நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அந்தக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சிலர் வைராக்கியத்துடன் இருப்பார்கள். அவ்வாறு குறிக்கோளை அடையும் அளவுக்குத் திறமை இருந்தும், நேர்மறையான எண்ணங்கள் இருந்தும், அதற்காக உழைத்தாலும் சிலரால் அதை அடைய முடியாமல் போகும். காரணம் என்னவென்று ஒரு கதை மூலம் பார்ப்போம்.
ரவிக்கு, சிறு வயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்பது கனவு. ஆனால், தாய், தந்தையரோ படிக்காதவர்கள். இதையே காரணம் காட்டி ரவியின் தாத்தாவும், பாட்டியும் ரவியின் குடும்பத்தில் எல்லா முடிவுகளிலும் தலையிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். பொதுவாகத் தாத்தா, பாட்டி என்றால் அன்பாகவும், அக்கறையுடனும் இருப்பார்கள். ஆனால், இவர்கள் அவ்வாறு கிடையாது. அவர்களின் எண்ணம் – அவர்களின் மகன், மகனின் மனைவி, மகனின் பையன் (ரவி) என்று மூவரும் எப்பொழுதும் அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதும், எப்பொழுதும் இவர்களுக்குக் கீழ்படிந்தே இருக்க வேண்டும் என்பதும்தான்.
ரவி ஒரு நாள் தன் வீட்டில் உள்ளவர்களிடம் தான் ஓர் ஆசிரியராக வேண்டும் என்று கூறினான். அன்றிலிருந்தே அவனது தாத்தாவும், பாட்டியும் எதிர்மறையாகப் பேச ஆரம்பித்தனர். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, தினமும் அவ்வாறே பேசினர். முதலில் அதை கண்டு கொள்ளாமல் தனது இலட்சியத்தின் மீதே கவனம் செலுத்தி கொண்டிருந்தான். ஆனால் ஒருவர் எதை அதிகமாக காதில் கேட்கிறார்களோ அதையே யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்; ரவியும் அதையே செய்தான், அவர்களின் சொற்களை நம்ப ஆரம்பித்தான். தனது ஆற்றல் மேலேயே சந்தேகம் கொள்ள ஆரம்பித்தான்.
“என்னால் ஒன்றும் செய்ய இயலாது! நான் தாத்தா, பாட்டி கூறுவது போல் தண்டம் தான்!” என்று ஒவ்வொரு நானும் யோசிக்கையில் ஆழ்மனதில் தன்னைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகள் அவனை அறியாமல் வளர்ந்துகொண்டிருந்தது. ஆசிரியர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், சந்தேகத்திலும் அவநம்பிக்கையிலும் மூழ்கி வீழ்ந்து விட்டான்.ஒருவரின் எண்ணமே அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. தாத்தா,பாட்டியின் பேச்சை கேட்டு கொண்ட கொள்கையில் உறுதியாக இல்லாமல், அது தொடர்பான விடாமுயற்சியை மேற்கொள்ளாமல் அவன் வாழ்க்கை தொடங்கும் முன்பே திசைமாறியது. அவனைப் பற்றி நன்கு அறிந்த ஆசிரியர்களும், நண்பர்களும் அவனுக்கான வாய்ப்புகளைத் தேடி அவனைப் பங்கேற்க வைக்க பெரும்பாடுபட்டார்கள். அவனோ தனக்குள்ளே ஒரு சிறு வட்டத்தை போட்டு கொண்டு தன்னால் ஒன்றும் இயலாது என்று தவறாக புரிந்து கொண்டான். கடைசியில், அவனால் தன் இலட்சியத்தை அடைய முடியவில்லை. பிடித்த வேலையைப் பார்க்காமல், கிடைத்த வேலையைப் பார்த்தான்.
வாழ்க்கையில் முன்னேற எண்ணும் போது நம் மீது கற்கள் வீசப்படும்தான். அதன் பெயர் “திசை திருப்பும் கற்கள்”. அந்தக் கற்களுக்குக் கவனம் கொடுத்தால் தன்னம்பிக்கை இழந்து நம் மீதே ஐயம் கொள்ள ஆரம்பிப்போம். அதேபோல், வெற்றிப் பாதையில் கீழே இறங்கி வர ஆரம்பிப்போம்.
எந்தத் தருணத்திலும் அதற்கு இடம் கொடுக்காமல், உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் உங்கள் மீது வீசப்படுபவை கற்கள் அல்ல, உங்களைப் பாராட்டும் பூக்கள் என்று உணர்வீர்கள் . எனவே, நம்மை நம் குறிக்கோளிடமிருந்து தள்ளி வைப்பது நம் ஆற்றல் மீதான சந்தேகங்களே. வாழ்க்கையில் ஒன்றை சாதிக்க வேண்டும் என்றால் குறுகிய மனப்பான்மையோடு இருந்தால் சாதிக்க முடியாது, தொடர்ந்து முன்னேறிச் சென்றாலே சாதிக்க முடியும். நேற்றை விட ஒரு படி மேலே செல்ல வேண்டும்,கீழே செல்ல கூடாது என்பதை நம் மனதில் தெளிவு படுத்தி கொள்ளவேண்டும். விடாமுயற்சியும் சுயநம்பிக்கையும் எப்போதும் படிக்கட்டுகளாக, உங்கள் இலட்சியத்தை அடைந்து பிரகாசமான வாழ்க்கையை வாழுங்கள் !


