காசி பார்க்கப் போறோம் (பகுதி 8) – யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 8) காசி பலன் என்னதம்மா சோழிபலன் உன்னதம்மா****

அயோத்தியிலிருந்து
காசியில் தங்கும் அறைக்கு வந்ததும்
,
நிறுவனர் ஜெயக்குமார் சார் “காலையில்  6:00 மணிக்கு  எல்லோரும் தயாராகி வந்துடுங்க முக்கியமாக பார்க்க வேண்டிய கோவில்களை தரிசிக்கச்
செல்கிறோம்” என்று கூறினார். அடுத்த நாள் காலையில் அவர் சொல்லிய நேரத்தில் அனைவரும்
தயாராகி வந்தோம்.
 காலபைரவர் கோயில் ,
சங்கட் மோட்ச ஆஞ்சநேயர்,  துளசி மானச மந்திர், துர்கா சக்திபீடம் மற்றும் ஸ்படிக லிங்க கோவில்களுக்கு
பேட்டரி வாகனங்களை ஏற்பாடு செய்து கிளம்பினோம்.

 காலபைரவர்

காசிக்கு செல்கிறவர்கள் அவசியம் காசியில் இருக்கும்
காலபைரவரை தரிசனம் செய்தால் தான் காசி யாத்திரை முழுமைபெறும் என்று
  கூறினார்கள். காசி மாநகரத்தின் தீய சக்திகளை வென்று காக்கக்கூடிய காவல் தெய்வமாக
வழிபடப்படும் காலபைரவர் இங்கே
 கருநிறக் கல் சிலையாக,
வெள்ளி முகமூடி அணிந்த வடிவில் காட்சி தருகிறார்.

 

பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக
தன் நெற்றிக் கண்ணில் இருந்து காலபைரவரை சிவன் தோற்றுவித்தாக புராணக் கதைகளில் கூறப்படும்
இந்த கோவில் கி.பி 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
கால பைரவரின் வாகனமாக நாய் சிலை உள்ளது. காலபைரவரை
தரிசனம் செய்ய வருபவர்கள் கருப்புக் கயிறு மற்றும் எண்ணெய் வழங்கி வழிபடுகின்றனர்
.

 

காலையில்   7:00 மணிக்கு  கோவிலுக்குச் சென்று விட்டோம். அங்கு சென்ற நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது.  இரண்டு மூன்று நிமிடங்கள் 
என்றாலும்  சிறப்பான தரிசனம் கிடைத்தது. தரிசனம்  முடித்து வெளியே வரும் பொழுது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி, வரிசை நீண்டு இருந்ததால் சலோ சலோ” என்று  வேக வேகமாக தள்ளி விடுகிறார்கள். கோவில் பிரகாரத்தில் விற்பனை செய்யப்படும் காலபைரவருடைய எந்திரங்கள், கயிறுகளை வாங்கி
நம் வீடுகளிலும்
, தொழில் நிறுவனங்களிலும் திருஷ்டி கழிக்க முன்வாயிலில் கட்டலாம். 

பூ விற்கும் கடைகளில் பூக்கள்  வாடி இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வாங்கி பைரவருக்கு சாற்றுகிறார்கள் பக்தர்கள். 

 

காசி கிளம்புவதற்கு முன் எங்கள் நிறுவனர், உங்கள் ஊரில்
உள்ள பிள்ளையார் கோயில்
, குலதெய்வக் கோவில்,
மற்றும் காலபைரவரிடம் சென்று நல்லபடியாக பயணம் முடித்து
வர ஆசிர்வாதம் பெற்று வாருங்கள் என்றார்.
  பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று
அவர் கூறியபடி கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். இங்கே காலபைரவரைப் பார்த்ததும்
எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு எங்களை சிறப்பாக அழைத்து வந்ததற்கு நன்றி
  சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

 

சங்கட்மோட்ச ஆஞ்சநேயர்

அடுத்து  சென்ற சங்கட் மோட்ச ஆஞ்சநேயர் கோவில், நுழைவு வாயிலிலிருந்து
சிறிது தூரம் உள்ளே நடக்க வேண்டியிருந்தது. வழி நெடுக அடர்ந்த மரங்கள் நிறைய இருந்தன.
கோயிலின் உள்ளே
  இயற்கையும்,  அமைதியும் நிறைந்து இருந்தன. பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் துளசிதாசரால் அசி ஆற்றங்கரையின் அருகில்
நிறுவப்பட்டுள்ளது இந்த ஆலயம்.
 சங்கடங்களைப்  போக்குபவர் என்பதால், இவர் சங்கட மோட்சன்என்று அழைக்கப்படுகிறார். 

