காசி பார்க்கப் போறோம் (பகுதி 5) – யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 5) கங்கையில் நீராடலும் – காசி விஸ்வநாதர்  வழிபாடும்****

கயாவிலிருந்து
கிளம்பி நாங்கள் காசிக்கு வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. ‘காலையில் ஆறு மணிக்கு குளித்து
தயாராகுங்கள், கங்கை சென்று நீராடி, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மண்ணை ஆற்றில்
கரைத்து
 விட்டு வழிபாடு செய்து வருகிறோம்” என்றார் நிறுவனர் ஜெயக்குமார் சார். அவர் ஏற்கனவே ராமேஸ்வரத்
தீர்த்தமும், மண்ணையும் எங்களிடம் கொடுத்திருந்தார்.

நாங்களும்
விடியற்காலையில் எழுந்து குளித்துத்
 தயாராகிவிட்டோம். தங்கும் அறையிலிருந்து ஆட்டோ பிடித்து கங்கை ஆற்றை
நோக்கிப் பயணித்தோம். கங்கை நதிக்கு அருகில் வாகனங்கள் செல்ல வசதி இல்லாததால் அரை கிலோமீட்டர்
முன்பே இறங்கிக் கொண்டோம்.

 “இங்கே 3,400 சந்துகள் இருக்கின்றன. ஒரு சந்து மாறினாலும், நீங்கள் வழி தவறி விடுவீர்கள் அதனால், எங்களைப் பின்தொடர்ந்து கவனமாக வாருங்கள்” என்று வழிகாட்டி அறிவுறுத்திக்
கொண்டே வந்தார். அவர் கூறியபடியே வழிநெடுகவே குழம்பும்படியான பல சந்துகள்!
 அதுமட்டுமில்லாமல்
அங்கு திரும்பிய பக்கமெல்லாம் மாடுகள் அலைந்து திரிந்தன. இதனால் சாணங்கள் வழிநெடுக
கிடந்தன. கவனமாக நடந்து பல சந்துகளை கடந்து கங்கைக் கரையை அடைந்தோம்.

காலை சூரியன் உதிக்கும் தருணம், நதியின் நீர் மக்களின் ஆரவாரமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. பனிக்காலம் என்பதால் நீரில் கால் வைத்ததும்  சில்லென உடல் சிலிர்த்து, பற்கள் தந்தியடிக்க ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டோம். கங்கையில் நீராட வாய்ப்புத் தந்த இறைவனுக்கு எங்கள் மனங்களிலிருந்து “நன்றி” என்ற சொல் ஒலித்துக் கொண்டிருக்க மூழ்கி எழுந்தோம். கங்கையில் நாங்கள் நீராடிய இடத்திற்கருகே உடை மாற்ற வசதி இல்லாதது பெண்களுக்குப்  பெரும் அவதியாக இருந்தது.

ஹரிச்சந்திரா காட் பிணங்களை எரியூட்டும் இடம். தன் குடும்பம், சொத்து அனைத்தையும் இழந்தபின்னும் பொய் பேசாமல் தர்மத்தைக் காத்த ஹரிசந்திரன் குறித்து படித்து இருக்கிறோம். அவர்  இந்த இடத்தில் தான் வெட்டியானாக வேலை செய்ததாகவும் அதனால் இந்த இடத்திற்கு அவர் பெயர்கொண்டு அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகின்றன. அங்கு  விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் அனாதைப் பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. சில நாட்களில் விடிய விடியப் பிணங்கள் எரிப்பார்களாம். அந்த இடத்தில் காலடி வைத்தபோது வெப்பத்தை  நன்றாக  உணர்ந்தோம். 

