சாரதிகள் – மகேஸ்வரி மதன்

சமீபத்திய என் சென்னைப் பயணத்தில், இரு cab ஓட்டுனர்களைச் சந்தித்தேன்.நம்மைப் போன்றவர்கள் சென்னையின் எந்தப் பகுதிக்கும் செல்ல, நம்பி ஏறிட உதவும் ஒரு நிகரில்லா சேவை இந்த Cab சேவை. அவர்களுடனான அனுபவம் உங்களுக்காக.

அந்த நாளில் சென்னையில் தோழியின் வீட்டிலிருந்து பல்கலைக்கழகப் பயணம். இணையம் வழியாகப் பதிவு செய்த வாகனத்தில் பயணம் துவங்கியது. 45 நிமிடங்கள் காட்டியது app. முதல் கால்மணி நேரம் வெளியே வேகமாய் நகரும் அனைத்தையும் பார்த்தபடி அமைதியாய் தொடங்கியது. போக்குவரத்து அதிகமாக இருந்ததால், கால தாமதம் ஆகுமென்று நினைத்தபடி ஓட்டுனரிடம் கேட்டேன். சரியான நேரத்திற்குச் சென்றுவிடலாமென சன்னமான குரலில் தண்மையாகச் சொன்னார். அவருக்குப் பின்னால் அமர்ந்தபடி “இந்த ஊருங்களா?” என்றேன். “Yes ma’am” என்றார். மேலும் சில கேள்விகள், அதற்கான பதில்கள்.  ஆங்கிலமும் தமிழும் அழகாக வந்தன. சென்னை வட்டார வழக்கு சற்று அதிரடியாகவே இருக்கும். “ங்க” அதிகம் புழங்கும் எனக்கு  சென்னை வட்டார வழக்கு சற்றே தூரம்தான். இந்த ஓட்டுனருக்கோ அழகான உச்சரிப்பு. சரியான slang என்று அந்த சிறு உரையாடல் உணர்த்தியது. “இங்கே எங்கே?” என்றேன். “வடபழனி” என்றார். உச்சரிப்புத் தெளிவாக இருந்ததைப் பாராட்டி, அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பேரார்வம் எழ, கேட்டுவிட முடிவு செய்தேன். “ஆங்கில உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது. என்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். இளங்கலை முடித்திருப்பதாகக் கூறினார். அவர் பேச்சில் தெளிவும் நிதானமும் வாகனம் இயக்குவது போல மென்மையாக இருந்தது. மிக நேர்த்தியாக வாகனத்தை வைத்திருப்பதும், அதன் இயக்கமும் சொந்த வாகனம் என்பதைச்  சொல்லாமலே சொன்னது. கேள்வி பதில்கள் உரையாடலாக மாறி இருந்தது. “தொழில் எப்படிப் போகிறது?” என்று கேட்டேன். பெரும்பகுதி commission ஆகப் போவதாகத் தோய்வான குரலில் கூறினார். “ஆங்கிலம் கல்லூரியில் கற்றதா?” என்ற கேள்வி தன்னிச்சையாக வந்தது. அதன்பின் நடந்த உரையாடல் அனுபவத்தின் வெளிப்பாடு. 

சுற்றுலா சார்ந்த சுயதொழிலில் 15 வருட அனுபவம் கொண்டவர். இணையம் இல்லா காலம் முதல், இணையம்தான் எல்லாமும் என்று மாறிய காலம் முன்பு வரை சென்னை சுற்றுலாதான் இவரின் தொழில். வாரத்தில் 3-4 நாட்கள் வெளிநாட்டவர்களோடு பயணம் இருக்குமாம். மீனம்பாக்கத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம் புதுச்சேரி வரை தொடர் பயணம் இருக்கும் என்றும், பல்வேறு நாட்டினர் வந்தாலும், ஆங்கிலம்தான் உரையாடல் மொழியாக இருந்ததாகவும், அதுவே இவரின் ஆங்கில உச்சரிப்பிற்குக் காரணமெனவும் கூறினார். சுற்றுலா என்பது அவர்களைப் போன்றவர்களின் கைகளிலிருந்து நழுவியது குறித்தும், இணையம் ஒரு தொழிலை முழுதாக மாற்றியது பற்றியும், தங்களின் வாழ்வாதாரம் சரிந்தது பற்றியும் விளக்கினார்.

30 வருட அனுபவம் இத்துறை சார்ந்தே இருந்ததாலும், வேறு தொழில் தெரியாது என்பதாலும் cab ஓட்டுனராகத் தொடர்வதாகக் கூறினார். கேள்விகளும் பதில்களுமாக வாழ்க்கை அனுபவத்தையும், சுற்றுலாத் துறை சார்ந்த மாற்றங்களையும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். சரியான நேரத்திற்கு பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தோம். அவரின் உச்சரிப்பிற்கு மீண்டும் வாழ்த்துச் சொல்லி, மலர்ந்த சிரிப்போடு விடைபெற்றோம். 

