இன்னொரு பிரம்மா – ஜனார்த்தன சேனாபதி

(ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச்  சிறப்பித்த கவிதை)

வியர்வைத் துளிகளை விதையாய் தூவி,
வாழ்க்கைத் துணியை நெய்கிறான் நெசவாளி!
அவன் கைகளில் ஓடும் நூல்கள் வெறும் இழைகள் அல்ல,
தலைமுறைகள் தாங்கி வந்த தமிழின் வரலாறுகள்!
ஒவ்வொரு தட்டுதலிலும் ஒலிக்கிறது உழைப்பின் இசை !
ஒவ்வொரு பின்னலிலும் பிறக்கிறது ஒரு புதிய கனவு!
மெல்லிய பஞ்சு நூலாய் மாறும்!
மந்திரக் கைகளில் சேலையாய் உருமாறும்!
நூலிழைகள் ஒன்று சேர, ஓயாது ஒலிக்கும் தறியின் தாளம்! – அதில்
நூறு வண்ணப் பூக்கள் மலரும்!
நூதனப் புடவைகள் உருவெடுக்கும்!
நாட்கள் பல கடந்து நெய்த ஆடை, நங்கையர் அணியும் அழகிய மேடை!
வண்ணச் சரிகை மின்னும் போது, வார்த்தைகள் தோற்கும் அதன் அழகு கண்டு!
தன் பெயர் தெரியாமல் பலரின் பெருமையை
தோளில் போர்த்தி அனுப்பும் தொன்மையான கலைஞன்!
பட்டுட் சேலையின் பவிசுக்குப் பின்னால்
பதுங்கி நிற்பது
அவன் பொறுமையும் வாழ்க்கையும் தான்!
அவன் நெய்வது துணியை மட்டும் அல்ல…
ஒரு தலைமுறையின் மரபையும்,
ஒரு மனிதனின் கனவையும்!
செய்யும் தொழில் எல்லாம் சீர்தூர்க்கிப் பார்க்கின்
நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை!
ஆடை மட்டும் இல்லையென்றால்,
அழகு என்றோ அம்மணப்பட்டிட்ருக்கும்!
அதனால், படைத்தவன் மட்டுமட்ல்ல,
நெய்தவனும் இன்னொரு பிரம்மா தான்!

— ஜனார்த்தன சேனாபதி

2 Comments

    July 28, 2026

    ஆகா… அருமை அருமை…
    இனிமை.. இனிமை…
    நூலில் கண்ட கலை வண்ணத்தை தமிழ்ச் சொல்லில் கண்டது அருமை.

    July 29, 2026

    அருமையான கவிதை நயம்

Leave a Reply

Categories