நாங்களும்
எடுத்துச் சென்ற ராமேஸ்வர தீர்த்தத்தை அளித்து, 
“தென்னாடுடைய சிவனே போற்றி, என் நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று
மனமுருக வழிபட்டு வெளியே வந்தோம். நான்கு திசைகளிலிருந்தும் வரிசையில் நின்று தரிசிக்கும்
வகையில் கோவிலின் அமைப்பு இருந்தது. கோவில் கோபுரத்தின் மேல் உள்ள தங்க கலசமும், கோபுரமும்
தனி சிறப்பு பெற்றவை. இவை மகாராஜா ரஞ்சித் சிங் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆடைகளை
மாற்றிய பின் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மண்ணைக்
 கையில் எடுத்துக் கொண்டோம். ஒரு புரோகிதர் வந்து மந்திரங்களும்,
வேதங்களும் சொல்லி அனைவரையும் திரும்பச் சொல்ல வைத்தார். பிறகு அந்த மண்ணை இரு கைகளிலும்
நிரப்பி கங்கை நீரில் கரைத்தோம். ராமர் ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கி வந்ததாகக் கூறப்படும்
ஐதீகத்தின் அடிப்படையில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இதை தெற்கும், வடக்கும் ஒன்று
சேரும் நல்லிணக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அதன்பின்
ஜெயக்குமார் சார் எங்களை அங்கேயிருந்த கேதார்நாத் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்..
நாங்கள் சென்ற வழிகாட்டி இது கேதார் காட், அது ஹரிச்சந்திரா காட், அங்கே தெரிவது மணிகர்ணிகா காட்” என்று
வழியில் விளக்கிக் கொண்டே நடந்தார். காசியில் மொத்தம் 84 படித்துறைகள் இருக்கிறது என்று
நான் படித்த செய்தி நினைவுக்கு வந்தது.

மணிகர்ணிகா
காட்டில் காசியைச் சுற்றியுள்ள 437 கிராமங்களில் வசிக்கும் மக்கள் இறந்தால் அங்கே கொண்டு
வந்து எரியூட்டுவார்கள் எனவும், ஒரு நாளைக்கு குறைந்தது 100 முதல் 140
  பிணங்கள்
எரியூட்டப்படுகின்றன என்று வழிகாட்டி சுரேஷ் கூறினார். மணிகர்ணிகா காட், ஹரிச்சந்திர
காட்டில் கொண்டு வந்து உடலை தகனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் மறுபிறவி கிடையாது
என்பதும் இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நாம் எங்காவது
இறந்த வீட்டுக்குச் சென்று வந்தால், குளிக்காமல் வீட்டுக்குள் செல்ல மாட்டோம். இங்கேயோ,
எரியூட்டப்பட்ட இடத்தின் மீது நடந்து சென்றுதான் கேதார் படித்துறையில் இருந்த கேதார்
லிங்கத்தை தரிசிக்கச் சென்றோம். உயரமான 20–25 படிக்கட்டுகள் ஏறி கோவிலுக்குள் சென்றோம்.
கையிலாயத்தில் இருக்கும் கேதார் லிங்கத்தை தரிசனம் செய்ய இயலாதவர்கள் இங்கே உள்ள லிங்கத்தை
வழிபட்டால் அதே பலன் கிடைக்கும் என்று ஜெயக்குமார் சார் கூறினார்.

கோவிலின் கருவறை
சதுர வடிவில் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
 கருவறையில்
இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கமாக அமையப்பெற்றது. 
  சிவலிங்கத்திற்கு மேல், சுமார் ஐந்தடி உயரத்திலிருந்து ஒரு  செம்பு குவளையின் வழியாக, அபிஷேகப் பால் சொட்டு சொட்டாக லிங்கத்தின்
மீது விழும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சில பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம்
செய்தனர்.

அங்கிருந்து
வெளியே வந்தபோது மணிகர்ணிகா காட்டில் ஒரு சடலம் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்தது. நாங்கள்
அதை பார்த்து விட்டு கங்கை நதிக்கு வரும் போது சிவதர்ப்பண பூசையில் கலந்து கொண்டவர்கள்
தங்கள் பூசையை முடித்துக் கொண்டார்கள். (சிவதர்பண பூசை என்பது சிவபெருமானை சாட்சியாக
வைத்து, கங்கை நீரை அர்ப்பணித்து பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெறவும், குடும்ப
நலன் வளம் பெருகவும் செய்யப்படும் சிறப்பு தர்ப்பண வழிபாடு)

கடந்த
ஐந்து–ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காசிக்கு வந்தவர்கள் கங்கையில் மூழ்கி எழும் போது சடலங்கள்
மோதியதாக சொன்னதைக் கேட்டிருக்கிறேன். இப்போது அப்படி எதுவும் இல்லாமல் நீர் தூய்மையாக
இருந்தது. பிரதமர் மோடி அவர்கள் காசிக்கு வந்த பிறகு தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக
வழிகாட்டி கூறினார்.