 

கோவிலின் உள்ளே நுழையும்முன் பெரிய தலவிருட்சம்  500, 600 வருடங்கள் பழமையும் பெருமையும் வாய்ந்த  அத்திமரம் உள்ளது.  இந்த அத்தி மரத்தின் கீழே அமர்ந்து துளசிதாசர் ராமசரிதமானஸ வரிகளை எழுதியதாக
சொல்லப்படும் மரத்தைச் சுற்றி வந்து
  வணங்கினோம்.

 

சனிக்கிழமையில் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் பக்தர்களின் வரிசையில் நாங்களும் விரைந்து இணைந்துகொண்டு  நடந்தோம். அங்கு வரும் பக்தர்கள்
ஹனுமன் சாலிசா புத்தகம் வைத்து படித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்தகத்தை வாசித்து
விட்டு
  கோயிலில் ஒரு இடத்தில் வைக்கிறார்கள்.  அடுத்து வருகிறவர்  அதை எடுத்து வாசிக்கிறார்கள்.  இது ஒரு நல்ல செயலாக இருந்தது.
 

எல்லா கோவில்களிலும் இது போன்று பக்திமார்க்க புத்தகங்களை வாங்கி வைப்பதன் மூலம் வீண் பேச்சுக்களைத் தவிர்த்து ஆன்மீகத்தை மட்டுமே உணரும் வகையில் செய்யலாம் . வாசிக்க விருப்பமுடையவர்கள் வாசித்து விட்டு அங்கேயே புத்தகத்தை வைத்து விட்டு
செல்ல வேண்டும். (மறந்தும் கூட
  வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடக்கூடாது என்று யோசித்துக் கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.)

கருவறையில் 
இருந்த ஆஞ்சநேயர்  பக்தர்கள் அணிவிக்கும்
துளசிமாலைகளிலும்  மற்ற பூக்களின் அலங்காரத்திலும்
கம்பீரமாக   காட்சி அளித்த ஆஞ்சநேயரை மனமுருக
வழிபட்டு, கோயில் பிரகாரம் சுற்றி வெளியில் வரும் போது, எதிரே வரும்  பக்தர்கள் அட்டைப் பெட்டியில் ஸ்வீட் வாங்கி வருகிறார்கள்.
அதை ஆஞ்சநேயர் முன் வைத்து

படைத்து
விட்டு வந்து, பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கொடுத்துச்
செல்கிறார்கள். வெளியே வரும் பக்தர்களுக்கு அந்த இனிப்புகளையும், துளசியையும் பிரசாதமாக
கொடுக்கிறார்கள்.

 

துளசிமானஸ மந்திர்

துளசிதாசர்  ராம சரிதா மானச நூலை எழுதிய இடத்திலேயே
இந்த கோவில் அமைந்துள்ளது. ராமசரிதமானஸ என்பது ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை அவதி மொழியில்
  எழுதிய ஆன்மீக காவியம். 


துளசிதாசர் வாழ்ந்த வீட்டை வடிவமைத்து 1964_ல் பிர்லா குடும்பத்தாரால், நவீன வெள்ளைப் பளிங்கு கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில்
சுவர்களில்
 ராமசரிதமானஸ பாடல்கள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டு உயிருள்ள நூலகமாக  காட்சி அளிக்கிறது. ராமசரிதா மானஸாவின் மூல கையெழுத்து
பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. கோயில் வளாகத்தினுள் அருங்காட்சியகமும், துளசிதாசர்
அவர்கள் வாழ்ந்த நினைவுச் சின்னமும் உள்ளது.

