வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் மிளிர வேண்டுமெனில், ஆரோக்கியத்தை வாழ்வின் அடித்தளமாக இணைப்பது இன்றியமையாதது. உண்மையான ஆரோக்கியம், நம் உடலின் மையமாக விளங்கும் மூளையைப் புத்துணர்ச்சியுடன் பேணுவதில் தொடங்குகிறது. ஏனெனில், மூளையின் ஆரோக்கியத்தையும் அறிவாற்றல் திறன்களையும் மேம்படுத்துவது என்பது, முழுமையான அணுகுமுறையால் மட்டுமே சாத்தியம். உடல், மனம், சமூகத் தொடர்புகள், சீரான உணவு, போதுமான ஓய்வு மற்றும் தரமான தூக்கம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் போது மட்டுமே அது சாத்தியமாகும். அப்படி ஒருங்கிணையும் வாழ்க்கை முறையில், மூளையின் நெகிழ்ச்சித்தன்மை (neuroplasticity) வலுவடையும், அறிவாற்றல் செயல்பாடுகள் கூர்மையாகும், சிந்தனை தெளிவடையும். இதன் விளைவாக, ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் உயர்ந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உயிரோட்டமும் உற்சாகமும் நிறைந்ததாக மாறும்.
மூளையைத் தூண்டுவதற்கு, தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். புதிய மொழி கற்பது, இசைக்கருவி வாசிப்பது, ஓவியம் வரைவது, அல்லது புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது போன்ற செயல்பாடுகள், மூளையில் புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்கி, அதன் செயல்திறனையும் நினைவாற்றலையும் கூர்மையாக்குகின்றன. இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகள், மூளையின் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவதோடு, முதுமை காரணமாக ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டைத் தாமதப்படுத்தவும் உதவுகின்றன. கற்றல் திறனுக்கு ஓர் சிறந்த உதாரணமாக, ஒருவர் தினமும் 15 நிமிடங்கள், மொழியை கற்கும் செயலியைப் பயன்படுத்தி (Duolingo) ஸ்பானிஷ் மொழியைக் கற்று, ஒரு வருடத்திற்குள் அடிப்படை உரையாடல்களை எளிதாக நடத்த முடிந்தது. இந்தச் செயல்பாடு அவரது நினைவாற்றலையும், புதிய தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தியது.
பல்வேறு வகைமை புத்தகங்களை (different genre) வாசிப்பது ஒருவருக்கு மனதளவிலும், மூளையின் செயல்பாட்டிலும் புத்துணர்ச்சி அளிக்கும் செயல். புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள் என எதுவாக இருந்தாலும், தொடர்ந்து வாசிக்கும் போது அது மனதை ஒருமுகப்படுத்தி, புரிதல் மற்றும் விமர்சன சிந்தனையை (critical thinking) வளர்க்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக (Stanford University) உள்ளிட்ட நரம்பியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள், இலக்கியப் படைப்புகளை நுணுக்கமாக வாசிப்பது மூளையின் பல சிக்கலான அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு (complex cognitive functions) தீவிரப் பயிற்சி அளிப்பதையும், உணர்வுபூர்வ வாசிப்பு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புத்துணர்ச்சி அளிப்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
அதுவே ஒருவர் சிந்தனையுடன் எழுதும்போது, அது மூளையின் பல்வேறு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் தூண்டுகிறது. இது வாசிப்பைப் போலவே பல எண்ணப் பாதைகளையும், நுணுக்கமான பகுதிகளையும் இயக்கினாலும், எழுதுதலில் கூடுதல் ஆழமான செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. எழுத்து என்பது வெறும் வார்த்தைகளை உருவாக்குவது அல்ல; ஒரு எண்ணத்தைத் தெளிவாக வடிவமைப்பது முதல், அதை அழகியலோடு வெளிப்படுத்துவது வரை, மூளை பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. இது மனதில் சிதறிக்கிடக்கும் எண்ணங்களை வடிகட்டி, கூர்மைப்படுத்தி, அவற்றை வாசகனுக்குப் புரியும்படி கட்டமைத்து வெளிப்படுத்தும் நுண்ணிய கலை ஆகிறது. தினமும் எழுதும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை, உணர்வுபூர்வமாக அணுகுவதோடு, சிக்கலான விஷயங்களைப் பகுத்தறியும் திறனையும் வளர்த்துக் கொள்கிறார்கள். அறிவியல்பூர்வமாக, வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகிய இரண்டும், மூளையில் ‘சினாப்டிக் நெகிழ்வு தன்மையை’ (synaptic plasticity) எனப்படும் நிகழ்வை ஊக்குவித்து, நரம்பியல் அணுக்களின் (neurons) புதிய தொடர்புகளை ஏற்படுத்த உதவுகின்றன.
