(ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026இல் ஆறுதல் பரிசு ரூபாய் 1000 பெற்ற சிறுகதை)

துலக்கப்படாத பற்களைப்போல மஞ்சள் கறை படிந்திருந்த வெயில் பல்லிழித்துக் கொண்டிருந்தது. பெரம்பலுர் பேருந்து நிலையத்தின் எதிர்புறமாக இருக்கும் அகதிகளின் முகாமில் தான் அகல்விளக்கின் வீடு இருந்தது. அகல்விளக்கு என்பது அவளது பெயர். வீடு என்றால் நெஞ்சு உயரத்தில் எழுப்பப்பட்ட ஹாலோபிளாக் கற்களின் மீது அடுக்கப்பட்ட நான்கு கழிகள், அதற்கும் மேலாக தார்பாலின் இழைகள் போர்த்தப்பட்டிருக்கும். பதினைட்டு வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் அகல்விளக்கிற்கு தார்பாலின் போடப்பட்ட கூரைதான் அவள் பார்த்த முதல் வானம். இப்பொழுது அதன் வண்ணம் மாறிவிட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பி இருபது வருடங்களுக்கு மேலாக கழிந்துவிட்டிருந்தது. அம்மா ஆனந்த மயிலி தான் கண்டியிலிருந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வந்ததை சொல்லி இன்னமும் கூட அழுதுகொண்டே இருப்பாள். அது ஆறொனாத் துயரம். அப்பா தளையசிங்கம் இறந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன. ஆனந்த மயிலி அவளது பெயருக்கு ஏற்றபடியே நளினமாகப் பேசுவாள். அகல்விளக்கு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய பிறகு பிறந்தவள். அவள் அம்மாவின் வார்த்தைகளை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டே இருப்பாள்.
அது பகலா இரவா என்றுகூட நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. போக்கற்றுக் கிடப்பவர்கள் பொழுதை நினைவுபடுத்தி வைத்துக் கொண்டுதான் என்ன செய்யப் போகிறார்கள். போலீஸ்காரர்கள் வந்திருந்தார்கள்.
”கஞ்சிக்கு ஒன்னுமில்லை. வயித்துக்கு எந்த ஆகாரமும் இல்லாம கெடக்குது. வேறு வழியில்லை. அதுனாலதான் இலையத் தொட்டுட்டேன். இனிமேலு செய்யமாட்டேன்” என்று ஆனந்த மயிலி கெஞ்சி கூத்தாடிப் பார்த்தாள். அவள் இலையை விற்கும் தொழிலை விட்டொழித்து பல வருடங்கள் ஆனாலும் போலீஸ்காரர்கள் இன்னும்கூட அவளை விடுவதில்லை.
”கேசு எடுத்துக்கோடி. பதினைஞ்சு நாளையில வெளியே வந்திடலாம்” என்று பல வருடங்களாகப் போலீஸ்காரர்கள் கொடுக்கும் தொல்லை நின்றபாடில்லை. துறைமங்கலம் யூனியன் ஆபீசுக்கு எதிர்புறமிருக்கும் ஆட்டோ ஸ்டேண்டுக்கு பக்கத்தில் தள்ளுவண்டி கடை போட்டுதான் காலத்தை முட்டுக்கொடுத்து தள்ளிக் கொண்டிருந்தாள். மாலையில் மாட்டுக் கறி சில்லி, இட்லி, குழம்பு என வியாபாரம் சூடு பறக்கும். அந்தி தொடங்கியவுடன் தொடங்கும் வியாபாரம் இரவு பத்து மணி வரை தொய்வில்லாமல் நடக்கும். இரண்டாயிரத்திற்கும் மேலாகக் கூட வருமானம் கிடைத்தது. பணத்தோடு பெருந் தொல்லைகள் வந்து சேருவதையும் தவிர்க்க முடியாது. தினமும் கடை விரிக்க முடியாது. தினசரி மாமூல் என வருமானத்தில் பாதியைத் தின்றுகொண்டு போய்விடுவார்கள். மாட்டுக்கறி