ஒரே ஒரு திராட்சை – கௌசல்யா ஞானேஸ்வரன்

சிறுவயதில் கதை, கவிதை என்று எழுதிக் கொண்டிருந்த நான் எனது எழுத்தை வாழ்க்கையின் ஓட்டத்தில் எங்கோ தொலைத்து விட்டேன். தேட எத்தனித்து, பேனாவை தொட்ட உடன் உயிர்ப்பித்தது போல் என் விரல்களை தழுவி கொண்டது.சொல்ல முடியாத வேதனைகள், எழுதப்படும் போது மட்டும் அமைதியாகின்றன என்பதை புரிந்தேன், தெளிந்தேன். காயங்களை கதைகளாக மாற்றும் என் எழுத்துப் பயணத்தை இப்போது தொடங்குகிறேன்.

என் பெயர் காயத்ரி. கலங்கிய விழிகளுடன், அழுதழுது கண்கள் சிவந்து, “என் மேல் இப்படியொரு பழி வந்து விட்டதே…” என்ற வேதனையில் அந்த நிகழ்வை மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் குடும்பத்தின் கடைசி மருமகள். அனைவராலும் செல்லமாக, அன்பாக நேசிக்கப்பட்டவள்.

2016 ஆம் ஆண்டு. ஆடி18. அதற்கு முன் ஒன்பது நாட்களும் விரதமிருந்து, நவதானியங்களை ஊறவைத்து, முளைப்பாரி போட்டு, ஒவ்வொரு நாளும் அதைக் கவனமாகப் பராமரித்து ரசித்தேன். அது அழகாய் பசுமையாக வளர்ந்தது. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று ஆற்றங்கரையில் கன்னிமார் பூஜை செய்து, முளைப்பாரியைப் படைத்து, பின் ஆற்றில் விடுவது வழக்கம். அந்த வழக்கப்படி அனைவரும் ஒன்று கூடி பூஜையை மகிழ்வுடன் நிறைவேற்றினோம். அந்த நாளின் அனைத்து ஏற்பாடுகளும் என் பொறுப்பில் இருந்தன. அன்று எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் அதை வெளிப்படுத்தாமல், விருந்துக்கான சமையலைச் செய்து, முகம் சுளிக்காமல் அனைவரையும் அன்போடு உபசரித்தேன்.

பூஜைக்குப் பிறகு, கன்னிமார்களுக்குப் படைத்த கனிகளை எல்லோரும் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம். அதில் கருப்பு திராட்சையும் (பன்னீர் திராட்சை) இருந்தது. அந்தத் திராட்சை பசுமை அங்காடியில் வாங்கியது. எந்த மருந்தும் அடிக்காதது. நல்லதென்று அனைவரும் சுவைத்துச் சாப்பிட்டனர். அதே கருப்பு திராட்சையை, ஐந்து மாதக் கர்ப்பிணியான என் மச்சாண்டார் மருமகள் பிரியங்காவிற்கும், “ஒன்றே ஒன்றுதானே…” என்று எல்லோரும் சொல்ல, பின்விளைவுகளை யோசிக்காமல் கொடுத்து விட்டேன். ஆனால் பூகம்பம் வர காத்திருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது.

அடுத்த நாள் காலை எனக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது, என் கணவரின் அண்ணியிடமிருந்து தொலைபேசி வந்தது. எப்போதும் மென்மையாகப் பேசும் அவர் அன்று கடுமையாக,“கர்ப்பிணியான என் மருமகளுக்கு கருப்பு திராட்சை எப்படிக் கொடுக்கலாம்? நீ செய்தது மிகப்பெரும் தவறு,”என்று என்னைக் கடிந்து கொண்டார். பயத்தில் குரல் நடுங்க,“அக்கா… ஒரே ஒரு திராட்சைதான்…”என்று சொன்னேன். ஆனால் அவர்களின் கோபம் எல்லை மீறியது.

“குழந்தை கருப்பாகப் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நீ இப்படிச் செய்திருக்கிறாய். என் மருமகள் அழுது கொண்டிருக்கிறாள். இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”என்று கேட்டவுடன் என்னால் எதுவும் பேச முடியவில்லை. உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்தது. “அக்கா… அக்கா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் கோபமாகத் தொலைபேசியை துண்டித்து விட்டார்.

