சாமி தரிசனம் செய்வதற்காக, ஆன்மீக சுற்றுலா வந்திருந்த நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். அர்ச்சகர்களின் உபயத்தால் அன்றைய கட்டளைதாரருக்கு மட்டும் கடவுள் அபிஷேக சிறப்பு தரிசனக்
காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
எங்களுக்கு முன்பாக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒரு குழுவாக வந்திருந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் அறுபது, எழுபது வயது கடந்தவர்கள். அவர்களிடம் பேசிய போது அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்று கூறினார்கள். எங்களைப் போலவே அவர்களும் பேருந்தில்
பல திருத்தலங்களுக்கு பயணம் செய்ய வந்துள்ளவர்கள்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. லட்சுமி நரசிம்மர் எங்களுக்கு
காட்சி அளிப்பதற்கு காலத்தை தாமதமாக்கினார்.
சரி பரவாயில்லை எல்லாம் நன்மைக்கே என்று அங்கே நின்றிருந்த பெரியவரிடம் பேச ஆரம்பித்தேன்.
அவரும் என்னிடம் பேச ஆரம்பித்தார். எனக்கு 95 வயதும்மா என்றார். அவர் மனைவி இவரை விட
குறைவான வயதுடையவராக அருகில் நின்றார். அவர் மனைவியாக இருக்குமோ என நான் யோசிப்பதை
புரிந்து கொண்டவர் போல், அவரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். “எனக்கு 67 வயசும்மா.
இவருக்கு நான் மூணாந்தாரம்” என்றார். நான் சிரித்துக் கொண்டேன்.
சுற்றுலா பேருந்தில்
பயணம் செய்து, ஒவ்வொரு கோவிலிலும் கூட்ட நெரிசலில்
நின்று 95 வயது நிரம்பியவர் கடவுளை வழிபாடு செய்ய வந்துள்ளார் என்பது எனக்கு வியப்பாக
இருந்தது. ஐம்பது வயதில் நாம்மால் பஸ் படிகட்டு ஏறி இறங்க முடியலைனு பல நேரங்களில்
புலம்புவதை நினைத்து சற்றே வெட்கமாக இருந்தது. அவரின் மனைவி தன் கடந்த காலத்தை பேச
ஆரம்பித்தார்.
“அவருக்கு முதல்ல கல்யாணம் செஞ்ச இரண்டு பேரும் இறந்துட்டாங்க. அவருடைய
மூணு குழந்தைகளை பார்த்துக்க இவருக்கு என்னைய கல்யாணம் செய்து கொடுத்தாங்க. அந்த மூணு பசங்களோடு, எனக்கு ஒரு புள்ள என்று ஆசுவாசப்பட்டவர்
தன்னுடன் வந்திருக்கும் அந்த ஊர்க்காரப் பெண்களைப் பார்த்து சிரித்துக்
கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘எங்கிட்ட இருந்த நகைகளை எம் புள்ளைகளுக்கு பிரித்துக்
கொடுத்துட்டு எனக்கு 12 பவுன் வச்சுகிட்டேன்’ என அந்தம்மா சொல்லி முடித்தார்.
அந்தப் பெரியவர் அவர் பேசியதை கேட்டு விட்டு தன் பங்குக்கு
பேச தொடங்கினார். ‘அப்ப நல்ல வசதியா இருந்தேன். எங்க பேர்ல சரஸ்வதி வடிவேல்ங்கிற பேரில்
இரண்டு லாரி ஓடிட்டு இருந்தது. என்ன கஷ்டகாலமோ என்னவோ தெரியலைங்க எல்லாம் கொஞ்சம் லாஸ்
ஆகிப் போச்சு. அதுக்கப்புறம் பசங்க வந்து தலையெடுத்து தொழில் பண்ணிட்டு இருக்காங்க.
ஒரு பையன் வெளிநாட்டில் இருக்கிறான். மீதி ரெண்டு பேரும் இங்க தான் இருக்காங்க. எங்களுக்கு எந்த குறையும் இல்லை அந்த 12 பவுனை உள்ளூரில் இருக்கிறவனுக்கே குடுத்துற சொல்லி சொல்லிட்டாங்க’
என அந்த பெரியவர் பேசி முடிக்கிறார். நகை விடயங்கள் எல்லாம் முன்பின் தெரியாதவர்களிடம்
பகிர்ந்து கொண்டது அவர்களின் வெகுளியான மனமா? அல்லது அங்கே வந்திருக்கும் அவங்க சொந்தகாரங்களுக்கு தெரியப்படுத்தவா என்று எனக்கு புரியவில்லை.
