மனக்கண்ணாடி – கௌசல்யா ஞானேஸ்வரன்

நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்த ஸ்வேதா, தன் உருவத்தை மட்டும் அல்ல, தன் உள்ளத்தையும் ஆராய்ந்தாள். ஒவ்வொரு அங்கத்தையும் மெதுவாக பார்வையால் தடவி சென்றாள். கற்சிலை போல் அசைவின்றி நின்ற அந்த உருவத்தில் குறையேதும் தெரியவில்லை. ஆனால், அவளது கண்களில் மட்டும் ஓர் அறியாமை நிறைந்து இருந்தது.

“நான் என்ன தவறு செய்தேன்? நான் நல்ல பிள்ளையா இருந்தும் ஏன் நான் மட்டும் இப்படி தோல்வியடைந்து சோர்ந்து நிற்கிறேன்? சிவரஞ்சனி என் கூடத்தான் படிக்கிறா. ஆனா, அவ எத்தனை பேரோட ஊர் சுத்துறா, எத்தனை தவறுகள் செய்றா? ஆனாலும் அவ ஜாலியா இருக்கா… நல்ல மார்க் எடுக்கிறாள். நான் மட்டும் அப்பா அம்மா சொன்னபடி நடந்துக்கிறேன். எந்தத் தவறும் செய்யல. ஆனா ஜாலி இல்ல… மார்க்கும் அதிகமில்லை… உண்மையான தோழமையும் இல்லை. அப்படின்னா நல்லவளா இருப்பதுதான் தவறா?”

“ஸ்வேதா! இன்னும் ரெடி ஆகலையா?” அம்மாவின் குரல் கேட்க, “வந்துட்டேன் அம்மா…” என்று சொல்லிக்கொண்டே இந்த மனக்குழப்பத்திற்கான விடையை அம்மாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால், ஏதோ ஒரு தயக்கம்.

“பன்னிரண்டாம் வகுப்பு படிக்கற… மார்க்கும் குறையுது. உன்னைப் பற்றித்தான் எனக்கும் அப்பாவுக்கும் கவலை. நீ நல்லா படிக்கணும். உன்னைப் பார்த்துத்தான் உன் தம்பியும் வளரப் போறான்,” என்று சொன்ன அம்மாவின் ஆதங்கமும் அக்கறையும் அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், அவளது மனக்கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

அவள் பள்ளிக்குச் சென்றாள். ஸ்வேதாவிற்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ். பிடித்த ஆசிரியை தமிழ் ஆசிரியை. பத்தாம் வகுப்பிலிருந்தே மென்மையாக அவர் கற்றுத் தரும் பாங்கு அவளை வசீகரித்தது. அவர்மீது மிகுந்த மரியாதையும் பிரியமும் வைத்திருந்தாள்.தமிழ் வகுப்பு இடைவேளையில் மாணவர்கள் வெளியேறினர். ஆசிரியை மட்டும் மேசையில் எழுதிக்கொண்டிருந்தார்.

ஸ்வேதா மெதுவாக நெருங்கினாள்.“மேம்… ஒரு தெளிவு வேண்டும்,” என்றாள். “சொல் ஸ்வேதா,” என்று புன்னகையுடன் கேட்டார். “நான் நல்லவளா இருக்கேன் மேம். எந்தத் தவறும் செய்யல. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நிறைய தவறுகள் செய்றாங்க. ஆனாலும் ஜாலியா இருக்காங்க. நல்ல மார்க் வாங்குறாங்க. எல்லோரும் அவர்களை கொண்டாடுறாங்க. நானும் கெட்டவளா மாறிடலாமா?”

சிறிய அமைதிக்கு பின்“உனக்கு கெட்டவளா மாறத் தெரியுமா?” என்று அவர் மெதுவாக கேட்டார்.ஸ்வேதா தலை குனிந்தாள்.

“நல்லவளா இருக்கிறது உன் பிரச்சனை இல்ல. உன் முயற்சி இன்னும் தீவிரம் அடையணும். சின்ன விதை போல நீ செய்யும் ஒவ்வொரு முயற்சியும் பின்னாளில் விருட்சமாகி வெற்றியைத் தேடித் தரும். உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. வாழ்க்கை எப்போதும் ஜாலியாக இருக்காது. சில சமயம் நாம் கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் பிறந்திருக்கிறோம். தவறு என்றால் கற்றுக் கொடு; சரி என்றால் கற்றுக்கொள்.

‘முடியாது’ என்று நினைக்கும் பொழுதுதான் மற்றவர்களைப் பற்றி யோசிப்போம். ‘முடியும்’ என்று நினை. அடுத்த இலக்கை நோக்கி உன் பயணம் இருக்கும். பூவோடு சேர்ந்த நார் மணக்கும்; நாரோடு சேர்ந்த பூ நாற்றமடிக்காது. பிறர் பாராட்டவில்லை என்பதற்காக உன் நல்ல தன்மையை மாற்றாதே. உன் தீவிரத்தை மாற்றிப் பார்,” என்றார்.

அந்த வார்த்தைகள் ஸ்வேதாவின் மனதில் புதிய உற்சாகத்தை விதைத்தன.அந்த நேரம், தோழமையுடன் மாணவன் தீபக், “நாம் பிரெண்ட்ஸ் ஆகலாமா?” என்று கைகுலுக்க கைநீட்டினான். தீபக்கிடம் அவள் ஏதும் பேசியதில்லை. அவன் முகத்தில் இருந்த நேர்மையான புன்னகையை நம்பிக்கையுடன் கண்டவுடன், “கண்டிப்பா…” என்று புன்னகையுடன் அவளும் கை குலுக்கினாள்.

