அன்னமிட்ட கரம் – கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன், உமா மகேஸ்வரி

சூரியன் தன் வெப்பப் பார்வையை உக்கிரமாக்கிக் கொண்டிருந்த அந்த உச்சி நேரம். “அம்மா…” — அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல் ஒன்று வாசலில் இருந்து கேட்டது.பசி மயக்கத்தில் காப்பி ஊற்றி, அதற்கு மில்க் பிஸ்கட் தொட்டு சுவைக்கப் போகும் தருணத்தில் இருந்த எனக்கு, பக்! என்று உள்ளம் பதறியது.“அடடா! இன்று வியாழக்கிழமைதானே! அந்த பெரியவர் வருவார்… அவருக்கு உணவு கொடுக்க வேண்டுமே! ஆனால் நமக்கே இன்னும் சமைக்கவில்லையே… எப்படிக் கொடுப்பேன்?” என்ற கவலையோடு வாசலுக்கு ஓடினேன்.

வழக்கம்போல் சிரித்த முகத்துடன் அந்தப் பெரியவர் நின்றிருந்தார். ஆனால் என் மனம் படபடத்தது. “எப்போதும் சுடச்சுட சமைத்து அவருக்குக் கொடுப்பேனே… இன்று என்ன செய்வது?” என்று நினைத்துக் கொண்டே, “ஐயா… இன்று சமைக்க முடியவில்லை. உறவுக்காரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததார்.அவர்களைப் பார்க்கச் சென்று வந்தேன். அதனால் தாமதமாகிவிட்டது. கணவரும் குழந்தைகளும் வெளியில் சென்றிருக்க வியாழக்கிழமை என்பதை மறந்துபோய்விட்டேன். எனக்கும் பசி அதிகம், காபியாவது குடிக்கலாம் என்று தான்…” என்று மனம் நொந்தபடி சொன்னேன்.

எப்போதுமே நான் சமைத்த உணவுதான் அவரது பசியை ஆற்றும். வீதியில் அவருக்கு சுடச்சுட சாப்பாடு போடுவது நான்தான் என்ற சிறிய பெருமை என் உள்ளத்தில் எப்போதும் இருக்கும்.ஆனால் இன்று என் நிலையைச் சொன்னவுடன் அவர் சிரித்தபடி, “பரவாயில்லைம்மா… அதனால் என்ன? அடுத்த வீதியில் உங்களைப் போலவே நிறைந்த மனம் கொண்ட ஒரு அம்மா இருக்காங்க. அவங்க அன்போடு சமைத்து கொடுத்திருக்காங்க!”என்று தனது டிபன் பாக்ஸ்களைத் திறந்து காட்டினார்.

சூட்டின் ஆவி பறந்தது. வாசனை நெஞ்சை வருடியது. பலவித உணவுகள் அடுக்கடுக்காய் குவிந்திருந்தன.அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே, யாரோ என் கன்னத்தில் அறைந்தது போல உணர்ந்தேன். இவருக்குச் சாப்பாடு போடுவது நான்தான், வேற யாராலும் முடியாது என்ற எனது அகங்காரம் சிதறி நொறுங்கியது.

நம்மால் செய்யப்படும் ஒவ்வொரு உதவியும் இறைவன் நமக்கு கொடுத்த பணியே; நாம் கருவி மட்டுமே என்ற எண்ணம் ஞானத்தில் உதித்து சிந்தனையில் மூழ்கி ஸ்தம்பித்து நின்றிருந்தபோது, பெரியவர் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

“கருணையுடன் இவ்வளவு நாட்கள் என் பசியாற்றிய அம்மையே, கவலைப்படாதே,” என்று தொடங்கினார் அவர்.

“அன்னதானம் என்பது தானங்களில் மிக உயர்ந்தது. பசி என்பது உடலை மட்டுமல்ல, மனதையும் தளரச் செய்கிறது. பசியாறியவனின் முகத்தில் மலரும் சிரிப்பு — கொடுப்பவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம்.அன்னம் தருவது வெறும் உணவல்ல; அது உயிர்க்கும், நம்பிக்கைக்கும், கருணைக்கும் உயிரோட்டம் அளிக்கிறது.ஆனால் செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதே உண்மையான தானம். தானம் என்பது திரும்ப வராதது அல்ல; எப்பொழுது கிடைக்க வேண்டுமோ, அந்த நேரத்திற்கு இறைவனின் அருளாக வந்து சேரும்.”என்று சொல்லி ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் ஒரு கதை சொல்ல தொடங்கினார்.

