காலைப் பொழுதில் புது வாசம் கொடுக்கும் மலர்களைப் பறித்துக் கொண்டிருந்த மலர், அதன் சுகந்த வாசனை மனதை வருடினாலும், தனது மேவிய வயிற்றைத் தடவிக் கொண்டே பதினோராவது முறையாக ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “கிருஷ்ணா…” என்ற திருமந்திரம் அவள் எண்ணங்களில் பரவி இருந்தது.
எல்லா செடிகளையும் ஆசையோடு வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டிருந்தாள். ரோஜா, முல்லை, நித்தியமல்லி, ஜாதிமல்லி, மனோரஞ்சிதம், செண்பகப்பூ, கொடி சம்பங்கி, மகிழம்பூ என அவள் வீட்டைச் சுற்றிலும் செடிகளும் மரங்களும் அழகாகப் பூத்துக் குலுங்கி நிறைந்திருந்தன. ஒவ்வொரு செடியுடனும், பூவுடனும் எப்போதும் அவள் பேசுவாள். ஒவ்வொரு நாளும் ஒரு பூ மலரும் பொழுது, எனக்குள் எப்போது பூ மலரும் என ஏக்கம் கொண்டிருப்பாள்.
மலர்களைப் பூக்க வைக்கும் நான் என் உடலில் ஒரு உயிரை உருவாக்க முடியாதவளாக இருக்கிறேனே என்ற ஏக்கத்துடனே நீண்ட ஆண்டுகளாக அவள் காத்திருந்தாள். கிருஷ்ணனை மனதில் சுமந்திருந்தாள்.
திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, கர்ப்பமாகி இருக்கிறாள் மலர். கணவன் மனைவி இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, அவர்களின் சோகத்துக்கும் அளவேயில்லை.
இன்று கோகுலாஷ்டமி. கிருஷ்ணரை அலங்கரிப்பது என்றால் அவளுக்குக் கொள்ளைப் பிரியம். திருமணமான நாளிலிருந்து இன்று வரை, நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து, கோகுலாஷ்டமியை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவாள். ஆனால் இன்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். கர்ப்பமான நாள் முதல் இந்த டெஸ்ட், அந்தடெஸ்ட் என்று எதையாவது சொல்லிக் கொண்டே அவளை அச்சுறுத்திய மருத்துவர்கள், இன்று என்ன சொல்வார்களோ என்ற பயம் அவளை வாட்டியது. மனம் கிருஷ்ணரை நினைத்து உருகியது. அவளது கற்பனையில் புதிதாய் உதித்த பாடலை, உருக்கமான குரலில் பாடத் தொடங்கினாள்:
“ஓடிவா கண்ணா ஓடி வா கண்ணா
தத்தித் தத்தி தவழ்ந்து தவழ்ந்து வா வா கண்ணா
தவமாய் நானும் காத்திருக்கேன் ஓடிவா கண்ணா
அழகாக அசைந்தாடி வா வா கண்ணா
அன்போடு நான் இருக்கேன் ஓடிவா கண்ணா
கால் சதங்கை சத்தமிட வா வா கண்ணா
கண் மூடாமல் காத்திருக்கேன் ஓடிவா கண்ணா
குழலூதும் கண்ணா நீ வா வா கண்ணா
குழந்தையாக உன்னைக் கொஞ்ச வேண்டும்
ஓடி வா கண்ணா
பாதமலர் கொஞ்ச வேண்டும் வா வா கண்ணா
பக்தியோடு வணங்க வேண்டும் ஓடிவா கண்ணா
என் பிள்ளையாய் வரவேண்டும் கிருஷ்ணா,
உன்னையே எனது வயிற்றில் வளர்த்து வருகிறேன்….”
அவள் மனம் உருகிப் பாடிக் கொண்டிருந்தபோது, பசுமை நிரம்பிய அந்த தோட்டத்தின் நடுவே மயங்கி விழுந்தாள்.
கபிலன் மருத்துவமனைக்கு மலரை அவசரமாக அழைத்துச் சென்றான். அங்கு சென்றவுடன் எமர்ஜென்சி என்பதால் மருத்துவரை உடனடியாகப் பார்க்க அனுமதித்தார்கள். மருத்துவர் மலரை பரிசோதித்து விட்டு மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். அவளுக்கு ரூம் அலாட்மெண்ட் செய்தார்கள். ரூமில் சேர்த்த பிறகு மருத்துவர் எழுதிக் கொடுத்த பரிந்துரைச் சீட்டைக் கொண்டு வந்து மலரைப் பல பரிசோதனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு மலருக்கு ட்ரிப்ஸ் மூலமாக மெடிசன்ஸ் பரிந்துரைக்கப்பட்டு செலுத்தப்பட்டது. மருத்துவர் ரிசல்ட் வந்த பிறகு மலரைப் பார்த்து,
“பயப்பட வேண்டாம். இந்த ஏழாம் மாதத்தில் பிரசவ காலத்தில் வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு உயர்வு காரணமாக உடல் மிகவும் சோர்வாகி பலவீனமாக உள்ளது. இது குழந்தையைப் பாதிக்கும். ஆகையால் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதித்து ட்ரீட்மென்ட் தரவேண்டும்” என்று ஆலோசனை கூறினார்.
பிறகு மலருக்கு டயட்டீசியன் உதவியுடன் சில உணவு சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. பழங்களை நேரடியாக சாப்பிடுமாறு கூறினார்கள். பழச் சாறாக எடுத்து சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்ததால், மலரின் உடல் ஆரோக்கியம் படிப்படியாக உயர்ந்தது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
மருத்துவர் அவள் கணவர் மற்றும் பெற்றோரிடம், “மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுது மலர் பலவீனமாக உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் ” என அறிவுறுத்தினார்.
