மெய் மறந்தேன் – சிவகாமி இரவிச்சந்தர்

(ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச்  சிறப்பித்த சிறுகதை)

“இன்னும் கிளம்பவில்லையா” என்று வாசலில் இருந்து இருசக்கர வாகன ஊதுகுழல் ஒலியையும் தாண்டி எனது கணவரின் குரல் கேட்டது. “இதோ இரண்டு நிமிடத்தில் வந்துடறேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே அடுப்பங்கரையில் உள்ள பொருட்களை அங்கங்கே எடுத்து வைத்தேன். குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியவற்றை அதனுள்ளும் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்திய சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்களை கழுவும் தொட்டியிலும் போட்டுவிட்டு அவசர அவசரமாக எனது பயணத்திற்கு எடுத்து வைத்திருந்த பையை தூக்கிக்கொண்டு மறவாமல் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டி விட்டு வண்டியில் ஏறினேன்.

“ஏங்க… நீங்களும் வந்திருக்கலாம்” என்று கூறியவாறு வீட்டின் சாவியை அவரிடம் நீட்டினேன். சாவியை வாங்கி சட்டைப் பையில் வைத்துக்கொண்டே “ஆமா… நீங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து பழைய கதைகளை பேசிட்டு இருப்பீங்க. நான் அங்க சும்மா உக்காந்து எத்தனை நேரம் வேடிக்கை பாக்கிறது. அது சரிப்பட்டு வராது. நீ போனியா… உன் பிரண்ட்ஸ்களை சந்திச்சியா….. ஜாலியா இருந்தியா…. அப்படின்னு இருந்துட்டு வா. என்னை இதுக்கெல்லாம் இழுக்காதே” என்றார். ஆமாம் அதுவும் சரிதான் என்று எனக்குத் தோன்றியது.

என்னுடன் பயின்ற தோழனின் மகனுக்கு சென்னையில் திருமணம். அதற்காக உடன்படித்தவர்களை அழைத்திருப்பதாகக் கூறினான். அவர்களை எல்லாம் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. இந்தத் திருமணத்தை ஒரு வாய்ப்பாக வைத்து அவர்களை சந்திக்கலாமே என்ற ஆசையால் இப்பொழுது சென்னை கிளம்பியுள்ளேன். புகை வண்டி வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. “நீங்க கிளம்புங்க.. நான் போயிட்டு வரேன்.” என்று கூறி பையை எடுத்துக்கொண்டு சென்னை வண்டி வரும் நடைமேடைக்குச் சென்று காத்திருந்தேன்.

பத்து நிமிடம் தாமதமாக வந்த வண்டியில் ஏறி எனது இருக்கையில் அமர்ந்து சிறிது தண்ணீர் குடித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பயணிகள் அவர்களது இருக்கைகளைத் தேடி இங்கும் அங்கும் பைகளுடன் சென்று கொண்டிருந்தனர். வண்டி குலுங்கியவாறு கிளம்பியது. நான் சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்தேன். ‘அடடா…. பாலை எடுத்து வைக்க மறந்துட்டனே. பாதி நறுக்கி வைத்த வெங்காயத்தை டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்க மறந்துட்டேனே…’ என்று வீட்டில் மீதமிருந்த வேலைகள் என்னை கணவருக்கு போன் செய்து அதனை அவருக்குக் கட்டளைகளாக பிறப்பிக்க வைத்தது. ‘ச்சே….. என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் சிலது மறந்துடுதே’ என்று சலிப்புடன் ஜன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்தினேன்.

மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் கட்டிடங்கள் எல்லாம் எதிர்த்திசையில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. லேசாக மழை தூர ஆரம்பித்தது. வண்டி இப்பொழுது வயல்வெளிகளின் நடுவே சென்று கொண்டிருந்தது. இங்கு மழை கனமாக பெய்துகொண்டிருந்தது. மரங்கள் எல்லாம் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தன.

