தெளிவு – மகேஸ்வரி மதன், சண்முகவடிவு, மஞ்சு, லாவண்யா

பூஜா அழகான பெண். குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு. ஈரோட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பூஜா படிப்பில் கெட்டிக்காரி. பள்ளியில் எல்லா வகுப்பிலும் முதலிடத்திலிருந்தாள். அவளின் கல்வி கொடுத்த தைரியம் அவளின் முகத்தில் வெளிப்படும். உயர் கல்வியைத் தொடர அவளுடைய பெற்றோர் எல்லாவற்றையும் செய்தார்கள். அங்கும் சிறந்துவிளங்கினாள் என்று தனியே சொல்ல வேண்டியதில்லை. ஐடி நிறுவனத்தில் படிப்பிற்கேற்ற சிறந்த வேலை கிடைத்தது. வேலையில் சுயமாகச் சம்பாதித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைப் பூஜா விரும்பித் திருமணம் செய்து கொண்டாள். பெற்றோரும் நிறைவாக இருந்தனர்.
பூஜாவும் கணவர், இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். அவளுக்கு வாசிக்கவும் எழுதுவதும் பிடிக்கும். அவளுக்கு எளிதாகக் கைவருவதாகவும் இருந்தது.  பெண்கள் சுயமுன்னேற்றத்தை உறுதியாக நம்புகிறவள். மேலும் அவளுடைய பெண் சகாக்கள், உறவினர்கள், வீட்டு உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பெண்களும் முன்னேறப் பல வழிகளில் உதவுவாள்.
ஒரே நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, பூஜா சில சமயங்களில் வெறுமையாக உணரத்தொடங்கினாள். சில மாதங்களுக்குப் பிறகு தன் கணவரிடமும் பகிர்ந்து கொண்டாள். ஏதாவது செய் என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட, இவள் மனம் மேலும் வெறுமையை உணரத்தொடங்கியது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும் கூடிய ஒரு வேலை அல்லது தொழிலைச் செய்ய விரும்பினாள்.
வேலையில் கவனம் சிதறியது. ஏதோ ஒரு பெரும் குழப்பத்தில் மூழ்கத் துவங்கினாள். பெற்றோர் வேலையை விட்டுவிட்டு மகிழ்வாய் வீட்டில் இருக்கச் சொல்கிறார்கள். கணவர் இவளின் குழப்பத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்து ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள். ஏனோ அனைத்தும் அவளுக்கு அந்நியமாகத் தெரிய ஆரம்பித்தது. தன்னையும் கவனிக்காமல், வேலையையும் கவனிக்க முடியாமல், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் திணறினாள். தனக்குப் பிடித்தவர்களிடமிருந்தும் பிடித்தவற்றிடமிருந்தும் தன்னையும் அறியாமல் தொலைவுபடுத்தியிருந்தாள்.
பூஜாவிற்குப் பள்ளி நாட்களிலிருந்தே மிகவும் நெருக்கமான நட்பாக இருந்தவள் மதிவதனி. பக்கத்துப் பக்கத்து ஊர்களில் வசித்தவர்கள். இரு ஊருக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்த பள்ளி என்பதால் இருவரும் ஒரே பள்ளியில் கல்வி பயின்றனர். படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்த  பூஜாவிற்கும் மதிவதனிக்கும் யார் முதல் ரேங்க் வாங்குவது என்பதில் போட்டி இருந்தாலும், அவர்களின் நட்பை அது என்றுமே பாதித்தது இல்லை. 
அடுத்து கல்லூரியிலும் ஒரே துறையில் சேர்ந்து படிப்பை முடித்து இருவரும் வேறு வேறு ஊர்களுக்கு வேலைக்குப் போகும் வரையிலும் அவர்களின் நட்பு குறையவேயில்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வதும், அவ்வப்போது நேரில் சந்தித்துக் கொள்வதுமாய் நல்லபடியாய்த் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 
ஆனால் இருவருக்கும் திருமணம், குழந்தைகள் என வந்ததில், வேலை, குடும்பம் என இருவரும் அவற்றில் மூழ்கி விட, மெதுமெதுவே இருவருக்கும் இடையிலிருந்த  தொடர்புகள் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாய் நின்றே போனது. 
