முடி என்பது வெறும் மயிரல்ல; அது என் அடையாளத்தின் ஒரு பகுதி, ஆனால் அதை இழந்தால் என்னவாகும்? இந்தக் கேள்வியுடன் தொடங்கியது தான் என் மொட்டைப் பயணம்.
மூன்று வருடங்களுக்கு முன்னர், ஒரு நன்னாளில் என்ன தோன்றியதோ தெரியவில்லை பழனியில் மொட்டை அடிக்க வேண்டுதல் வைத்தேன். அதன் பின்பு ஓட்டமும் நடையுமாக வாழ்க்கை ஓடியது. கடந்த ஓராண்டில் முடி கொட்டுதல் பிரச்சனை சாதாரணமாக ஆரம்பித்து பூதாகரமாக மாறியது. எங்கும் முடி எதிலும் முடி எனுமளவு. வேண்டுதலை நிறைவேற்றும் காலமும் வந்துவிட்டது என எண்ணி களத்தில் இறங்கினேன். மொட்டை அடித்தலில் என்ன களம் காண வேண்டி இருக்கிறது சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். வளர்ந்த ஒரு ஆண் மொட்டை அடிப்பதற்கும், பெண் மொட்டை அடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மொட்டை அடித்தேனா இல்லையா என்பது இறுதி பத்தியில்.
பாய்கட் அடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று. இவ்வாசையும் ஏன் எதற்காக உதித்தது என நினைவில்லை, ஆனால் சிறுவயதிலேயே அந்த ஆசை உண்டு. அப்போது அடிக்கவில்லை, இப்போது மொட்டை அடித்து முயற்சிசெய்வோம் என இதைப்பற்றியும் அவ்வப்போது வீட்டில் பேசும்போதெல்லாம், பதிலேதும் சொல்லாமல் சிறு புன்னகையோடு நகர்ந்துவிடுவார்கள். என் முடி, என் உரிமை என்றெல்லாம் பேசமாட்டேன். முடி என்னுடையது என்றாலும், பார்க்கப்போவதும் பிறர் பேசக் கேட்கப்போவதும் அவர்கள் தானே. அதுமட்டுமில்லாமல், என்னை அப்படியே ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆவல். குடும்பத்தில் ஒருநாள் மொட்டை அடித்தல் குறித்து தீவிரமாகப் பேசினேன். மகன் முடியவே முடியாது என்றான். “நல்லா இருக்காது”, “இது தான் நல்லா இருக்கு” என்பது போன்ற வசனங்கள் வந்தன. எப்போது இந்த பேச்சை எடுத்தாலும் இதுவே பதிலாக வரும். பிறந்ததிலிருந்து என்னை இப்படியே பார்த்துவிட்டான், சொந்தம், அவன் நண்பர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொது இடங்கள் என எல்லோரையும் இப்படியே பார்த்து அவனுக்குப் பழகிவிட்டது. மாற்றத்தை ஏற்கப் பயப்படுவது இயல்புதானே? பாய்கட் எனக்கு எப்படி இருக்கும் என்பதும் அவனுக்குப் புரியவில்லை / தெரியவில்லை (எனக்கே தெரியவில்லை, ஏதோ குருட்டுத் தைரியம்). விளையாட்டாகப் புள்ள ஏதோ சொல்கிறாள் என்று நினைத்தார்களோ என்னவோ, பதில் ஏதும் சொல்லாமல் பேரமைதி காத்தனர். அடிக்கடி இது குறித்து வேண்டுமென்றே சீண்டி பார்க்கலானேன். மொட்டை அடிப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினேன். “உனக்கு நல்லா இல்லைனா?”, “முடி வராமல் போனால்?”, “சொட்டையாக இருந்தால்?”, “நரை முடிக்கு இப்போதே கருப்பு ஹென்னா உபயோகித்துக்கொண்டிருக்கும் சூழலில், முழுமையாக வெள்ளையாகிப் போனால்?” என எதிர்பார்த்த / பார்க்காத அத்தனை கேள்விகளும் வந்தன. அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று பதில் சொல்லிவிட்டு சாதாரணமாக இருந்தாலும், தனியே என்னை நானே ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் சொல்வது போல நடக்குமாயின், நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறேனா? என்னை நான் ஒருவிதமாக வடிவமைத்துள்ளேன், மாற்றம் எப்படி இருந்தாலும் ஏற்கும் மனோதிடம் என்னிடம் உள்ளதா எனத் தற்சோதனை செய்யத்தொடங்கினேன்.
