‘என் இனிய தமிழ் மக்களே! உங்கள் பாசத்திற்குரிய இந்த பாரதிராஜா …’ இந்தக் குரல் நம்மிடம் பிரியா விடை பெற்றுச் சென்று விட்டது. அந்த இயக்குநர் இமயத்தின் நினைவாக இக்கதையை எழுதியிருக்கிறேன். இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் தங்கள் குரலிலேயே கதாகாலட்சேபம் செய்திருக்கிறார்கள்.
– கு.சச்சிதானந்தம்

என்னுடைய குரல் :
(நான் – சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவள்.)
நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து அந்த பரபரப்பிலிருந்து விடுபட்டு எனது ரயில் இருக்கையில் வந்தமர்ந்தேன். என் மகள் ரேணுகா என்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தன்னுடைய மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாள்.அவள் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். சிறிது நேரத்தில் ரயில் வண்டி நகர்ந்து செல்லத் தொடங்கியது.
யாரும் ஓடி வந்து ஏறுகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். அப்படி யாரும் ஓடி வரவில்லை. வண்டி மெதுவாக சிறிது நேரம் ஊர்ந்து சென்று பின்பு வேகமெடுத்தது. வரிசையாக வந்த கட்டிடங்களும், அவற்றில் புற்றீசல் போல இருந்த மனிதர்களும் காணாமல் போய் இப்பொழுது பச்சை பசேலென வயல் வெளிகளும் அங்கொன்றும் இங்கொன்றும் தெரிந்த மனிதர்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கண்ணாடி ஜன்னல் வழியாக இதை நான் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன்.
என் பக்கத்து பயணிகள் இருவர் சமீபத்தில் இறந்த இயக்குநர் பாரதிராஜாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘கருத்தம்மா’ படம் பற்றியும் பேச்சு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம். பாரதிராஜா என்ற அந்த அற்புத கலைஞனின் தன்னிகரற்ற படைப்புகளில் கருத்தம்மாவும் ஒன்று. கருத்தம்மா படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் ஒலிக்கும் பாரதிராஜாவின் குரல் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.
‘என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்திற்குரிய இந்த பாரதிராஜா மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தில் இந்த கரிசல் பூமியை தரிசிக்க உங்களை அழைக்கிறேன்.21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பொருளாதார சமூக நிர்பந்தங்களால் மறுக்கப்பட்ட தங்கள் வாழ்க்கைக்காக நமது கிராமத்து பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கலைப்படைப்பு தான் இந்த கருத்தம்மா.’
வாழ்வின் நிஜங்களை நிழகளாக்கி அதில் பல கதாபாத்திரங்களை பொருத்தி உருவாக்குவதே கதை. என் இந்த வாழ்க்கைக் கதையில் பாரதிராஜா நிழல் அல்ல. அவர் ஒரு நிஜ கதாபாத்திரம்.சினிமாவை கிராமத்து வயல் வெளிக்கும் பொட்டல் காட்டிற்கும் கொண்டு சென்று யதார்த்தமானகதாபாத்திரங்களை வைத்து திரையில் ஓவியம் தீட்டி காவியம் படைத்த மாபெரும் கலைஞன்.
தன் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவி வந்த ஒரு அவல நிலையை காவியமாக செதுக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர் எடுத்த படம் கருத்தம்மா. என் வாழ்விலும் ‘புது வசந்தத்தை’ கொண்டு வந்து சேர்க்க உதவிய படம். என் மனம் பல வருடங்களுக்கு முன்பு தேனிக்கு முதன் முதலாக நானும் என் கணவரும் என் தெற்கத்தி தோழியும் ரயிலில் சென்றதையும், எதற்காக சென்றோம் என்பதையும் அசை போடத் துவங்கியது.தேனி மாவட்டம் தான் அவளுக்கு பூர்வீகம் என்பதால் என் கணவர் தான் ‘உன் தெற்கத்தித் தோழி’ என்று கூற ஆரம்பித்து வைத்தார். தேனிக்குச் சென்று தாயம்மாவைச் சந்தித்தது, சந்தித்த பின் ‘புது குதூகலத்துடன்’ சென்னை திரும்பியது எல்லாம் இன்றும் நெஞ்சமற நிறைந்து இருக்கிறது. அதன் பிறகு பலமுறை நான் தேனிக்குச் சென்றிருந்தாலும் இரண்டாவதாக தாயம்மா இறந்த பொழுது நான் சென்றதும் இப்போது நான் செல்வதும் என இம்மூன்றுமே என் நினைவில் என்றும் நிற்கும்.
