து விலகினார் என்று கேள்விப்பட்டேன். ஆனாலும் அவர் ஒரு நல்ல நிர்வாகி, கல்வியாளர். அவர் கொடுக்கும் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் அவ்வளவு பொருத்தமாய் இருக்கும்.
மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஸியை குறைந்த கட்டணத்தில் பயிற்றுவித்தவர்கள் அவர்களாகத்தான் இருக்குமென்று நினைக்கின்றேன். நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற இடங்களைச் சார்ந்த ஏராளமானோர் இதில் படித்து வேலை வாய்ப்பைப் பெற்றனர். ‘ஆல் ரவுண்டர்ஸ்’ என்று, வேடிக்கையாக அவர் அழைக்கும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான பயிற்சித் திட்டம் மிகவும் வித்தியாசமானது.
கிராமப்புற இளைஞர்களுக்கு, கார் ஓட்டுதல், வங்கிப் பணிகளை மேற்கொள்ளுதல், விற்பனைவரி செலுத்துதல், அன்றாட வரவு செலவுகளைப் பதிவு செய்தல், மெயில் அனுப்புதல், மெயிலில் வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுத்து, அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைபெற உதவினார்.
இன்றைய நாளில் பலரும் படித்து வேலை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு நல்ல ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப் பயிற்சி பெற்ற வேலையாட்களை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது. என்னுடன் தொடர்பில் இருக்கும் பல தொழில் அதிபர்களும் பேசும் போது, நிர்வாகத்திற்கு ஒரு நல்ல ஆள் வேணும், சம்பளம் பிரச்சனையில்லை என்றுதான் சொல்லுகிறார்கள். பொறுப்பான, அனுபவமிக்க அலுவலக உதவியாளர்கள் பற்றாக்குறை நிலவிக் கொண்டேதான் இருக்கிறது.
பெரு நிறுவனங்கள் பலவும், அரசின் உதவியோடு தங்கள் நிறுவனங்களுக்குள்ளேயே தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியும் கொடுத்து வைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்காகப் பல கோடி ரூபாய்களைச் செலவு செய்து வருகின்றது. இலவசமாகப் பல பயிற்சிகளைத் தருகின்றது. யார் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. சிறு மற்றும் குறுந்தொழில்கள் இந்தத் திறன் நிறைந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் தடுமாறுகின்றன. சி இ டி போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் இது போன்ற பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்தால் சிறு, குறுந்தொழில்களுக்கும் ஸ்டார்ட் அப்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
தொழில் நுட்ப அறிவை கல்லூரிகளும், பேராசிரியர்களும் உறுதி செய்தாலும், , அன்றாட செயல்களை நிர்வகிக்க திறமையான ஆட்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிர்வாக உதவியாளர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு விரைவில் வரும். மென்திறன் பயிற்சிகளோடு, தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் ஈரோடு வாசல் முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.
வேலைவாய்ப்பு, மற்றும் பயிற்சிகளை முறைப்படுத்தும் மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள்
Skill India Digital Hub (SIDH) – Upskilling, reskilling, career growth and lifelong learning
NCS|Home: National Career Service – Career guidance and Jobs in India and related services
Home | Ministry of Skill Development and Entrepreneurship
National Skill Development Corporation (NSDC)
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – TAMIL NADU SKILL DEVELOPMENT CORPORATION