பூஜா எப்போதாவது தன் தோழிக்குப் பிடித்த உணவைச் சமைக்கையில், அவளுக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கையில், அவளுக்குப் பிடித்த வண்ணத்தில் உடுத்துகையில்,  நினைப்பாள், மதி இப்போது எங்கே இருப்பாள் என்ன செய்து கொண்டிருப்பாள் என. ஆனால் இவளின் வேலைப் பளு, தோழி பற்றிய நினைவைத் தொடர விடாது தடுத்து விடும்.  
இன்று வார இறுதி என்பதால்,  அவள் கணவனும் குழந்தைகளும் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போயிருக்க, யாருமில்லாத தனிமைச் சூழல்  கொஞ்சம் வெறிச்சென்று இருந்தாலும், அவளின் தற்போதைய மனநிலைக்கு ஒரு வகையில் ஏனோ ஆறுதலாகவும் இருந்தது.  பால்கனியில் ஒளிர்ந்து கொண்டிருந்த பவுர்ணமி நிலவும், இதமாய் நாசி நிறைக்கும் தொட்டி மல்லிகையின் மணமும் பூஜாவின் இப்போதைய  மனநிலையை ஆற்றுப்படுத்துவது போல் இருந்தது. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த ‘அனல் மேலே பனித்துளி’  பாடல் மனதை என்னவோ செய்ய, அவளை அறியாமல் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. இந்தப் பாடலை அவளும் மதிவதனியுமாய் சேர்ந்து திரும்பத் திரும்பக் கேட்ட பழைய நாட்கள் நினைவுக்கு வந்தது. 
அவளை எப்படி இத்தனை நாள் மறந்திருந்தோம்  என்று லேசாக மனம் உறுத்த, உடனே அவளோடு பேச வேண்டும் போல இருந்தது.  தன் அலைபேசியில் அவளின் எண் இருக்கிறதா எனத் தேட ம்ஹூம்.. காணோம். மனம் சலித்து, கைகளால் முகத்தை மூடியபடி சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் அழுது முடித்ததும், மனம் கொஞ்சம் தெளிவாக, இந்த இண்டர்னெட் யுகத்தில் ஒரு தொலைந்து போன தோழியைத் தேடுவதா கஷ்டம் எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அழுததிலும் மன அழுத்தத்திலும் தலையை வலிக்க, மதியமும் எதுவும் சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வர, சமையலறைக்குச் சென்று காஃபி டிக்காக்ஷன் போட்டு வைத்து விட்டு,  ஃப்ரிட்ஜில் இருந்த குழம்பைச் சூடு பண்ணி எடுத்துக் கொண்டு,  இரண்டு தோசையை ஊற்றிச் சாப்பிட்டாள். சூடாக ஒரு காஃபியைப் போட்டு எடுத்துக் கொண்டு, தன் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். படுக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டு, தன் மடிக் கணினியைத் திறந்து வைத்தாள்.  
தனது மடிகணினியை திறந்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது போட்டோ ஆல்பம் அதில் தனது சிறு வயது முதல் கல்லூரி வரை எடுத்த போட்டோக்களில் தன் எண்ணச் சிந்தனைகளைப் பதித்தாள். முக்கிய குறிக்கோள்களை வரையறுத்து, விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வாங்கிய இந்த சிறப்பான வேலையை 12 வருடங்களுக்குப் பிறகு எதனால் தொடரப்  பிடிக்கவில்லை என்பதை உணரத் தொடங்கினாள். வேலை குடும்பம் மற்றும் குழந்தைகளின் கல்வி என்று ஓடிக்கொண்டே இருந்ததால் அவளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. இதை நாம் எப்படிச் சரி செய்து சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து நமது வாழ்வை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்வது என்று தீவிர யோசனை செய்தாள். தன் தோழியுடன் கல்லூரியில் படிக்கும் போது சில கலந்துரையாடல்களில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய தொழில் முனைவோர் பற்றியும் அவர்களுடைய சுயமரியாதை அங்கீகாரம் பற்றியும் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. நமக்குக் கிடைத்த செல்வம் மற்றும் திறமைகளை வைத்து சுயமாக ஏன் தொழில் செய்யக்கூடாது என்று யோசித்தாள். பிறகு தனது தோழி ஞாபகம் வந்தவுடன் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள். அவளைத் தொடர்பு கொள்வது எப்படி எனப் பல சிந்தனைகளுடன் சமூக வலைத்தளங்களில் அவள் பெயரை வைத்துத் தேடினாள். தேடிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவளுக்குக் கிடைக்கவில்லை. பிறகு என்ன செய்யலாம் யாரைத் தொடர்பு கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு ஒரு போன் வந்தது.