விற்பதால் அச்சம் கூடுதலாகப் பற்றிக் கொண்டிருந்தது. ”வாழ்க! வாழ்க!” என்று கோஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். கழிகளில் கட்டப்பட்ட கொடிகள் கைகளில் இருக்கும். தோள்பட்டையில் சாய்த்து வைத்திருப்பார்கள். கொதிக்கும் எண்ணைச் சட்டியை யார் தலைகீழாக கவிழ்த்துவிடுவார்கள் என்று தெரியாது. சிலரை ஆனந்த மயிலிக்கு நன்றாகத் தெரியும். தனியாக வரும்போது கறியை நன்றாக முறுகலாக எண்ணையில் வறுத்து எடுக்கச் சொல்லுவதோடு, நறுக்கப்பட்ட பம்பாய் வெங்காயத்தை கூடுதலாகக் கேட்டு வாங்கித் தின்றுவிட்டுப் போவார்கள். ஆனால் கும்பலாகக் கொடியை உயர்த்திக் கோஷம் போட்டுக்கொண்டு வரும்போது எண்ணைச் சட்டியை கவிழ்த்து விட்டுப் போய் விடுவார்கள். இதைப் போல பல சந்தர்பங்களில் நடந்திருக்கிறது. அதனால் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் போடுவதோடு ஆனந்த மயிலி நிறுத்திக் கொண்டாள். அச்சம்தான் காரணம். அதற்கும் சூனியம் வைத்ததைப்போல முடங்கிப் போனது. சென்ற வாரம் மறுபடியும் வீட்டிற்குப் போலீஸ்காரர்கள் வந்தார்கள்.
”ஏய் ஆனந்தம், கேசு எடுத்துக்கோடி”
”என்ன உட்டுறு சாமி” என்று ஆனந்த மயிலி மன்றாடிப் பார்த்தாள். அவள் நினைத்ததைப்போல எதுவும் நடக்கவில்லை. ஆனந்த மயிலியை நடு சாமத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். எந்த ஜெயில் என்றுகூடத் தெரியவில்லை.
இரண்டு நாட்கள் மட்டுமே கழிந்திருந்தது. அம்மா இல்லாத தார்பாலின் வீட்டில் அழுதுகொண்டே இருந்தாள். அன்றைய மாலையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியிருந்தாள் அகல்விளக்கு. வீட்டிற்கு முன்பாக ஒரு பெண் போலீஸ் நின்று கொண்டிருந்தாள். இதனை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
”ஆனந்த மயிலி எங்கடி?”
குரல் அதட்டலாகத்தான் இருந்தது.
அம்மா கேசு எடுத்துக்கொண்டு செறைக்கு போயாச்சி மேடம்! இன்றைக்கு ரெண்டு நாள் ஆயிடுச்சி! எந்த சிறைன்னுகூட தெரியல! கொஞ்சம் அத மட்டும் சொல்லுங்க! அம்மாவ பாக்கணும்” என்றாள் அகல்விளக்கு.
”சரி நீ வா”
”எதுக்கு?”
”ஓ எதுக்குன்னு காரணம் சொன்னாதான் வருவியா?”
”…………………………….”
”சரி…சரி …. உங்க அம்மாகாரி கேசு எடுத்த விசயமாதான். வந்து ஒரு கையெழுத்து போடணும்… வா” என்று அகல்விளக்கை அழைத்துக்கொண்டு போனாள். அகல்விளக்கு கைதி இல்லை. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருப்பவள். கல்லூரியில் சேர்ந்து இரண்டு மாதங்கள்கூட முடியவில்லை. முகாமில் தங்கியிருக்கிறாள் என்ற ஒரு காரணம் அவளை சந்தேகிக்க போதுமானதாக இருக்கிறது. அன்றைய இரவு முழுக்க பெரம்பலூர் காவல் நிலையத்தின் வாசலிலே நிற்க வைக்கப்பட்டிருந்தாள். மறுநாள் காலை பதினோரு மணியாகி விட்டிருந்தது.
”காலேஜ் போகணும்” என்றாள்.
யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. கூண்டு வண்டி வந்து நின்றது.
”வண்டியில ஏறு!”
