உறவுகள் – கௌசல்யா ஞானேஸ்வரன்

அந்தி சாயும் நேரம் அடிவானம் தன் நீல நிற வண்ணங்களை மாற்றி செந்நிற ஆடை உடுத்திக் கொண்டது. வெண்மேகம் மெல்ல நகர்ந்து காற்றில் மரங்கள் அசைந்தாடி சில்லென்ற காற்று சிந்தையை கவர்ந்தது. கூடு செல்லும் பறவைகள் விதவிதமாய் ஒலி எழுப்பியபடி சென்று கொண்டு இருக்க, ரசிக்கும் ரம்யமான நேரம் மயக்கும் மாலைப் பொழுதோ என  நினைத்தபடியே அவள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள். அவளின் நினைவுகளும் ஆனந்தமாய் அசைந்தாடியது.
காலை 8 மணி குளியல் அறையில் இருந்து “அம்மா” என சத்தமிட்டாள்.
அவள் அம்மா கோமதி பதட்டத்துடன் என்னமோ ஏதோ என்று  பயந்து கொண்டே “என்னாச்சு கண்ணு” ? என வாஞ்சையாக கேட்க, பூங்குழலி தான்  ‘பெரிய மனுஷி’ ஆகிய விவரத்தை தெரிந்தும் தெரியாமலும் இருந்த பருவத்தில் விவரிக்க,  அவள் அம்மாவோ “இரு உன் அத்தையை வரச் சொல்கிறேன் அத்தையிடம் பேசிக்கொள்”  என்ற ஒற்றை வரியில் பதில் சொல்ல அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அவள் அம்மா கோமதி சந்தோசமும், பதட்டமும் ஒன்று சேர அவள் அத்தைக்கு கைபேசியில் செய்தி சொன்னாள். பூங்குழலியின் வீட்டிற்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்தது. அத்தை கவிதா, அவர் கணவர் ரவியுடன் சிரித்த முகத்துடனும், பூரிப்புடனும் தன் அண்ணன் மகள்  ‘பூப்பெய்திய நற்செய்தி” கேட்டு ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிட்டாள். பூங்குழலி மேல் மிகுந்த அன்பும் பாசமும் உடையவள்.
“குழலி குட்டி ஒன்னும் பயப்படாதே டா.அத்தை வந்துட்டேன் உன்னைய நல்லா பார்த்துக்கிறேன்” என்று அனைத்து விபரங்களையும் புரியும்  படி சொல்லத் தொடங்கினாள். “மனதையும் உடலையும் தயார்படுத்திக் கொள்ள சத்தான உணவுகளான பழங்கள்,முளைகட்டிய பயிர்,கீரை, எள்ளுருண்டை  போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் அப்போது உனக்குள் இருக்கும் வலி நீங்கி வலிமை மிகும்” என்பதை பக்குவமாய் கூறி அன்போடு, ஆதரவாய் தலை வருடினாள். அறியாமையினால் அலைக்கழிக்கப்படும் பொழுதெல்லாம் அணைத்து ஆசுவாசப்படுத்துவது மிகப்பெரிய சுகம். உரிமை உள்ள உறவுகளின் புரிதல் அதீத சுகம் அதை பூங்குழலி அனுபவித்தாள். 
பூங்குழலி அப்பா ஆனந்த் என்ன செய்வது என்று தெரியாது மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க, கவிதாவும் கோமதியும் அவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று ஒரு ‘பெரிய கிளாஸ்’ எடுக்க தொடங்கியிருந்தார்கள். தாய் மாமா, அத்தை மற்றும் அனைத்து உறவுகள் கூடவும் வீடு விழாக்கோலம் ஆனது. 
பூங்குழலிக்கு சுற்றங்கள் புடைசூழ இருப்பது மிகப் பிடித்தமான விஷயம். அவள் அப்பாவும்,அம்மாவும் நம் முன்னோர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற சொத்து நம் சொந்தங்கள் என்று அடிக்கடி சொல்லுவதாலோ  என்னவோ மட்டிலா மகிழ்ச்சியடைவாள். 
விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள்வர பூங்குழலி அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. தன் அம்மா நான் பெரியவள் ஆனதும் என்னிடம் எந்த விவரத்தையும் கேட்காமல், சொல்லித் தராமல், அத்தையை ஏன் அழைத்தாள் என்ற கேள்வி.
பூங்குழலி நன்றாக படிக்கக் கூடியவள். அப்பா, அம்மாவின் பேச்சைக் கேட்டு நடக்கும் அன்பான பெண். எல்லா உறவுகளிடம் மிகுந்த பாசமாக இருப்பாள் அத்தையிடம் கொஞ்சம் கூடுதல் பாசம். மேற்படிப்பு படிக்க, யாரிடமும் கேட்க தயங்குகிற விஷயத்தை அவள் அத்தையிடம் பகிர்ந்து கொள்வாள். அவள் அத்தையும் பருவத்தில் வரக்கூடிய சந்தேகங்களான ‘காதல்’ பற்றி அழகாய் கூறுவாள். ‘இருவர் சேர்ந்து ஒருவருக்காய் செய்யும் உயிர்த்தியாகம் காதல்’ என்பார். காதல் கற்பனை செய்ய முடியாத தூரத்தில் இல்லை அது நம்முடன் தான் பயணம் செய்கிறது. ஆனால் அது ஆற்றல் தருகிறதா, அல்லது நம்மைத்  தடுமாற வைக்கிறதா, என்று கவனித்து கடிவாளம் இட்டு அடக்கக் கற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்’ என்பார்.
“அறிவு ஆளும் போது தெளிவு பிறக்கும்ண்டா. இந்த வயசுல சில பேர் நம்ம மேல தப்பா பார்த்தாங்கன்னா அதை நாம கண்டுக்காம விட்டுட்டு நம்ம வேலையை பார்க்கணும். கொஞ்சம் அதிகப்படியா நமக்கு தொந்தரவுனு தெரிஞ்சதுனா நம்ம அப்பாகிட்ட பயப்படாம சொல்லணும்’.என்று சொல்லி நம்பிக்கையூட்டுவாள்.
தெளிவான பெண்ணான பூங்குழலி. தன் கல்லூரி மேற்படிப்புகளை முடிக்கவும் நல்ல வரன் அமையவும் சரியாக இருந்தது. திருமண பேச்சு எடுத்த உடன் இப்போதே எனக்கு திருமணமா ‘கொஞ்ச நாள் ஆகட்டுமே’ என்று சொல்ல.. அவள் அப்பாவும் அம்மாவும் எத்தனையோ விளக்கம் கொடுத்தாலும், அவள் அத்தை, பூங்குழலிக்கு கொடுத்த விளக்கம்-  “விடியல் அறியாமலா சேவல் கூவும். அப்பா அம்மாவுக்கு உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அல்லவா? விதைகள் செடியாகி மரமாகும். பின்பு பூக்கள் பூத்து, பிஞ்சாகி,காயாகி கனியாகும்.எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருப்பது போல திருமணத்திற்கான காலம் இது” என்று பொறுமையாய் எடுத்துரைக்க, அளவீடுகள் இல்லா ஆத்மார்த்தமான அன்பில் அடிபணிந்தாள் பூங்குழலி.
அழகிய பண்பாளன் ஆகாஷ் பூங்குழலி திருமணம் இனிதே நடந்தது. அப்போதும் மணப்பெண்ணின் தோழி அத்தைதான். புகுந்த வீட்டிற்கு சென்ற பூங்குழலி தன் மாமனார் மாமியாரிடம் மிக இயல்பாக அத்தை, மாமா என்று உறவாட அவர்களும் தங்களுக்கு பெண் பிள்ளை இல்லை என்ற ஏக்கம் பூங்குழலியால் தீர்ந்தது என்று கொண்டாடி மகிழ, சகஜமாக அவர்களோடு ஐக்கியமானாள் பூங்குழலி. அவள் கருவுற்ற செய்தியை கேட்டு அனைவரும் அளவளாவிய சந்தோசம் அடைந்தார்கள்.
