“இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்.
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்”
இதில் “சாலை மனிதரை வாசிக்கிறேன்” என்கிற வரி எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நெருக்கமான வரி.
என் வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்ட குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. வாகனத்தில் செல்லும் பொழுதும், பேருந்தில் செல்லும் பொழுதும், ரயிலில் செல்லும் பொழுதும், மனிதர்களை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். அவர்களுடைய முக பாவங்கள் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி அவர்களுடைய நடை உடை பாவனை, முகத்தில் தெரியும் உணர்வுகள், சில நேரங்களில் அவர்கள் முகத்தில் தெரியும் இனம் புரியாத ஒரு சோகம்- இப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமான உணர்வுகள், அதை நான் கவனிக்கும் பொழுது எனக்கு கலவையான உணர்வுகளை ஏற்படுத்தும். சில சமயம் அந்த உணர்வுகள் நமக்கும் தொற்றிக்கொள்ளும். சுமையோடு செல்லும் யாரையாவது பார்க்கும்பொழுது அடடா நாம் இவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்று விடலாமா என்கிற எண்ணமும், கணவன் மனைவிக்குள்ளே கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் சென்று விலக்கி விடலாமா என்ற யோசனையும் எழுவதுண்டு.
ஒரு தாய் குழந்தையை கோபத்தில் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஓடிச் சென்று தடுக்கலாமா!? நாலு நண்பர்கள் மகிழ்ந்து உரையாடும்போது ஐந்தாவது ஆளாக சேர்ந்து கொள்ளலாமா!? இவ்வாறு பலவிதமான காட்சிகளின் எழுப்புகிற உணர்வுகளின் தாக்கத்தில், எதையும் செய்ய முடியாமல் கடந்து செல்லும் ஏக்கத்தின் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள மனம் தவிக்கும்.
இன்று இரவு கடைய பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது ஈரோடு GH ரவுண்டானாவில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. ரவுண்டானாவில் நான் சென்ற போது ஒரு பேருந்து கடந்தவுடன் செல்லலாம் என்றிருந்தேன். அப்போது ஒரு இளைஞன் தன் கர்ப்பிணி மனைவி மற்றும் மாமியாருடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தான். நியாயமாகப் பார்த்தால் அந்தப் பேருந்து கடந்தவுடன்தான் அவர்கள் செல்ல வேண்டும். ஆனால் திடீரென்று அந்த இளைஞன் அவன் ஒரு கையில் மனைவியின் கைப்பிடித்து தனது இடது கரத்தை தலைக்கு மேல் உயர்த்திப் பேருந்தை நிறுத்துமாறு கூறிவிட்டு சாலையை கடக்கத் துவங்கினான்.
எனக்கு சற்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. பேருந்தைக் கடந்து எனது வாகனம் அருகே வரும்பொழுதுதான் அவர்கள் முகங்கள் சற்று தெளிவாகத் தெரிந்தது;
இளம் தம்பதிகள் அவர்கள்; கணவனுக்கு வயது 25 இருக்கலாம். பெண்ணிற்கு இருபது இருக்கலாம். அந்த இளைஞன் மது அருந்தியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இளைஞன் டீ ஷர்ட்டுடன் அரைக்கால் டவுசரும், அந்த பெண் நைட்டியும் அணிந்திருந்தார்கள். சின்னப்பெண், அவள் முகத்தில் தெரிந்த அந்த பூரிப்பு மற்றும் மெல்லிய படபடப்பு, மற்றும் அந்தக் கலையான முகம்தான் என்னை இதை எழுத வைத்தது.
அவள் சாலை விதிகளை உணரவில்லை. வாகனங்களின் நெரிசல் தெரியவிலை. ஒரு கையில் கணவனின் கரம் மற்றொரு புறம் தான் குழந்தை பெற போகிறோம் என்கிற பூரிப்பில் நிறை மாத கர்ப்பிணியாக அரசு மருத்துவமனையை நோக்கி வேகமான நடை.
அடடா காலம் ஒரு ஐந்து நிமிடம் நின்று இந்த காட்சியை ரசிக்க விடாதா?? கணவன் முகத்தில் மது தந்த தைரியத்தில் அனைத்து வாகனத்தையும் நிறுத்தி விட்டு என் மனைவிக்கு வழிவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டே போவது போல் தெரிந்தது. பெண்ணின் தாயாருக்கோ பதற்றம். ஆனால் அவளுக்கோ தனது குழந்தையை கையில் ஏந்தும் கனவைத் தவிர எதுவும் நினைவில் இல்லை.
நான் கண்ட அந்தக்காட்சி இன்னும் என் மனக் கண்ணை விட்டு அகலவில்லை. உடன் சென்று கூட இருந்து உதவிகள் செய்து ஏதாவது பண்ணனும்னு மனசு அடிச்சுக்குது. ஆனா. இதெல்லாம் சாத்தியமில்லை. அவர்களுக்கும் அது நிச்சயம் தேவைப்படாது தேவைப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அழகு குழந்தையை பெற்றெடுத்து தாயும், சேயும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வேண்டிக்கொள்வோம்.
சாலை மனிதரை வாசிக்கிறேன், இல்லை இல்லை நேசிக்கிறேன்!
.png)