என் தெற்கத்தித் தோழியின் சித்தி பெண் தேனியில் வசித்து வந்தாள். அவளை என் தெற்கத்தித் தோழியின் வீட்டில் அவ்வப்போது சந்திப்பது வழக்கம். கருத்தம்மா படம் வந்த சமயத்தில் நாங்கள் மூவரும் சென்று அந்தப் படத்தைப் பார்த்தோம். படம் பார்க்கும் பொழுது மூவரும் அழுது விட்டோம். கள்ளிப் பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொல்லும் வழக்கத்தை மிக யதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் படமாக்கியிருந்தார் பாரதிராஜா.
திருமணமாகி பல வருடங்களாகி எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவர்களும் உறுதி செய்து விட்ட காலம் அது. தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற யோசனை வந்து அதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்திருந்தேன்.என் கணவருடன் சென்று மறுபடியும் ஒரு முறை அந்தப் படத்தைப் பார்த்தேன். படம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது சோகம் கலக்காத தெளிவான என் முகத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் ஏதோ யோசனை செய்தபடியே வந்தார். முதல் முறை பார்க்கும் பொழுது அழுதேன் என்று சொன்னவள் இப்பொழுது ஜனரஞ்சகமான படத்தை பார்த்ததை போல வருகிறாளே என்று நினைத்தாரோ தெரியவில்லை. வீடு வரும் வரையில் ஒன்றும் பேசவில்லை. படம் அவரை ஆழமாக பாதித்தருந்ததை அவரின் முகம் காட்டியது.
மறுநாள் சாயந்திரம் என் தெற்கத்தித் தோழியை பார்ப்பதற்காக பக்கத்து பிளாக்கில் மூன்று மாடி ஏறி அவள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினேன். என் தெற்கத்தி தோழியின் சித்தி பெண் வந்து கதவை திறந்தாள்.உள்ளே சென்ற என் மூக்கை பில்டர் காபி வாசனை துளைத்தது. உள்ளே இருந்து என் தெற்கத்தித் தோழி “மொட்டு யார் வந்திருக்காங்க” என்று கேட்டாள். “பக்கத்து வீட்டு அக்கா” என்றாள் மொட்டு. பக்கத்து ப்ளாக் பக்கத்து வீடு ஆகிப் போனது அவளுக்கு. மொட்டு என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்து போனதால் நானும் அவ்வாறே அழைத்தேன். என் தெற்கத்தித் தோழி கையில் இரண்டு கப் காபியுடன் வெளியே வந்தாள். ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டு, “என்ன அதிசயமாக இருக்கிறது. போன் பண்ணிட்டு தானே வருவ. இன்னைக்கு என்ன நேராக வந்து விட்டாய்” என்று கேட்டபடியே சோபாவில் உட்கார்ந்தாள். “ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதுக்காகத் தான் வந்தேன். நேற்று நாம படம் பார்த்த பிறகு எனக்குள் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறோம்” என்று கூறி அதைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.
என் தெற்கத்தித் தோழியின் குரல் :
என்னுடைய தோழி பேச்சை நான் காபியை குடித்தபடியே உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். என்னுடைய தோழி , தானும் தன் கணவரும் எடுத்த முடிவின் படி தேனி சென்று தாயம்மாவை சந்திக்க விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தரும்படியும் கூறினாள்.இப்பொழுது தாயம்மாவை பற்றி நான் கூறியாக வேண்டும். தாயம்மா என்னுடைய சித்தி பெண் மொட்டுவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர். என்னுடைய பூர்வீகம் தேனிக்கு பக்கத்தில் இருக்கும் தேவதானப்பட்டி.
