(ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026இல் ஆறுதல் பரிசு ரூபாய் 1000 பெற்ற சிறுகதை)

நடுநிலைக்கு சற்றுமேல் பக்கவாட்டில் ஆரம்பித்து மேலெழுந்து திடீரென கீழறங்கி ஒரு முட்டை போடுகிறது போல் போனது சடாரென்று உள் நுழைந்து உள் சுழியம் போடப்போகிறது என நினைக்கும் போது சிறிய சுருள் போல முடித்து விட்டு சற்று மேல் பக்கவாட்டில் ஆரம்பித்த இடத்திற்கு அருகில் மையமிட்டது போல ஆரம்பிக்கப் போகிறாள் என நினைக்க சடக்கென எழுந்து வெளியேறினாள், அவள் எழுந்து செல்ல முயல கையிலிருந்த பென்சிலால் தாளைத் தொட்ட இடத்தில் சிறிய புள்ளி இட்டது போல் இருந்தது. மிகச்சாதாரணமாக கிறுக்கி எழுந்து சென்ற குழந்தையின் தோரணையைப் பார்க்கும் போது இன்று இது போதும் என்றது போல் இருந்தது.
நான் சரியாக கவனிக்கவில்லை. அவள் எழுந்து நடந்து சென்ற விதத்தைப் பார்த்து வியப்பாக அவள் அமர்ந்து இருந்த இடத்தைப் பார்த்தேன். மனம் பதைபதைக்க “ஐய்யய்யோ..” என்றபடி பார்த்தேன்.
நான் ஆய்வுக்காக பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் ஆறு மாதம் கழித்து ஒரு பெரும் புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகம் அது. நான் வாசிப்பதற்கு முன்பாகவே புத்தகத்தின் அட்டைக்கு அடுத்த வெள்ளி நிறப் பக்கத்தில் பென்சிலால் கிறுக்கி இருந்தாள். கோபத்தை அடக்கியபடி அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே அழி ரப்பரைத் தேடி எடுத்து அந்தப் பக்கத்தை, இந்த கிறுக்கல்களை அழிக்க எத்தனிக்கும் போது வரைந்த கிறுக்கல்கள் விசித்திரமாக இருந்தது.
தாளில் மிகச் சாதாரணமாக கிறுக்கிய கிறுக்கல்களில் ஏதேதோ சிக்கி மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து போகிறது. அது ஓவியம் என்று கூற முடியாது ஆனால் அந்த கிறுக்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் எனது கோணம் மாறுகின்ற போதெல்லாம் அதில் ஏதோவொன்று தோன்றி எழுந்து பறக்க ஆரம்பிக்கின்றது. அதைப் பிடித்து அதன் வடிவம் என்ன என நினைப்பதற்குள், மேலும் எனது கோணம் மாறியிருக்கிறது. பூமியின் சுழற்சியில் சிறிது கோணம் நகர்ந்திருக்கிறது. நானும் சிறிது நகர்ந்திருக்கிறேன். நானும் சிறிது அசைவு நெளிந்திருக்கிறேன் என்பதை என்னால் என்னை உணர முடியாது மூழ்கி பிரமித்து இருக்கிறேன்.
நடந்து… எழுந்து… பறந்ததை நினைத்து வியந்து மீண்டும் வரைந்த தாளைப் பார்க்கும் போது கூட்டுப்புழுவுக்குள்ளிருந்து உடைத்து உறித்து எழுந்து முறுவலித்து சிலிர்த்து நீண்டு சுவாசித்துப் பறக்க முயன்று விடுவதற்குள் அடுத்தது ஒன்று சிறிது நேரத்தில் தயாராகி விடுகிறது. யோசித்தப்படியே வரைந்த தாளை திரும்பிப் பார்க்கும் போது கொலுசொலி காதுக்கருகினில் அங்கே குமிழ்குமிழாக முகிழ்ந்து உடைந்து ஓய்கிறது.
