மூவாயிரம் பட்டங்கள் வாங்கிய மனிதனையும் ஆட்டிப் படைக்கும் மூன்று எழுத்து ‘சினம்’.
சிடுசிடுவெனத் தமிழ் பேசிக்கொண்டிருக்க, கண்ணன் கேட்டான், “தமிழ், என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்போது நீ கோபமாக இருக்கிறாய்?”
அதற்குத் தமிழ்ச் செல்வி, “கண்ணா, இரவில் இருட்டாக இருக்கும் வானம், காலையில் எப்படி வெளிச்சமாக இருக்க முடியும்?” என்று கேட்டாள்.
“அட! தமிழ், அது இயற்கையின் நியதி. பிறப்பு என்றால் இறப்பு என்று ஒன்று இருப்பதுபோல, இரவு என்றால் பகல் என்று ஒன்று இருக்கும்,” என்றான் கண்ணன். மேலும், “உனக்கு எப்படிச் சொல்வது? மனிதன் மட்டும்தான் அதிக நேரம் தூங்குகிறான். பறவைகளோ, விலங்குகளோ அதிக நேரம் தூங்குவதில்லை. நீ, நாய், பூனை போன்றவற்றை நினைத்துப் பார். அவை பகலில் தூங்கும். இரவில் விழித்திருக்கும். இயற்கையில் நிகழும் சில நிகழ்வுகளுக்குப் பல அறிஞர்கள் இயற்பியல் ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் பல சான்றுகள் சொல்லி இருக்கிறார்கள் தமிழ். இதெல்லாம் நீ வளர வளரப் படிப்பாய் தமிழ்ச் செல்வி,” என்றான்.
அப்போது அப்பா வீட்டுக்குள் வந்தார். தமிழ்ச் செல்வியும் கண்ணனும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி என்னவென்று கேட்டார். தமிழ்ச் செல்வி உடனே, “அப்பா, அண்ணன் என்னிடம் பொய் சொல்கிறானா என்று தெரியவில்லை. இரவு என்றால் பகல், பிறப்பு என்றால் இறப்பு என்று எதிர்வினைகள் இருப்பதைச் சொல்கிறான்,” என்றாள்.
“அட! ஆமாம் தமிழ், இதெல்லாம் உண்மைதான். ஒன்றுக்கு மற்றொன்று எப்பொழுதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்,” என்றார் அப்பா.
உடனே தமிழ்ச் செல்வி, “அப்படியானால், நீங்கள் எப்பொழுதுமே கோபப்படுகிறீர்கள். அம்மா எப்பொழுதுமே எங்கள் மீது பாசம் காட்டுகிறார்கள். இதுவும் எதிர்மறையா?” என்று கேட்டாள்.
“இப்படிக்கூட வைத்துக்கொள்ளலாம். இன்பம் இருந்தால் துன்பம் என்று ஒன்று இருக்கும். அதுபோலத்தான்,” என்றார் அப்பா. “நம் வீட்டில் இருப்பதுபோல, உனக்கு ஒரு படிப்பு இருக்கிறது; உங்க அண்ணனுக்குப் படிப்பு என்று ஒன்று இல்லை,” என்று கண்ணனைக் குறைத்துப் பேசினார். “அவனுக்கு இப்போதெல்லாம் புரியாது. நாளைக்கு அவன் வாழ்க்கையில் என்னைப் போன்ற ஒரு தகப்பனாகும் போதுதான், என்னுடைய வருத்தமும் துன்பமும் அவனுக்குப் புரியும்,” என்றார் அப்பா.
உடனே கண்ணன், “அப்பா, உங்களிடம் நான் எத்தனை முறை சொல்லி இருக்கிறேன், என்னை யார் கூடவும் ஒப்பிட்டுப் பேசாதீங்கன்னு,” என்றான்.
“ஆமாம்டா, உனக்கு என்ன சொன்னாலும் கோபம் மூக்குக்கு மேல என்ன, மண்டைக்கு மேல கூட வரும்,” என்று அப்பா கண்ணனைத் திட்டினார்.
அப்பா, “நான் சொல்வது உண்மைதானே? உன் தங்கச்சி தமிழ் படிக்கும் அளவுக்கு நீ படிக்கிறாயா? உன் வகுப்பில் நீ கடைசி மாணவன்தானே? உன் தங்கை நான்காம் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் வாங்கியவள். அதை முதலில் தெரிந்து கொள்,” என்று அவனை மட்டம் தட்டிப் பேசினார்.