காலை பதினோறு மணிக்குப் புறப்பட்ட கூண்டு வண்டி, மாஜிஸ்டிரேட், மருத்துவர் என பலகட்ட இத்தியாதிகளை முடித்துக்கொண்டு ஜெயில் கார்னர் வரும்போது மறுநாள் மாலை மூன்று மணியாகிவிட்டிருந்தது. பெரம்பலூரிலேயே ஒரு கிளைச் சிறை இருக்கும்போது அகல்விளக்கை ஏன் திருச்சிக்குக் கொண்டுவந்தார்கள் எனத் தெரியவில்லை. தூக்கம் இல்லை. பல் துலக்கவில்லை. ஒன்றுக்கு ரெண்டுக்கு என எதுவும் போக முடியவில்லை. சிறைச்சாலையின் வளாகத்திற்குள் கூண்டு வண்டி நுழைவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னை ஒரு கையெழுத்திற்காக அழைத்துக்கொண்டு வந்தவர்கள் ஏன் சிறைச்சாலைக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும்? இதனை யாரிடம் சொல்லி முறையிடுவது? அழுகை விக்கிக்கொண்டு வந்தது.
அகல்விளக்கு இதற்கு முன்னதாக சிறைச்சாலையைப் பார்த்தது இல்லை. போலீஸ் வாகனத்தில்கூட இப்பொழுதுதான் முதன் முதலாகப் பயணம் செய்கிறாள்.
”ஏண்டி அழுவுற! ஒரு கையெழுத்துதானே போடப் போற. அப்புறம் என்ன?” என்று அதட்டல் வந்தது. வாகனத்தின் முகப்பில் ஓட்டுனரோடு ஒரு பெண் போலீஸார் மட்டுமே இருந்தாள். பின்புறமாக அகல்விளக்கு மட்டுமே இருந்தாள். பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை. கூண்டு வண்டியின் இரட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. கதவின் நகர்வையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு வேறு எந்தக் குரலும் தேவைப்படவில்லை. இறங்கினாள்.
”உள்ள போ” என்ற சத்தம் வந்தது.
”நான் எந்தத் தப்பும் பண்ணல” என்று அழுதாள். வேனின் பின்புறமாக அமர்ந்து கொண்டிருக்கும்போது இருந்த அழுகையின் தொடர்ச்சிதான் இது. முகப்பு அறை ஒன்று இருந்தது. உடல் பருத்த ஒரு பெண் அமர்ந்திருந்தாள். காக்கி பேண்ட் அணிந்திருந்த அவள், உடம்பில் ஆண்கள் உடுத்தும் கட்டம்போட்ட கசங்கிய சட்டையை உடுத்தியிருந்தாள். அவளது உருண்டைக் கண்களும், புடைப்பான மூக்கும் முக அமைப்பிற்கு பொருந்தவில்லை. அவளது சட்டையில் இருந்த பேட்ஜில் சுடர்கொடி என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அவளுக்கு முன்னால் போர்வையைப் பிணைத்து மூன்று புறமும் தடுக்கப்பட்டு அறையினைப் போன்ற அமைப்பில் இருந்தது. அதன் முகப்பினைப் பார்க்கும் வகைக்கு ஏற்ப முன்புறத்தில் எந்த மறைப்பும் இல்லை. மேசையி்ல் வைக்கப்பட்டிருந்த நீள அகலமாக இருந்த நோட்டில் மும்மரமாக எதையோ அவள் எழுதிக் கொண்டே இருந்தாள். அவ்வப்போது நிமிர்வதும், பின்னர் குனிந்து எழுதுவதுமாகவே இருந்தவளின் முகத்தில் அவசரம் தெரிந்தது.
”கழட்டுடி”
அகல்விளக்கிற்கு எதுவும் புரியவில்லை.
வேனில் இருந்து இறங்கிவந்த பெண் போலீஸ் தாமரை பொடணியில் ஒன்று வைத்தாள்.
”கழட்டுன்னாத் தெரியாதா? கழட்டுடி. படுக்கணும்னா உடனே கழட்டுவே”
அகல்விளக்கு சுடிதார் அணிந்திருந்தாள். கழுத்தில் மாட்டியிருந்த துப்பட்டாவை மட்டும் கழற்றினான்.
இன்னொரு அடி விழுந்தது.
”மத்ததையும் கழட்டுடி?”