“செல்லக்குட்டி……குட்டிம்மா. நீங்க எங்கயிருக்கீங்க?. புக்குல என்ன வரைஞ்சிருக்கீங்க? இங்க வாங்க வந்துசொல்லுங்க…’’ என அழைத்ததும் எந்தவித சத்தமும் இல்லாமல் வீடே அமைதியாக இருந்தது மீண்டும் அழைக்கிறேன் மௌனமே மௌனமாக இருந்தது.
“குட்டிம்மா எங்கடா இருக்கீங்க” என அழைத்துக் கொண்டே பக்கத்து அறைக்குப் போனதும் படாரென்று கதவின் பின்பக்கமிருந்து ஒரு குட்டி உருவம் ‘பே பே’ என்றவாறே தனது முகத்துக்கருகினில் இரண்டு கைகளை வைத்துப் பத்து விரல்கள் விரித்து நகங்களால் பிராண்டுவது போல் வெளிப்பட்டு பாவனை செய்தவாறே பயமுறுத்த என் இதயம் உண்மையிலே திடுக்கிட்டுப் போக முகம் பெருமூச்சிட்டது. நான் எனது வலது கையால் மார்பினை தாங்கிப் பிடித்தபடியே பெருமூச்சு விட்டதைக் கண்டதும், அவள் முகத்தில் அத்தனை வெளிச்சம்.
அந்த மகிழ்ச்சியின் கன்னக்குழியில் இருந்து வான வேடிக்கை காட்டும் நட்சத்திரங்கள் எல்லாம் ரெக்கைக்கட்டி வீடெங்கும் நிறைந்து நிறைந்து பறந்தது. நான் அப்படியே மார்பைப் பிடித்தப்படியே பயத்தில் கீழே விழுந்ததும் ஓடி வந்து என் மீது தாவி ஏறி அமர்ந்து கொண்டு
“எப்படி எப்படி. பயந்திட்டியா”
என தலையை ஆட்டி ஆட்டி வலது கையின் ஆள்காட்டி விரலை நீட்டி காற்றின் காதுகளை திருகுவதைப் போல பாவனை செய்தபடி எனைப் பார்த்துக் கொண்டு சிரிக்கும் அந்தப் பரவசமான முகத்தைப் பார்த்ததும் எழுந்து எனது இருகைகளில் மலர்களை அள்ளுவதைப் போல தலையைப் பிடித்துக் கொண்டு ஆச்சர்யப்படுவது போல எனது வாயினைக் குவித்து வைத்துக்கொண்டு புருவங்களை உயர்த்தி
‘உண்மையிலே நான் பயந்துட்டம்மா” என்றேன்.
உதடுகள் குவித்து பயந்த உணர்வை நடிப்பு எனத் தெரியாமல் நுட்பமாகச் சிலிர்ப்புடன் வெளிக்காட்ட அப்படியே எழுந்து நின்று வேகமாக என் வயிற்றில் உட்கார்ந்து உட்கார்ந்து எழ நான்
“வேண்டாம்மா, வேண்டாம்மா. என் வயிறு வலிக்குது”
அவள் கைகளைப் பிடித்தபடி எழுந்து உக்கார்ந்து மீண்டும் கைகளால் அவள் தலையைத் தாங்கிப் பிடித்தபடி
“என் செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி அந்தப் படம் எப்படி வரைஞ்சீங்க’’
எனக் கேட்க எந்தப் பதிலும் வராமல் மூக்கை நோண்டி வாயிற்கருகினில் விரல்களை கொண்டு செல்ல முயலும் போது எனது ஒரு கையால் அவளது கைகளை தடுத்து
“இதெல்லாம் ஆயி பழக்கம்மா, இப்படி எல்லாம் மூக்கை நோண்டக்கூடாது. புரியுதா என் செல்லக்குட்டி நீ வரஞ்சையில்ல அது மாதிரி இன்னொரு படம் வரைங்க பார்க்கலாம், வாங்க நாம அந்த ரூமுக்குப் போகலாம்”
குழந்தையை லாவகமாக கைகளில் தூக்கிக் கொண்டு அவள் வரையும் போது சிதறிக் கிடந்த இடத்துக்குச் சென்று அமர வைத்து