முடி வளர்த்தல் குறித்த அறிவியல் தெரியாது என்பதாலும், என் தலைமுடி சார்ந்த பிரச்சனை என்னவென்று உறுதியாகத் தெரியாததாலும் எனக்குக் குழப்பங்கள் வருவதும் போவதுமாக இருந்தது உண்மையே. முன்தலையில் சில இடங்களில் முடி இல்லை. மொட்டை அடித்து வளர்ந்தால் அங்கே வளருமா இல்லை, சுற்றி வளரும் வரை சொட்டையாகத் தெரியுமா என்பது முதல் குழப்பம். கொஞ்சம் நரைமுடி இருந்தபோது மருதாணி பூசி வந்தேன், நிறைய நரை முடி தெரியும்போது, அம்மா தான் அக்கறையோடு Black Henna மாறச் சொன்னார்கள், மாறினேன். கிட்டத்தட்ட கடந்த ஐந்துவருட காலமாக Black ஹென்னா தான். அதும் இயற்கையாய் வீட்டில் தயாரிப்பவர்களிடமிருந்து தான். இப்போது மொட்டை அடித்த பின்னர் முழுவதுமாக வெள்ளையாகிவிட்டால்? இது இரண்டாவது குழப்பம். தலைபின்னும் அளவு வளருமா? இது மூன்றாவது குழப்பம். இவை கேள்விகளாக எழும்போதெல்லாம், இது வெறும் மயிறு தானே. இது மட்டுமே என் அடையாளம் இல்லையே என மீண்டும் மூளை என்னிடம் நினைவுறுத்தியது.
வேண்டுதலை நிறைவேற்றி அப்படியே முடிகொட்டுதல் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்து, நீண்ட நாள் ஆசையான பாய்கட் வைப்போம் என்ற முடிவில் தெளிவாக இருந்தேன். என் வேண்டுதல்கள் எனக்கும் முருகனுக்குமானது. இதற்கு எதிர்வினை வரும் என முன்னரே யூகித்தது தான். என்னவானாலும் இதில் மாற்றம் இல்லை என்று உறுதியாக இருந்தேன்.
வீட்டின் எல்லா இடங்களிலும் முடி இருந்துகொண்டே இருந்ததும், முன் தலையில் சில இடங்களில் முடிகள் இல்லாமல் காணப்படுவதும் மகனுக்கும் கணவருக்கும் நன்கு புரிந்தது. சொட்டை ஆகும் முன்னர் அவளே மொட்டை அடிக்கட்டும் என்று நினைத்தானோ என்னவோ, “வேண்டாம்” எனச் சொல்வதை நிறுத்தினான் மகன். இதுவே நமக்குக் கிடைத்த சமிக்ஞை என்று நினைத்து அடுத்த நிலைக்கு நகர்ந்தேன். அடுத்து என் அம்மாவும் தோழியும். நான் தகவலைச் சொன்னதும், சொல்லிவைத்தாற்போல இருவரும் ஒரே காரணத்தைச் சொன்னார்கள். “கணவர் இருக்கும் பொது பெண்கள் மொட்டை அடிக்கக் கூடாது”. இதெல்லாம் என்ன கதை, வேண்டுதல் வைப்பவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள், திருப்பதியில் பழனியில் எல்லாம் அடிக்கிறார்கள் போய் பாருங்கள் என்று என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன், மீண்டும் வேண்டாம் என்ற நேரடி பதிலே வந்தது. மாற்றி வேண்டிக்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள். என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்தினார்கள். அப்போதும் முருகன் நமது பக்கம் என்று எடுத்த முடிவில் தொடர்ந்தேன்.