மொட்டுவை பார்க்க நான் போகும் போதெல்லாம் தாயம்மாவையும் நான் பார்த்திருக்கிறேன். சந்தித்து பேசி இருக்கிறேன். தாயம்மா அந்த வட்டாரத்தில் ஒரு மருத்துவச்சியாக இருந்து பின் சுகாதார நிலையத்தில் சேர்ந்து முதல்வரின் தொட்டில் குழந்தை திட்டத்திற்காக பணிபுரிந்து வந்தவர்.தாயம்மா எனக்கு மிகவும் பரிச்சயமாகியிருந்தார்.என் தோழி சொன்ன பிறகு நான் தாயம்மாவை தொடர்பு கொண்டு, என் தோழியும் அவள் கணவரும் அவரை பார்க்க வருவதாகவும் எதற்காக பார்க்க வருகிறார்கள் என்றும் தெரியப் படுத்தினேன்.
என்னுடைய குரல் :
இதோ தாயம்மா வீட்டில் வந்து கதவை தட்டுகிறோம். என் தெற்கத்தித் தோழியையும் எங்களுடன் தேனிக்கு அழைத்து வந்து விட்டோம்.உள்ளே ஒரு குழந்தையின் அழு குரல் கேட்டது. கதவை திறந்தபெண்மணி “வாங்க தாயீ உள்ளார வாங்க தாயீ. பாத்து எம்புட்டு நாளாச்சு” என்றார் முகம் மலர.தெற்கத்திப் பெண்ணின் நேசமும் பாசமும் தெரிந்தது அவரின் கண்களில். அவர் தான் தாயம்மா என்று சொல்லாமல் தெரிந்தது எனக்கு. “கண்ணு இங்கிட்டு வா. நம்ம பேச்சி ஒறவு காரக வந்திருக்காக” என்றவுடன் “வற்றேம்மா” என்றபடியே வந்தாள் ஒரு பெண்.தாயம்மாவின் மகளாக தான் இருக்க வேண்டும். “வாங்கக்கா இப்பதான் வர்றீகளா” என்றாள் என் தெற்கத்தித் தோழியைப் பார்த்து புன்னகைத்தபடி.பரஸ்பர விசாரிப்புகள் முடிந்த பிறகு எங்களை அறிமுகப் படுத்தி வைத்தாள் என் தெற்கத்தித் தோழி.நான் வைத்த கண் வாங்காமல் தொட்டிலில் அழுதபடி அசைந்து கொண்டிருந்த குழந்தையைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
“உங்க மவ உங்கள அடையாளம் கண்டுகிட்டாக போல தெரியுது. கண்ணு குழந்தைய எடுத்து அக்கா கிட்ட கொடு தாயீ” என்றார் தாயம்மா தன் மகளிடம். வாங்கிய குழந்தையை மடியில் கிடத்திய என் கண்களில் நீர் கோர்த்து வடியத் தொடங்கியது. என் கணவர் என் தலையை வருடியபடி குழந்தையின் கையை எடுத்து முத்தம் ஒன்று கொடுத்தார். “புள்ளைக்கு என்ன பேர் வைக்க போறீக தாயீ ” என்ற வாஞ்சையாக கேட்ட தாயம்மாவிடம் “ரேணுகா” என்றேன் சட்டென்று மகிழ்ச்சி பொங்க. அடி கள்ளி என் கிட்ட சொல்லவே இல்லையே என்பது போல பார்த்தனர் என் கணவரும் தெற்கத்தித் தோழியும்.
