சம்பாத்தியம் – கௌசல்யா பாஸ்கர்


“சின்ன உதவி” என்று முருகேசன் அண்ணாச்சி கேட்ட வார்த்தை ஹேமாவின் பதினொரு வருடம் கடந்த வாழ்க்கை முழுவதும் நினைத்துப் பார்க்க தோன்றும் என்று ஹேமா சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் முன்னாள் வைக்கப்பட்டிருந்த அந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை தான் அப்படி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையுடன் ஆழ்ந்திருந்தாள் ஹேமா. ஹேமா, ரமேஷ் என்ற தம்பியதினரின் குடும்ப நண்பர் தான் முருகேசன் அண்ணாச்சி.

பதினொரு வருடங்களுக்கு முன்பு, ஹேமாவிற்கு வரன் தேடும் பணியை சரவணனும், லட்சுமியும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர். குடும்ப பின்னணி (குடும்பப் பழக்கம் தான் பையனுக்கும் வந்திருக்கும்), வரப்போகும் மருமகனின் சம்பாத்தியம் (மகளுக்கு பண கஷ்டம் வந்து விடக்கூடாது), பையனின் பழக்கவழக்கம் (மது பழக்கத்தினால் மகள் பாதிப்படைந்து விடக்கூடாது), வீடு, வாசல், சொத்து, சுகம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து வரப்போகும் மருமகனின் உடல்நலம் முதலாக விசாரணை போய்க் கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஹேமா நமக்காகத்தான் எல்லாம் என்று மனதிற்குள் நினைத்த படியே நாணத்துடன் அவ்விடத்தை கடந்து சென்றாள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சரவணனும், லட்சுமியும் அவர்கள் நினைத்தபடியே மாதம் ஒன்றரை லட்சம் சம்பாத்தியத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு வரனை தேர்வு செய்து மணமுடித்தனர். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கிடைத்துவிட்டது என்ற மனநிறைவுடன். இதுவரை பாதுகாத்து வந்த பொக்கிஷம் இன்று முதல் வேறொருவடையது என்று கண்களில் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர். அந்த பொக்கிஷம் இன்னொருவரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்ற தைரியத்தில்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாக உருண்டோடியது. ஹேமாவிற்கு செய்ய வேண்டிய சீர், சிறப்புகள் எல்லாம் வந்து கொண்டே இருந்து தாய் தந்தையிடம் இருந்து. ஹேமா ஒரு இல்லத்தரசியாக தன் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தாள் தன்னை மறந்து.

ஹேமா, ரமேஷ் இருவருக்கும் ஹர்ஷா என்ற பெண் குழந்தை பத்து வயது எட்டிக் கொண்டிருந்தாள். எத்தனையோ கொடுமைக்கார கணவன்களுக்கு மத்தியில் தான் என்ன கேட்டாலும் மறுப்பேதுமின்றி செய்து கொடுக்கும் கணவர்தான் தனக்கு கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள் ஹேமா.

இந்நிலையில் தான் ஒரு நாள் காலை வேளையில் “ஹேமா, சின்ன உதவி” என்று வீட்டிற்கு வந்திருந்தார் முருகேசன் அண்ணாச்சி. காலையில் உதவி கேட்டு வந்திருக்கிறாரே!! என்ன உதவியாக இருக்கும்? என்ற கேள்விகளை மனதிற்குள் அடுக்கிக் கொண்டே ஆச்சரியம் கலந்த கேள்விக்குறியுடன் அண்ணாச்சியைப் பார்த்தனர் ரமேஷும், ஹேமாவும். ஹேமாவோ நம்மால் ஆக வேண்டிய உதவியா? என்று மனதிற்குள் எண்ணியவாறே சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவரை ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர வைத்தான் ரமேஷ். வழக்கமான நலம் விசாரிப்புகள் தொடர்ந்தன.

அதற்குள் இரண்டு தேநீர் கோப்பைகளுடன் வெளிவந்த ஹேமா அண்ணாச்சியைப் பார்த்து, “சொல்லுங்க அண்ணாச்சி, என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்??” என்று கேட்டாள். அதற்கு அவர் “தான் புதிதாக துவங்கி இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில், பில்லிங் செக்ஷனில் ஆள் இல்லை என்றும், ஒரு மாதம் மட்டும் உதவி செய்யுங்கள் என்றும், அதற்கான சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும்,” தரையைப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கோ நன்றாகவும், பொருளாதார பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு குடும்பத் தலைவியை நன்றாகப் படித்திருக்கும் பெண்ணை பில்லிங் வேலைக்கு அழைப்பதில் பெரும் தயக்கம். ஆக, தரையைப் பார்த்துக்கொண்டே தன் இயலாமையை மறைத்துக் கொண்டிருந்தார் தயக்கத்துடன்.

