ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில்
இரண்டாம் பரிசு : ரூபாய் 500 வென்ற கட்டுரை


இந்தியாவின் கைத்தறி மரபு உலக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. டாக்கா மஸ்லின், காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு, சந்தேரி பருத்தித் துணிகள், இக்காட் நெசவுத் துணிகள், கதர் போன்ற இந்திய நெசவுப் பொருட்கள், தரம் மற்றும் கலைநயத்தின் அடையாளங்களாக உலகம் முழுவதும் போற்றப்பட்டன. அதேபோல் தமிழ்நாட்டின் அடையாளங்களான பவானி ஜமக்காளம், காரைக்குடி காண்டாங்கி சேலைகள், செட்டிநாடு பருத்தி துணிகள் போன்ற புவிசார் குறியீடு (GI Tag) பெற்ற உள்ளூர் நெசவுகளும் நம் விலைமதிப்பற்ற பண்பாட்டுச் சொத்துக்காகத் திகழ்கின்றன.
பாரம்பரிய இந்தியச் சமூகத்தில், ஒரு துணி என்பது வெறும் உடலை மறைக்கும் பொருளாக மட்டுமல்லாமல், அது ஒரு பிராந்தியத்தின் வரலாறு, பண்பாடு, கைவினை அறிவு மற்றும் மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் உயிருள்ள பாரம்பரியமாகக் கருதப்பட்டது. பல நூற்றாண்டுகளாக உலகத்தை வியக்க வைத்த இந்தக் கைத்தறி மரபு, இன்று முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது. நுகர்வை வேகப்படுத்தி, ஆடைகளை அடிக்கடி மாற்றும் கலாச்சாரத்தை உருவாக்கி, மலிவு விலையை மையமாகக் கொண்ட ஃபாஸ்ட் ஃபேஷன் (Fast Fashion), இன்று கைத்தறி மரபு எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
நுகர்வோரின் ரசனையைத் தொடர்ந்து மாற்றி, மிகக் குறுகிய காலத்தில் ஆடைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதே பாஸ்ட் பேஷனின் அடிப்படை வணிக மாதிரியாகும். முன்பு ஆண்டுக்கு இரண்டு அல்லது நான்கு முறை மட்டுமே புதிய ஆடைத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்று உலகளாவிய நிறுவனங்களால் வாரந்தோறும் புதிய வடிவமைப்புகள் சந்தைக்கு வருகின்றன. டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் (Textile Exchange) வெளியிட்ட 2025 அறிக்கையின்படி, உலக ஜவுளி இழை உற்பத்தியில் சுமார் 69 சதவீதம் செயற்கை இழைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த அதிவேக உற்பத்தி முறையின் முதுகெலும்பாக இருப்பவை பாலியஸ்டர், நைலான், அக்ரிலிக் போன்ற செயற்கை இழைகளாகும். இவை அனைத்தும் பெரும்பாலும் பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் நெகிழி சார்ந்த பொருட்களாகும். இயற்கைப் பருத்தி அல்லது பட்டு போன்ற இழைகளைக் காட்டிலும் இவற்றை மிகக் குறைந்த செலவில், மிக வேகமாக, பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் இதையே நாடுகின்றன. இந்த உலகளாவிய உற்பத்தி மற்றும் நுகர்வு வேகத்தின் தாக்கம் இந்தியாவிலும் ஆழமாகப் பதியத் தொடங்கியது.
இந்தப் போக்கு இந்தியாவின் ஆடை நுகர்வுப் பண்பாட்டையும் படிப்படியாக மாற்றத் தொடங்கியது. இந்தியாவில், 1991-ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு, இந்தியர்களின் ஆடைத் தேவை பெரும்பாலும் கைத்தறி, விசைத்தறி மற்றும் உள்ளூர் தையல் கலைஞர்களைச் சார்ந்தே இருந்தது. பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்கு மட்டுமே புதிய ஆடைகள் வாங்கப்பட்டன. மேலும், ஒரு ஆடை கிழிந்தால் அதைத் தைத்து உடுத்துவதும், பின்னர் அது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்குக் கைமாறுவதும், இறுதியில் வீட்டில் தரை துடைக்கும் துணியாக மாறுவதுமான ஒரு முழுமையான வட்டசுழற்சி பொருளாதாரமே (Circular economy) நம்மிடம் நடைமுறையில் இருந்தது. ஆனால், 1991-ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, வெளிநாட்டு முதலீடுகளும் சர்வதேச ஆடைப் பிராண்டுகளின் வருகையும் இந்திய ஆடைச் சந்தையின் இயல்பை மாற்றத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, 2000-களின் மத்தியில் இந்தியப் பெருநகரங்களில் உருவான ஷாப்பிங் மால்களும், ஐடி துறையின் வளர்ச்சியும், ஆடை நுகர்வில் வேகமாக மாறிவரும் போக்குகளை நடுத்தர வர்க்கத்தினரை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தன.