அதற்கு உடனே கண்ணன், “அப்பா, நான் மறுபடியும் சொல்கிறேன், என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பேசாதீங்க. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். எனக்குப் படிப்பு மேல் ஆர்வம் இல்லை, அதனால் படிப்பு வரவில்லை. நான் படிக்காதவன் இல்லை. எனக்கு வேறு எதில் அதிகம் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும்தான் அதிகமாக இருக்கிறது. நீங்கள் என்னைப் படி படி என்று சொன்னால் நான் எப்படிப் படிக்க முடியும்?” என்று தந்தையைப் பார்த்து கேட்டான்.
உடனே தமிழ்ச் செல்வி, “ஆமாம் அப்பா, அண்ணனுக்கு விளையாட்டுத் துறையில்தான் சாதிக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் ஏன் அவனைப் படி படி என்று சொல்கிறீர்கள்? மருத்துவர் ஆக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகள்தான் அதுவாக முடியும்,” என்று தந்தையிடம் கூறினாள்.
“ஒரு விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று நினைக்கும் கண்ணனை, விளையாட்டு வீரனாகத்தான் ஆக்க வேண்டும். நீங்கள் இப்போது சொன்னீர்களே, ஒன்றுக்கு மற்றொன்று எதிர்மறை என்று, அதுபோலத்தான் அப்பா,” என்றாள் தமிழ்.
அதற்கு உடனே அப்பா, “அட தமிழ், நீ சின்னப் பெண். உனக்கு ஒன்றும் தெரியாது. நீ சும்மா உள்ளே போ. போய் படிக்கும் வேலையைப் பார்,” என்று தமிழைத் திட்டி அனுப்பினார்.
“அடேய் கண்ணா, இங்க பார். நாளைக்கு நீயும் ஒரு தகப்பனாகி என் நிலை வரும்போதுதான் உனக்கு என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் புரியும்,” என்றார் அப்பா. “உன்னை எருமை மாடு மேய்க்க விடணும். அதுக்குப் பதிலாக வருஷமானா உனக்குப் பணம் கட்டிப் படிக்க வைக்கிறேன். என்னைச் சொல்லணும்” என்று புலம்பிக்கொண்டே, “மலர், இங்க வா,” என்று அம்மாவை அழைத்தார்.
அதற்கு அம்மா, “என்னங்க, உங்களுக்கு என்ன ஆச்சு? எப்பொழுது பார்த்தாலும் என் பையனைத் திட்டவில்லை என்றால் உங்களுக்குப் பொழுது விடியாதே,” என்று அப்பாவைக் குறை கூறினார்.
“மலர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ போய் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வா,” என்றார் அப்பா. “தமிழ் நேற்று என்னிடம் கடைத்தெருவுக்குப் போனால், இனிப்புப் பலகாரம் வாங்கிட்டு வரச் சொன்னாள். நான் போகிறேன். அவளுக்கு வாங்கி வருகிறேன்,” என்று கூறிவிட்டு, கண்ணனிடம், ” கண்ணா, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
“எனக்கு ஒன்றும் வேண்டாம் அப்பா,” என்றான் கண்ணன். பிறகு, “அப்பா, எனக்கு நல்ல பந்து ஒன்று வாங்கிட்டு வாங்க,” என்றான்.
அதற்கு அப்பா, “ஆமாம்டா, படிக்கிற பையனுக்குப் பந்தா? போய்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கும் வழியைப் பார்,” என்றார்.
அப்பா கடைத்தெருவுக்குச் சென்றவுடன், கண்ணன் அம்மாவிடம், “இந்த அப்பா மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்? என் வயதுப் பசங்க வீட்ல எல்லாம் போய் பார்க்கச் சொல்லுங்கம்மா. அவனுங்க எந்த அளவுக்குப் பொறுப்பாக வீட்டில் இருக்கிறார்கள் என்று,” என்றான்.
அதற்கு உடனே அம்மா, “அட! சும்மா இருடா கண்ணா. நீ இப்படிப் பேசிக்கொண்டிருப்பதை உங்க அப்பா கேட்டால் அடித்துவிடப் போகிறார்,” என்றாள்.
