குடும்பத்தின் பங்களிப்பு – ரிதன்யா ஷங்கர்

பரபரப்பாக போகும் இந்த வாழ்க்கையில் நம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இல்லை. ஆனால், நேரம் கிடைக்கும் போது தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் பற்றியும் யோசிப்பது மிகச் சிறந்த செயலாகும். அதை அன்றும், இன்றும், என்றும் தாய் தந்தையினர் செய்து கொண்டுதான் உள்ளார்கள். ஆனால், இக்கதையில் தாய் தந்தையினர் மட்டும் அல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தின் நலனுக்காக யோசித்தால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
அவள் பெயர் மயூரா. அவர்கள் குடும்பம் கூட்டு குடும்பம் ஆகும். இவர்கள் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மயூரா, கனிகா மற்றும் சூர்யா என மொத்தம் ஏழு பேர் உள்ளனர். மயூரா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்; கனிகா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்; சூர்யா LKG செல்கிறான். அப்பாவும், அம்மாவும் வேலைக்கு செல்பவர்கள். அப்பா காவல் துறையில் வேலை செய்கிறார்; அம்மா ஆசிரியராக பணியாற்றுகிறார்.
ஒருநாள், அம்மா தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் பணியிலிருந்து விலகுகிறார். மயூரா கேட்கிறாள்:
“அம்மா, இது உங்களுக்கு பிடித்த வேலை அல்லவா? ஏன் வேலையிலிருந்து விலகினீர்கள்?”
அம்மா கூறுகிறார்:“ஆம் மயூரா, எனக்கு பிடித்த வேலைதான் இருந்தாலும், உங்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!”
பின்னர் அம்மா கேட்டார்:“உனது இலட்சியம் என்ன மயூரா?”
அதற்கு மயூரா, “நான் அப்பாவைப் போல காவல் துறையில் பணியாற்றி, மக்களுக்கு நிறைய உதவி செய்ய வேண்டும்,” என்றாள்.
அம்மா மகிழ்ச்சியுடன்,“மிகவும் சிறந்த முடிவு மயூரா! கனவிலிருந்து திசை திரும்பக்கூடாது. என்றும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்,” என்றார்.
ஆனால் மயூரா அம்மாவை மீண்டும் ஆசிரியராக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள். அம்மா வீட்டுப் பணியால் தான் வேலையை விட்டார். நானே எல்லா வேலைகளையும் செய்தால், அம்மா மீண்டும் ஆசிரியராக போவார் என்று அவள் யோசித்தாள்:
அடுத்த நாள் காலையில், அம்மா எழுந்திருக்கும் முன்பே மயூரா எழுந்து, தன்னால் தெரிந்த வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால் முழுமையாக செய்ய முடியவில்லை. அவள் குளித்துவிட்டு, மற்றவர்களுக்கு சூடுநீர் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பானையில் நீரை சூடாக்கினாள். நீர் கொதித்ததும், அதை பக்கெட்டில் ஊற்ற முயன்றாள். ஆனால் பானையின் கனத்தை தாங்க முடியாமல், அது கையிலிருந்து வழுந்து விழுந்தது; சுடுநீர் அவள் காலில் விழுந்தது.
சத்தம் கேட்டவுடன் அம்மாவும் அப்பாவும் ஓடிவந்து, அவளை தூக்கி மெத்தையில் உட்கார வைத்தனர். காயத்துக்கு மருந்து தடவினார்கள். அப்போது மயூரா அழுதுகொண்டே 
“அம்மா, நான் வீட்டின் மூத்த பிள்ளை. வீட்டு வேலைகளை நான் செய்தால், நீங்க மீண்டும் ஆசிரியர் பணிக்கு போவீர்கள் அல்லவா?” என்றாள்.
அம்மா பாசத்துடன், “நீ சின்ன பிள்ளை மயூரா. நீ நன்றாகப் படி. உன்னால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்தாலே போதும்,” என்றார்.
அன்றிலிருந்து மயூரா அம்மா மடித்த துணிகளை அலமாரியில் வைப்பது போன்ற சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால் மனதில் ஒரே எண்ணம் — அம்மாவை மீண்டும் ஆசிரியராக ஆக்க வேண்டும்!
நாட்கள் கடந்தன. மயூரா இன்னும் கொஞ்சம் பெரியவளானாள். வேலையிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். அவளின் எண்ணம் வீட்டிலுள்ள அனைவருக்கும் புரிந்தது. தாத்தா, பாட்டி, அப்பா, கனிகா, சூர்யா என வீட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து வேலையைப் பகிர்ந்து கொண்டனர்.
தாத்தா வீட்டில் உள்ள பொருட்களை தூசி தட்டி வைப்பார். பாட்டி வீடு கூட்டுவார். மயூரா துணிகளை மடித்து வைப்பாள். அப்பா பாத்திரம் கழுவினால் கனிகாவும் சூர்யாவும் கழுவிய பாத்திரங்களை எடுத்து வைப்பார்கள். இவ்வாறு வேலைகளைப் பகிர்ந்ததால், வீட்டில் வேலை சுமை குறைந்தது.
ஒருநாள் அம்மா கேட்டார்,“ஏன் நீங்கள் எல்லோரும் இவ்வளவு வேலைகளைச் செய்கிறீர்கள்?”
அதற்கு குடும்பத்தினர் சொன்னார்கள்: “அம்மா, நீ மீண்டும் ஆசிரியர் பணிக்கு போகணும். அது உனக்கு பிடித்த வேலையல்லவா? வீட்டு வேலைகள் பற்றி கவலைப்பட வேண்டாம்; அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.”
இதைக் கேட்டவுடன் அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பாட்டி கூறினார்:
“நீ காலை, மதிய உணவை மட்டும் செய். மீதியெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இரவு உணவை மாறி மாறி செய்வோம். முதல் நாள் நான், மயூரா; இரண்டாம் நாள் தாத்தா, கனிகா, சூர்யா; மூன்றாம் நாள் நீ, அப்பா என்று மாற்றி மாற்றி வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வோம்.”
அம்மா நெகிழ்ந்து, எதுவும் சொல்ல முடியாமல் ஆனந்தக் கண்ணீருடன் சிரித்தார். அம்மாவின் வேலைச் சுமை குறைந்தது. மயூரா மற்றும் குடும்பத்தினர் நினைத்தது போலவே, அம்மா மீண்டும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
மயூராவும்  நன்றாகப் படித்து காவல் துறையில் சேர்ந்தாள். மக்களுக்கு ஆற்றிய உதவி மற்றும் நற்செயலால் பதவி உயர்வுகள் கிடைத்து கொண்டே இருந்தது.
குடும்பம் என்றால் வேலைகள் இருக்கத்தான் செய்யும். வீட்டில் உள்ளவர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டால், வேலைச் சுமை தெரியாது; வெளியில் நாம் சாதிக்க நினைப்பதையும் சாதிக்க முடியும். “நான்” என்று சுயநலத்தோடு யோசித்திருந்தால் வெற்றி இல்லை. “நாம்” என்று யோசித்து, பண்பு, பரிவு, மனிதநேயம், குடும்ப பங்களிப்பு ஆகியவற்றினால்  அவர்கள் குடும்பமும், சமூக வாழ்க்கையும் வெற்றியடைந்தது.

Leave a Reply

Categories