தோற்றுப்போன காதல்கள் – பிரதீபா
கண்கள் தேடாமல்
வார்த்தைகள் சீண்டாமல்
எவ்வூர் எவ்வழி
இருப்பிடம் அறியாமல்
நினைவுகளின் இடுக்கில்
உறங்கிக் கொண்டிருக்கும்
எல்லைச்சாமி கோவிலை
என்றாவது தாண்டும்போதும்
காவேரி ஆறுநிறைய
வெள்ளம் ஓடும்போதும்
கடந்தகாலம் மீறி எதிரொலிக்கும்
‘நீ இல்லைன்னா
இதோடு போயிருவேன்’
கட்டிய இடம் கடுசோ
காடுகழனி வேலையோ
இரண்டு பிள்ளைகளோ
இறுமாப்பு குறையலையோ
விடைவேண்டாத கேள்விகள்
வெறுமையை நிறைக்கும்
குறையில்லா வாழ்க்கை
குற்ற உணர்வில்லாத மனசு
காப்பாத்திக்கோ சாமிஎன
வேண்டிவிட்டே வழமை திரும்பும்
தாய்தகப்பன் பிரித்துவைத்த
தோற்றுப்போன காதல்கள்!