சேதுராமனுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. ஆச்சரியத்துக்கான காரணம் இன்னைக்கு மானிட்டரக் காணோம்கறதுதான். மானிட்டர்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? மானிட்டர்ங்கறது அந்தத் தெருவுல இருக்கற ஒரு நாயோட பேரு. அதுக்கு மானிட்டர்னு ஏன் பேரு வெச்சாங்கன்னுதான யோசிக்கறீங்க? அந்த நாய்க்கு என்னென்னவோ பேர் வெச்சுப் பாத்துட்டாங்க. என்ன பேர் வெச்சுக் கூப்ட்டாலும் கண்டுக்காமயே இருந்துச்சு. மின்னி, டோரினு எந்தப் பேர் வெச்சுக் கூப்ட்டாலும் அது காது கேக்காத மாதிரியே எங்கயோ பாத்துக்கிட்டுப் போச்சு.
ஒருதடவ குடிமகன் ஒருத்தரு போதையில நெழல்குடைக்குப் பக்கத்துல உழுந்து கெடக்க, அவரு கூடவே அணைஞ்சு படுத்திருந்துது நாய். அந்த வழில போன சேதுராமனோட நண்பன் பரந்தாமன் மானிட்டர்னு கூப்ட, நாய் உடனே தலையத் தூக்கிப் பாத்துது. அதிலருந்து அதுக்குப் பேரு மானிட்டர்னு ஆயிருச்சு.
மானிட்டருக்கும் சேதுராமன் மேல ஏதோ பஞ்சாயத்துப் போல. சேது வர்றப்ப மட்டும் தொரத்தும். ஆரம்பத்துல, “வழில வர்றவங்க போறவங்களையெல்லாம் தொரத்துனா எப்படி வீதில போய்ட்டு வர்றது?” னு நண்பர்கள்ட்டச் சொல்லி, மானிட்டரை தொரத்தியுட யோசன கேட்டுக்கிட்டிருந்தான் சேதுராமன். போகப் போகத்தான் புரிஞ்சுது மானிட்டர் சேதுராமன மட்டுந்தான் தொரத்துதுன்னு.
“நீ எப்பயாவது மானிட்டரை அடிச்சிருப்ப. அதனாலதான் உன்னைய மட்டும் தொரத்துது” னு சேது வீட்டுக்காரங்க மட்டுமில்லாம எல்லாருமே சொன்னாங்க. ஒருநாளு கூட மானிட்டர தொரத்தனதே இல்லைங்கறது சேதுவுக்கு நல்லா நெனவிருக்குது.
எப்பிடியோ இப்ப மானிட்டர் காணாமப் போயிருச்சு. நிம்மதியா வீட்டுக்குப் போலாம்னு நெனச்சப்பத்தான் அந்தக் காட்சியப் பாத்தான். மானிட்டர் தன்னோட நண்பர்களோட சேந்துக்கிட்டு அங்கருந்த மீன்கடைக்குப் பக்கத்துல அசைவம் எதாவது கெடைக்கும்கற எதிர்பார்ப்புல வாலச் சுருட்டிக்கிட்டுப் படுத்திருந்துச்சு. சிக்கன், மட்டன் கடைங்கள விட மீன்கடைல நல்ல கூட்டம் இருந்துது. மீன்கடை காலியாகற வரைலும் மானிட்டர் நம்மை கண்டுக்காதுன்னு நெனச்சிட்டிருக்கும் போதுதான் அந்த விசயம் அவனோட நெனவுக் கதவத் தட்டுச்சு.