அன்று முழுவதும் தாயம்மா வீட்டில் இருந்து விட்டு இரவு என் புது வசந்தத்தையும் எடுத்துக் கொண்டு தெற்கத்தி தோழியின் வீட்டிற்குப் புறப்பட்டு சென்றோம். புறப்படுவதற்கு முன்பு நானும் என் கணவரும் தாயம்மாவிடம் எங்களையும் குழந்தையையும் ஆசிர்வதிக்க கூறினோம். “முத்துப்பேச்சி அம்மா உங்க கூடவே இருப்பா தாயீ. மவராசியா இருங்க தாயீ ” என்று அன்புருக எங்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார். மொட்டுவின் இயற் பெயர் முத்துப்பேச்சி. அந்த முத்துப்பேச்சி அம்மனே மொட்டுவின் உருவில் வந்து தாயம்மாவை அறிமுகம் செய்து அருள் செய்திருக்கிறாள் என்ற எண்ணம் இப்போது என் மனதில் உதித்தது.
என் மகள் ரேணுகாவின் குரல் :
என் அம்மாவை ரயில் நிலையத்தில் விட்டு விட்டு என் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். பாரதி ராஜாவின் இறுதிச் சடங்கிற்காக தேனி சென்று கொண்டிருக்கிறாள். எனக்கு வியப்பாக இருந்தது. பாரதிராஜா இறந்த பிறகு தேனி சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப் போவேன் என்று ஒரு போதும் எங்களிடம் கூறியதில்லை. அம்மா ஒரு வித்தியாசமானவள். ரேணுகா என்ற பெயரை தேர்ந்தெடுத்ததெப்படி என்று கேட்ட பொழுது பாரதிராஜா தன் கதா நாயகிகளுக்கு ‘ர’ வரிசையில் பெயர் வைத்தது போல் தானும் வைத்ததாக கூறியிருந்தாள். என்னிடம் மிகவும் அன்பு கொண்டவள். ஒரு முறை கூட மிகவும் கடிந்ததாக எனக்கு நினைவில்லை. என் பள்ளித் தோழிகளுக்கு என்னைப் பார்த்து பொறாமையாக இருக்கும். என் அம்மா என்னை ஒரு முறை கூட திட்டி அவர்கள் பார்க்கவே இல்லை என்று அடிக்கடி கூறுவார்கள். அவ்வளவு அதீத அன்பு கொண்டவள். பாரதிராஜாவின் படங்களை மிகவும் விரும்பிப் பார்த்தவள். இன்றும் பார்ப்பவள். அதிலும் கருத்தம்மாவை திரும்ப திரும்ப பலமுறை பார்த்திருக்கிறாள். என்னையும் பார்க்க வைத்திருக்கிறாள். என்னை மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டவள். அவள் கனவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நானும் முயற்சி எடுத்து மருத்துவம் படித்து இப்பொழுது குழந்தைகள் நல மருத்துவராகவும் ஆகிவிட்டேன். அவளுடைய மற்றொரு ஆசை அனாதை குழந்தைகளுக்கு நான் பொதுப்பணி செய்ய வேண்டும் என்பது. அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். பல அனாதை குழந்தை நிலையங்களுக்குப் சென்று இலவசமாகச் சிகிச்சையும் அளித்து வருகிறேன். அதில் மிகவும் சந்தோஷம் அடைபவள்.
கருத்தம்மா படம் அவளை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது என்பதை அறிவார்த்தமாக நான் உணர்ந்தேன். அது என்ன என்று தான் தெரியவில்லை. என்னை ஒரு முறை பாரதிராஜாவிடம் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தி, உரையாட வேண்டும் என்பது தன் நெடுநாளைய ஆசை என்று கருத்தம்மா படம் பார்க்கும் போதெல்லாம் கூறுவாள். அந்தச் சந்திப்பில் எனக்கு ஒரு ஆச்சிரியம் காத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறாள். எதற்காக அவள் அப்படி கூறினாள் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு.இப்பொழுது பாரதிராஜாவின் நினைவிடத்திற்குச் சென்றிருக்கிறாள். என்னை கூட்டிக் கொண்டு செல்வாள் என்று நினைத்தேன். ஆனால் ஏனோ அவள் மட்டும் தனியாகச் சென்றிருக்கிறாள்.