“இந்தாங்க பேப்பர்”
அளவெடுத்து நேராகக் கோடுகள் போட்ட தாளை நீட்டினேன். அவள் வேண்டாம் எனத் தலையாட்டினாள். சரி ஒரு வெள்ளைத்தாளை நீட்டினேன். அதையும் வேண்டாம் என்றாள்
அப்புறம் யோசித்து முடிவெடுத்து ஆ” என விரல்களால் சொடுக்கிட்டு எழுந்து டேபிள் டிராயரைத் திறந்து நல்ல தரமான தாள்கள் கொண்ட கெட்டி அட்டைப் போட்ட ஒரு நோட்டைக் கொடுத்தேன். அதையும் வேண்டாம் என தலையை ஆட்டியபடி என்னிடம் இருந்து இறங்கி எதையோ தேடினாள். பரப்பரப்புடன் அலமாரி, மேசை என இங்கும் அங்கும் தேடினாள். ஆனால் அவள் விருப்பத்திற்கு எதுவும் பிடித்ததாகத் தெரியவில்லை. நாடியில் ஆள்காட்டி விரலால் தொட்டு.. தொட்டு.. எடுக்க மற்றொரு கையை இடுப்பில் நிறுத்தி மேலே பார்த்தாள். நானும் மேலே பார்த்தேன். மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. அவள் என்னைப் பார்த்தாள் நானும் அவளைப் பார்த்தேன். ஏதோ யோசனை வந்தது போல் எனது கையில் வைத்திருந்த கெட்டி அட்டை போட்ட தரமான தாள்கள் நிறைந்த நோட்டை தன் இரு கைகளால் வாங்கினாள். அப்படியே கீழே வைத்தாள். நன்கு வசதியாக உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்தாள் நான் பரபரப்பானேன்.
கிரையான் பென்சில் எங்கே? வண்ணக்கலவை பென்சில் எங்கே? எனத் தேடி எடுக்கத் தயாரானேன். மனசுக்குள் மிகுந்த மகிழ்ச்சி. அவள் வரையும் ஓவியங்களை பத்திரமாக வைப்பதற்கு இந்த நோட்டு ஈஸியா இருக்கும். துண்டுத் தாள்களில் வரைந்தால் எங்கேயாவது காணாமல் போயிடும். நோட்டுன்னா எப்ப எப்ப வரைஞ்சதுன்னு தேதி போட்டு எழுதி வைக்கிறதுக்கு சரியாக இருக்கும்.
சின்ன வயசுல இதுமாதிரி நம்ம அப்பா அம்மா உற்சாகப்படுத்தி வரைவதற்கு என்கரேஜ் பண்ணி அதையெல்லாம் பத்திரப்படுத்தி வைச்சிருந்தாங்கன்னா இப்ப வரையும் கற்பனைத் திறனை கொஞ்சம் அதிகரிச்சிருக்கலாம் குழந்தைகள்கிட்ட இதுமாதிரி ஆர்வம் முளைவிடும் போதே உற்சாகப்படுத்தி அவங்கள அவங்களாகவே வளர விடனும். நான் ஏழாவது படிக்கும் போது என் வகுப்பில் பக்கத்தில் முருகேசன் என்ற மாணவன் இருந்தான். அவன் பாடப்புத்தகங்களுக்கு மத்தியில் ஒரு கோடு போடாத நோட்டு வைத்திருப்பான். வகுப்பறையில் ஏதாவது ஓய்வு நேரம் கிடைக்கும் போது அந்த நோட்டில் தனக்குக் கிடைக்கும் கார்ட்டூன் கதாப்பாத்திர பொம்மைகளை பக்கத்துக்கு ஒன்றாக வரைவான். நாங்கள் பார்க்கும் போது முன்னாள் வரைந்த சில படங்களையும் அவன் நோட்டில் கண்டதுண்டு. இதெல்லாம் ஏன் வரையிற என்று கேட்டால் ஓரே பதில் ‘சும்மாதான்’ என்று சொல்லுவான்.