அவனோட அம்மா வீட்டுக்கு வரும்போது வறுத்த மீன்துண்டுகள அந்தப் புகழ்பெற்ற மீன்கடைல வாங்கிட்டு வரச் சொன்னது நெனவுக்கு வந்துச்சு.நல்லவேள மானிட்டரை தேடறப்போ நமக்கு மீன்கடைக் கண்ணுக்குத் தெரிஞ்சுது. இல்லைனா அம்மாகிட்டத் திட்டு வாங்கியிருப்போம். தப்பிச்சுட்டோம்னு நெனச்சான் சேதுராமன். மீன்கடைய நோக்கிப் போனான். அங்க நெறையப் பேரு நின்னுக்கிட்டு அங்கயே வாங்கிச் சாப்படறதையும் பார்சல் வாங்கிட்டுப் போறதையும் பாத்தான். அவனுக்கு ஒரு யோசன திடீர்னு தோணுச்சு. ‘நாம ஏன் இந்தத் தொழிலத் தொடங்கக் கூடாது? இதுக்கு எவ்வளவு முதலீடு செய்யணும்? எந்த எடத்துல ஆரம்பிச்சா தொழில் நல்லா சிறந்து, பேரோட வளர்ச்சி அடையும்? வேலக்காரங்க எத்தன பேர் தேவப்படுவாங்க?’ அப்டின்னு பலவகைல சிந்தனை செஞ்சான். ‘சாயந்திர நேரத்துல செயல்படற மாதிரி ஒரு உணவகத்த ஏன் நாம தொடங்கக் கூடாது?’ ன்னு பலமா யோசிச்சுக்கிட்டே அம்மா சொன்ன வறுத்த மீன்துண்டுகள வீட்டுக்கு வாங்கிட்டுப் போனான். வீட்டுக்குப் போனவுடன வாங்கிட்டுப் போனத அம்மாகிட்டக் குடுத்துட்டு அவனுக்குத் தோணன மீன்கடை வெக்கலாங்கற ஆசையச் சொன்னான்.
அதுக்கு அவனப் பெத்தவங்க , “யோசிக்கலாம். எந்த ஒரு முடிவையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யக் கூடாது. நல்லா ஆராஞ்சு முடிவு பண்ணலாம்” அப்படின்னு சொல்லி அவனோட கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வெச்சுட்டாங்க. ஆனா சேதுராமன் அதிலருந்து மீளற மாதிரி தெரியில . அவனுக்குச் சாயங்கால நேர உணவகத்தக் கண்டிப்பாத் தொடங்கியே ஆகணும்னு தீராத ஆச. ‘என்ன பண்றது? எப்படிப் பெத்தவங்களச் சம்மதிக்க வெக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தான். திடீர்னு மானிட்டர நெனச்சான். மானிட்டர் தனக்கு ஒரு நல்ல யோசனைய குடுத்ததுக்கு மனசார நன்றி சொன்னான். எப்படி பெத்தவங்ககிட்டச் சம்மதம் வாங்கி இந்தத் தொழிலத் தொடங்கறதுன்னு பலமா யோசிக்க ஆரம்பிச்சான்.
சேதுராமனோட தம்பி பலராமன் ஒரு மீன் பிரியன். வஞ்சிரம், வெளவா, பாறை, மத்தி, கானாங்கெளுத்தி, நெத்திலி, ஜிலேபி, இறால், சுறா, திருக்கை, கொடுவா, சங்கரா, கார, கெழங்கா, சுதும்புன்னு எந்த மீனையும் விட்டு வைக்க மாட்டான். பிரபஞ்சன் எழுதின ‘மீன்’ சிறுகதைல வர்ற மாதிரி அமாவாசை, கிருத்திகை தவிர எல்லா நாள்கள்லயும் மீன் சாப்பிடுவான். மீனுனா அவனுக்கு உசுரு.
அவனக் கைக்குள்ளப் போட்டுக்கிட்டா, உணவகத்தத் தொடங்கிரலான்னு தோணுச்சு சேதுவுக்கு. ஏன்னா, பலராமன் அம்மா செல்லம். அதான் ‘டேடி’ஸ் லிட்டில் பிரின்ஸஸ்’ இருக்காங்கள்ல, அது மாதிரி இவன் ‘மம்மி’ஸ் லிட்டில் பிரின்ஸ்’னு வெச்சுக்கங்களேன். அடுத்த நாள்லருந்து தம்பிகிட்ட நைச்சியமாப் பேச ஆரம்பிச்சான். அப்படியே அவனுக்குப் பிடிச்சதையெல்லாம் செஞ்சான். கேட்டதையெல்லாம் குடுத்தான்.
கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் சாயந்திரம் பலராமனக் கூட்டிக்கிட்டு, அந்தப் புகழ்பெற்ற மீன்கடைப் பக்கமா எதேச்சையாப் போற மாதிரிப் போனான். மீன் வாசனை பலராமனோட மூக்கத் தொளைச்சு, மண்டைல ஜிவ்வுன்னு ஏறி, நாக்குல எச்சி ஊற வெச்சுது. சேதுராமனோ எதுவுமே தெரியாத மாதிரி, கடையத் தாண்டி நடக்க ஆரம்பிக்க, பலராமனோட கை அண்ணனோட கைய அழுத்தி இழுத்துது. திரும்பிப் பாத்தான் அவன். தம்பியோட கண்கள்ல தெரிஞ்ச கெஞ்சல் அவனுக்குச் சாதகமாத் தெரிய, அடுத்த பத்தாவது நிமிஷம் பலராமனோட கைல வறுத்த வஞ்சிரம்.
இப்படியே பத்து நாளுங்க போனப்பறம், ஒருநாளு தம்பிகிட்ட மீன் கடை வைக்கலாங்கற தன்னோட ஆசையையும், அம்மாவோட மறுதலிப்பையும் மொகத்த ரொம்ப சோகமா இருக்கற மாதிரி வெச்சுக்கிட்டுச் சொன்னான். ‘யாமிருக்க பயமேன்’ ஸ்டைல்ல அவன் தம்பியும் வலது கைய ஒசத்தி ஆசிர்வாதம் செஞ்சான். வீட்டுக்குப் போனப்பறம் அம்மாகிட்ட அண்ணனுக்காகப் பேசனான். அம்மாவும் அப்பாவும் ஒத்துக்கவே இல்ல. நீண்ட போராட்டத்துக்கப்பறம் அம்மா, “சரி. தேவையானத நான் செஞ்சு தர்றேன். வீட்டுக்கு முன்னாடியே சின்னதா ஒரு கடையப் போட்டு முன்னோட்டம் பாக்கலாம். தொழில் பிச்சுக்கிச்சுன்னா, பெரிய கடையொண்ணப் போட்டர்றலாம்” ன்னு சொன்னாங்க. சந்தோஷம் தாங்கல சேதுவுக்கு.
நாள் நட்சத்திரம் பாத்துச் சின்னதாக் கடைய ஆரம்பிச்சாங்க. அவங்கம்மா கைப்பக்குவம் ஆஹா ஓஹோன்னு பேசப்பட்டுச்சு. நம்பிக்கையோட நாலு ரோடு சந்திக்கிற எடத்துல ஒரு கடைய வாடகைக்கு எடுத்து மாலை நேர உணவகத்த ஆரம்பிச்சாங்க. வெறும் வறுத்த மீன் மட்டுமில்லாம, கொழம்பு, புட்டு, பஜ்ஜி, சில்லின்னு பட்டையக் கெளப்புச்சு தொழில். தொழில் அமைஞ்ச நேரத்துல யோகம் கூடி வர ஜம்முனு சேதுராமனுக்குக் கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சுது. சந்தோஷந்தான்……
என்ன இழுக்கறேன்னு பாக்குறீங்களா? ம்ம்ம்ம்…. கதைய சப்புன்னு முடிக்க வேண்டியிருக்கேன்னுதான். காரசாரமா முடிக்கலாம்தான்… ஆனா, சேதுராமனோட பொண்டாட்டி சைவமாச்சே ….
ஆங்… சொல்ல மறந்துட்டேன். இப்பல்லாம் மானிட்டர் சேதுவப் பாத்துத் தொரத்தறதில்ல. கடைக்குக் காவலே அதுதான். கடையோட பேரு என்ன தெரியுமா?
“மானிட்டர்”