அந்தப் பெண்மணி மூக்கில் இரண்டு பக்கமும் மின்னக்கூடிய
தங்க மூக்குத்தியைத் தொட்டு, “வாழ்க்கையில எல்லாம் நிறைவா இருக்கு. இந்த
வயசான காலத்துல நம்மளுக்கு வேற என்ன வேண்டும். இந்த மூக்குத்தியை நான் உசுரோட இருக்கும் வரை போட்டு இருக்கணும் அது
போதும். மூக்குத்தி இல்லாம எப்படி இருக்கிறது” என்று பேசினார். கணவர் இறந்து விட்டால்
அவர்களுடைய வழக்கம் மூக்குத்தியை கழற்றி விடுவதாக இருக்கலாம். தன் கணவருக்கு முன்
தன் இறப்பு நடக்கணும் என்ற அர்த்தத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். இரண்டு நாட்கள் யோசித்தபிறகும் அவர்களுடைய
அன்புதான் என் மனக்கண்ணில் நின்றது.
தீபா சதீஷ்குமார் அவர்கள் ‘கம்மஞ்சூழ் எழிலி’ நூலில்,
இரயில்பயணத்தில் தான் சந்தித்த தம்பதியர்கள் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. வயது முதிர்ந்த
தம்பதியர்கள் நூலாசிரியர் பயணம் செய்யும் இரயிலில் ஏறுகிறார்கள். ஆசிரியர் அவர்கள்
ஏதாவது பேசினால் நாமும் பேசலாம் என ஆவலுடன் காத்திருக்கிறார். ஆனால், அவர்கள் கண்கள் மட்டுமே பேசிகிறது. கணவர் தேநீர் வாங்கி
வரக் கேட்கிறார். வாய் பேசாமல் தலையாட்டல் மட்டும் செய்கிறார் அவர் மனைவி. அஞ்சு மணி நேரமாகியும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும்
எந்த விதமான உரையாடலுமே நடக்கல என்று எழுதியிருந்தார். அந்தத் தம்பதியர்கள் தங்களுடைய காதலைப் புரிஞ்சுகிட்டு
மௌனத்தில் வாழ்க்கையை நடத்துகிறார்களா? அல்லது அன்று அவரின் மனைவி மௌன விரதமாக இருந்திருக்கலாமோ? இவர்களுக்குள் இருக்கும் தடை என்னவாக இருக்கும்? அதை எப்படி சரி செய்வார்கள்?இப்படி இருப்பது ஒருவகையில் நன்றாகத்தானே போய்க்கொண்டும் இருக்கிறது என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தேன். இருவரும் முதுமையில் ஒருவருக்கொருவர்
துணையாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
சிறிது நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் வந்த வீடியோ ஒன்றில், நடக்கத் தடுமாறும்
வயது முதிர்ந்த கணவனை, தன் தோள் கொடுத்து நடத்திச் செல்லும் வயதான மனைவியைப் பார்த்தேன். ‘வாழ்ந்தால் இப்படி வாழணும்ப்பா’, ‘ஆஹா ஓஹோ’, ‘சிறந்த தம்பதி’ என்று எண்ணற்ற பேர் வாழ்த்தியும், அவர்களைப் புகழ்ந்தும் எழுதித் தள்ளி இருந்தார்கள். லைக்குகளை, ஹார்ட்டின்களை அள்ளி வழங்கியும் இருந்தார்கள். நம் வாழ்க்கையும் முதுமையில் இப்படி
இருக்குமா என்ற ஆசை அவர்களுக்குள்ளும் எட்டிப் பார்த்திருக்கலாம்.
கணவன், மனைவிக்குள் புரிதல்கள் இருந்தால் எந்தக் காலத்திலும் அந்த உறவுக்குள் சிக்கல்கள் விழுவதற்கு வாய்ப்பில்லை. ஒருவருக்கொருவர் குறை
சொல்லியும், விட்டுக் கொடுத்தல் இல்லாமல் போவதுமே வாழ்வை நரகத்தில் தள்ளுகிறது.
இன்றைய பெண்களின் கல்வியறிவு ஆணைவிட நான் தாழ்ந்தவள் இல்லை என்று அவர்களை உணர
வைக்கிறது. ஆண் பிள்ளைகளை வீட்டிலும், சமுதாயத்திலும் நீ மேலானவன் என்று சொல்லியே வளர்த்து விட்டதால், பெண் தன்னைவிட சற்றே தாழ்ந்திருப்பதை அவன் விரும்பலாம்.
இதனால் தான் பெரும்பாலன கணவன், மனைவி உறவுகளுக்குள் அவர்களை அறியாமலே இடைவெளி ஏற்படுகிறதோ?மனம்விட்டுப் பேசினாலே பல பிரச்சனைகள் தீரும். இந்த
பேசாநிலை தான் மேலும் பல நேரங்களில் பிரச்சினைகளை பெரிதுபடுத்தி விடுகிறது.