அதனை பார்க்கப் பார்க்க மனதினுள் ஏதோ பரவசம். அந்த மழையில் நனைந்தபடி வரப்புகளில் நடந்து சென்றால்…… என்று நினைக்கும் போதே உடலில் ஒரு சிலிர்ப்பு என்னையும் அறியாமல் வந்து சென்றது. மனதிற்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அந்த நாற்றாங்கால்கள், அப்பொழுதுதான் நடவு நட்ட வயல்கள், சேரடித்து நடுவதற்கு தயாராக உள்ள வயல்கள் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது எனது மனம் என்னை பின்னோக்கி இட்டுச் சென்றது.

பள்ளி செல்லும் காலங்களில் மழைக்காக உரப்பையிலிருந்து எடுக்கப்பட்ட பாலித்தீன் பையை (இதற்கு மழைக்காகிதப்பை என்றே பெயர்) கொங்காடையாக மடித்து தலையில் போட்டுக் கொள்வோம். அது தலை மற்றும் முதுகை மழையில் இருந்து நனையாதவாறு பாதுகாக்கும். அந்த வரப்புகளில் நடக்கும் பொழுது ஈரத்தினாலும் அப்பொழுதுதான் சேரடித்துக் கட்டியதாலும் சில இடங்களில் வழுக்கும் அல்லது உடைபடும். அதனால் கவனமாக நடப்போம்.

தூரல் மழையில் நனைந்தவாறு நாற்றாங்காலில் நாற்றைப் பிடுங்கியது, நடுபவர்களுக்கு நாற்றுக்கட்டுகளை வீசியது, அவர்களுடன் சேர்ந்து நாற்று நட்டது போன்றவை நினைவில் வந்து என்னை பரவசப்படுத்தியது. சில சமயங்களில் பாதி நடவு நட நட மழை வந்து விட்டால் அவசர அவசரமாக எல்லோரும் அருகில் ஏதாவது மரம் இருந்தால் அதன் அடியில் ஒதுங்குவோம்.

அந்தக் காலங்களில் அதாவது எழுபதுகளில் நாற்று நடுதல், ஏற்றம் இறைத்தல், மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகள் செய்யும் பொழுது அதன் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடல்கள் பாடுவார்கள். நடவு நடும் பொழுதும் களை எடுக்கும் போதும் ஒருவர் அவருக்குத் தெரிந்த தாலாட்டு அல்லது ஒப்பாரிப் பாடலை பாட மற்றவர்கள் பின்பாட்டுப்பாடி அந்தப் பாட்டை மனனம் செய்வார்கள். இப்படித்தான் அன்றைய பெண்கள் தாலாட்டு மற்றும் ஒப்பாரிப் பாடல்களை மனனம் செய்தார்கள். அப்பொழுதெல்லாம் வயதானவர்கள் இறந்து விட்டால் உடலை எடுக்கும் வரை வீட்டில் மைக் செட் கட்டி ஒப்பாரி பாடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்காக தாலாட்டு பாடுவார்கள். ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அந்தப் பாடல்கள் எல்லாம் நினைவில் இருந்து எங்கோ சென்றுவிட்டது போல் தோன்றுகிறது. எவ்வளவோ முயற்சி செய்த பிறகும் ஒரு பாடல் கூட நினைவிற்கு வரவில்லை. நிலா பிள்ளை சோறு மாற்றும்போது நான் எப்போதும் பாடும் பாடல் கூட இப்போது நினைவில் வர மறுக்கிறது. பெருமூச்சு ஒன்று எடுத்துவிட்டு மீண்டும் பார்வையை வெளியே செலுத்தினேன். நல்ல வெயில். வண்டி ஏதோ நகருக்குள் சென்று கொண்டு இருந்தது. ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. டீ விற்பவர் அதனை கொண்டு வரும்பொழுது வாங்க மறந்ததால் அவரின் அடுத்த வருகைக்காக கண்களை மூடிக் காத்திருந்தேன்.