அப்ப எனக்குப் புரியல எட்டாவது படிக்கும் போது முருகேசன் வேறு பெஞ்சில் உட்கார்த்திருப்பான். அப்பவும் வேறு ஒரு நோட்டுல படம் வரைந்து வைத்திருந்தான். முன்னாடி வரைஞ்ச மாதிரி கார்ட்டூன் படம் இல்ல, இப்ப வனவிங்குகள் படம் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொன்றாக வரைந்தது மட்டுமில்லாமல் எப்ப வரைஞ்சதுன்னு தேதி போட்டுருந்தான். அந்த தேதிய எல்லாம் பார்க்கும் போது தினம் தினம் வரையிற மாதிரி தெரியல. நேரம் கிடைக்கும் போது வரைஞ்ச மாதிரி தெரிஞ்சது, முன்ன வரைந்த கார்ட்டூன் படங்களை விட இதில் கொஞ்சம் கோடுகள் நேர்த்தியாக இருந்தது.
டிராயிங் பீரியடுல அவனுடைய படங்களைப் பார்த்து டிராயிங் வாத்தியார் ‘நல்லா வரைஞ்சிருக்க” அப்படின்னு நோட்டுல குட்ன்னு போடுவாரு. பெரும்பாலும் அவன் நோட்டுல குட் தான் இருக்கும். ஆனால் என் நோட்டுல எப்பவாவதுதான் குட் வரும். அதே மாதிரி 9ஆம் வகுப்பு படிக்கும் போதும் முன்ன மாதிரி சின்ன நோட்டு இல்லாம் பெரிய சைஸ் நோட்டுல கடவுள் படங்கள வரைஞ்சிருந்தான். அத பார்க்கும் போது எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கும். நானும் அது மாதிரி வரையனும்னு ஒரு நோட்டுப் போட்டு வரைய முயற்சி செஞ்சேன் ஆனா அத ஒரு நேர்த்தியா வைக்க முடியல. முன்னாடி வரைஞ்ச ஞாபகமான படங்கள் எங்கிட்ட ஏதுமில்ல. விடுமுறை முடிஞ்சு பள்ளி ஆரம்பிக்கும் போது பழைய நோட்டோட அதுவும் கடைக்கு போயிரும், முருகேசன் படங்கள பத்திரப்படுத்தி வைச்ச மாதிரி அவனோட ஞாபகங்கள் மட்டும்தான் என்கிட்ட இருக்கு.
அவன் எப்படி கோடுகளை கொஞ்சகொஞ்சமா செம்மைப்படுத்தி பழகிக்கிட்டான் அப்டீங்கறது அசாத்திய ஆச்சரியமா இருக்கு. சமீபத்துல அவன சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும் போது அமெரிக்காவுல கணினித்துறையில் பெரிய ஆபீஸரா இருக்கான்னு சொன்னான். நல்ல சம்பளம் அப்டீன்னு சொன்னப்ப பிரமிப்பா இருந்துச்சு. ஒருத்தருக்கு அடிப்படை ஆர்வம் ஏற்படும் போது ஊக்குவிக்கிற ஆட்கள் இல்லையின்னா அது அப்படியே கரைஞ்சு போயிரும். நாம நம்ம குழந்தைகிட்ட சில விசயங்கள் முளைக்கும் போது நல்ல விசயங்கள் வளர இடம் கொடுக்கனும் குட்டிம்மா இந்த நோட்டுல என்ன வரைஞ்சாலும் கிறுக்கினாலும் அத பத்திரமாக வைக்கனும். அவள் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வரும் போது இந்த நோட்டப் பார்த்து தான் வரையும் போது என்ன என்ன தப்பு பண்ணினோமுன்னு பார்த்து திருத்திக்கிறதுக்கும், முன்னாடி இருந்த கற்பனையைக் காட்டிலும் இப்ப எப்படி சிந்திக்கன்னு திருத்திக்கிறதுக்கு ரொம்ப எளிமையாக இருக்கும்.