இப்பொழுது இந்த அழைப்பில் மதிவதனி பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் அதுவோ கொரியர் டெலிவரி அழைப்பாக இருந்தது. ஏமாற்றத்துடன் மீண்டும் மடிகணினியை திறந்து தோழியைத் தேட துவங்கினாள். தோல்வியே மிஞ்சியது. அடுத்த நாள் காலை ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்  தனது உறவுமுறை அக்காவைச் சந்திக்கப் போகிறோம் என்ற  மகிழ்ச்சியிலேயே உறங்கிப் போனாள் பூஜா.
அக்காவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தாயிற்று. அக்கா  எப்பொழுது  கண்விழிப்பாள்,  எப்பொழுது தன் மனக்குமுறல்களைக்  கொட்டலாம் என காத்திருந்தாள் பூஜா. அக்கா எழுந்ததும் தன் வாழ்க்கை இயந்திர மயமாகி விட்டதாகவும் தனக்கென யாரும் இல்லை என்றும் கூறினாள். மதிவதினையை தேடும் முயற்சி தோல்வியடைந்ததையும் கூறி கவலைப்பட்டாள். 
பூஜாவின் அக்கா மாயா “மதிவதனியை இத்தனை வருடங்கள் கழித்தும் இவ்வளவு தேடுகிறாயே எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது” என்றாள். பூஜா இதற்காகவே காத்திருந்தவள் போல மதிவதனியின்  பெருமைகளைக் கூறத்  துவங்கினாள். 
“மதிவதினி என்னை மிகவும் ஊக்குவிப்பாள். எனது பிரச்சனைகளை அவள்  மிகுந்த கவனத்துடன் கேட்பாள். ஜட்ஜ்மெண்ட் செய்ததே இல்லை. நான் கீழே விழும்போது என்னைத் தாங்கிப்  பிடித்து  ஒவ்வொரு முறையும் தைரியம் கொடுப்பாள்” என்றெல்லாம் சிலாகித்தாள்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மாயா.
” பூஜா இந்த வாழ்க்கையில் நம்முடன் கடைசி வரை இருக்கப் போவது நாம் தான். நீ இப்பொழுது ஒரு தாய். உன்னைப் பார்த்துத் தான் குழந்தைகள் சிலவற்றை கற்றுக் கொள்வார்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதைப் போலவே உனக்கென ஒரு நேரத்தை நீ ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உனக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்ய வேண்டும். உன்னுடைய ஊக்கம் உனக்கு மிகவும் முக்கியமானது. நீ போதுமானவள் என்று நீ என்று திடமாக நம்ப வேண்டும். மற்றவர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் போன்ற எண்ணங்களை விடுத்து நீயே உனக்கு ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும்” என்றாள். 
எழுத்து அவளின் ஆகப்பெரிய பலம் என்பதை அறிந்த மாயா ஒரு ஐடியாவை சொன்னாள். Content Writing அவளுக்கும் சரியாக வருமென உரையாடிய பிறகு தெரிந்தது. நான் துணையாக நிற்பேன், உன் மதிவதனியும் உளமார உனக்குத்  துணையாக நிற்பாள் என்றாள் மாயா. நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த தெளிவும் மகிழ்வும் பூஜாவிடம் மீண்டும் வந்தது. தன் மடிக்கணினியை உயிர்ப்பித்து freelancer வலைத்தளங்களைத் தேடத்துவங்கினாள்.
(ஈரோடு வாசல் – படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் மஹேஸ்வரி மதன், சண்முகவடிவு, மஞ்சு, லாவண்யா ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)

Leave a Reply

Categories