கங்கைக்கு
நீராட செல்லும் போதே, “இங்கே பாரதியார் தங்கிய வீடு இருக்கிறதா? பார்க்க முடியுமா?”
என்று வழிகாட்டியிடம் கேட்டிருந்தேன்.
 “இங்கே 3,400 சந்துகள் இருக்கின்றன. நீங்கள் தனியாகச் சென்றால்
எங்கே போய் எந்த வழியில் வருவீர்கள் என்று தெரியாது” என்று அவர் கூறிவிட்டார்.
 என்னுடைய
விருப்பம் முண்டாசுக் கவிக்கு எட்டியதோ என்னவோ, திரும்பும் வழியில் பாரதியார் தங்கி
இருந்த அவரது அத்தை வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே செல்ல அனுமதி ஒன்பது
மணிக்கு மேல் என்றார்கள். “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற பழமொழி நினைவுக்கு
வந்தது. பரவாயில்லை என்று அந்த வீட்டின் முன் நின்று ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்
கொண்டோம்.

தந்தைப்
பெரியார் 1904 ல் ஆன்மீகத் தேடல் கொண்டு காசி பயணம் வந்ததாகவும், மடம் ஒன்றில் உணவு
கேட்ட போது,
 அவர் சூத்திரன் என்பதால் உணவு கொடுக்க மறுத்ததாகவும், தீண்டாமை
குறித்து இங்கே பல இன்னல்களை அனுபவித்து வந்த பிறகுதான்
 பகுத்தறிவாளராக
மாறினார் என்றும்
 செய்தியில்
படித்த நினைவு
 வந்தது. 
அங்கிருந்து அறைக்கு
வந்து உணவு சாப்பிட்டு, காசி விஸ்வநாதரைத்
 தரிசிக்க
ஆட்டோவில் கிளம்பினோம்.

                                    

பி.டி.ஆர்.
மால் வரை ஆட்டோ சென்றது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை
விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்க எடுத்துக் கொண்டு, மனதில் உற்சாகத்தோடு நடந்தோம்.
 எங்கள் அடையாளமான மஞ்சள்
தொப்பி
 கூட்டம் மிகுந்த இடங்களில் குழுவினரைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. கோவிலுக்குள் அலைபேசி அனுமதி இல்லாததால் யாரும் எடுத்துச் செல்லவில்லை.

இந்தியாவில்
12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் முக்தி தரும் தலங்கள்
7. அவற்றுள் முக்கியமானது காசி விஸ்வநாதர் ஆலயம்.
  தங்கள்
வாழ்வில் ஒரு முறையாவது காசியை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்திருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் நுழைவாயிலை நாங்கள் அடைந்தோம்.

கோவிலினுள்  நுழையும்
போது உடலில் ஒரு சிலிர்ப்பு. பல வருடக் கனவு நனவாகும் அந்தத் தருணத்தில் கோடான கோடி
நன்றிகளை மனம் செலுத்தத் தொடங்கியது.
 சிறப்பு தரிசன டிக்கெட் ரூ 300 செலுத்தி வரிசையில்  காத்திருந்தோம். அரை
மணி நேரத்தில் விஸ்வநாதர் தரிசனம் கிட்டியது. காசி விஸ்வநாத
ர் லிங்க வடிவில் வெள்ளியிலான தொட்டி போன்ற அமைப்புக்குள் இருந்து அருள்பாலிக்கிறார். தாங்கள் கொண்டுவரும் அபிஷேக நீர், பால்,  தயிர்,
இளநீ போன்ற பொருள்களை மக்களே இதன் வழியாக விஸ்வநாதருக்கு விட்டு அபிஷேகம் செய்யலாம்.
இந்த சிறப்பான வழிபாட்டு முறை தென்னகத்தில் எங்கும்
  கிடையாது.

நாள்தோறும்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். பக்தர்கள் லிங்கத்தை தொட்டு வணங்குவதால்
தெரிந்தோ தெரியாமலோ, தவறிழைத்திருந்தால் மூலவரின்
  புனிதத்தன்மை
குறையாமல் இருப்பதற்காக இரவு 7 மணி அளவில் கருவறையை தூய்மை செய்து விட்டு, சப்தரிஷி
பூஜை மற்றும் ஆரத்தி செய்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தோம்.