ஒரு ஊரில் தாய் தந்தையற்ற சிறுவன் ஒருவன் இருந்தான். வயிற்றுப் பசிக்காகவும், அறிவு பசிக்காகவும் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான்.“கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற வரிகளுக்கு உயிர்ப்பாக இருந்தான். அவன் வீதியிலுள்ளவர்களுக்கு காய்கறி, மளிகை, ரேஷன் பொருட்களை வாங்கி கொடுப்பான். அதில் கிடைக்கும் சிறு தொகையில் பள்ளிப்படிப்பிற்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்வான்.ஆனால் அந்தச் சம்பளம் வயிற்றுப் பசியை போக்க போதவில்லை. ஆங்காங்கே கிடைக்கும் மிஞ்சிய உணவைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான். ஒருநாள், மிகுந்த பசியால் வாடிய அவனுக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. அப்போது தெருக்கோடியில் இருந்த குடிசை வீட்டின் கதவைத் தட்டினான்.

மூன்று சிறு குழந்தைகள் கிழிந்த உடையுடனும் சாறு வழிந்த முகத்துடனும் இருந்தனர். அந்த வீட்டு பெண்மணி கதவைத் திறந்தாள்.அவளது குழந்தைகளும் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

“அம்மா… பசிக்கிறது… ஏதாவது சாப்பாடு கிடைக்குமா?” என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை, அங்கிருந்து சூழலைப் பார்த்து, அப்படியே அடக்கிக் கொண்டான் சிறுவன்.ஆனால் அவளும் தாய்தானே? அவனது முகச் சோர்வைக் கண்டு, அவன் பசியால் வாடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.அவளிடம் இருந்த அரிசி மிகக் குறைவு — தன் பிள்ளைகளுக்கே போதாது. ஆனால் அந்தச் சிறுவனின் பசியை அவள் புறக்கணிக்கவில்லை.

சமைத்த உணவில் இருந்து சிறு பகுதியை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள். பசியாறிய சிறுவன் நன்றியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.பிறகு, அவனை காணவில்லை. அவனைப் பற்றி கவலைப்படவும் யாரும் இல்லை. ஆனால், அவன் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பெரிய மனிதர்களின் உதவியால் மேல்படிப்புக்குச் சென்றான் என்று சிலர் கூறினர்.

சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அதிகாலை மௌனத்தையும் தாண்டி, அந்த ஊரின் அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் கூச்சல் குழப்பமாக இருந்தது.முகம் முழுவதும் ரத்தத்தில் மூழ்கிய இளைஞன் ஒருவனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விரைந்து வந்து கொண்டிருந்த மருத்துவர், தலையில் அடித்துக்கொண்டு கதறிக் கொண்டிருந்த பெண்மணியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். ஒரு நொடி கூட தாமதிக்காமல், அவர் விரைந்து அவசரச் சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தார்.சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்கு பின் மருத்துவர் வெளியில் வந்தார்.

அழுது அழுது துவண்டுபோய் அமர்ந்திருந்த அந்த அம்மாவின் அருகில் குனிந்து, ஆதரவாக தோள்களைத் தொட்டு,“தங்கள் மகன் காப்பாற்றப்பட்டுவிட்டார்,” என்ற செய்தியைச் சொல்ல, அந்தத் தாய் கண்ணீரோடு கைகூப்பி தன் நன்றியைத் தெரிவித்தாள். மருத்துவரோ அவரிடம் தன் கரங்களைப் காட்டி அமைதியாக புன்னகைத்து.ஒரு நாள் இந்த அன்னையிடம் அன்னம் வாங்கிய கரம், இன்று உயிரைக் காப்பாற்றும் கரமாக மாறி இருந்ததை சொல்லி அன்னமிட்ட அன்னைக்கும் ஆண்டவன் கருணைக்கும் நன்றி சொன்னார். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது,” என்ற வள்ளுவரின் வாக்கு நிஜமே என்றார்.

சிறு உதவி கூட தக்க நேரத்தில் செய்தால் உலகத்தையும் விட உயர்ந்ததாகிறது. “தர்மம் தலையை காக்கும்” என்ற வார்த்தை மெய்யானது என்று சொல்லிய பெரியவர் என்னை உற்று நோக்க, நான் மெய்சிலிர்த்துப் நின்றேன். 

அவர் சிரித்தபடி, “அந்த மருத்துவரால் காப்பாற்றப்பட்டவன் நானே,” என்றார்.

“நான் உயிருக்கு போராடியபோது, எனது தாய் ஒவ்வொரு வியாழனும்  யாசித்து உண்ண வேண்டும் என்று  என்னிடம் சொன்னதால், அதையே இன்றும் தொடர்கிறேன்,” என்றும் கூறி, புன்னகையோடு எழுந்து சென்றார்.

அவர் கைகளில் இருந்த டிபன் பாக்ஸ், இப்போது என் வீட்டுத் திண்ணையில் அமைதியாக அமர்ந்திருந்தது.என் மனமும் வயிறும்  நிரம்பி இருந்தது. 

(ஈரோடு வாசல்- படைப்புக் குழுமத்தின் பயிற்சியாக செப்டம்பர் மாதத்திற்கான தொடர்கதை சங்கிலியில் கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன், உமா மகேஸ்வரி மூவரும் இணைந்து எழுதிய சிறுகதை)

Leave a Reply

Categories