பெண் போலீஸின் முகம் முன்பு இருந்ததைப்போல இல்லை. ”கடுகைப் போட்டால், பொறிஞ்சிடும்” என்பதைப்போல முகம் தனல் தகிப்பாய் இருந்தது. லத்தியில்கூட புட்டத்தில் ஒரு அடி விழுந்ததிற்குப் பிறகாக பேண்ட் என அத்தனையையும் கழற்றிவிட்டு முன்பக்கமாக கைகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். இந்த நிர்வாணக்கோலம் எதற்கு என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை.
”ஏய்” என்ற குரல் வந்தது.
அதுவும் தாமரையின் குரல்தான். அவளது குரல் அவளின் முகத்தினைப்போல சாதுவாக இல்லை. சாதுவாக இருக்கும் முகத்திற்கு இப்படியான ஒரு குரல் எப்படி அமைந்தது? குரல் முகத்திற்கு ஏற்றவாறு அமைந்துவிட வேண்டும். முதல் பார்வையிலேயே கண்களில் உணர்வுகளோடு பதிந்து நெருக்கம் கொண்டுவிடும் முகம் வாய்ப்பது எல்லோருக்கும் அமைவதில்லை. சக உயிரினத்தின்மீது குரல்தான் முதன் முதலாக அன்பின் ஈரத்தினைக் கடத்துகிறது. அதற்காகவேனும் குரலின் ஒலி அன்னியப்பட்டு விடக்கூடாது.
”கையக் கட்டிக்கிட்டு தோப்புக் கர்ணம் போட்ற மாதிரி உட்கார்ந்து எழுந்திரு”
அகல்விளக்கிற்குப் புரியவில்லை.
”ஏய்! தோப்புக் கர்ணம் போடு”
இதெல்லாம் எதற்கு என்று அவளுக்குத் தெரியவி்ல்லை. சிறைக் கட்டிட சுவர்களுக்குள் இருக்கும் கற்கள் வலிமையானவை. மண்ணின் ஈரத்திலிருந்து துண்டித்துக்கொண்ட பாறைகள்தான் சுவருக்குள் அகப்பட்டுக் கிடக்கின்றன. சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட பாறைத்துண்டுகள் ஒன்றாக சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவற்றுக்கிடையில் இறுகிய சேர்மானமும் வந்து சேர்ந்து விடுகிறது. அப்படிப்பட்ட கட்டிடத்திற்குள்தான் அகல்விளக்கு உடம்பில் ஒரு துண்டுத்துணி கூட இல்லாமல் நின்று கொண்டிருக்கிறாள். சிறையில் புழங்கிக் கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் ஈரம் இருப்பதில்லை.
சிறை வாயிலின் முகப்பு என்பதால் உடல் இளைத்துப் போன ஒரு குருவி உள்ளே பறந்து வந்தது. அதற்குப் பின்னதாக அதைவிட சிறிய மற்றொரு குருவி. அந்த இரண்டு குருவிகளும் இதற்கு முன்னதாக இந்தச் சிறைக் கொட்டடிக்கு வந்திருக்குமா என்பதைப் பற்றி அகல்விளக்கிற்குத் தெரியாது. வந்தவுடன் சிடுக்கென வெளியே பறந்துவிட்டது. அதன் பறத்தல் இனி உள்ளே வரப் போவதில்லை என்பதைப் போலவே இருந்தது. ஒத்த உறுப்புகளைக் கொண்ட உயிரினத்திற்கு முன்னதாக மற்றொரு உயிரினம் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்ற அவலம் யாருக்கும் வரவே கூடாது.
அகல்விளக்கு உட்கார்ந்து எழும்போது அவளது கால்களுக்கு இடையே உள்ள இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை. ஏதேனும் விழுகிறதா?” என்பதைப் போலத்தான் அவளின் பார்வை இருந்தது.
”என்னாடி நாற்றங்கால்ல இருந்து மூனாவது கால் ஒன்னு முளைச்சி வருது” என்றாள் தாமரை.