வேலைகள் முடித்துப் பயணம். மாலை 4 மணிக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து தோழி வீட்டுக்குச் செல்ல மீண்டும் app மூலமாகப் பதிவு செய்தாயிற்று. வாகனமும் வந்தது. காலை ஒரு வாழ்வின் அனுபவம் கிடைத்ததால், இப்போது கூடுதல் உற்சாகம். ஓட்டுனருக்கு 30 வயதிற்குள் இருக்கும். நான் பின்னிருக்கையில் அமர்ந்த பிறகு OTP எனக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். திரும்பிக் கூட பார்க்கவில்லை. புகைப்பிடித்த நெடி வாகனத்தில். ஒழுங்கற்ற ஒரு வாகனம் என்பது பார்த்த நொடியிலேயே தெரிந்தது. பத்து நிமிட வேடிக்கைக்குப் பின்னர் எங்கள் ஓட்டுனர் எழுப்பிய ஹாரன் சத்தத்தில் அதிர்ந்து போனேன். அதுமட்டுமா?… உள்ளேயும் வெளியேயும் ஏக வசனங்கள். இது முற்றிலும் வேறு அனுபவப் பயணம் என்று உணர்ந்தேன். ஓட்டுனரை உற்றுப் பார்த்தேன், இம்மி அளவு கூட  அவர் திரும்பவே இல்லை. சிறிது நேரத்தில் அவர் dashboard ல் இருந்த ஒரு தொடுதிரை அலைபேசியில்  அமைதியாய் ஒரு விளம்பரம் ஓடிக்கொண்டு  இருந்தது. வாகனம் இயக்கும்போது எப்படி காணொளி பார்க்க முடியும் என்று எண்ணினேன். விளம்பரம் முடிந்து ஏதோ ஒரு சீரிஸ் ஓடியது. அதிர்ந்து போனேன். அதைக் கேட்க எத்தனிக்கையில் இன்னொரு அலைபேசியில் அழைப்பு. சாதாரணமாக எடுத்து, காதில் மாட்டி இருந்த Bluetoothல்  பேசத் துவங்கினார். இவ்வளவு நேரமும் அதன் உதவியோடு சீரிஸ் பார்த்து / கேட்டு வாகனத்தையும் இயக்கி இருக்கிறார். அசௌகரியம் சூழ்ந்தது.  ஒருபுறம் பேச்சு, இன்னொரு திரையில் காணொளி, வாகன இயக்கம் என அவர் தன்போக்கில் போய்க்கொண்டே இருந்தார். “தம்பி” என நான் அழைத்தது கேட்கவில்லையா இல்லை பொருட்படுத்தவில்லையா என்ற குழப்பம் எனக்கு வந்தது. கடும் எரிச்சல் கோபமாக மாறியது. மீண்டும் அழைத்தேன். 

“என்ன madam?” என்றார். தொடுதிரையில் காணொளி பற்றிக் கேட்டேன். சீரிஸ் என்றார். “வாகனம் இயக்கும் போது இது எப்படிச் செய்யலாம்?” என்றேன். பதில் இல்லை. காது கேளாதவர் போல அமர்ந்திருந்தார். மீண்டும் கேள்வி எழுப்பினேன். காணொளியை நிறுத்தினார். எப்போது வீடு வருமென appஐ எட்டிப் பார்த்தேன். 10 நிமிடம் காட்டியது. உள்ளே இருந்த கோபத்தைக் காட்ட முடியா இயலாமையில் அமைதியாய் இருந்தேன். இறங்கி, பணம் செலுத்தி, அவர் முகம் பார்த்தேன். திரும்பாமல், கடமையை முடித்தார். வாகனம் நகர்ந்ததும் முதல் வேலையாக app மூலம் poor rating இட்டு, குறிப்பினை எழுதி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் சென்றேன். அவரிடம் சொல்ல முடியா எல்லாவற்றையும் கேள்வியாக்கி தோழியின் பிள்ளைகளிடம் முறையிட்டேன், என்னைக் கலாய்த்துவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.

இவ்விரு cab ஓட்டுனர்களும் ஒரே வேலையைத்தான் செய்தார்கள். ஆனால், இருவரும் வெவ்வேறு திசையானவர்கள். ஒருவர் தன் வேலையை விரும்பி, பயணிப்பவர்களின் சௌகரியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்தார். இன்னொருவரோ, பயத்தை உருவாக்கினார். திறமையான ஓட்டுனர் என்பவர், பயணிக்குப் பயம் வராமல் பார்த்துக் கொள்பவரே. 

ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரை நினைவுக்கு வருகிறார். பயணிக்கு என்ன தேவை இருக்கும் என்பதை யோசித்து, அத்துணையையும் தன் ஆட்டோவில் வைத்தார். மற்றவர்களிடமிருந்து தனித்த சேவைகள் கொடுத்து, பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, சேவை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோலையும் கொடுத்திருக்கிறார். பயணிகளின் நிறைவான பயணத்தை அவர்கள் மீது காட்டும் அக்கறையால் அறிந்துகொள்ள முடியும். பயணிகள் நீண்ட கால வாடிக்கையாளராக மாற வாய்ப்புகளும் அதிகம். ஓட்டுனர்கள் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடப்பதும்,  அணுகக்கூடியவராகவும் இருத்தல் அவசியம். பயணிகளின் விருப்பங்களைப் புரிந்துகொள்வதும், கூர்ந்து கேட்பதும், மேலும் விவரங்களைக் கொடுப்பதும், தேவை எனில் வழிகாட்டிடச் செய்வதும், சிறந்த சேவையாக இருக்கும். எச்சூழ்நிலைகளையும்  அமைதியாகக் கையாள்வது மிகவும் அவசியம். 

வாழ்விற்கும்  வாழ்க்கை முறைக்காகவும் ஓடும் இந்த ஓட்டம்தான் எத்தகைய நகர்வுகளைக் கொண்டது?!. ஓட்டுனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் ஒரே நாளில் பதில் கிடைத்தது.

Leave a Reply

Categories