வாழ்க்கை ஒரு காலச்சக்கரம்.அதன் சுழற்சியில் விடையில்லா கேள்விகளுக்கு ஒரு நாள் பதில்கிடைத்தே தீரும் என்று என் உள்மனதில் ஆழமான நம்பிக்கை. அது வரை பொறுத்திரு என்று என் மனதிற்கு நானே கூறிக் கொண்டேன். தாயம்மா பாட்டி, என் அம்மா, பாரதிராஜா, கருத்தம்மா படம் மற்றும் எனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக கனவு ஒன்று ஒரு முறை கண்டேன்.பொதுவாக கனவுகள் கண் முழித்தவுடன் காணாமல் போய் விடும். இந்தக் கனவு என் அடி மனதில் தூங்கா நினைவாக நிலைத்து நின்று விட்டது.
என்னுடைய குரல் :
என்னுடைய மகள் ரேணுகா -வளர்க்க வசதியில்லாததால் தொட்டிலில் போட இருந்த ஒரு தம்பதியினரின் குழந்தையை தாயம்மா எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்து, நான் கொண்டு வந்து வளர்த்த பெண், என் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வந்த மகள். அவளை பாரதிராஜாவிடம் அறிமுகப் படுத்தி அப்பொழுது அனைத்து விஷயங்களையும் அவரிடம் பேசி மகிழ வேண்டும் என்பது என் நெடுநாளைய நாளைய கனவு.
இதோ தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டிக்கும் வத்தலகுண்டிற்கும் இடையிலுள்ள காட்டுரோடிற்கு வந்து விட்டேன்.பாரதி ராஜாவின் பண்ணை வீடு இருக்கும் இடம் காட்டுரோடு. அந்த பண்ணை வீட்டில் தான் தன்னை நிரந்தரமாக படுக்க வைக்க வேண்டும் என்பது அவரது இறுதி ஆசை. அவரது இறுதி ஆசையும் நிறைவேறி விட்டது.
புதுநெல்லு புது நாத்து விட்டு மண்வாசனையோடு உள்ள வயல்வெளிகள் நிறைந்த கிழக்குச் சீமைக்கு கிழக்கே போகும் ரயிலில் சென்று அந்த கிராமத்து அழகை புதிய வார்ப்புகளாகப் படைத்து சினிமாவிற்கு ஒரு புதிய வேதத்தை ஓதியவர். பதினாறு வயதினில் துளிர் விடும் அரும்புக் காதலுக்கு ஓயாத அலைகள் நிறைந்த கடலோரத்தில் கவிதைகள் எழுதி கடல் பூக்களால் அந்த தாஜ் மகாலையே காதல் ஓவியமாக வரைந்து நடிகர் திலகத்திற்கே நடிப்பு சொல்லிக் கொடுத்து முதல் மரியாதை செய்த அந்த இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை செலுத்துகிறேன் என் தூங்கா கனவோடு.
என் கணவரின் குரல் :
கதாசிரியர் என் கதாபாத்திரத்தை வேதம் புதிது பாலுத்தேவர் அளவுக்கு உருவாக்குவார் என்று நினைத்திருந்தேன். கல்யாண சாப்பாட்டு இலையில் ஓர் ஓரத்தில் இருக்கும் ஊரறுகாயைப் போல படைத்து விட்டார்.
இவரும் பாரதிராஜா போல ‘அல்லி’நகரத்துக்காரராக இருப்பாரோ. இந்தக் கதையில் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். என்ன தான் ஊறுகாய் ஓர் ஓரமாய் இருந்தாலும் அதை சுவைத்தால் தான் அந்த விருந்து நிறைவாக இருக்கும் என்பதால் என்னையும் இதோ நிறைவாக கதாகாலட்சேபம் செய்ய விட்டு விட்டார்.
அடுத்த முறை ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்கும் என்கிற கனவு எனக்கு இருக்குதுங்க. எனக்கு மட்டும் ஒரு தூங்கா கனவு இருக்க கூடாதா. “ஒதுங்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்கிறார் உங்க வீட்டுக்காரர்” ன்னு அங்க கதாசிரியர் என் மனைவியிடம் கிண்டலடிப்பதால் இதோட நிறுத்திக்கிறேங்க.
(ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த கதை)