கல்வி சார்ந்த பாட்காஸ்ட்கள் (podcasts) மற்றும் ஆடியோ புத்தகங்கள் செவிவழி கற்றலை தூண்டுகின்றன. மூளையின் ‘செவிப்புலன் புறணியை’ (Auditory cortex) தூண்டி, உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் மையங்களை இணைத்து, நினைவாற்றலை வலுப்படுத்துகின்றன. உரையாடல் பாணியும், கதைசொல்லல் முறையும் சிக்கலான கருத்துகளை எளிமையாக்கி, பயணம் அல்லது வேலைகளின்போது மன அழுத்தமில்லாத கற்றலை உருவாக்குகின்றன. குரல் தொனி மற்றும் இடைநிறுத்தங்கள் கவனத்தை மையப்படுத்தி, தகவலை நீண்ட நேரம் மனதில் தக்கவைக்கின்றன. தமிழ் பாட்காஸ்ட்கள், சொற்களையும் உச்சரிப்பையும் கற்பிக்க, ஆங்கில ஆடியோ புத்தகங்கள் மொழி புலமையை மேம்படுத்துகின்றன. நேரத்தை திறம்பட பயன்படுத்தி, மனதை புத்துணர்ச்சியாக வைத்து, விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கின்றன.
குறுக்கெழுத்துப் புதிர்கள் மற்றும் செஸ் போன்ற மூளை விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் அறிவாற்றல் திறன்களில் தனித்துவமான மேம்பாடுகளை உணர்கிறார்கள். குறுக்கெழுத்து விளையாடுபவர்கள், தங்கள் சொற்களஞ்சியம் விரிவடைவதையும், மறைமுகமான தடயங்களிலிருந்து துல்லியமான வார்த்தைகளைக் கண்டறியும் வேகம் அதிகரிப்பதையும் தெளிவாக உணர்கிறார்கள். இது அன்றாட உரையாடலிலும், எழுத்திலும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. மறுபுறம், செஸ் விளையாடுபவர்கள், தங்கள் தர்க்கரீதியான சிந்தனை கூர்மையடைவதையும், ஒரு முடிவெடுப்பதற்கு முன் அதன் பல சாத்தியமான விளைவுகளை முன்னரே கணிக்கும் திறனையும் உணர்கிறார்கள். இது சிக்கலான சூழ்நிலைகளில் சிறந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது. .
பொதுப் பேச்சு மற்றும் விவாதங்களில் பங்கேற்பது, மனதை ஒரு புதிய பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு மூளையின் செயல்பாடுகள் வியத்தகு மாற்றங்களை அனுபவிக்கின்றன. இந்த செயல்பாடுகள் மூளையின் முன்மூளைப் புறணி (prefrontal cortex) மற்றும் உணர்ச்சி மையங்களை (emotional centers) தூண்டி, சிந்தனையின் தெளிவையும், உணர்வின் ஆழத்தையும் ஒருங்கிணைக்கின்றன. ஒருவர் தங்கள் கருத்துகளைத் தர்க்கரீதியாகவும், தெளிவாகவும் தொகுத்து வெளிப்படுத்தக் கற்றுக்கொள்கிறார், இது சொல்வளத்தை வளப்படுத்துவதோடு, சிந்தனையின் வேகத்தையும், நுண்ணறிவையும் மேம்படுத்துகிறது. விவாதங்களில், எதிராளியின் கருத்துகளை உடனடியாகப் புரிந்து, பதிலளிக்கும் திறன், மூளையின் பகுப்பாய்வு ஆற்றலையும் (analytical processing), உடனடி முடிவெடுக்கும் திறனையும் (real-time decision-making) கூர்மைப்படுத்துகிறது. இந்தச் செயல்பாடு, மூளையின் நெகிழ்வுத்தன்மையை (neuroplasticity) வளர்த்து, மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
‘சமூகத் தொடர்புகள்’, மனித மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. நேர்மறையான தொடர்புகளில் ஈடுபடும் போது, மூளை நம்பிக்கை மற்றும் பிணைப்பை ஊக்குவிக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோனையும், மகிழ்ச்சியைத் தூண்டும் டோபமைனையும் வெளியிடுகிறது. இதனால், மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் குறைந்து, புத்துணர்ச்சி அதிகரிக்கிறது.