ஒருவர் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் ஒருவர் அறிந்து கொள்ள இயலாது. அப்படி அறிந்து கொள்ள முயற்சித்தால்
அவர் வாழ்க்கையை அவர் வாழமாட்டார். மனைவி என்ன நினைப்பாள் என்று கணவனும் கணவன் என்ன
நினைப்பான் என்று மனைவியும் யோசித்து வாழ்வதில் வாழ்க்கை சலிப்பையும், சங்கடத்தையும்
உருவாக்கும். அவரவர் இயல்பை அவரவர் ஏற்றுப் பழகும் வரை எல்லா உறவுகளிலும்
புரிதலின்மை தொடரத்தான் செய்யும்.
அழகிய சிங்கர் எழுதிய சுவர் என்ற சிறுகதையை நீங்கள் வாசித்ததுண்டா? அதில் வரும் எழுத்தாளர்
முதுமை நாயகன் எனும் கதாபாத்திரம் எப்போதும் உரையாடுவது சுவரிடம் தான். அவர் மனைவியும்
சுவரிடம்தான் பேசுவார்.’ நான் போயிட்டு வரேன்’ சுவரைப் பார்த்து சொல்வார். ‘போயிட்டு
வாங்க சாப்பாடு வச்சுடறேன்’ மனைவியும் சுவரைப் பார்த்து சொல்லி விடுவார். இந்தத் தம்பதியருக்கு
மணம் முடித்த பிள்ளைகளும் , பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்களுக்குள் எந்த விதத்திலும் உரையாடல்கள் இல்லை. இவர் எழுத்தாளர் என்பதால் எந்த நேரமும் புத்தகம் படிப்பது, எழுதுவது
இவரது வேலை..மனைவியோ எப்போதும் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கிறார்.
தன் குருவான
எழுத்தாளர் அசோகமித்திரனை எழுத்தாளர் சந்தித்துப் பேசுகிறார்., அவர் “உன் வொய்ஃபிடம் பேசுகிறாயா?”
”இல்லை இன்னும்
சுவரைப் பார்த்துதான் பேசுகிறேன். ஆனால் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை” என்கிறார்.
“இனிமேலாவது
உன் மனைவியிடம் உரையாடுப்பா” என்று சொல்கிறார். எழுத்தாளர் சிரித்தபடியே விடைபெற்று
வந்து விடுகிறார்.
ஒரு நாள் அவரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் படுத்து இருக்கிறார். இவர்
சுவரிடம் ‘என்னாச்சு’ என்கிறார். ‘என்னால் எழுந்திரிக்க முடியவில்லை”என்று சுவரைப் பார்த்து
சொல்கிறார் மனைவி.
“எனக்கு காஃபி குடிக்கணுமே”
“அசடு ஒரு காஃபி கூட வைக்கத் தெரியல’ என்று மனைவி சொல்லும்
போது, அசடு என்ற சொல் அவருக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதன் பிறகு அவர் வெளியே சென்று
காஃபி குடிக்கிறார். மனைவிக்கு வாங்க நினைப்பார். அவள் திட்டி விட்டால் என்ன செய்வது என்று வாங்காமல் வருவார்.
மனைவி எழவில்லை.
“டாக்டரிடம் போலாம்” என்று சுவரைப் பார்த்து சொல்வார். “எனக்கு எதுவும் இல்லை
தலைவலி சரியாகும்” என்று மனைவி சுவரைப் பார்த்து சொல்வார்.
“சாப்பாடு கடையில் வாங்கி வரட்டுமா என சுவரிடம் கேட்பார்..
“வாங்கிட்டு வாங்க”னு சுவரிடம் சொல்வார் மனைவி.
மனைவி படுத்தபிறகுதான் அவரைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்.
ஏன் நாம் பேசுவதே இல்லை. அவளுக்கு பிடிச்ச மாதிரி டி.வி பார்த்துட்டு போகட்டுமே என்று
தன்னை சமாதனப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் வருவார்.
இறுதியில், சுவரிடம் சொல்லாமல் “மல்லிகா சாப்பிடலாமா?” என்று மனைவியின் பெயரைச் சொல்லி கூப்பிடுவதாக சிறுகதை முடியும். இங்கே அவர்களுக்குள்
சுவராக இருந்தது ஒருவரிடம் ஒருவர் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத அன்பு.
முதியோர்களுக்கிடையே உரையாடல்கள் இல்லையென்றால் அவர்கள் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகி விடுகின்றனர்
என்ற சமீபத்திய ஆராய்ச்சி பற்றி படித்த செய்தியும் என் நினைவில் நிறைந்தன. பரிக்கல் கோவிலில் பார்த்த அந்த முதிய தம்பதியர்களுக்குள்
இருக்கும் அந்யோன்யமும் மனதை நிறைக்கிறது.
ஒரு முறை வாய்த்த இந்த வாழ்க்கையில் மகிழ்வாகப் பேசுவதற்கான
விடயங்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாலே, மனம் மகிழ்ந்து நிறைக்கும்.
பிறரைப்பற்றிய குற்றங்களை சுமந்து கொண்டு இருப்பதை விட அவரவருக்கான புரிதல்களை ஏற்றுக்
கொள்ள பழகினால் அகம் நிறைவாகும்.