தன்னம்பிக்கை ஆழ்மனதில் பதிந்தவுடன், அவள் நடையிலும் ஒரு உத்வேகம் தோன்றியது. “பயிற்சியின் மூலமாக என் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்” என்ற தெளிவுடன் அவனிடம் இயல்பாக உரையாடத் தொடங்கினாள்.

“அசைன்மென்ட் முடிச்சிட்டியா? ஒரு சின்ன சந்தேகம் இருக்கு…” என்று தீபக் கேட்க,“எனக்குத் தெரிந்தால் சொல்லித் தர முயற்சிக்கிறேன்…” என்று அவள் விளக்கத் தொடங்கினாள். அவள் மிகவும் தெளிவாக சொல்லித் தந்தாள். “நம்மால் இவ்வளவு தெளிவாக சொல்லித் தர முடியுமா?” என்று அவளுக்கே வியப்பாக இருந்தது.

ஒரு நாள் பள்ளியில் கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டது. அவளுக்குள் ஏதோ ஒரு உத்வேகம் எழுந்தது. உடனே தனது பெயரை பதிவு செய்தாள்.

“இப்போ உனக்கு முக்கியம் பன்னிரண்டாம் வகுப்பு படிப்புதான். இதெல்லாம் தேவையில்லை…” என்று வீட்டில் தடுத்தார்கள்.ஆனாலும், “ஒரு முப்பது நிமிஷம் தான்…” என்று சொல்லிவிட்டு போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தாள்.அடுத்த நாள் பள்ளி முடிந்ததும் தமிழ் ஆசிரியையைச் சந்தித்து போட்டி பற்றிய விவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

இரண்டு நாட்களாக சிவரஞ்சனி வகுப்பில் அமைதியாக இருப்பதையும், முன்புபோல் சிரித்து பேசாததையும் ஸ்வேதா கவனித்து இருந்தாள். பள்ளி முடிந்தும் வீட்டுக்கு போகாமல் அழுது கொண்டிருந்தாள் சிவரஞ்சனி. ஸ்வேதாவை பார்த்தவுடன் சிவரஞ்சனி அழுகையை நிறுத்திவிட்டு, “நானும் உன் கூட வரணும்…” என்றாள்.

“என்ன ஆச்சு?” என்று கேட்டவுடன், அதற்காகவே காத்திருந்தவள் போல சிவரஞ்சனி மீண்டும் அழத் தொடங்கினாள். சிறிது நேரம் கழித்து, “இங்கே நிற்காமல் நாம நடந்து கொண்டே பேசலாம்…” என்றாள்.இவளும் அவளுடன் நடந்தாள்.

“நானும் உன்னை மாதிரிதான் இருந்தேன். முதலில் ஒரு நண்பன் என் கையை குலுக்கி நண்பனானான். அவன் முகத்தில் இருந்த நம்பிக்கையைப் பார்த்து நானும் ஏமாந்துவிட்டேன்.கொஞ்ச நாள் நண்பர்களாக பழகினோம். பிறகு அவனுடன் ஊர் சுற்றத் தொடங்கினேன். அப்போ நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்.இப்போது என்னையே நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ‘நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்கள். நிறைய பிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். ஆனால் யாரும் நல்லவர்களா இல்லை.நான் எல்லோரையும் நம்பினேன் ஏன் இப்படி செய்தேன் என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட தோன்றுகிறது…” என்று அவள் உடைந்து அழுதாள்.

என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்வேதா அமைதியாக நின்றாள்.சிறிது நேரம் கழித்து மெதுவாக பேசத் தொடங்கினாள்.

“மனசாட்சி நமக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் சிவரஞ்சனி. ஒருமுறை உறுத்தும்போதே நம்மை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது தண்டனையாக மாறிவிடும். தவறான புரிதல்தான் உன்னை இப்படி யோசிக்க வைக்கிறது. வாழ்க்கையில் வழி தெரியாத நேரத்தில் இறைவனை நோக்கி பயணிக்கலாம். எண்ணமும் செயலும் சிறப்பாக இருந்தால் பிரபஞ்சம் நமக்கு துணையாக வரும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.இனிமேல் நல்ல விஷயங்களில் மட்டும் உன் கவனத்தை திருப்பு. உன் கவலைகளை கடவுளிடம் விட்டுவிடு. உன் கவனத்தை படிப்பின் மேல் செலுத்து. இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்…” என்று கூறியவள், சிவரஞ்சனியை கட்டித்தழுவி அரவணைத்தாள்.

“வீட்டிற்கு செல்.. அமைதியாக உறங்கு. மற்றதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்…” என்றாள். அதைச் சொல்லிவிட்டு ஸ்வேதா நம்பிக்கையுடன் நடந்துச் சென்றாள். “தன்னாலேயே இப்படி பேச முடிகிறதே…” என்ற பெருமிதம் அவளுக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தது. அந்தக் கணம், அவளது நீண்டநாள் மனக்கேள்விக்கு பதில் கிடைத்திருந்தது.

நல்லவளாக இருப்பதில் தோல்வியில்லை. நல்ல தன்மையோடு தன்னம்பிக்கையையும் முயற்சியையும் சேர்த்துக் கொண்டால் அதுவே பலமாக மாறும். என்ற தெளிவோடு மனக்கண்ணாடி முன் ஸ்வேதா நின்றாள். அவளது கண்களில் குழப்பம் இல்லை; உத்வேகத்துடன் கூடிய நம்பிக்கை ஒளிவீசியது. தமிழ் ஆசிரியையின் புன்முறுவல் அவளது நினைவில் மிளிர்ந்தது..

Leave a Reply

Categories