சுடர்கொடி இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய நகைச்சுவையை கேட்டதினைப்போல் வெடித்துக் குலுங்கிச் சிரித்தாள். மேசையின் மேலிருந்த பதிவு நோட்டுப் புத்தகத்தின் மீது பேனாவை அப்படியே போட்டுவிட்டாள். எழுதவில்லை. நாற்காலியின் பின்புறத்தில் சாய்ந்தாள். வாயைப் பிளந்தவள், சில நிமிடங்கள் சத்தம்போட்டுச் சிரித்திருப்பாள்.
”மூன்றாவது கால் மொளக்கிறதோட சரி. மொட்டாகவே நின்னுடும். அது வளரவே வளராது” என்று தாமரை சொன்னதும் மீண்டும் எழுந்த சிரிப்பு அடங்குவதற்கு வெகு நேரமாகியது. அகல்விளக்கு தோப்புக்கரணம் போட்டுக்கொண்டே இருந்தாள்.
”கீரை விழுவுதான்னு பாரு” என்றாள்.
”இல்லை”
”ட” ன்னா மாதிரி குனிஞ்சிக்கிட்டு நில்லு”
”சரி. காலு ரெண்டையும் அகட்டி வைச்சி நில்லு”
கையில் இருந்த லத்தியை எடுத்து அவளது புட்டத்தின் ஒரு பகுதியை குத்தி விலக்கினாள். பிறகு முன்புறத்திலும் அப்படியே செய்தாள். விலக்கிப் பார்த்தாள்
”அய்யோ” என்றாள் அகல்விளக்கு.
”ஏய் என்னாடி யோக்கிதை மாதிரி நடிக்கிற என்று அவளது வாயில் லத்தியை நுழைத்தாள்.
குமட்டினாள் அகல்விளக்கு.
”ஏய் என்ன?” போடி போய் அந்த மூலையில நில்லு”
”குண்டிக்குள்ள கீரை இல்லை. பின்ன எப்படித்தான் கஞ்சா பொட்டலம் உள்ள வந்து சேருதுன்னுத் தெரியல” என்று புட்டத்தில் லத்தியால் ஒரு இறுக்கி இறுக்கினாள். ”கீரை” என்பதும் ”இலை” என்பதும் கஞ்சாவின் மாற்றுப் பெயர்கள் என்பதை அவர்களின் உரையாடலில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
”இந்தா இந்த துணிய மாத்திக்கிட்டு அப்படி ஓரமா போய் உட்காரு”
”கையெழுத்து” என்று வாயெடுத்தாள். ஆனால் முழுவதுமாகப் பேச முடியவில்லை. தனக்கு என்ன நேர்ந்து விட்டிருக்கிறது என்று அவள் முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவள் சிறைக் கம்பிகளுக்கு உள்ளாக அடைக்கப்பட்டு விட்டிருந்தாள்.
நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்ததன. அவளுக்குப் பதினெட்டு வயது முடிந்து ஏழு நாட்கள்தான் கடந்து விட்டிருந்தன. முகாமில் நடந்திருந்த சம்பவங்கள் மூன்று நாட்களுக்கு முன்னதாக நடந்திருந்தால் அகல்விளக்கு சிறார் கூர்நோக்கு மையத்திற்குத்தான் அழைத்துச் செல்லப்பட்டிருப்பாள். அகல்விளக்கோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சக கைதிகள் வயதில் மூத்தவர்களாகவே இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு பருவநிலையை நேர்செய்யும் வயதில் இருந்தார்கள். சிறையில் மட்டும்தான் நாட்களைப் பற்றியோ, கிழமைகள் பற்றியோ, மழையைப் பற்றிறோ, வெயிலைப் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் கைதிகள் யாருக்கும் தேவைப்படுவதே இல்லை. பெயர்களைக்கூட தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அகல்விளக்கு தனிச்சிறையில் இருந்தாள். கழிவறை கோப்பைக்கு பக்கத்தில்தான் தலையை வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். சிறிய அறை. உட்கார்ந்து கொள்ளலாம். முக்கால்வாசி நிற்கலாம். முழுமையாக நிற்க முடியாது. தலை முட்டியது. இருட்டு அச்சமூட்டியது. சிறையில் இருப்பவர்கள் நிமிர்ந்து நின்றுவிட கூடாது. தண்டுவடத்தினை வளைத்துவிட வேண்டும் என்பதைப் போலவே மேற்கூரைகள் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கின்றன. வண்டுகள், புழுக்கள் நிறைந்திருக்கும் சோற்றை அவளால் சாப்பிடவே முடியவில்லை. கீரைக்கூட்டில் அட்டைப் பூச்சிகள் துண்டுப்பட்டுக் கிடந்தன. குமட்டிக்கொண்டே கிடந்தாள்.