அன்றாட நடைப்பயிற்சியிலிருந்து தீவிரமான உடற்பயிற்சிகள் வரை, அனைத்து விதமான உடல் செயல்பாடுகளும் டோபமைன், செரோடோனின் மற்றும் எண்டோர்பின்கள் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையை உடனடியாக மூளைக்குள் பாய்ச்சுகின்றன. இது ஒரு உடனடி “மகிழ்ச்சி வேதிப்பொருள் குமிழி குளியலை” (Neurochemical Bubble Bath) உருவாக்கி, மனநிலையை உயர்த்தி, பதட்டத்தைக் குறைத்து, இயற்கையான புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும், மன ஆரோக்கியத்திற்கான நேரடித் தீர்வாகச் செயல்படுகிறது. மேலும், உடற்பயிற்சியானது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நியூரோஜெனிசிஸ் (Neurogenesis) எனப்படும் புதிய நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது மனச்சோர்வின் அபாயத்தை 30% வரை குறைப்பதுடன், மூளையின் சுற்றுகளை மாற்றியமைத்து மனத்திறன், கவனம், மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. குறிப்பாக, உயர் தீவிர இடைவெளிப் பயிற்சி ((High-Intensity Interval Training-HIIT), நினைவாற்றலையும் கவனத்தையும் கூர்மைப்படுத்தும் BDNF (Brain-Derived Neurotrophic Factor) என்ற புரதத்தின் அளவை கணிசமாக உயர்த்துவதன் மூலம், மூளையின் உகந்த செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அற்புதமான மருந்தாகவே அமைகிறது.
இவற்றோடு, வழக்கமான பழக்கவழக்கங்களை மாற்றுவது மூளையைத் தூண்டி, எச்சரிக்கையாக வைத்திருக்க உதவுகிறது. உதாரணமாக, அதிகம் பயன்படுத்தாத கையால் பல் துலக்குவது அல்லது வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் நடப்பது போன்ற சிறிய மாற்றங்கள், மூளையை புதிய நரம்புப் பாதைகளை உருவாக்கத் தூண்டி, அறிவாற்றல் நெகிழ்ச்சித்தன்மையை வளர்க்கின்றன. அதேபோல், இயற்கையில் நேரம் செலவிடுவது, மனதிற்கு ஒரு மந்திரத் தொடுதலை அளிக்கிறது. ஒரு பசுமையான பூங்காவில் 20 நிமிட நடைபயிற்சி செய்யும்போது, மரங்களின் மென்மையான அசைவும், பறவைகளின் இனிய ஒலியும் மன அழுத்தத்தைக் கரைத்து, கவனத்தை கூர்மைப்படுத்துகின்றன. இதனால், மனம் புத்துணர்ச்சி பெறுவதோடு, மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடும், உணர்ச்சி சமநிலையும் (emotional equilibrium) கணிசமாக மேம்படுகின்றன. இவ்வாறு, இயற்கையின் அரவணைப்பும், பழக்கவழக்கங்களின் மாற்றமும் மன ஆரோக்கியத்தை வளர்த்து, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உற்சாகத்துடன் அனுபவிக்க வழிவகுக்கின்றன
மன அழுத்தமோ அல்லது சோர்வையோ ஒருவர் உணரும்போது, குளிப்பது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். உதாரணமாக, ஒரு நீண்ட வேலை நாள் அல்லது கடும் தேர்வு நெருக்கடிக்குப் பிறகு ஏற்படும் உடல் மற்றும் மனச் சோர்வு, உடலில் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய சூழலில், வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது, நீரின் இதமான வெப்பம் பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தைத் (parasympathetic nervous system) தூண்டி, தசைகளில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் உடனடி அமைதி உணர்வை ஏற்படுத்துகிறது.