வரையும் போது போடும் கோடுகளின் நெளிவு சுழிவுகள் நம்முடைய சிந்தனைத் திறனை ஒருமுகப்படுத்த முயற்சி செய்யும். சித்திரமும் கைப்பழக்கம் அப்படிங்கிற மாதிரி ஒருமுகப்படுத்திய சிந்தனை வளரும் போது கவனம் சிதறாம கைகளில் இறங்கி கோடுகளாக நேர்படுத்தும். அது பிற்காலத்தில் நல்ல பரிமாணத்தைக் கொடுக்கும் புதுமையான சிந்தனைகளும் கற்பனைகளும் அந்த கோடுகள் மூலமாகக் கிடைக்கும். அதன் மூலமா தன்ன மாத்துவா, இந்த உலகத்த மாத்துற அளவுக்கு தன்ன வலிமைப்படுத்த கோடுகள் ரொம்ப உதவியாக இருக்கும்.
எனது ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக கிருத்துவ பாதிரியார் இருந்தார். அவர் எப்போதும் காவி உடையில் தான் இருப்பார். மற்ற பாதிரிமார்களில் இவர் மாறுபட்ட சிந்தனைவாதியாக இருந்திருக்கலாம். ஏனென்றால் அவர் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை புதுவிதமானது. அப்பொழுது எனக்குப் புரியவில்லை. இப்பொழுது அதை நினைத்து நினைத்து பெருமைப்படுகிறேன். மற்ற ஆசிரியர்கள் தண்டனையாக பிரம்பால் அல்லது கைகளால் அடிப்பார்கள். சில ஆசிரியர்கள் அந்தப் பகுதி பாடத்தை பலமுறை எழுதச் சொல்வார்கள் சிலபேர் பெற்றோரை வரச் சொல்லி மாணவர்கள் நடத்தையை புகார் சொல்லுவார்கள் ஆனால் எங்கள் வகுப்பு ஆசிரியர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் கசங்கிய நூல் பையில் சில கண்டுகள் இருக்கும். தவறு செய்த மாணவர்கள் அந்த நூல்கண்டின் சிக்கலை நீக்கி ஒரு குச்சியில் நன்றாக சுற்றித் தர வேண்டும் அவ்வளவுதான்.
இதற்காக நேரம் ஆனாலும் பள்ளி முடிந்தாலும் விட மாட்டார். பள்ளி நேரம் முடிந்ததும், இந்த மாணவனின் பெற்றோர் தேடி வந்தால் தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வரச்சொல் என்று வாட்ச்மேனிடம் சொல்லி விடுவார். அதற்கு முன் மாணவனைப் பற்றிய முழுவிபரமும் கேட்டு விடுவார். அவன் உள்ளூரா வெளியூரா உள்ளூர் என்றால் பள்ளிக்கு அருகிலா தொலைவிலா எனக் கேட்டு விடுவார். வெளியூர் என்றால் அடுத்த நாள் பள்ளிக்கு வந்ததும் தண்டனைக்குரியவனை தான் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே இல்லையென்றால் வகுப்பு எடுக்கும் அறைக்கு வெளியே நிறுத்தி விடுவார், பள்ளிக்கு அருகில் வீடிருக்கும் மாணவர்கள் பாடு சிறிது திண்டாட்டம்தான். தண்டனைக்காக அவர் அறைக்கு வெளியேயிருக்கும் போது அவருக்கு தேநீர் மற்றும் உணவு வரும் வேளையில் அதை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார், தண்டனையை விட அவர் அறையில் உண்ட தேநீர், பட்டர் ஜாம், பிரட் பற்றி கதைகதையாக சொல்வார்கள், அவர் நடத்திய பாடம் ஞாபகமில்லை. ஆனால் அவர் கொடுத்த தண்டனை இன்னும் பசுமரத்தாணிபோல் இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதி நாட்களில் உங்களிடம் ஏதாவது கேள்வியிருந்தால் சொல்லுங்கள் என்றார். நாங்கள் ஒருமித்தப்படி நூல்கண்டைப் பற்றித்தான் கேட்டோம். சொன்ன பதில் யோசிக்கும்படியாத்தான் இருந்தது.
