
பச்சை நிறப் பட்டு; அதில்
பசும்பொன் நிறச் சரிகை!
விழிவளர்த்து அவன் நெய்வது
மதுரை மீனாட்சிக்கா?
காஞ்சி காமாட்சிக்கா?
ஊர் மனை சிறக்க
ஆயுள் முழுக்க நெய்த கை, இன்று
ஈடிலாத் தன் இணையருக்காய்
உயிர் குழைத்து நெய்கிறது!
காலமெல்லாம் பட்டுத்தறி ஓட்டியவன்,
அடுத்தவரைப் பகட்டாகக் காட்டியவன்;
தனக்கென இதுவரை பாவு கோர்த்த
வரலாறு ஏதும் இல்லை!
வறுமைதான் அவன் வாழ்வியல் எனினும்,
மறுமையிலும் பிரியா இணையற்ற காதலுக்கு
உண்டோ அடைக்கும் தாழ்?
அகவை எண்பதைத் தொடப்போகும்
அவளுக்கான பேரன்பின் பரிசாய்,
தன் வாழ்நாள் சேமிப்பைத்
தாரை வார்க்கிறான் இந்த நெசவாளி!
– அன்புமணி வி.
(ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த கவிதை)