நாட்கள் கடந்தது. மலரும் மிக்க மனமகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக இருந்தாள். திடீரென ஒரு நாள் மலர் “அம்மா!…” என்று கத்தினாள். அவளது அம்மா, “என்ன மலர்?” என்று கூறிக் கொண்டே ஓடி வந்தார். அவளது அம்மா பயந்து போய் அவளுடைய அப்பாவையும், மாப்பிள்ளையையும் கூப்பிட, உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவமனையில் மருத்துவர் மலருக்கு சில பரிசோதனைகளைச் செய்தவுடன் உடனடியாகக் குழந்தையையும் தாயையும் காப்பாற்ற வேண்டும். க்ரிட்டிக்கல் சிட்டுவேஷன் ஆக இருப்பதால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவளை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு சென்றார்கள். அனைவரும் பயத்துடனும் பதற்றத்துடனும் ஆபரேஷன் தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.
பிரசவ அறையின் உள்ளே படுக்க வைக்கப்பட்ட மலரின் கண்களில் கண்ணீர். வலி தாங்க முடியாமல் உதடுகளை இறுகக் கடித்தாள். உடன் நின்றிருந்த செவிலியின் கைகளை மலரின் நகங்கள் பதம் பார்த்தன.
ஒன்பது மாதமும் ஒரு வாரமும்தானே பிரசவத்துக்கான கணக்கு?! ஏழு மாதங்கள் முடியவிருந்த தருணத்தில் திடீரென ஏற்பட்ட வலியின் தாக்குதலில் மலர் நிலை குலைந்து கிடந்தாள். பிரசவத்திற்கான ஆயத்தங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், மருத்துவர் வேகமாக உள்ளே நுழைந்தார்.
பிரசவம் ஆகும் அறிகுறி அறிய மலரின் வயிற்றை பரிசோதித்த மருத்துவருக்குக் குழந்தை கொடி சுற்றிக் கிடப்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி, குழந்தையின் கால்கள் கீழ்நோக்கி இருப்பதும் புரிந்தது.
ஆபத்தின் வாயிலில் இருக்கும் மலரையும் குழந்தையையும் காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த மருத்துவர், மலரிடம், “ஒன்று, இரண்டு, மூன்று சொல்லு மலர்” என்று சொல்லியவாறே அவளின் இடது கையில் மயக்க மருந்தைச் செலுத்த ஆரம்பித்தார்.
“ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐ…ந்…து….உஉஉஉ” மலர் மயக்க நிலைக்குச் சென்றாள்.
தோலில் ஆரம்பித்து அடிவயிறு வரை பயணப்பட்ட கத்தி, கருப்பையைக் கிழிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கவனமாக, மிகக் கவனமாகக் கையாண்ட மருத்துவரின் கைகளில் ரத்தத் துளிகளுடன் மலரின் குழந்தை.
அருகில் காத்துக் கொண்டிருந்த குழந்தை மருத்துவரிடம் ஒப்படைக்கப்படுகிறது குழந்தை. சுத்தம் செய்யப்பட்ட பிறகும் அழாத சிசுவை தலைகீழாகப் பிடிக்க, தன் வருகையை உலகிற்குத் தெரிவிக்கும் விதமாக அழத் தொடங்குகிறது.
அழுகையைக் கண்டு சிரிக்கும் காட்சி அரங்கேறும் இடம் பிரசவ அறையாக மட்டும்தான் இருக்கும்.
அடுத்த அரைமணி நேரத்தில் வேறு அறைக்கு மாற்றப்படுகிறாள் மலர். அவளைச் சுற்றி அவளுடைய அம்மா, அப்பா, கபிலன், உறவினர்கள் என்று நின்று கொண்டிருக்க,
” டாக்டர் வர்றாங்க. யாராவது ரெண்டு பேர் மட்டும் இருங்க. மத்தவங்க எல்லாரும் வெளில இருங்க” என்று கூறியபடியே வந்த செவிலியைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தார் மருத்துவர்.
கால் மயக்கத்தில் இருந்த மலரிடம், “எப்டிம்மா இருக்க?” என்று கேட்டபடியே மலரை ஒருக்களித்துப் படுக்க வைத்தார்.
“சாப்டறியா?” கேட்டார்.
“ம்ம்ம்ம்” என்றாள் மலர் மெள்ள.
“என்ன சாப்டற?” கேட்டார்.
“பூரி கெழங்கு” சொன்னாள்.
அதைக் கேட்ட அவள் வீட்டின் பெரியவர்கள் வாய் பிளந்து நிற்க,
“வாங்கிக் குடுங்க” சொல்லிவிட்டு வெளியேறினார்.
அடுத்த அரைமணியில் பூரி கிழங்கின் மணம் இடம் நிறைத்தது.
அறையைக் கடந்து சென்ற பெண்ணின் அலைபேசியில் கிருஷ்ண கானம் ஒலிக்க, அறையைப் பார்த்தபடியே அவளின் விரல் பிடித்து நடந்த குழந்தையின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு இழையோடியது.
உள்ளே வந்த கபிலன், குழந்தையை எடுத்து மலரிடம் நீட்ட, குழந்தையை கைகளில் ஏந்தி, மார்போடு அணைத்து உச்சி முகர, அவளின் முலைக் காம்புகள் கசியத் தொடங்கின. கபிலன் மலரோடு தன் சிசுவை சேர்த்தணைக்க, பதினைந்து வருடத் தவம் பலன் அடைந்தது.
(ஈரோடு வாசல் – படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் கௌசல்யா ஞானேஸ்வரன், உமா மகேஸ்வரி R, மஞ்சு , கோதை ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)