 

துர்க்கை சக்தி பீடம் 

துர்க்கை சக்தி பீடம் கோவிலினுள் நுழைய  படிகட்டுகள் வழியாக ஏறிவந்து உள் பிரகாரம் சுற்றி
விட்டு, கருவறையில் இருக்கும் துர்க்கை அம்மனை வழிபட, மீண்டும் படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.
இந்த தலம் பதினெட்டாம் நூற்றாண்டில், நாகர் அரசி ராணி பவானி அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. நாகாரா
பாணி கட்டிடக்கலை அமைப்பில் இருப்பதாக தகவல் சொல்கிறது. கோயில் வெளிச் சுவர்கள்  முழுவதும் சிவப்பு வண்ணமாக இருந்தன.
 இதனால் சிவப்புக் கோவில்
என்கிறார்கள்.
 இங்கே எழுந்தருளி இருக்கும் துர்கா தேவி சுயம்பு என்று நம்பப்படுகிறது. 


மகிஷாசுரனை
வதம் செய்த சக்தியாக கருதப்படும் இந்த துர்க்கை அம்மன் கோவில் அருகில் துர்கா குண்ட் என்ற
குளம் உள்ளது.

 

ஸ்படிக லிங்கம்

இந்த கோவில் தனியாரால் கட்டப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு
வருகிறது. அங்கே கோசாலையும் பராமரிப்பு செய்து வருகின்றனர். கோவிலினுள் இருக்கும் சிவனுக்கு
நாமே நீர் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
 கோவில்
வளாகத்தினுள் 1008
லிங்கங்கள் தனித்தனியாக இடம்பெற்றிருந்தன.

 

சோழியம்மன் கோயில்

காசி பயணம் முடித்து விட்டு இறுதியாக சோழியம்மனை
தரிசனம் செய்து வந்தால் தான் காசி சென்று வந்ததன் பலன் நமக்கு கிடைக்கும் என்ற ஐதீகம்
இருப்பதாக எங்கள் வழிகாட்டி தெரிவித்தார்.
  ஒரு உயரமான இடத்தில் சிறிய கருவறையில்
சோழிஅம்மன் வீற்றிருக்கிறார்.
 

 

கோயில் முன் இருக்கும் கடையில் ஜாக்கெட் பிட்டும், அதன் மேல் ஐந்து
சோலிகளும் வைத்து விற்கிறார்கள்.
 நாம் அதை வாங்கிச் சென்று சோழிஅம்மன் சன்னதியில் இருக்கும் அர்ச்சகரிடம் கொடுக்க
வேண்டும். அவர் இறைவி முன்
  நம்மை நிறுத்தி “காசி பலன் என்னதமா சோழிப்பலன் உன்ன தம்மா” என்று நம்மிடம் கூறி
திருப்பச் சொல்ல வைக்கிறார். அதன் பிறகு நம்மிடம் வாங்கிய ஜாக்கெட் பிட்டையும்
,  நான்கு சோழிகளையும் அங்கேயே வைத்துக் கொண்டு ஒரு சோழியை மட்டும் கொடுத்து வீட்டில்
கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
 திரும்பவும் அந்த ஜாக்கெட்
பிட் கடைகளில் விற்பனைக்கு சென்று விடும் என்பது தெரிந்தாலும் அவர்களுக்கு ஒரு வருவாயை
கொடுத்த மனதிருப்தியுடன் வரலாம்.

 

அந்தக் காலத்தில் வயது முதிர்ந்த தம்பதிகள் காசி சென்று சிவனை வழிபட வேண்டும் என்பதற்காக பசி
தாகம் மறந்து கால்நடையாக நடந்து வந்து
  காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வெளியில் வரும் போது, ஒரு சன்னியாசி  ‘சோழிஅம்மனை பார்த்தீங்களா?’
என்று கேட்டாராம். அவர்கள்  ‘இல்லை’ என்று சொல்ல  ‘அந்த அம்மனை பார்த்து வழிபட்டு போங்கள் நீங்க வந்த காசிப்பயணம் நிறைவேறும்’
என்று அந்த சன்னியாசி சொன்னதாகவும்
,  அந்த முதியவர்கள்  அங்கே வந்து அந்த அம்மனை  தரிசனம் செய்துவிட்டுப் போனதாக புராணக் கதை சொன்னார்கள்.

 

இன்னொரு பக்கம் கவுளிபாய் என்ற பக்தை காசி விஸ்வநாதரை
சகோதரானாக நினைத்து வழிபாடு செய்து வருகிறார். அவர் மிகவும் தூய்மையை கடைபிடித்து வருபவர்.
  காசி சுத்தமானது என்பதால் ஆச்சாரம் பார்க்கத் தேவையில்லை என்று சிவன் கூறி அவருக்காக
இங்கே ஒரு அம்மனை வைத்ததாக ஒரு கதை சொல்கிறார்கள். அங்கு சென்ற நேரத்தில் கூட்டம் அதிகமாக
இல்லை என்பதால் சோழியம்மனை
  விரைவில் தரிசனம் செய்து அறைக்கு வந்தோம். சிலர்  மீண்டும் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்யச் சென்றார்கள். 