”பிக் பாக்கட்டு கேசுக்கும், கொலைக்காரிக்கும் சோறு ஆக்கிப் போட்றோம். அதத் திங்கறத்துக்கு வலிக்குதாடி முண்ட?” என்று வசவினாள். சோற்றை சமைக்கத் தெரிந்திருப்பவளுக்கு இப்படியும் பேசத் தெரிகிறது. வியர்வையின் நாற்றத்தோடு மனிதர்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் மூக்கு, அவளிடம் இப்பொழுது இல்லை. அது வாசனையினை நுகரும் திறனை இழந்து விட்டிருந்தது. புழுக்கள் நிறைந்திருக்கும் சோற்றை தின்னாமல் வைத்தால்கூட அதற்கும் பிளாஸ்டிக் பைப்பில் அடிதான் விழுந்தது.
”ஏய் டி பிளாக்கிற்குப் போ. உன்ன அங்க மாத்தியாச்சி”
ஐந்து நாட்கள் கழிந்தன. அகல்விளக்கை பொதுச்சிறைக்கு மாற்றினார்கள். விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அதிகமாக இருந்தார்ககள். நீண்ட நாட்களாக இருக்கும் அவர்களுக்குள் ஒரு சகஜநிலை இருந்தது. தண்டனை குறித்தோ, வீட்டிற்குப் போகவேண்டும் என்பதைப் பற்றியோ, குடும்பம் குறித்தோ அவர்களிடம் எந்த மனநிலையும் இல்லை. அறையில் கைதிகள் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டு கூடிக் கிடந்தார்கள். அகல்விளக்கால் அதனைப் பார்க்கக் கூட முடியவில்லை. கண்கள் கூசின. மருந்து செலுத்தப்பட்ட வாழைப்பழம் சிறைக்குள் வந்துவிடுகிறது.
”ஏய் இங்க வாடி. செஞ்சியூடு”
”தெரியாது அக்கா”
”இப்படித்தான்” என்று அகல்விளக்கின் ஆடையினை உருவியவள், பசித்துக் கிடந்த விலங்கினைப்போல அவளின் உடம்பை அல்லோலப் படுத்தினாள்.
”அக்கா விடு. விட்டிரு அக்கா”
”இப்போ புரியுதா?”
ஆடையினைச் சரி செய்துகொண்டாள். ஒவ்வாத சொல்லிற்காக கைக்கொட்டி சிரிக்கவைக்க நிர்பந்திப்பதும், மனதிற்கு அன்னியப்பட்ட காரியத்தை அவர்களின் மனதிற்கு பிடித்ததைப்போல செய்வதற்கு அவர்களையே பக்குவப்படுத்துவதுதான் வக்கிரத்தின் உச்சம். சிறைச்சாலையின் இருட்டு, மனதின் கடைசிச்சொட்டு ஈரத்தினையும் உலர்த்தி விடுகிறது. அதற்கு அவர்களைப் பழக்கப்படுத்தியும் விடுகிறது. அகல்விளக்கிற்கு தன் விரல்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதற்குப் பின்னதாக மூன்று நாட்கள் அந்த விரல்களைக் கொண்டு அவளால் சோற்றைக்கூட அள்ளித் தின்ன முடியவில்லை. குமட்டியது. ஒரு சோப்புத் துண்டு இருந்தால்கூட அதன் கவிச்சியினை போக்கிக் கொண்டு விட முடியும். அழுக்குகள் மண்டிக் கிடக்கும் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் விரல்களை சவுக்காரத்தினைக் கொண்டு போக்கிவிட முடிவதில்லை.
தாமரை வந்திருந்தாள். அவள் கையிலிருந்த நோட்டைப் பார்த்து பெயர்களை வாசிக்கத் தொடங்கினாள்.
”என்னாடி?”
