காசி பார்க்கப் போறோம் (பகுதி 6) – யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 6) கங்கா ஆரத்தி****
காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சி ஆகிய தெய்வங்களின் தரிசனம் கிடைத்த மனநிறைவோடும் ஆழ்ந்த அமைதியோடும், அந்த ஊர் மக்களின் இயல்பு வாழ்க்கை முறைகளையும் பார்த்துக்கொண்டே தங்கும் அறைக்கு வந்து மதிய உணவு முடித்து ஓய்வெடுத்தோம்.

மாலை நான்கு மணிக்கு கங்கா ஆரத்திக்குப் புறப்படலாம் என்று வழிகாட்டி தெரிவித்தார். நான் பார்க்க விரும்பிய கனவுகளில் ஒன்றாக கங்கா ஆரத்தி இருந்தது. அது நிறைவேறும் தருணத்தை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், உடல் மட்டும் சோர்வாக இருந்தது. தொடர்ந்த அலைச்சல், தூக்கமின்மை காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால் கங்கா ஆரத்தி பார்க்க வேண்டும் என்பதால் மாத்திரை எடுத்துக் கொண்டேன்.

நான்கு மணிக்குக் கிளம்பி ஆட்டோ பேசினோம். ஐந்து பேர், எட்டு பேர் அமரும் வகையில் இருந்த ஐந்து ஆட்டோக்களில் ஏறி, சிவா காட் அருகில் இறக்கிவிடச் சொல்லி வழிகாட்டி இந்தியில் பேசினார். எங்களுக்கு முன் மூன்று ஆட்டோக்கள் சென்றுவிட்டன. எங்கள் இரண்டு ஆட்டோக்கள் மட்டும் பின்தங்கின. ஒரு ஓட்டுநருக்கு சரியான வழி தெரியவில்லை. அவர் இந்தியில் பேச, நாங்கள் தமிழில் பேச, ஒரு நகைச்சுவையான சூழல் அங்கே உருவானது. அங்கே உள்ள ஆட்டோக்களில் ஓட்டுநரின் அருகில், பயணி ஒருவருக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது.

பின்னர் எங்கள் வழிகாட்டி அலைபேசியில் அழைத்து ஓட்டுநரிடம் பாதையை விளக்கினார். அப்போதும் புரியாத ஓட்டுநர், எதிர்வந்த எட்டு வயது சிறுவனிடம் கேட்டபோது, அவன் மிக அழகாக வழி சொன்னான். இந்த குழப்பத்தில் நான் எடுத்துச் சென்ற சால்வையை ஆட்டோவில் மறந்து விட்டு சிறிது தூரம் கடந்து வந்தோம். அந்த ஓட்டுநர் “திதி, திதி” என்று அழைத்து சால்வையை எடுத்துக் கொடுத்தார். “தேங்க்யூ பையா” என்று சொன்னபோது, அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எங்கள் மனதையும் நெகிழ வைத்தது. அவரது நேர்மை எங்களுக்குப் பிடித்தது.

காசி போன்ற சுற்றுலா தலங்களில் பேட்டரி வாகனங்களே அதிகமாக இயங்குகின்றன. குறுகிய சந்துகளில் செல்ல வசதியாகவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் இவ்வாகனங்கள் பயன்படுகின்றன. ஆட்டோ வாடகையும்  குறைவாக இருப்பதால் மனநிறைவுடன் பயணிக்க முடிந்தது. ஆனால், அங்கே ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களிடம் பிடிக்காத ஒரு செயல் – விடாமல் பாக்கு போட்டுக் கொள்வதும், வழியிலேயே எச்சிலைத் துப்புவதும்! இப்படியான ஆட்களைத் தவிர்க்கவும் முடியாமல்  சகித்துக் கொள்ளவும் முடியாமல் சங்கடமான மனநிலையில் பயணம் செய்தோம்.


ஒரு வழியாக சிவா காட் வந்து சேர்ந்தோம். அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாங்கள் அனைவரும் ஒரே படகில் ஏறினோம். படகு கிளம்பியது, கண்கள் எல்லாத் திசைகளையும நோக்கியது. கங்கைக் கரையின் அருகே மிக உயரமான நெருக்கமான கட்டிடங்களை பல நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று வியப்பாக இருந்தது. மின் விளக்குகளில் கங்கைக் கரை அழகாக ஒளிர்ந்தது. அந்த ஒளி ஆற்றின் நீரிலும் பிரதிபலித்தது அழகான காட்சி.

கங்கா ஆரத்தி நடைபெறும் படித்துறைக்கு தசாஷ்வமேத காட் என்று பெயர். கங்கையைத் தெய்வமாக மதித்து வழிபடும் மரபு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தாலும், இன்று நாம் காணும் இந்தப் பெரும் முறைப்படியான கங்கா ஆரத்தி 1990களில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

வரும் வழியில் மணிகர்ணிகா காட்டில் சடலம் எரிந்துகொண்டிருந்தது. அதனைத் தாண்டி ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
படகின் இரைச்சலைக் கடந்து “ஓம் நம சிவாய”, “ஹர ஹர மகாதேவா” என்ற பக்தி முழக்கங்கள் தொடர்ந்து காதில் விழுந்துகொண்டே இருந்தன. மாலை நேரத்தின் அழகோடு எங்கள் படகை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார்கள்.

