
எல்லையற்ற கற்பனைகளை
வண்ணமயமாக்கி,
தலைமுறைகள் தாண்டியும்
தன்மானம் காக்கும்
தொழிலின் வித்தகர்!
கை கொண்டு இழுத்து,
கால் கொண்டு மிதித்து,
நூல் இழையில்
தொழில் பற்றையும், கலாச்சாரத்தையும்
நேர்த்தியோடு பின்னிப் பிணைப்பவர்
மௌனமாய் கவி பாடி
பாரம்பரியத்தைப் பறைசாற்றி
புதுப்புது சிந்தனைகள்
மனக்கண்ணில் நிழலாட,
படைப்பின் ரகசியம் அறிந்த மானுடர்
இதயத்துடிப்பாய் தறியின் ஓசை
இடைவிடாது ஒலித்து
அணிபவருக்கு
மென்மையும், கதகதப்பும்,
இதமும் பரிசளிப்பவர்
நிறைவேறிய, நிறைவேறாத
பல கனவுகளை
நெஞ்சில் புதைத்து,
நிறைமன உணர்வோடு
நெய்த சேலையில்
வானவில் காட்டும்
அற்புத நெசவாளர்!
உமை வியப்புடன்
நோக்கியே வாழ்த்துகிறேன்
அழகிய பச்சைப் பட்டாடை
யார் திருமேனியை அலங்கரிக்குமோ?
அந்த மங்கள நாயகி
மதுரை மீனாட்சியோ?
– கௌசல்யா ஞானேஸ்வரன்
(ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த கவிதை)