நூல்கண்டில் விழுந்த சிக்கலைத் தீர்க்க அமைதியான மனமும், பொறுமையும், அறுந்து விடாமல் எப்படி எடுத்தால் சிக்கல் எளிமையாக விடுபடும் என்ற கவனமும் மிகத் தேவை. நூல்கண்டின் சிக்கலைத் தீர்க்க பொறுமையில்லாதவன் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கோபப்படாமல் பொறுமையாக நிதானமாக யோசித்து எப்படி தீர்ப்பான் என்றார். நாங்கள் விடுவதாக இல்லை. அவருக்கு சிக்கலான நூலிலைகளை கொடுத்தோம். அவர் இலகுவாக மிக விரைவில் அவற்றின் சிக்கல்களை நீக்கிக் கொடுத்தார். ஆச்சரியமாக இருந்தது. கொடுத்த சிக்கலான நூல்களை தீர்ப்பதற்குள் அவருடைய வகுப்பு முடிந்து மணி அடித்தது, அவர் வெளியே சென்ற பின்னரும் எங்களுக்குள் புரியாத ஒரு பிரமிப்புதான் இருந்தது. ஏனென்றால் இதற்கு முன் வந்த ஆசிரியர்கள் இதுமாதிரி சொன்னதில்லை. அதற்கு பின் வந்த ஆசிரியர்கள் பாடத்திட்டத்திலேயே கவனமாக இருந்ததால் அதன் விளக்கம் தெரியாமலேயே போய் விட்டது. எனக்கு பிரச்சனைகள் வரும்போதெல்லாம் நூல்கண்டு சிக்கல்தான் ஞாபகம் வந்தது.
இன்றைய மாணவர்களிடத்தில் செல்போன் பார்ப்பதிலும் வீடியோகேம் விளையாடுவதிலும் இருக்கக்கூடிய பொறுமை, கவனம் பாடப்பத்தகம் படிக்கும்போது இருப்பதில்லை. மாணவர்களிடத்தில் பொறுமை, கவனம், நிதானம் வளர வேண்டும் என்றால் அவர்களுடைய கைகள் கோடுகளை கையாள கற்றுக் கொள்ளவேண்டும்.