அகல்விளக்கு இரண்டு தப்படி முன்னதாக வந்து தனக்கான உணவைத் தட்டில் வாங்கிக் கொண்டாள். பகல் முழுக்க வெக்கையில் புற்களை வெட்டிய அவளுக்குப் பசி இல்லை. சாப்பிடவேண்டும் என்றும் தோன்றவில்லை. அப்படியே வைத்துவிட்டாள்.
”ஏய் இங்க வா”
அந்தக் குரல் அவளுடையதுதான். அது குமட்டலை ஏற்படுத்தும் குரல். அகல்விளக்கின் கண்கள் விரல்களை நொந்துகொண்டது. தீ பற்றியதைப்போல தனது விரல்களை உதறினாள்.
”என்ன அக்கா?”
”இந்தா ரெண்டு இழுப்பு இழு”
இலைகள் திணிக்கப்பட்ட சிகரெட்டுதான் அது. மொந்தென இருந்தது.
”அக்கா எனக்குப் பழக்கம் இல்லை”
”அதுக்குத்தாண்டி சொல்றேன்”
”பழகாததைப் பழகிக்க வேணாமா?”
”இல்லை அக்கா… வேணாம்” என்று அகல்விளக்கு சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே அவளது வாயில் திணித்தாள். பக்கத்தில் இருந்தவள் பாலகனை கொடங்கையில் அணைத்துக் கொள்வதைப்போல அகல்விளக்கை தனது கையில் கிடத்திக்கொண்டு அவளது மூக்கை பிடித்துக்கொண்டாள். அகல்விளக்கிற்கு புகை நுரையீரலுக்குள் ஏறி திக்குமுக்காடியது. மயங்கிவிட்டாள். கை கொட்டி சிரிக்கும் சத்தம் கேட்டுதான் அகல்விளக்குவின் நினைவு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கழிந்துவிட்டிருந்தது.
”ஐஸ் கிரீம் எப்படி இருந்துச்சி?”
அவள் அப்படி கேட்பதும் பக்கத்தில் இருப்பவர்கள் சிரிப்பதுமாக இருந்தார்கள். அகல்விளக்கிற்கு வாயெல்லாம் கசந்து வந்தது. நாற்றம் சுழன்றது. ஈக்கள் அவளது முகத்தில் மொய்த்தன. காரி உமிழ்ந்தாள். துப்பினாள்.
”இன்னும் ஐஸ் கிரீம் வேணுமுன்னா சொல்லுடி”
”ஆமா… ஆமா… கோண் ஐஸ்”
என தனது இடுப்பில் தளர்ந்திருந்த நாடாவை இறுக்கிக்கொண்டு சிரித்தாள்.
”அய்யோ” என்று அழுவதைத் தவிர அகல்விளக்கால் வேறென்ன செய்ய முடியும்.
”நாங்களும் இந்த ஐஸ் கிரீம் சாப்புட்டு இருக்கோம்” என்றதும் அவளோடு மற்றவர்களும் கொலேரென சிரித்தார்கள்.
எட்டு மணியாகிவிட்டிருந்தது. இதுவும்கூட அனுமானம்தான். சிறைக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. வாய் கொப்பளித்து துப்புவதற்குக்கூட முடியவில்லை. இரவெல்லாம் அழுது கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை. சிறைக் கம்பிகளைப் பற்றினாள். இந்தக் கம்பிகள் எதைப் பூட்டி வைத்திருக்கின்றன? எனக்குள் தடவப்பட்டிருக்கும் அழுக்கை வெளியே துப்ப வேண்டும் என்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கம்பிகள் அதற்குக்கூட அனுமதிக்கவில்லை. குற்றம் கண்களுக்கு அகப்படாத ஒரு காற்றைப்போலவும் அல்லது ஒரு திரவ நிலையில்தான் மனிதர்களின் செல்களுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஒரு இரவுப் பொழுதில் அது பனிக்கட்டியைப்போல உருகியோ அல்லது கரைந்தோ வெளியேறிவிட வேண்டும் என்பதற்காகத்தான் சிறைக் கம்பிகள் இடைவெளியைக் கொண்டிருக்கின்றன. எனக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு குற்றத்தினை வெளியேற்ற முடியவில்லை. இரவு வெகு நேரமாகிவிட்டிருந்தது. அவளது அறையில் இருந்த எல்லோரும் தூங்கிவிட்டிருந்தனர். அகல்விளக்கிற்கு தூக்கம் வரவில்லை. சிறையின் இந்த ஒரு நாளின் துயரத்தினை அவளால் யாரிடமும் சொல்ல முடியாது. கடந்துபோக கற்றுக் கொண்டிருந்தாள்.