இதன் அடுத்த கட்டமாக, 2010-ல் ஸாரா (Zara), 2015-ல் ஹெச் அண்ட் எம் (H&M) போன்ற உலகளாவிய பாஸ்ட் பேஷன் நிறுவனங்கள் நேரடியாக இந்தியச் சந்தைக்குள் நுழைந்தன. உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் அணியும் பாணியிலான ஆடைகள், மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியப் பெருநகரங்களில் மலிவான விலையில் பொதுமக்களுக்கும் கிடைக்கத் தொடங்கின. தற்போது, இணையப் புரட்சி மற்றும் இணையவழி வர்த்தகத் தளங்களின் (E-commerce) பெருக்கத்தால், இது அல்ட்ரா பாஸ்ட் பேஷன் (Ultra-fast Fashion) என்ற இன்னும் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் ட்ரெண்டுகளை அல்காரிதம்கள் மூலம் கண்காணிக்கும் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலையில் ஆடைகளைத் தயாரித்து இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வரை கொண்டு சேர்த்துள்ளன. இதன் விளைவாக, ஆடைகளை நீண்டகாலம் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து, மிக மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி, சில முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு எளிதாகக் குப்பையில் எறியும் நேர்கோட்டு நுகர்வு முறைக்கு (Linear Consumption) இந்தியச் சமூகம் படிப்படியாக மாறியுள்ளது.
இந்த அதிவேக உற்பத்தி முறையின் மலிவான விலைக்குப் பின்னால் மிகப் பெரிய சுற்றுச்சூழல் விலை உள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) மதிப்பீட்டின்படி, கடல்களில் சேரும் முதன்மை நுண்நெகிழித் துகள்களில் சுமார் 35 சதவீதம் செயற்கை ஜவுளி இழைகளிலிருந்தே உருவாகின்றன. செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் ஆடைகள் ஒவ்வொரு முறை துவைக்கப்படும்போதும், கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகள் கழிவுநீருடன் கலந்து ஆறுகள் மற்றும் கடல்களை அடைகின்றன. இன்று மனித ரத்தம், நுரையீரல், நஞ்சுக்கொடி உள்ளிட்ட உடல் உறுப்புகளில் நுண்நெகிழித் துகள்கள் கண்டறியப்பட்டிருப்பது, நமது ஆடைத் தேர்வுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு உலகளாவிய கவலையாக மாற்றியுள்ளது.
பாஸ்ட் பேஷன் நிறுவனங்கள் வாங்கு – சில முறை அணி – தூக்கியெறி என்ற நுகர்வு மனநிலையைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன. புதிய வடிவமைப்புகள் தொடர்ந்து வருவதால், நன்றாக இருக்கும் ஆடைகள்கூட சில மாதங்களிலேயே பழைய பேஷனாகக் கருதப்பட்டு குப்பைக் கிடங்குகளுக்குச் செல்கின்றன. எல்லன் மேக்ஆர்தர் அறக்கட்டளையின் (Ellen MacArthur Foundation) மதிப்பீட்டின்படி, உலகளவில் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு குப்பை லாரி நிறைய நெகிழி ஜவுளிப் பொருட்கள் குப்பைக்கிடங்குகளுக்கோ அல்லது சாம்பலாக்கிகளில் எரிக்கவோ அனுப்பப்படுகின்றன. இது பாஸ்ட் பேஷன் உருவாக்கும் கழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
இதன் மற்றொரு முக்கியமான விளைவு, உலகளாவிய ஆடைக் கழிவு வர்த்தகமாகும். ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்த நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான டன் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் உலகின் தெற்குப் பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவை தானம் என்ற பெயரில் வழங்கப்படுகின்றன அல்லது வாய்ப்பு என்ற பெயரில் வணிகமாக்கப்படுகின்றன. இந்த ஆடைக் கழிவுகளில் பெரும்பாலானவை செயற்கை இழைகள் அல்லது புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் துணிகளாகும். இந்த செயற்கை இழை துணிகள், உற்பத்தி முதல் பயன்படுத்தப்பட்டு இறுதியில் கழிவாக மாறும் வரை தங்களது முழு வாழ்நாள் சுழற்சியிலும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை இயற்கையாக மட்க பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்பதோடு, திறந்தவெளியில் எரிக்கப்படும்போது நச்சு வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. சந்தையில் ‘ஆர்ட் சில்க்’, ‘சாப்ட் சில்க்’, ‘சில்க் டச்’ போன்ற கவர்ச்சிகரமான பெயர்களில் விற்கப்படும் ஆடைகள் பலவும் உண்மையான பட்டல்ல; அவை பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற செயற்கை இழைகளின் கலவையே ஆகும்.