ஏழாம் மாதம் வளைகாப்பு மிக விமர்சையாக நடந்து தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட பூங்குழலிக்கு. அவள் அம்மாவும் அவள் மனம் வாடாத படி பார்த்துக்கொள்ள ஆகாஷ் ஆதரவாக இருந்தாலும் அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
அவள் அத்தை உடல் வலுப்பெற சத்தான திட்டமிட்ட உணவையும், மனோபலம் வலுப்பெற ஒவ்வொரு உயிரினங்களும் தன் பரம்பரை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியை அழகாய் விவரிக்க, பூங்குழலி கூர்மையானாள்.
அந்த அழகிய நாளும் வந்தது சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அனைவரும் ஆனந்தம் அடைந்தார்கள்.
தன்னுள் உறங்கிய உணர்வுகள் உயிர் கொண்டு புதிதாய் பூத்ததோ என பூங்குழலி அகம் மகிழ்ந்து அள்ளியணைத்தாள் மழலையை. ஆகாஷின் கரங்கள் இணக்கமாய் அவளை தழுவிக் கொண்டது.
“அம்மா………………. அம்மா” 
பூங்குழலியின் ஐந்து வயது மகள் இதழிகா அவளை அழைக்க, தன் நினைவுகளில் இருந்து மீண்ட பூங்குழலி  “இதழிகா குட்டி வாடா, வா வா.. பாட்டி தாத்தாவிடம் விளையாடி முடித்து விட்டாயா” என்று கேட்டுக்கொண்டே அவளைத் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
தன் அம்மா அத்தையிடம் ஏன் பொறுப்பை ஒப்படைத்தாள் என்ற கேள்விகளுக்கு  ஓராயிரம் விடை கிடைக்கப்பெற்றதாக நினைத்தாள்.
தன் அம்மா, தன்னை அத்தையிடம் பழக வைத்தது தான் புகுந்த வீட்டிலும் சிரமம் இல்லாமல் இருக்கத்தானோ? சிறு வயது முதலே பக்குவப்பட தன்னை பழக்கப்படுத்திய அம்மாவை நினைத்து பெருமைப்பட்டாள் பூங்குழலி.
உறவுகள் மிகப்பெரிய வரம். உறவுகளோடு  வாழப் பழகாத பெண்கள்  இறுக்கம் கூடி வாழ்வின் ஞானம் இல்லாமலேயே  வாழ்வை வாழத் தெரியாதவர்கள் ஆகிறார்கள். உறவுகள் இல்லா வாழ்க்கை அமைதி தான், ஆனால் இடுகாட்டின் அமைதி. பூ என்பது காம்பையும் சேர்த்து தான்.  நாள் என்பது இரவு, பகல் இரண்டும் தான். வாழ்க்கை என்பது சிரிப்பு, அழுகை  பாசம் பகைமை, எல்லாம் கலந்த கலவை தான்.  அந்த உறவுகள் இல்லாத குடும்பங்கள் அழுத்தம் மிகுந்து இறுதியில் சிதிலமடைகிறது. 
எண்ண ஓட்டங்களில் அமிழ்ந்திருந்த பூங்குழலியின் கவனத்தை இதழிகா குட்டியின் கரங்கள் கடிவாளம் போட்டது. வாஞ்சையாய் அம்மாவின் முகம் பார்த்த இதழிகா குட்டியை ரசித்து “உனக்கு ஒரு அத்தை இல்லையே” என்று பூங்குழலி அங்கலாய்த்தாள். இதைக்கேட்டபடியே அப்போதுதான் வேலை முடித்து வந்த அவள் அன்பு கணவன் ஆகாஷ்  “அத்தை இல்லேன்னா என்ன , இதழிகா குட்டியை அக்கா ஆக்கிடுவோமா” என்று சிரித்தபடியே கண் சிமிட்டினான். பூங்குழலி கன்னம் சிவக்க, குழந்தையின் கன்னத்தில் இருவரும் முத்தத்தைப் பரிசளித்தார்கள். வாழ்க்கை அவர்களைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தது.

Leave a Reply

Categories