டீயை குடித்துவிட்டு டீ கப்பை பெட்டிக்கு வெளியே வீசி எறிந்தேன். தூரத்தில் தெரிந்த பூத்துக் குலுங்கும் மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பூக்களால் பூத்துக் குலுங்கிய மரங்களை பார்க்கப் பார்க்க அவை காற்றில் அசைந்து அசைந்து என்னை அருகில் வா என்று அழைப்பதைப் போலவே இருந்தது. நானும் அவற்றை நோக்கி வயல்களின் நடுவே நடக்க ஆரம்பித்தேன். அந்த மரங்கள் கொஞ்சம் தூரத்தில் இருந்தன. அந்த வயல்வெளிகளைத் தாண்டி விளைநிலங்களில் நடக்க ஆரம்பித்தேன். அங்கே ஆடு மாடுகள் எல்லாம் மேய்ந்து கொண்டிருந்தன. அதையும் தாண்டி நடந்து செல்லச் செல்ல அந்த விளைநிலங்கள் எல்லாம் எதுவும் பயிர் செய்யப்படாததால் புற்கள் ஆங்காங்கே இருந்தன. மழையைக் கண்டு மாதக்கணக்கான நிலங்களைப் போல தோன்றியது.

அங்கே எங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் சின்னப்பன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். இவன் எப்படி இங்கே வந்தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவனிடம் “என்ன சின்னப்பா…. மாடெல்லாம் இங்க ஓட்டிட்டு வந்திருக்க” என்று கேட்டேன். அதற்கு அவன் “ஆமாங்க, அங்க மேயருக்கு மேப்பே (புல்லே) இல்லை. இங்கே தான் கொஞ்சம் ஏதோ பச்சை இருந்தது. அதனால இங்கே ஓட்டிட்டு வந்து இருக்கேன்” என்று சொன்னான். அவன் கூறியது உண்மைதான். ஆங்காங்கே சிறிது பச்சை தெரிந்தது. காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் எங்கு பார்த்தாலும் பறந்து கிடந்தன. அவனிடம் நான் “பார்த்து சின்னப்பா… காகிதம் எல்லாம் கெடக்குது. செனமாடா வேற இருக்குது. காகிதத்தைக்கீது தின்னப்போகுது” என்று கூறினேன். அதற்கு அவன், “அட… ஆமாங்க, போனவாரம் அப்படித்தான் நம்ம பக்கத்து பண்ணையில குட்டி போட்ட ஆடு செத்துப் போச்சுங்க. டாக்டரை கூப்பிட்டு கேட்டா பாலிதீன் காகிதத்தைத் தின்னு போட்டுத்தா ஜீரணமாகாது வயிறு உப்பி செத்து போச்சுன்னு சொன்னாங்க. அந்த குட்டிகளெல்லா போடற சத்தத்தைக் கேட்டா பாவமா இருக்குது. பாட்டல்லதா மாட்டுப்பால குடுக்கறாங்க. அன்னைலிருந்து நான் கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இருக்கேங்க.” என்று கூறிவிட்டு “ஏய் .. ஏய் … ஏய் … ” என்று சத்தமிட்டுக் கொண்டே மாடுகளை நோக்கி ஓடினான்.

நான் தூரத்தில் தெரிந்த அந்த பூத்துக் குலுங்கிய மரங்களைப் பார்த்தேன். அந்த மரங்களில் இருந்த பூக்கள் எல்லாம் மாயமாக மறைந்தது போல் தோன்றியது. யாரோ கத்துவது போல் தோன்றியது. மிகவும் மெதுவாக கேட்டதால் அது என்ன சப்தம் என்று புரியவில்லை. நான் அந்த மரங்களை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அந்த மரங்களை நெருங்க நெருங்க “காப்பாத்துங்க …. காப்பாத்துங்க…. ” என்ற குரல்கள் காதில் தெளிவாகக் கேட்டது.

அங்குள்ள மரங்களை எல்லாம் பார்க்கும்பொழுது அவைகள் எல்லாம் பட்டு போனவை போல எலும்புக்கூடுகளாக நின்று கொண்டிருந்தன. மனதினில் பயம் பரவ ஆரம்பித்தது. அந்த ஓலங்கள் எல்லாம் அந்த மரங்களில் இருந்து வருவது போல எனக்குத் தோன்றியது. சற்று நேரத்தில் காப்பாற்றுங்கள் என்ற சத்தம் மாறி தண்ணீர் தண்ணீர் என்று அந்த மரங்கள் எல்லாம் கூச்சல் போட ஆரம்பித்தன.