நந்தி,
சிவனுக்கு நேராக இல்லாமல் ஞானவாபி மசூதியை நோக்கி இருந்தது. மசூதிக்கும் விஸ்வநாதர்
ஆலயத்திற்கும் நடுவில் ஒரு தடுப்புச் சுவர் மட்டுமே இருந்தது.
 ஔரங்கசீப் காலத்தில் விஸ்வநாதர் கோயில், இப்போது மசூதி இருக்கும்
இடத்தில் இருந்து  இடிக்கப்பட்டுள்ளது.
 அங்கே இருந்த லிங்கத்தை எடுத்துச் சென்று
உள்ளார்கள்.  
மீண்டும் அகல்யாபாய் ஹோக்கரால் 18 ஆம் நூற்றாண்டில் இப்போது இருக்கும்
விஸ்வநாதர் ஆலயம் அமைக்கப்பட்டது என்றாலும், சிவன் அங்கே இருந்தற்கு
  சாட்சியாக நந்தி மசூதியைப்
பார்த்த நிலையில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவில்
வளாகத்திற்குள் விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், விநாயகர் (துண்டி ராஜ கணபதி, அவிமுக்த
விநாயகர்), அவிமுக்தேஸ்வர் சிவலிங்கம், விஷ்ணு, சனீஸ்வரர், விரூபாக்ஷ கௌரி, சௌபாக்ய
கௌரி, சிருங்கார கௌரி ஆகிய பல தெய்வங்களின் சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

அனைத்தையும்
வழிபட்டு, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இருக்கும் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றோம்.
தங்க நிறத்தில் ஒரு கையில் அன்னக்கரண்டி மறு கையில் பாத்திரம் ஏந்திய கோலத்தில் அமர்ந்திருந்த
தாயாரின் தரிசனம் எங்கள் கண்களை பனிக்க வைத்தது. அன்னபூரணி தாயாரின் தங்கத்திலான சிலை
ஒன்று இருப்பதாகவும் முக்கியத்
 திருவிழா
அன்று மட்டும் அந்த சிலை
  பக்தர்களின் தரிசனத்திற்கு  வைக்கப்படும்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்னபூரணி ஆலயத்திற்கு ஸ்ரீ ஆதிசங்கரர் வருகை தந்த
போது அன்னபூர்ணா துதியை இயற்றினார் என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர் பிரகார தெய்வங்களை
வணங்கி, காசி விசாலாட்சி ஆலயத்திற்குச்
  சென்றோம்.

மராத்திய
அரசியார் அகில்யாபாய் ஹோல்கர் காசி விஸ்வநாதர் ஆலயத்தை திருப்பணி செய்தவர் என்றாலும்
விசாலாட்சி அம்மன் ஆலயத்தின் முழு கட்டுமானமும் நிர்வாகமும் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கே
உரியது என்பது வரலாற்று செய்தி. அவர்களே ஆலய பூசைகளை நடத்துகிறார்கள். தமிழ் மொழியை
அங்கு கேட்க முடிந்தது மனத்திற்கு மகிழ்ச்சி அளித்தது. நாங்கள் சென்ற நேரத்தில் பிரகார
தெய்வங்கள் வைத்து அதற்கு கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரை மணி நேரம் காத்திருந்து
தரிசனம் செய்து வெளியே வந்தோம்.

கோவில்களுக்குச்
செல்லும் வழிகள் மிகவும் குறுகிய சந்துகளாக இருந்தன. எதிரே ஒருவர் வந்தால் இடித்துக்
கொள்ளும் அளவிற்கு சுருங்கிய பாதைகள். அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடங்களை
எப்படிக்
  கட்டியிருப்பார்கள்
என்ற வியப்போடு
 அறைக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்து
நாங்கள் பார்த்தது காணக் கண் கோடி வேண்டுமே என்று நெஞ்சம் உருகி நெகிழ்ந்து நின்ற 
தரிசனம். அது குறித்து அடுத்த பாகத்தில் 

(தொடரும்)

Leave a Reply

Categories