இந்த அதிவேக சந்தைப் போட்டியின் மிகப்பெரிய சுமையைச் சுமப்பவர்கள் பாரம்பரியக் கைத்தறி நெசவாளர்களே.
உழைப்பும் நேரமும் அதிகம் தேவைப்படும் கைத்தறித் துணிகள், இயந்திரங்களால் சில மணி நேரங்களில் பெருமளவில் தயாரிக்கப்படும் மலிவான செயற்கை இழை ஆடைகளுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய பவானி ஜமக்காளம், காரைக்குடி காண்டாங்கி சேலைகள் மற்றும் செட்டிநாடு பருத்தி துணிகள் போன்ற உள்ளூர் நெசவுகளும், அவற்றை நம்பியுள்ள நெசவுக் குடும்பங்களும் இன்று தங்களின் சந்தையை இழந்து கடுமையான வாழ்வாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. சமூக ஊடகங்களின் தாக்கத்தால், ஒரு ஆடை பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட வேண்டிய பொருளாக இல்லாமல், சில முறை அணிந்து, சில புகைப்படங்களைப் பகிர்ந்து, பின்னர் ஒதுக்கிவிடப்படும் நுகர்வுப் பொருளாக மாறியுள்ளது. இதன் விளைவாக, கைத்தறி நெசவாளர்களின் வருமானம் குறைந்து, தலைமுறைகளாகக் குடும்பங்களுக்குள் கடத்தப்பட்ட நெசவுத் திறன்கள் படிப்படியாக மறைந்து வருகின்றன. குறைந்த வருமானம், சந்தை நிச்சயமின்மை மற்றும் இளம் தலைமுறையினரின் வேறு தொழில்களை நோக்கிய இடம்பெயர்வு ஆகியவை பல நெசவுக் குடும்பங்களைத் தொழிலை விட்டு விலகச் செய்துள்ளன. ஒரு கைத்தறி மறையும்போது, ஒரு தொழில் மட்டும் மறைவதில்லை; அதனுடன் ஒரு சமூகத்தின் பண்பாட்டு நினைவுகளும், பாரம்பரிய வடிவமைப்புகளும், தலைமுறைகளாகச் சேமிக்கப்பட்ட கைவினை அறிவும் மெல்ல மறைந்து செல்கின்றன. இது கைத்தறி நெசவாளர்களை மட்டும் பாதிப்பதில்லை. வளரும் நாடுகளில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகப் பாஸ்ட் பேஷன் நிறுவனங்கள் கூறினாலும், அந்த வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற பணிச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவின் விலையிலேயே உருவாக்கப்படுகின்றன.