அம்மாவிடம் மேலும் கேட்க முடியாது. மகளுக்கு என்றதும் அந்தத் தயக்கம் வருவது இயல்புதானே. அதும் பூ போன்ற மென்மையான முடியைச் சிறிதிலிருந்து பாங்கு பார்த்து வளர்த்தவராயிற்றே! என் தோழி தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவள்; “இரண்டுபேரும் ஒன்னாதானடி படிச்சோம், எங்கிருந்து இப்படி நீ யோசிக்கிறாய்” எனச் சொல்லியே விட்டேன். “தினமும் பலரையும் நேரடியாகப் பார்க்கும் வேலை, நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி என புதுமுகங்களைச் சந்திப்பவள், இப்படியான உன்னைப் பார்த்து வந்தவர்கள், முடி இல்லாமல் போய் நின்றால் எப்படி இருக்கும், மீண்டும் உன்னை அப்படியே பார்க்க முடியுமா அவர்களால்?” என்ற நியாயமான காரணங்களையும் சொன்னாள். அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். என் தலைமுடி மட்டுமே என் அடையாளம் அல்லவே. என் அடையாளம் என்பது என் சிரிப்பு, என் எண்ணங்கள், பிறரிடம் நடந்துகொள்ளும் பாங்கு, கற்றல், வெளிப்படுத்துதல், என் மனப்பாங்கு, என் அறிவு, ஆற்றல், செயல், அதன் தாக்கம் இவைதான் நான் என அவளுக்கும் புரியவைத்தேன். இந்த பெயரும், என் ஆதார் எண் போன்றவையும் கூட என்னை அடையாளப்படுத்தச் சுற்றத்தார் கொடுத்தது தானே!
சென்னையிலிருந்து விடுமுறைக்கு நம் வீடு வந்த தோழி, நேரடியாக அம்மாவோடு இதைப் பேசியேவிட்டாள். இருவரும் என்னை வினோதமாகப் பார்க்க, அப்போதும் என் முடிவில் உறுதியாக இருப்பதாகச் சொன்னேன். இவை வெறும் இறுமாப்பில் சொன்ன வார்த்தைகள் அல்ல. கேள்விகளும் பதில்களுமாக என் சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.
சில நட்புகளின் தைரிய வார்த்தைகளும், சமூக வலைத்தளங்களில் மருத்துவர்களின் உரையாடல்களையும் பார்த்து, எல்லாவற்றையும் முருகனிடம் ஒப்படைத்து மொட்டை அடிக்க நானே தேதி பார்த்தேன். ஆனி மாதம் ஒன்றாம் தேதி, ஞாயிறு, கல்லூரி விடுமுறை. மூன்றே நாள் இருந்தது. அம்மா அப்பா மகன் தோழி எல்லோருக்கும் சொல்லிவந்தேன். அடுத்த இரண்டு நாட்களில் வீடு சுத்தம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற ஆயத்தமானேன். Studio சென்று புகைப்படம் எடுத்தேன்; புது துணி உடுத்த ஆசை வரப் பின்னிரவு சென்று எடுத்து வந்தோம். எல்லாம் கைகூடி வர மூன்றாம் நாள் பழனி புறப்பட்டோம்.
சில விஷயங்களில் நம் குழப்பங்கள், அதன் பின்னர் வரும் தெளிவு இவை மிகவும் அவசியம். குழப்பங்கள் என்னளவில் கேள்விகளாக என் மனதில் தோன்றி, என் சிந்தனை அதற்கான பதிலைத் தரும்போது, நானே எனக்கு சபாஷ் சொல்லிப் பாராட்டிக்கொண்டேன். குழப்பங்களோ சந்தேகங்களோ வராமலே தடுக்க முடியுமா? முடியலாம். ஆயினும் குழப்பும் எந்த ஒரு விஷயத்தையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து, உண்மை நிலையைக் கண்டறிய உதவுவதோடு, வாழ்வின் இறுதிவரை நம் கொள்கையாக வரும் வாய்ப்பை தருகிறது. பகுத்து அறிதல் தானே எல்லாமும்!
மொட்டை அடிப்பவரிடம் சீட்டை கொடுத்தேன். கணவரைப் பார்த்து “உட்காருங்கள்” என்றார். எனக்குத் தான் மொட்டை என்றேன். “உட்காருங்க மா” என்று பொறுமையாக ஆரம்பித்தார். சிறிது சிறிதாகத் தலைக்கு மேலிருந்து பாரம் யாவும் குறைந்து போனது. இப்படியாக ஆனி மாதம் ஒன்றாம் தேதி பழனியில் காலை 3.30 மணிக்கு வேண்டுதலை நிறைவேற்றி, குளித்து, அறையிலிருந்த இருந்த கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது முன்பைவிடக் கூடுதல் அழகாக நிறைவாகத் தெரிந்தேன். விடுமுறை நாளென்பதால் பழனியில் பெரும் கூட்டம். மொத்த பெண்களில் நான் மட்டுமே மொட்டை. புதிய அடையாளத்தோடும், மனநிறைவோடும் படியேறி முருகனைத் தரிசித்துக் கிளம்பினோம்.