பல்பணி (multitasking) செய்வதைக் குறைப்பது, அல்லது தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பது (binge-watching) போன்ற செயல்களைத் தவிர்ப்பது மன ஆற்றலைப் பாதுகாக்கிறது. ஒரு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது (single-tasking) அல்லது ஆழ்ந்த வேலை (deep work) மனதை ஒருமுகப்படுத்தி, செயல்திறனை உயர்த்துகிறது. இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறை, மூளையின் முன்மூளைப் புறணியை (prefrontal cortex) தூண்டி, கவனத்தை கூர்மைப்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது.
குறுகிய வீடியோக்களை (Shorts/Reels) தொடர்ந்து பார்ப்பது, உங்கள் மூளையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனித மூளை இயல்பாகவே புதுமையை விரும்புகிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்க்ரோல் செய்து புதிய வீடியோ பார்க்கும் போது, மூளையில் ‘டோபமைன்’ எனப்படும் மகிழ்ச்சி அளிக்கும் நரம்புக் கடத்தி சுரக்கிறது. இதனால் உடனடி திருப்தி கிடைத்த உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இந்த “சிறு வெகுமதி உணர்வு” அடிக்கடி நிகழ்ந்தால், மூளை அதற்கு பழகி விடுகிறது. அதன் விளைவாக கவனச் சிதறல் அதிகரிக்கலாம்; நீண்ட நேரம் ஆழமாக சிந்திக்க முடியாமல் போகலாம்.
எப்போதும் உடனடி திருப்தி தரும் விஷயங்களைத் தேடும் பழக்கம் வளரலாம். மேலும், முடிவெடுத்தல், கோபத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துதல் போன்ற முக்கியமான செயல்களுக்குப் பொறுப்பான மூளையின் முன் பகுதி (prefrontal cortex) இந்தத் தொடர் பழக்கத்தால் பலவீனமடையலாம் என்று நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தரமான தூக்கம் மூளையின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக அமைகிறது, ஏனெனில் இரவில் 7–9 மணி நேர தூக்கம் கிடைக்கும் போது, நினைவாற்றல் ஒழுங்குபடுத்தப்பட்டு கற்றறிந்தவை உறுதியாகச் சேமிக்கப்படுகின்றன. தூக்கத்தின் ஆழமான கட்டங்களில், கிளிம்பாடிக் மண்டலம் (glymphatic system) செயல்பட்டு, மூளையில் தேங்கும் நச்சுகள் மற்றும் அமிலாய்டு-பீட்டா (Amyloid-β) போன்ற தீங்கு விளைவிக்கும் புரதங்களை நீக்குகிறது. இந்த சுத்திகரிப்பு, மூளையின் ஆரோக்கியத்தை பராமரித்து, அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதுடன், நரம்பு சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது; தினமும் நிலையான நேரத்தில் தூங்குவதும், படுக்கைக்கு முன் திரைகளைத் தவிர்ப்பதும் ஆழ்ந்த தூக்கத்தை உறுதிசெய்கிறது. உணவு
மற்றும் ஊட்டச்சத்து, மூளையின் செயல்பாட்டுக்கு முக்கியமானது;
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மீன், ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்ற உணவுகள்; பெர்ரி பழங்கள்; அடர் பச்சை இலைக் காய்கறிகள்; முட்டைகள் (Choline); மஞ்சள் (curcumin) மற்றும் டார்க் சாக்லேட் (flavonoids) போன்ற உணவுகள், மூளையின் ஆரோக்கியத்தையும் நரம்பு செல்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றன.
மூளைக்கும் குடலுக்கும் இடையேயான இருவழித் தொடர்பு பொதுவாக ‘மூளை-குடல் இணைப்பு’ (Brain-Gut Axis) என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பின் மையத்தில், குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் தொகுப்பான மைக்ரோபயோம்கள் (Microbiome) முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதிய அறிவியல் தரவுகளின்படி, இந்த நுண்ணுயிரிகள் வெறும் செரிமானச் செயல்பாட்டிற்குத் துணை புரிவது மட்டுமல்லாமல், செரோடோனின், டோபமைன் போன்ற மனநிலையை ஒழுங்குபடுத்தும் நரம்புக் கடத்திகளை (Neurotransmitters) உற்பத்தி செய்வதன் மூலம் நம்மை ஆளுகின்றன. இதன் நேரடி விளைவாக, மைக்ரோபயோம்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனை (Stress Resilience) மேம்படுத்துகின்றன. மேலும், கவனம், நினைவாற்றல், உணர்ச்சி சமநிலை உள்ளிட்ட அனைத்து அறிவாற்றல் அம்சங்களையும் உறுதிப்படுத்துவதிலும் அவை இன்றியமையாத பங்களிப்பை வழங்குகின்றன.