ஆனால், பாஸ்ட் பேஷனுக்கு மாற்றான ஒரு நிலையான உற்பத்தி முறையை கைத்தறி உலகம் இன்றும் தக்கவைத்துள்ளது. அங்கு வேகம் இல்லை; பொறுமை இருக்கிறது. பெருமளவு மின்சாரம், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் உற்பத்திக்கு மாறாக, கைத்தறி பெரும்பாலும் உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் மனிதக் கைகளின் உயிரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் கார்பன் உமிழ்வு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இந்த உண்மையை உணர்ந்தே இன்று உலகளவில் ஸ்லோ பேஷன் (Slow Fashion) மற்றும் வட்டசுழற்சி பொருளாதாரம் (Circular Economy) ஆகிய கருத்துக்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
டாட்டா அறக்கட்டளையின் கைத்தறி மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னாள் தலைவரும், கைத்தறித் துறை நிபுணருமான ‘ஷார்தா கௌதம்’, கைத்தறித் துறை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு மிக முக்கியமான நடைமுறைத் தீர்வுகளை முன்வைக்கிறார். கைத்தறியை இயந்திரத் தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு, மலிவான விலைப் போட்டியில் தள்ளுவது முற்றிலும் தவறு என்றும், ஓவியங்களையும் சிற்பங்களையும் நாம் எவ்வாறு தனித்துவமான கலைப் படைப்புகளாகக் கருதி அதற்குரிய மதிப்பை வழங்குகிறோமோ, அதேபோல், கைத்தறித் துணிகளையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். கைத்தறியை ஒரு நலிவடைந்த தொழிலாகக் கருதி பரிதாபத்தின் அடிப்படையில் வாங்கும் மனநிலையிலிருந்து நுகர்வோர் விலகி, அதன் தனித்துவத்தையும் உயர்தரக் கைவினையையும் உணர்ந்து, கைத்தறி ஜவுளி துணிகளை பெருமையுடன் தேடி வாங்கும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.
பாரம்பரிய நெசவு முறைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், இன்றைய இளம் தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன வடிவமைப்புப் புதுமைகளையும், ஈ-காமர்ஸ் போன்ற நேரடிச் சந்தை வாய்ப்புகளையும் இணைப்பதுடன், நெசவாளர்களைச் சொந்தமாகத் தொழில் நடத்தும் தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்பதும் அவரது பார்வையாகும். அதே நேரத்தில், இந்தப் பொறுப்பு நுகர்வோருக்கு மட்டும் உரியது அல்ல. அரசுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் தங்களுடைய பொறுப்பை உணர வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் சந்தை அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் புதுமையான வடிவமைப்புகள், நவீன சந்தைப்படுத்தல் முறைகள், இணையவழி விற்பனை வாய்ப்புகள் மற்றும் இயற்கை இழைகளுக்கான ஊக்குவிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கங்கள் புவிசார் குறியீடு (GI Tag), சில்க் மார்க் போன்ற சான்றிதழ்கள் மூலம் போலிப் பொருட்களைத் தடுத்து, உண்மையான கைத்தறிக்கான நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், பாஸ்ட் பேஷன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility – EPR), கழிவு மேலாண்மை மற்றும் வெளிப்படையான விநியோகச் சங்கிலியை உறுதி செய்யும் கொள்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும். இத்தகைய கொள்கைகளுடன், நுகர்வோரின் ஆடைத் தேர்வுகளும் நிலையான மாற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு ஆடையைத் தேர்வு செய்வது என்பது வெறும் நிறம், வடிவமைப்பு அல்லது விலையைத் தேர்வு செய்வது மட்டுமல்ல; அதன் மூலம் நாம் எந்த உற்பத்தி முறையை ஆதரிக்கிறோம், எந்த வகையான சுற்றுச்சூழல் எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறோம் என்பதையும் தீர்மானிக்கிறோம்.
கைத்தறியைப் பாதுகாப்பது என்பது வெறும் விசைத்தறிக்கு எதிரான போரோ, அல்லது பழம்பெருமை பேசுவதோ அல்ல. அது, அளவுக்கு மீறிய உற்பத்தியையும், ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் நுகர்வு கலாச்சாரத்தையும், நுண்நெகிழி மாசுபாட்டை அதிகரிக்கும் செயற்கை இழைகளின் ஆதிக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு அமைதியான மாற்றமாகும். இயற்கை இழைகளுக்கும், நீடித்த பயன்பாட்டிற்கும் முன்னுரிமை அளிக்கும் ஆடைத் தேர்வுகள், மனித ஆரோக்கியத்திற்கும் நிலையான சுற்றுச்சூழலுக்கும் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. அப்படியிருக்க, நமது அடுத்த ஆடைத் தேர்வு அலமாரியை நிரப்பும் இன்னொரு துணிக்காகவா, அல்லது நாம் வாழ விரும்பும் பூமியின் எதிர்காலத்திற்காகவா?