என் கணவர் முன்கோபக்காரர். அவரிடம் அவர்கள் ஏதாவது சொல்லப்போய் என்ன நடக்குமோ என்று என் மனம் பீதியடைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அழுதழுது சிவந்த கண்களுடன் நடந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, அவர் கேட்காமலே நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.

வீட்டிற்கு வந்த அவர் தன் அண்ணியிடம் விவரம் கேட்டார். அதுவரை குதூகலமாக இருந்த குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது.“குடும்பத்தில் பிரச்சனை வேண்டாம்,” என்று சொல்லி என்னை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்.“கருப்பான உணவு சாப்பிட்டால் குழந்தை கருப்பாகப் பிறக்கும் என்று எந்த மருத்துவமும் சொல்லவில்லை,” என்று விளக்க முயன்றேன். ஆனால் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் திறன் யாரிடமும் இல்லை. நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டேன். ஆனாலும் குடும்பத்திற்குள் ஓர் விரிசல் விழத்தான் செய்தது.

குழந்தை பிறக்கும் நாள் வரைக்கும் என் மனம் அச்சத்திலேயே இருந்தது. குழந்தை வெள்ளையாகவே பிறந்தது. அப்பொழுதாவது புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்.ஆனால் 2016 தொடங்கி இன்று வரை, ஆண்டுகள்பல கடந்தும் அந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் பெண் பிரியங்காவும் என்னிடம் பேசுவதே இல்லை.

ஒரே ஒரு கருப்பு திராட்சை அதை நான் கொடுத்து என் மன நிம்மதியைத்தான் இழந்தேன். ஆடி 18 என்றாலே எனக்கு முளைப்பாரி ஞாபகத்திற்கு வருவதில்லை மாறாக தவறான புரிதலும் , மன உளைச்சலும் அழகான உறவுகள் சிதைந்த நிகழ்வும் நினைவில் வருகிறது. கண்டுபிடிக்கப்படாத பொய்களுக்கு “உண்மை” என்று பெயர் சூட்டிக்கொண்டு வாழ்பவர்களின் வாயை அடைக்க முயற்சிப்பதைவிட, என் காதுகளை மூடிக்கொள்வதே சிறந்தது என்று உணர்ந்தேன்.

முள்ளின் வலியை விட சொல்லின் வலி அப்பப்பா சொல்ல முடியாத துயரம். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாதவர்களிடமும், “எனக்குத் தெரியாது” என்ற ஒரே வார்த்தையைத் தற்காப்பாக பயன்படுத்தும் பெரியவர்களிடமும், உண்மையும் உரிமையும் இல்லாத உறவுகளோடு ஒட்டிக்கொண்டு இருப்பதைவிட, ஒதுங்கி நிற்பதே மேல் என்று கற்றுக்கொண்டேன்.

அன்புக்காக ஏங்கியதால்தான் நான் மன்னிப்பு கேட்டேன். தவறு செய்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கவில்லை.உறவை அதிகம் மதிக்கிறேன் என்பதே அதன் பொருள் என்பதை யாரும் உணரவில்லை‌. விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை; அது சிலருக்கு மட்டுமே கடவுள் கொடுத்த வரம். இந்தச் சம்பவத்தை நான் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். என் முயற்சிகளை ஆயுதமாக மாற்றிக்கொண்டேன். வலிகளை வெற்றிகளாக மாற்றும் எழுத்து உலகத்துக்குள் நுழைந்துவிட்டேன்.. கடந்த நினைவுகளை சுமந்து நிற்கும் காயத்ரியையாக அல்ல அதை எழுத்தாக்கும் எழுத்தாளராக என் புதிய அடையாளத்தை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்தபோது, மனதிற்குள் இருந்த சத்தங்கள் மெதுவாக அமைதியாக ஆரம்பித்தன. காயப்படுத்தியவர்களை கடந்து போக பழகிக் கொண்டேன். காயங்களுக்கு நியாயம் தேடிக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது என்பதை புரிந்து கொண்டேன்.கவலைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பதை விட கடந்த கால நிகழ்வுகளை கதையாக்கும் வித்தையை செயல்படுத்த என் விரலுக்குள் தஞ்சம் புகுந்த எழுதுகோலுக்கு கட்டளையிட்டேன். சில‌ருக்கு புரிய வைக்க முடியாது என்று புரிந்து புன்னகையோடு என்னை நான் புதுப்பித்துக் கொள்கிறேன், எனது புதிய முகவரி இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Categories