சிறு வயதிலேயே சிக்கலான கோடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கோடுகளைப் பற்றி நன்றாகத் தெரிய வேண்டும். எழுத்து எங்கே உருவானது? ஆதிமனிதன் அறிவு எங்கே மலர்ந்தது? என்று உற்று நோக்கும்போது முதலில் அவன் உணர்வுகளை, கண்ட காட்சிகளை உணர்வுடன் பாவனைகளால் வெளிப்படுத்தப்பட்ட முயற்சியை மண்ணிலே கோடிட்டு காட்ட தொடங்கும் போது அவனுக்கு தெரியாது, பூமியில் உள்ள அத்தனையையும் தனதாக்கி கொள்வான் என்றும், மண்ணில் வரைந்த கோடுகள் வரிவடிவ எழுத்துகளாகப் பாறைகளிலும், குகைகளிலும் பாத்திரங்களிலும் மொழிகளாகவும் மொழிகளோடு அவன் வாழ்க்கையை வரலாறாக்கி வரலாறை விண்வெளியில் முத்திரை பதிக்கும் படியாக தன்னை பானை ஓடுகளிலும் அலங்கரித்து கொண்டு பயணித்தபோது மனிதனில் ஆறாம் அறிவு விழித்து தன்னை மேண்மை படுத்தி உயர்த்தியது அந்த மெய்நிகர்க் கோடுகள், இன்னும் விசாலமாக நுண்ணோக்கிப் பார்த்தால் உலகமே கோடுகளால் நிறைந்ததுதான். சிலபேர் கோட்டுக்கு உள்ளே இருக்கிறாங்க, சிலபேர் கோட்டுக்கு வெளியே இருப்பாங்க, சிலபேர் கோடுகளைத் தாண்டி தனக்கான புது கோட்டைப் போட்டு ஏதாவது சாதிச்சிருப்பாங்க. சில நேரங்களில் கோடுகளைப் பார்த்து பயந்து பயந்து நடுங்கி அதையே சிக்கலாக்கி கால்களில் மாட்டிக்கிட்டு சிலந்தி வலையில் சிக்கிக்கிட்ட மாதிரி சிக்கிக்கிறாங்க கோடுகள விட்டு நாம் விலகிவிலகிப் போக அது அப்படித்தான் இருக்கும்.
கோடுகளை நோக்கி நெருங்க நெருங்க இன்னும் இன்னும் நெருங்க அது லாவகமாக நமக்கு புதிய புதிய வழிகளைக் காட்டும், வெளி உலகத்துல சுதந்திரமாக இருக்க முடியும். கோடுகளோடு பழகப் பழக புதுமையான புரிதல்கள், புதுமையான கற்பனைகள் கோடுகள் மாதிரி நெளிவு சுழிவோடு எல்லாத்தையும் கடந்து போக எளிமையாக இருக்கும். உலகத்துல கோடுகள் இல்லாத இடமே இல்லை தூரத்து மலைகளைப் பாருங்க. அது கோடுகள் கீழேதான் இருக்கு. வனாந்திரத்தையும், காடுகளையும் பாருங்க நீண்ட நீட்ட கோடுகள், சுருண்ட கோடுகள், பச்சை வண்ண கர்லிங் கோடுகளால் நிறைஞ்சிருக்கு, நகரத்தின் கட்டிடங்களைப் பாருங்க, அதுவும் கோடுகளால் நிறைஞ்சிருக்கும். சரி, கம்ப்யூட்டரை எடுத்து உள்ள பாருங்க மதர்போர்டில் வளைந்து நெளிந்த வயர்கள் என எவ்வளவு கோடுகளால் நிறைஞ்சிருக்கு.
கம்ப்யூட்டரில் இருக்கிற முக்கிய உறுப்பு சிப் தான். அந்த சிப்பைப் பெரிசு பண்ணிப் பார்த்தா அதுல எவ்வளவு நுண்ணிய கோடுகள் நிறைஞ்சிருக்கு. அதுலதான் நம்ம படங்கள் எழுத்துக்கள், ஆவணங்கள், ரகசியங்கள் எல்லாத்தையும் அலமாரிக்குள் வைத்த மாதிரி பிடிச்சிருக்கு. கோடுகளை கையாளத் தெரிஞ்சதனால தான் நம்ம கையில் செல்போன் இருக்கு, அதையும் தாண்டி அறிவியல் இருக்கு, என தன் அறிவு பல கோணங்களில் பல திசைகளில் பறந்து விரிந்து உலகத்தையும் தாண்டி கோடு போட்டுக் கொண்டிருக்கும் போது நாளை தன் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?