நாட்கள் சென்றன. அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வந்தன. மதிப்பெண் அட்டை வீட்டுக்கு வந்தது. தமிழ் தனது அப்பாவிடம் கொடுத்து, தனது மதிப்பெண்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில், கண்ணன் மட்டைப்பந்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
கண்ணனைப் பார்த்த அப்பா, “இங்கே பார், தமிழின் மதிப்பெண் அட்டையைப் பார். எவ்வளவு நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறாள். நீயும் வாங்கிருக்கிறாயே, அந்த முட்டைகளை எல்லாம் சேர்த்து வைத்திருந்தால், நான் ஒரு முட்டைப்பண்ணை வைத்திருக்கலாம்,” என்று கோபமாகக் கூறினார்.
அதற்குக் கண்ணன் சற்றும் யோசிக்காமல், “அப்படியானால் உங்களால் அந்த முட்டைகளைச் சேர்த்து வைத்து முட்டைப் பண்ணை வைக்க முடியுமானால், நீங்கள் வையுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது,” என்றான்.
அதற்கு அப்பா, “இனி உன்னைப் படிக்க வைப்பதில் அர்த்தமே இல்லை. நீ இனிமேல் பள்ளிக்கூடத்துக்குப் போவதை நிறுத்திவிட்டு மாடு மேய்க்கிற வழியைப் பார். இரண்டு எருமைமாடுகள் வாங்கித் தருகிறேன். வீட்டில் இருந்து அதை மேய். நல்ல பாலாவது கிடைக்கும்,” என்று கோபமாகக் கூறினார்.
இதற்குக் கண்ணன், “அப்பா, எனக்கும் பேசத் தெரியும். என்னுடைய ஆசைக்கு நீங்கள் சம்மதிப்பீர்கள் என்றுதான் நான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். நாளைக்கு எனக்கு என் வாழ்க்கையை மாற்றக்கூடிய மட்டைப்பந்து இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு நான் நாளை சென்னை போக வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு ₹1,000 கொடுக்க வேண்டும். அதைக் கேட்கத்தான் வந்தேன். தர முடியுமா? முடியாதா?” என்று ஆவேசத்துடன் கேட்டான்.
அதற்கு, “முடியாதுடா!” என்று அவரும் ஆவேசத்துடன் சொன்னார்.
அவர் மேலும் மனம் உடைந்து, “நீ இப்படிப் பேசுவேன்னு தெரிந்திருந்தால், உன்னை நான் இவ்வளவு தூரம் வளர்த்திருக்க மாட்டேன். உனக்குச் சோறு போட்டு வளர்த்ததற்கு நீ திருப்பித் தரும் நன்றியா இது?” என்று கேட்டார்.
உடனே அம்மா கண்ணனைப் பார்த்து, “கண்ணா, என்னடா? அப்பாவிடம் இப்படி எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்றாள்.
அதற்குக் கண்ணன், “அம்மா, என் பொறுமை அவ்வளவுதான், சொல்லிட்டேன். நீ சும்மா இரு,” என்று அம்மாவின் வாயை மூடினான்.
அம்மா, “கண்ணா, ஆத்திரத்தில் பேசுவதெல்லாம் மூளைக்கு எடுபடாதுடா. கொஞ்ச நேரம் பொறுமையாக இரு,” என்றாள்.
கண்ணன், “என்னால் இருக்க முடியாது அம்மா. கொடுத்தால் கொடுங்கள். இல்லையென்றால் வீட்டை விட்டு நான் போகிறேன்,” என்றபடி வெளியேறினான்.
சென்னைக்குப் போகப் பணமில்லாமல், படிப்பையும் விட்டு, விரும்பிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கு பெற முடியாமல் தடுமாறினான் கண்ணன். வாழ்க்கை எங்கு செல்லப் போகிறது என்று தெரியாமல், தனது எதிர்கால வாழ்க்கையை, தனது ஆத்திரத்தால் தொலைத்துவிட்டு, வயிற்றுப் பசியின் காரணமாக, மட்டைப்பந்து வீரனாக வரவேண்டியவன், இன்று ஒரு உணவகத்தில் எச்சில் இலை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறான். ஆத்திரத்தில் வரும் வார்த்தைகள் எல்லாம் ஆபத்தில்தான் கொண்டு முடியும்.
அழகான வாழ்வும் ஆபத்தான வாழ்வும் மனிதனின் எண்ணத்தில்தான் இருக்கிறது.

