மாற்றம் நம் கையில் – அன்புமணி வி.

அப்பாவுடன் சைக்கிள் சவாரி செய்து கொண்டிருந்தாள் மலர். அவளுக்கு மட்டுமல்ல, அப்பா ரவிக்கும் அது மிகவும் பிடித்த பயணம் எப்போதும். தந்தை – மகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பேசித் தீர்ப்பார்கள். 
வீட்டிலும் பேசிக் களிப்பார்கள்தான். ஆனால் அம்மாவிற்கு சலிப்புத் தட்டி விடும். அதனால் மூவருக்கும் பொதுவானதை, பிடித்ததை செய்வார்கள். 
வெளியில் வந்து விட்டால் இருவருக்கும் கொண்டாட்டம்தான். பொதுவாக ஞாயிறு காலையில் இப்படிக் கிளம்புவார்கள். இன்றும் அப்படித்தான். 
“அப்பா! ” மலர் அழைத்தாள்.
“என்னடா?”
“எனக்கொரு சந்தேகம்”
“என்ன புதுசாய்?”
“போன வாரம் அம்மாயி வீட்டுக்குப் போயிருந்தோம் இல்லையா?”
“ஆமா”
“அப்போ பக்கத்து வீட்டு ஜானகியோட அப்பா திடீர்னு இறந்து போனார் இல்லையா?”
“ஆமாம்மா. அது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது”
“ஆனா, அவங்க அம்மாவுக்கு ஏம்பா எல்லாரும் வெள்ளைப் பொடவை போட்டாங்க? “
“அவங்க புருஷன் இறந்துட்டார் இல்லையா? அதான்”
“ஆனாப்பா…இப்போ எல்லாம் யாரும் வெள்ளைப் பொடவை கட்டறது இல்லைதானே? அம்மாயி கூட கலர் பொடவை கட்டறாங்கதானே? அப்புறம் ஏன்?”
” உண்மைதான் கண்ணு. ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயமுன்னு இருக்கே. அதனால கொஞ்ச நாளைக்காவது அப்படித்தான்.”
“போன வருஷம் அப்பத்தா இறந்தப்ப தாத்தாவுக்கு எதுவும் சடங்கு செய்யலியேப்பா, அது ஏன்?”
” ஆம்பளைங்களுக்கு அது மாதிரி இல்லடா”
“அப்போ… பொம்பளைகளுக்கு மட்டும் ஏம்பா?”
“யோசிக்க வேண்டிய விஷயம்தாண்டா. இப்போ காலம் நிறைய மாறிடுச்சு. ஆனா, இன்னும் சிலது மட்டும் மாறலே”
“மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்கணும்னு சொல்லுவீங்க இல்லையாப்பா?”
“ஆமாடா…கண்டிப்பா. காந்தித் தாத்தா சொன்னது அது”
வீடு வந்துவிட இருவரும் உள்ளே நுழைந்தனர். தனது 14 வயது மகளின் பக்குவத்தை எண்ணி  வியந்தார். அவளை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டார்.
சிலைகளை வடித்துக் கொடுக்கும் கலைஞர் ரவி. சென்னையில் இதற்கான படிப்பை விருப்பப்பட்டுப் படித்தார். சொந்த ஊரில் வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார். அனைத்து மதக் கடவுள், தலைவர் எனப் பல்வேறு சிலைகள் வடிப்பார்.  அதனால் அவருக்கு எல்லோரும் சமம். அதையே பெண் குழந்தைக்கும் சொல்லி வளர்த்தார்.
மலருக்கும், மனைவி வள்ளிக்கும் கூடக் கற்றுக் கொடுத்துள்ளார். அதிக ஆர்டர்கள் வரும்போது குடும்பமே உட்கார்ந்து செய்யும். 
அவர் படித்த புத்தகங்கள் அவரை சிறந்த மனிதனாக செதுக்க உதவின. அது போல் தன் மகளையும் அழகான சிற்பமாகச் செதுக்கிக் கொண்டிருந்தார். எதற்கும் தடை விதிப்பது இல்லை. அவளது எதிர்காலம் குறித்து பல கனவுகள் உண்டு அவருக்கு. 
ஒரு மாத காலமாய் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு ஆர்டருக்காய் இரவு பகல் பாராது வேலை செய்து கொண்டிருந்தார். வள்ளியும், மலரும் அவருக்குத் தேவையான உதவிகள் செய்து வந்தனர். அன்று அப்போதுதான் அவர்கள்  இருவரும் தூங்கச் சென்றனர். 
ரவி தானும் சிறிது நேரம்  பணி செய்யும் இடத்தில் இருந்த கட்டிலில் படுத்தார். நடுவில் கண் விழித்து எழுந்தவர் வேலையைத் தொடர்ந்தார். விடிந்த பின்னும் வேலை தொடர்ந்தது. 50 அடி உயரமான சிலையின் கண்களைச் செதுக்குவதில் கவனமாக இருந்தவர், யாரோ அழைக்கவும் திரும்பினார். அதில் அவரது கையில் இருந்த உளி கீழே நழுவ, அதைப் பிடிக்க கையை நீட்டியவர், நிலை தடுமாறி கீழே தலைகுப்புற விழுந்தார். 
தலை தரையில் மோதியதில் பலத்த அடிபட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளிருந்து வள்ளியும், மலரும் ஓடி வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி அவர்களை உலுக்கி விட்டது. அக்கம் பக்கத்தினர் அனைவரும் கூடி விட்டனர். உடனடியாக 108 க்கு தகவல் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துப் போயும் பயனில்லை. அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். உறவினர் எல்லோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மலரும், வள்ளியும் நடந்த விபத்தை நம்ப முடியாமல் வாய் அடைத்துப் போய் இருந்தனர். சடங்கு சம்பிரதாயம் ஆரம்பமாகியது. கடைசியாக அந்த வெள்ளைப் புடவை மாமா கையில் இருந்ததைக் கவனித்தாள் மலர். 
அவ்வளவுதான். விருட்டென எழுந்தாள். மாமாவிடம் சென்றாள்.
“மாமா! இந்த வெள்ளைப் புடவை வேண்டாம்”
“அப்படி சொல்லக்கூடாது பாப்பா. நீ சின்னப் பொண்ணு. உனக்குப் புரியாது”
“ஏன் புரியாமல்? நல்லாத் தெரியும் மாமா. இந்தக் காலத்தில் எதற்கு இதெல்லாம் ?”
“இது சாஸ்திரம் மலர்”
“என் அப்பாவே இதை விரும்ப மாட்டார்.”
“கொஞ்ச நாள்தான் மலர். அப்புறம் அம்மா கலர் புடவை கட்டலாம்.”
“அப்புறம் எதற்கு மாமா? இப்பவே ஏன் கூடாது? அந்த மாற்றம் இந்த சடங்கை அகற்றுவதில் தொடங்கட்டும். அப்போதுதான் இந்தப் பழக்கத்தை வேரோடு களைய முடியும்.”
வள்ளி எதுவும் சொல்லாமல் தனது கணவரின் சாயையாக மாறிய மலரை, மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மலர் எல்லோர் மத்தியிலும் உறுதியாக நின்றாள். “அப்பா எப்போதும் மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பார். எனவே இதை மாற்றியே ஆக வேண்டும்” என்றாள்.
அனைவரும் வேறு வழியின்றி தலை அசைத்தார்கள். ரவியின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச்  செல்லப்பட்டது. அப்பாவின் உடலுக்கு முன்னே  நெருப்புச் சட்டி பிடித்தபடி இடுகாடு நோக்கி செல்லத் துவங்கினாள் மலர்.

Leave a Reply

Categories