சிறைவாசத்தில் பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டிருந்தது. இன்னும் நான்கு நாட்களில் அகல்விளக்கிற்கு ரிமாண்ட் முடிகிறது. சிறையிலிருந்து வெளியே வந்துவிடலாம். ஆனாலும் குற்றத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அவளது தரப்பிலிருந்து நிரூபணம் செய்யவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. அவளது குடும்ப சூழலும் பொருளாதாரமும் அதனை எதிர்கொள்வதற்கான தெம்பைப் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. அன்றைய காலையில் வருகைப் பதிவேட்டில் பெயர் வாசிக்கப்பட்டது. காலை உணவிற்குப் பிறகாக, அகல்விளக்கு தனது அறையில் இருந்தாள். தாமரையின் குரல் கேட்டது. அவளின் பக்கத்தில் ஜெயில் சூப்பிரண்டு கதவினைத் திறந்துவிட்டாள்.
”ஏய் வெளியே வா. கோர்ட்டுக்குப் போகணும். இன்னிக்கு உனக்கு ரிமாண்டு முடியிது” என்றாள் தாமரை.
பதிவறையில் அமர்ந்திருந்த சுடர்கொடியை பதினைந்து நாட்களுக்குப் பிறகாக இன்றுதான் பார்க்கிறாள். பக்கத்தில் தாமரையும் நின்றுகொண்டிருந்தாள்.
”என்னடி?“ என்றதும் இருவரும் மீண்டும் சிரித்தார்கள்.
அவர்களுக்கு மொட்டிக்கொண்டிருந்த மூன்றாவது கால் நினைவிற்கு வந்துவிட்டது.
”என்னடி மொட்டுக்குத் தண்ணி ஊத்துனியா?” என்றாள். சுடர்கொடியின் குரலில் நையாண்டி நொண்டியது. அகல்விளக்கால் எப்படி சிரிக்க முடியும்? அவர்கள் இருவருமே சிரித்துக் கொண்டார்கள். கூண்டு வண்டி வந்திருந்தது. கையழுத்து இன்னும் பிற இத்தியாதிகள் முடித்துவிட்டிருந்தன.
”ஏய்! வா ஏறு” என்றாள் தாமரை.
வேனின் முதற்படியில் ஏறியிருப்பாள். யாரிடமும் அனுமதி கேட்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு ஓடினாள்.
”ஏய்! ஏய்” என்று அவளது பின்னால் ஓடினாள். பிடிக்க முடியவில்லை.
தனது அறையின் சிறைக் கம்பிக்கு அருகில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பாதி சிறகு மட்டுமே முளைத்து வந்திருந்த ஒரு குருவிக்குஞ்சுக்குத் தன் துப்பட்டாவை கழற்றிப் போர்த்திவிட்டாள்.
இந்த அகல்விளக்குவின் மீதுதான் சந்தேகத்தின் பேரில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. முகவரியற்ற சிறையில் எங்கோ அடைபட்டுக் கிடக்கும் அம்மா ஆனந்த மயிலிக்கு யார் கையெழுத்து போடுவார்கள் என்றும் தெரியவில்லை.
பெருமழை பெய்யத் தொடங்கியது. துறைமங்கலம் அகதிகளின் முகாமில் இருக்கும் அவர்கள் வீட்டுச் சுவற்றில் கழியாக கிடந்த வன்னி மரக் கூரையின மேல் விரிக்கப்பட்டிருந்த நைந்த தார்பாலின் இழை, கள்ளத் தோணி புயல் காற்றில் சிக்கிக்கொண்டு தவிப்பதைப்போல தன் உடம்பை அகல விரித்து மாரடித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் பறவையிடம் இருந்து உதிர்ந்த இரண்டு வெண்சிறகுகள் கிடந்தன.
– க. மூர்த்தி