நடுக்கத்தோடே அந்த மரங்களை எல்லாம் பார்த்தேன். அவைகள் அசைவது போல் தோன்றியது. எனக்கு பிரம்மை தான் தோன்றுகிறதோ என்று கண்களை நன்றாக கசக்கி விட்டுப் பார்த்தால் அந்த மரங்கள் தங்கள் வேர்களை எடுத்து வைத்து என்னை நோக்கி நடந்து வருவது போல் தோன்றியது. எல்லா மரங்களும் என்னை நோக்கி வேக வேகமாக வர ஆரம்பிப்பது போல் தோன்றியது. மனதிற்குள் பீதி பரவியது. என்னுடைய உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சத்தான் இந்த மரங்கள் வருகின்றன என்று நொடிப்பொழுதில் உணர்ந்து அலறி அடித்துக் கொண்டு திரும்பி ஓட ஆரம்பித்தேன். அப்படி ஓடும்போது வழியில் கால் தடுக்கி கீழே விழுந்தேன். முழங்கையில் நங்கென்று ஏதோ இடித்தது. நல்ல அடி. வலியையும் பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து வேகமாக ஓட ஆரம்பித்தேன். எனது இடது தோள்பட்டையின் மேல் கனமாக ஏதோ ஒன்று அழுத்துவதாக இருந்தது. என்னவென்று பார்த்தால் ஒரு மரம் வேரோடு அமர்ந்திருப்பதைப் போல இருந்தது. மூச்சே நின்று விடுவது போல உணர்ந்தேன். எனது வலது கையால் அதை தள்ளிப் பார்க்கிறேன். ஆனால் முடியவில்லை. அது வழவழப்பாக இருப்பதை உணர்கிறேன். உயிர் பயத்தால் கண்களை மூடிக்கொண்டு உடலில் உள்ள அத்தனை பலத்தையும் பிரயோகித்து வலது கையால் அதைப் பிடித்துத் தள்ளுகிறேன்.

“ஏம்மா… பைய இப்படி தள்றீங்க” என்று யாரோ என் காதருகில் கேட்கிறதை உணர்கிறேன். தோல்பட்டையை தேய்த்தவாறு கண்களை திறந்து அருகில் பார்க்கிறேன். வயதான ஒருவர் தோலில் கனமான லெதர் பையை மாட்டியவாறு எனது சீட்டில் சாய்ந்து நின்றிருந்தார். வரும் நிறுத்தத்தில் வண்டியிலிருந்து இறங்குவதற்கு தயாராக பயணிகள் தங்கள் பைகளுடன் நின்றிருந்தனர்.

கழிப்பறைக்குச் செல்வதற்காக நான் எழுந்து கம்பியை பிடித்தேன். முழங்கை வலித்தது. யாரோ பையால் இடித்திருப்பார்கள் போல் தெரிகிறது. கழிப்பறைக்கு சென்று விட்டு முகம் கழுவி வந்தேன். இப்பொழுது படபடப்பு சற்று குறைந்தது போல் இருந்தது. என்ன ஒரு பயங்கரமான கனவு. இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. ஏதோ புத்தகத்தில் மரம் செடி கொடிகள் எல்லாம் இரவில் பேசுவதாகவும் நகர்வதாகவும் படித்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது. சுற்றுச்சூழலை காக்க மறந்தால் சூழலே மனிதர்களை அழித்துவிடுமோ என்று எண்ணத்தோன்றியது. இயன்றவரை மக்காத குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் அதற்கென்று வைக்கப்படும் தொட்டியில் தான் போடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு செல்போனில் நேரத்தை பார்த்தேன். இன்னும் சற்று நேரத்தில் வரவிருக்கும் நிறுத்தத்தில் இறங்குவதற்காக தயாராகி காத்திருந்தேன்.

Leave a Reply

Categories