காசி தீர்த்தம் வாங்குவதென்றால் நாட்டுக்கோட்டை  நகரத்தார் கடை தான் அங்கே பிரபலம். அவர்கள் விற்பனை செய்யும் தீர்த்தம் அவர்கள்
சொல்லும் விலை தான். சிறிய குவளை தீர்த்தம்
45 ரூபாய். காசிக்கு செல்பவர்கள் காசி தீர்த்தம் வாங்கிச் சென்று இராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும்
இராமலிங்கசாமிக்கு அபிஷேசகத்திற்கு கொடுத்து வழிபாடு செய்து வர வேண்டும் அப்போது தான்
முழுமையான காசி பயணம் நிறைவு பெறும் என்றார்கள்.

 

நாட்டுக்கோட்டை நகரத்தார் கடையிலேயே காசி தீர்த்தம், அன்னபூரணி தாயார் சிலை, கோமாதா சிலை, கருங்காலி மாலை
என நிறைய பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. நமக்கு தேவையானதை சொன்னவுடன் கணிணியில் பில்
தயாரித்துக்
  கொடுக்கிறார்கள். இருவர் பொருட்களை எடுத்து தருகிறார்கள். கடையின் அமைப்பு கரைக்குடி
செட்டிநாடு வீடு போல் பெரிதாக இருந்தது. வீட்டிற்குள்ளேயே படிக்கட்டு. தீர்த்தம் பேக்
செய்வதற்கு தனி இடம். விற்பனை செய்ய தனி இடம். அதற்குள்ளேயே
  குடித்தனம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும்  தனித்தனி மாடியில் இருக்கிறது. அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து
பெரிய கேன்களில் தீர்த்தம் எடுத்து வந்து
, அந்த நீரை செம்பு பாத்திரத்தில் ஊற்றி பேக்கிங் செய்கிறார்கள்.
காசியில் இருக்கும் கங்கையின் நீரை தீர்த்தமாக நம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல கூடாது
என்றார்கள்.

 

காசியில் பனாரஸ் புடவை மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று ஒரு  ஹோல்சேல் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றார்கள். 1600 புடவையை பேரம் பேசி 600ரூபாய்கு சிலர் வாங்கினார்கள்.
அது பனராஸாக தெரியவில்லை. அதே புடவை பஜாரில்
400 ரூபாய் இருந்ததாக கூறினார்கள்.
வெளியே சாலைகளில் நான்கு சுடிதார் டாப்
  500 ரூபாய் என விலை பேசி
வாங்கினார்கள்.
  பேரம் பேசினால் விலை குறைக்கிறார்கள்.

 

பஜார் சுற்றி பார்த்து விட்டு மதிய உணவுக்கு அறைக்கு
வந்து சேர்ந்தோம். சிலர் மீண்டும் நான்கு மணிக்கு கங்கா ஆரத்தி சென்றார்கள்.. நாங்கள்
  விடுதியில் இருந்து வெளியே வந்து  நடந்து அங்கே இருக்கும் தெருக்களை
சுற்றி பார்த்து வந்தோம். ‘வாங்க பனாரஸ் புடவை பார்க்கலாம்’ என்று பல கடை தொழிலாளிகள்
நம்மை
  கையைப் பிடித்து அழைக்காத தொனியில் கேட்டுக் கொண்டே செல்கிறார்கள். பாலில் செய்த
இனிப்பு வகைகள் தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனைக்கு இருந்தன. பெரிய பெரிய ஜவுளி கடைகளில்
பொம்மைகள் பனாரஸ் பட்டில் ஜொலித்தன. அந்த இரவு நேரத்தில் காசியில் ஒளிர்ந்த மின்விளக்குகளின்
ஒளிகளை கண்களால் பருகியபடியே அறைக்குத் திரும்பினோம்.

 
 (பயணத்தின் இறுதி நாள் நிகழ்ந்தவை அடுத்த பகுதியில்)

 

Leave a Reply

Categories