கோடுகளை எப்படி எப்படி எல்லாம் மாற்றலாம் என பழகிக் கொடுக்க வேண்டும். என வேகமாக ஓடிக் கொண்டிருந்த மனக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியது அந்தச் சத்தம். சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்க்கிறேன். நேர்த்தியாகவும் தரமாகவும் வடிவமைத்த அட்டை மேல்பகுதியில் கவித்துவமாக இயற்கை காட்சி, உள்ளே வரைவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பளிச்சென்ற வெள்ளைநிறத்தாள்கள். அந்த தாள்களில் ஒன்றை “ட… ர்..’’ரென்று கிழித்ததால் எழுந்த சத்தமே என்னை திசை திருப்பி அதிர்ச்சியடைய வைத்தது.
எந்த பதற்றமும் இல்லாமல் ஒரு கையில் நோட்டோடும் மற்றொரு கையில் கிழித்த தாளோடும் எனது முகத்தைப் பார்த்து புன்னகை செய்தாள். எனது முகம் கோபத்தின் உச்சிக்கே சென்றது. எவ்வளவு விலைபோட்டு வாங்கிய நோட்டு என்ற படபடப்பில் கோபத்தால் சிவந்த முகத்துடன் அவளைப் பார்க்க அதுவரை மலர்ந்த முகமாக இருந்தவள் எனது முகத்தில் ஓடிய ரணமான விகாரமான கோடுகள் வழியே எரிமலைக் குழம்புகள் ஓடியிருக்கும் போலும், மாறிய என் முகத்தின் நிலைகள் கண்முன்னே விரிந்து மலர்ந்த மலரில் இருந்த இதழ்கள் பொல்லென்று கொட்டிய மழையில் பிய்ந்து உதிர்வதாகவும் செழும் பசுமை அடர்ந்து நிறைந்த இலைகளால் குளிர்ச்சி நிறைந்த தென்றலை கொடுத்த வனம் ஒரு அணுகுண்டு அனல் பெருங்காற்றில் இலை முழுவதும் சாம்பலாகிப் பறந்து போய் வெறும் கருமை நிறக் கோடுகளையும் புகை பறக்கும் கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு பார்க்கும் பாலை நிலம் போல சுருங்கத் தொடங்க,
என் கோபத்தையும் மனப்பிம்பத்தையும் பத்து நேர்கோடுகளான விரல்களில் சுருண்டு கீழிற்ங்கி குறுக்கும் நெடுக்குமாக ஓடும் பலநூறு ரேகைகள் நிறைந்த கைகளால் முகத்தை மறைத்து படாரென்று “பே’’ என்று சொல்லிக் கொண்டே கைகளைத் திறக்க அவள் முகத்தில் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்த மகிழ்ச்சி அழுத்திய பொத்தானில் சட்டென்று எரியும் விளக்காக மகிழ்ச்சியின் வண்ணப்பூச்சிகள் “ஏ…ய்….ஏய்… ஏய்…யா’’ என்ற சப்தத்துடன் இரண்டு கைகளையும் மேலே தூக்கிய வண்ணம் அங்கே அறையில் வெடித்து சிதறி சாம்பலாக பறந்து கொண்டிருந்த கோபத்தின் கோடுகளை அவள் கையில் இருந்த கிழித்த வெள்ளை நிறத்தாளால் இந்தப்பக்கம். அந்தப்பக்கம்… என ஆட்டியதில் துடைத்தது போலானது. துடைத்தது மட்டுமில்லாமல் வெள்ளை நிறத்தாளிலிருந்து நிறப்பிரிகையாக வண்ண வண்ணக் கோடுகளளாகப் பறந்து பறந்து பட்டாம் பூச்சிகளையும் பூக்களையும் தாங்கிக் கொண்டு வீடு முழுவதும் மகிழ்ச்சியால் நிறைத்தாள்.
-ந.பழனிக்குமார்

