(ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த கவிதை)

இன்னும் சில மணிதுளிகள்
இல்லை ஒரு பொழுது
இறங்கும் இடம் சேர்வாள்,
அதுவரை
அவள் அவளாகவே
இருக்கட்டும்
மழையில் கைவிட்டு
நனைத்து கொள்வாள்
குழந்தைகளுக்கு
கையசைப்பாள்
கொண்டு வந்த சாப்பாட்டை
பால்ய நினைவோடு
அசைபோடுவாள்
சமையலறை பதைப்பன்றி சில
பாட்டுகளை கூட முனுமுனுக்கலாம்
பிள்ளைகளில் யாரோட
தேவைக்கு
பயணிக்கிறோம்
என்பதும் மறந்து
போக கூடும்
இந்த இரயில்
பயணங்களில் தான்
அவள் அவளாக
பயணிக்கிறாள்
தெய்வமாக்கப்பட்டவள்
தியாகி ஆக்கப்பட்டவள
எனவேதான் அவள்
விடுமுறையற்றவள்
என்ன ஆனால்தான் என்ன
அவள் அவளாக
இருப்பது
சில கணங்களே
அவள் புன்னகைக்கும்
இந்த மோனநிலையை
கலைக்க வேண்டாம்
அவள் போகும் ஊர்
வரும் வரை
அவள் அவளாக
இருந்துவிட்டு
போகட்டுமே !

