நவீன குடுகுடுப்பைக்காரர் – கௌசல்யா ஞானேஸ்வரன்


நிசப்தமான இரவு 
உறக்கம் வர மறுக்க
நாளையின் சுப 
நிகழ்வுகளுக்காக 
கதிரவன் வரும் முன்னே 
கண் விழிக்கும் 
கட்டாயத்தில் 
இமைக் கதவுகளை 
இறுக்க மூடி தாழிட்டேன்…
அதிகாலை 
ஆடை அலங்காரம் 
அமர்க்களமாய் செய்தேன் 
‘ணங்’என்ற ஓசையுடன் 
காதணி கழன்று விழ 
கையூட்டுத் தருவதாக 
கடவுளுக்கே வேண்டுதல் 
வைக்க..
தகதகவென மின்னிய 
தங்கக் கம்மல்
தாமதிக்காமல் 
கிடைக்க 
கை கூப்பி நன்றியை 
காணிக்கையாக்க…
கைபேசி 
என்னை அழைக்க 
“ஹலோ” என்றேன் 
“நல்ல காலம் பிறக்குது 
நல்ல காலம் பிறக்குது”
குடுகுடுப்பைக்காரரின் 
குரல் 
குடுகுடுப்பையோடு 
மறுமுனையில் ஒலிக்க….
அதிர்ச்சியில் 
நா தழுதழுக்க..
“இன்னுமா உறக்கம்”
என்னவர் உலுக்க
கலக்கத்துடன் 
கண் விழித்தேன்..!

Leave a Reply

Categories