ஆனால் ரமேஷ், தெரிந்த நண்பரின் கடை தானே என்று, “அதனால் என்ன அண்ணாச்சி, கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்” என்றான். இடைமறித்த ஹேமாவோ, “ஒரு மாத காலம் மட்டுமே என்னால் வர இயலும். அதற்கு மேல் கண்டிப்பாக என்னால் வர முடியாது” என்று கூறினாள். அவரோ, “சரி, அதற்குள் நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஹேமா கொடுத்த தேநீரை அருந்திவிட்டு, நன்றி கூறி நகர்ந்தார்.

ஹேமா மறுநாள் காலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு அண்ணாச்சியின் கடைக்குச் செல்வதும், வீட்டிற்கு வந்து தன் பணிகளை கவனிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். இதுவரை பாத்திரம் மட்டுமே துலக்கிக் கொண்டிருந்த கைகள், இன்று பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது. முடியாத பொழுது அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டாள்.

நாள்காட்டி தன் பணிகளைச் செவ்வனே செய்து ஒரு மாத காலத்தை கடத்தி இருந்தது. அதற்குள் அண்ணாச்சியும் எப்படியோ அலைந்து தன் கடைக்கு தேவையான வேலை ஆட்களைப் பணியில் அமர்த்தி இருந்தார்.

அவர் ஹேமாவிடம், நன்றியுடன் ஒரு மாதத்திற்கு உண்டான தொகையை, ஹேமா “வேண்டாம் அண்ணாச்சி, இதற்கு எதற்கு சம்பளம்? இந்த உதவி கூட செய்ய நான் தகுதியற்றவளா?” என்று கூறி மறுத்தும் கேட்காமல், வலுக்கட்டாயமாக கைகளில் திணித்தார். ஹேமாவின் மனமோ சங்கடத்துடன் அதை பெற்றுக் கொண்டாலும், தொகையை எண்ணிப் பார்க்கக் கூட மனம் இன்றி சிறு குழந்தையைப் போல் உலகம் மறந்து துள்ளிக் குதித்தது.

ஆம், திருமணம் முடிந்து பதினொரு வருடங்கள் கடந்து தன் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ஒன்று, சிறு தொகையாய் மடிக்கப்பட்டு அவள் கைகளில் திணிக்கப்பட்டு இருந்தது. “அந்த சிறு தொகையில் தனக்கு பிடித்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை குறைவான விலையில் வாங்கிவிட வேண்டும்” என்று நினைத்திருந்ததால் வந்த சந்தோசம் தான் அது.

“எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் கணவன் ரமேஷ் ஏன் இதை வாங்கி கொடுக்கவில்லை??” என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. ஆமாம்… வாங்கித் தரவில்லை, அவள் ரமேஷிடம் தன் விருப்பத்தைக் கேட்கவும் இல்லை.

தன் குடும்பத்தினரின் தேவைகளையும், குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காகவும், தன் அத்தியாவசிய தேவைகள் என அனைத்தையும் பூர்த்தி செய்யும் தன் கணவன் ரமேஷிடம் இந்த சிறு ஆசையைப் பற்றி அவள் பேசியதில்லை. காரணமும் பெரிதாக இல்லை என்றாலும், தன்னால் ஒரு வீண் செலவு வேண்டாம் என்ற எண்ணமாகவும் இருந்திருக்கலாம். அதுமட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தில் ஹேமா மட்டுமே இசைப்பிரியை, மற்றவர்கள் இதில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள். அதனால், தேவையற்ற வீண் செலவு என்று கூட நினைத்திருக்கலாம்.

இருப்பினும், அந்த தேவையற்ற செலவில் மனம் என்னவோ காற்றில் பறந்து மகிழ்ந்தது உண்மைதான். அந்த ஸ்பீக்கரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹேமா.

ஏதோ யோசனையுடன் எழுந்தவள், தன் மகள் ஹர்ஷாவை பொக்கிஷமாக வளர்ப்பதை விட, உணர்வுகளை சரியான முறையில் கையாள தெரியும் பக்குவம் கொண்டவளாகவே வளர்க்க வேண்டும் என்ற முடிவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


Leave a Reply

Categories