நுண்ணுயிர்களின் தொகுப்பின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரோபயோடிக்ஸ் (probiotics) மற்றும் ப்ரீபயோடிக்ஸ் (prebiotics) இரண்டும் இன்றியமையாதவை. புரோபயோடிக்ஸ் என்பது உடலில் நேரடியாக சேர்க்கப்படும் உயிருள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகள். இவை குடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடக்கி, செரிமானத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகின்றன. தயிர், கெஃபிர், கிம்ச்சி போன்ற நொதித்த உணவுகளில் இவை நிறைந்துள்ளன. இதற்கு மாறாக ப்ரீபயோடிக்ஸ் என்பது நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு உணவாக விளங்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள். வெங்காயம், பூண்டு, காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், வெந்தயம் போன்ற உணவுகளில் இவை கிடைக்கின்றன. ஒருவேளை புரோபயோடிக்ஸ் குடலுக்குள் நல்ல பாக்டீரியாக்களை நேரடியாக கொண்டு வருமானால், ப்ரீபயோடிக்ஸ் அவற்றிற்கு ஊட்டமளித்து வளரவைக்கின்றன. இரண்டும் இணைந்து செயல்படும் போது, அதனை சின்பயாடிக்ஸ் (symbiotics) என அழைக்கின்றனர்; இது குடல் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்தி, மனநிலையையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் ஒருங்கிணைக்கிறது. இதன் எதிர்ப்புறமாக, அதிகச் சர்க்கரை மற்றும் செயற்கை சேர்மங்கள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மைக்ரோபயோம்களின் சமநிலையை சிதைத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன என்பதும் ஆய்வுகள் காட்டுகின்றன.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் செயல்பாட்டிற்கும் மிக அவசியம். நீரிழப்பு (dehydration) ஏற்படும்போது, அது கவனம் செலுத்தும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் நேரடியாகப் பாதிக்கிறது. நீரிழப்பின் முக்கிய அறிகுறிகளாக தலைவலி, சோர்வு, மனக்குழப்பம் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம். சரியான அளவு தண்ணீர் குடிப்பது, இந்த அறிகுறிகளைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்தி, அன்றாடப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.
புத்துணர்ச்சியான வாழ்வின் ரகசியம், நாம் எந்த நினைவுகளைத் தேர்ந்தெடுத்து உள்ளுக்குள் சேமிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. மன அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்மறை உணர்வுகளுக்கு மாறாக, மகிழ்ச்சி, நன்றியுணர்வு போன்ற நேர்மறை எண்ணங்கள் நிறைந்த நினைவுகள் நமக்கு சிறந்த உடல் மற்றும் மன நலத்தையும் நீடித்த புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன.
மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது என்பது ஒரு நாள் வேலை அல்ல; அது ஒவ்வொரு நாளும் சிந்தனையால், செயலால், உணர்வால், உணவால், உறவால், ஓய்வால் நிரம்பும் ஒரு பயணம். அறிவைத் தூண்டும் வாசிப்பும், எண்ணங்களை விடுவிக்கும் எழுத்தும், உற்சாகத்தை ஊட்டும் உடற்பயிற்சியும், அமைதியைத் தரும் தியானமும்—இவை அனைத்தும் மனதின் ஒளியை ஒவ்வொரு நாளும் மீண்டும் ஒளிரச் செய்கின்றன. புத்துணர்ச்சி என்பது உடலின் சுறுசுறுப்பில் மட்டும் இல்லை; அது மனதின் நுண்ணுணர்விலும், உள்ளத்தின் அமைதியிலும் வாழ்கிறது. ஒரு சிறிய பசுமைத் தாவரத்திற்கு நீர் ஊற்றுவது, ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்வது, ஒரு பழமொழியில் புதுமை காண்பது போன்ற சிறிய தருணங்கள்கூட புத்துணர்ச்சியின் விதைகள். புத்துணர்ச்சி என்பது ஒரு நிலை அல்ல; அது நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு மனநிலை.