கங்கா ஆரத்தியைப் பார்க்க மக்களை அழைத்து வரும் படகோட்டிகள், தங்கள் பயணிகளை முன்நிலையில் நிறுத்துவதில் போட்டியிட்டனர். அமைதியான கங்கை நீரின் மௌனத்தை கலைத்தபடி எங்களுக்கு முன் சென்ற இரண்டடுக்கு மின் படகுகளில் இதயவடிவ பலூன்கள்  மின் விளக்கு அலங்காரத்தோடு சென்றது. மின் அலங்காரம்  கங்கை நீரில் அற்புதமாக பிரதிபலித்ததை கண்கொள்ளாக் காட்சியென்பேன். அந்தப்  படகின் மேலடுக்கில் நாற்காலியில் அமர்ந்து இருந்த தம்பதியினர் தங்கள் குடும்பத்தாருடன் பிறந்தநாள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியபடியே கங்கை ஆரத்தியை தரிசனம் செய்ய வந்தார்கள். 

சிலர் படகுகளில் அமர்ந்து கித்தார் இசையோடு கங்கையின் இரவு நேர அழகின்  மௌனத்தை ரசித்தபடி பயணம் செய்தனர். இன்னும் சில படகுகளில் பூக்கள் அலங்காரங்கள். கோரஸாக பாடல்களின் ஒலியுடன் பயணிகள் என அனைத்தும் ரசனைக்குரிய காட்சிகள்.

நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் படகைச் சுற்றிலும் பல மின்படகுகள் சூழ்ந்து விட்டன. ஒன்றோடொன்று மோதுவது போல இருந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. அனைவரும் ஆரத்தி நடைபெறும் இடத்திற்கு அருகில் தங்கள் படகுகளை நிறுத்த முயன்றனர். இனம், மொழி கடந்து பக்திமயத்தோடு கங்கா ஆரத்தி காண்பதற்கு வந்திருந்த  ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருந்த படிகட்டுகளில் அமர்ந்திருந்தனர். 

கங்கா ஆரத்தி தொடங்கியது. முதலில் தூப ஆராதனை நடைபெற்றது. அந்த தூபத்தின் மணம் அனைத்து இடங்களிலும் பரவி மனதை பக்திலயத்துக்கு இட்டுச் சென்றது. ஒரே சீருடையில் வரிசையில் நிற்கும் பண்டிதர்கள், ஒரே சீரான அசைவுகளில் பெரிய தீபங்களை ஏந்தி கங்கைக்கு ஆரத்தி செய்தார்கள். வேத மந்திரங்கள், சங்கொலி, மணி ஒலி, தபேலா இசை ஆகியவை சூழலை பக்திப்பரவசத்தில் மெய்மறக்கச் செய்தன. முதலில் கங்காதாயாருக்கு மலர், தூபம், தீபம், நெய் விளக்குகள் அர்ப்பணிக்கப்பட்ட பின்னர், பக்தர்களின் தீபங்கள் கங்கையில் மிதக்க விடப்பட்டன.

தீபங்களை ஏந்திய பண்டிதர்கள் ஒரே நேரத்தில் பித்தளை விளக்கில் ஏற்றப்பட்ட சரவிளக்கின் திரியில் ஜோதியை ஏற்றும் அந்த நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தியின் ஜோதி மட்டுமே நம் கண்களுக்கு தெரிந்து உடலுக்குள் ஊடுருவிகிறது. இந்தக் காட்சியை காண கண்கோடி இருக்கக் கூடாதா என்று நெஞ்சம் விம்முவதை உணர்கிறோம். “ஹரஹர மகாதோவா” என்ற ஒலி கங்கையின் பகுதியில் எதிரொலிக்கிறது. ஆரத்தி முடிந்ததும் மின் விளக்குகள் போடப்படுகின்றன. 

முதல் ஆரத்தி மாலை ஆறு மணிக்கும், இரண்டாவது ஆரத்தி இரவு எட்டு மணிக்கும் நடைபெறுகிறது. நாங்கள் முதல் ஆரத்தியில் கலந்து கொண்டோம். கங்கா மாதாவின் முன் தீப ஆராதனையும், “ஹர ஹர மகாதேவா” என்ற முழக்கங்களும் மனதை முழுவதும் பக்தியால் நிரப்பின.

காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து கங்கை வரை நேரடி நடைபாதை அமைக்கும் காசி கங்கை காரிடார் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உருவானது என்று கூறினார்கள். திறந்த முற்றங்கள், ஓய்வு இடங்கள், யாத்திரிகர் வசதிகள் — குடிநீர், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள், பழமையான சிறு கோயில்கள் மறுசீரமைப்பு ஆகியவை இதில் அடங்கும். 

இப்போது கங்கை நதி பெருமளவில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. சில சிறிய குறைபாடுகள் இருந்தாலும், மனநிறைவளிக்கும் சூழல் நிலவுகிறது. அந்த மனநிறைவோடு படித்துறையை விட்டு இறங்கி மீண்டும் ஆட்டோவில் ஏறி தங்கும் அறைக்கு வந்தோம். வந்த பிறகே எங்கள் குழுவினர் ஒருவரின் பாக்கெட்டில் பிளேடு போடப்பட்டிருந்ததை அறிந்தோம். நல்லவேளையாக பணம் எடுக்கப்படவில்லை. காசியில் கூட்ட நெரிசலில் எங்கு சென்றாலும் நம் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தெளிவான பாடமாக இருந்தது.

இரவில் காய்ச்சல் அதிகரித்ததால்,  காய்ச்சல் மாத்திரை எடுத்துக் கொண்டேன். புராணங்களில் சொல்லப்படும் உலக பிரசித்தி பெற்ற நகரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு உறக்கம் கண்களைத் தழுவியது.

(தொடரும்)

Leave a Reply

Categories