ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” படைப்புத்திறன் போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த கதை.
மேகச் சிறையிலிருந்து விடுபட்ட மழை சில்லென்ற சாரலையும் , தென்றலையும் உடன் அழைத்து வர, மரங்களும் , கொடிகளும் நடனமாடியடிபடி மழையை வரவேற்றது.
இயற்கையின் அற்புதத்தை ரசித்தபடி பேருந்தின் ஜன்னலோர இருக்கயில் அமர்ந்திருந்த லீலா தன்னை கடந்து போனது இயற்கையின் காட்சிகள் மட்டுமல்ல, அவள் பட்டசிரமங்களும் தான், என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். என்றுமே அழகாக இருக்கும் இயற்கை கூட இன்று பல மடங்கு அழகானது போல் அவளுக்குத் தோன்றியது.
ஏய் மழையே , உனக்கு என்ன அவசரம்? என்னுடன் போட்டி போட்டுக் கொண்டு வருகிறாய்? உனக்காகவே வயல் வெளியில் காத்திருக்கும் குழந்தை நாற்றுகளையும், செடி கொடிகளையும் நிரப்ப வந்தாயா? என்று தன்முன் பேருந்து ஜன்னலில் தவழ்தோடும் மழைத்துளிகளுடன் மனதிற்குள் பேச்சுவார்த்தை நடத்துமளவு மகிழ்ச்சியின் உச்சத்தில் லீலாவின் மனது இருந்தது.
தன் வேடிக்கை பேச்சிற்கு தானே ரசிகையாகி பேருந்தில் பயணிக்கிறோம் என்ற நினைவின்றி வாய்விட்டு சிரித்துவிட்டாள் லீலா. அப்பாடா , எவ்வளவு நாளாயிற்று என்னை மறந்து இதுபோல் மனம் விட்டு சிரித்து? என்று எண்ணிய லீலாவின் மனது, மெல்ல தன்னை கடந்தகால வாழ்வை அசைபோட்டது.
கணவர் பத்மநாதன், மாமனார், மாமியார், மகன் அரவிந்த் மகள் ஆதிரா, என அழகான குடும்பம், சராசரியான வருமானத்திலும் சந்தோசத்திற்கு குறைவில்லாமல் கௌரமான வாழ்கை என எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. வழக்கம் போல் காலை காபியுடன் வந்த லீலா என்னங்க , எழுந்திருங்க காபி சாப்பிடலாம் என்று கூற, அசைவின்றி இருந்தவரை தட்டி எழுப்பு விட அப்பொழுதுதான் அவர் மீளாத்தூக்கத்திற்கு போய்விட்டது தெரிந்தது. அவளின் அழுகுரல் கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் ஓடி வந்தனர். மகனின் பிரிவிற்காக கலங்குவதா? மருமகள் தவிப்பை தடுப்பதா, குழந்தைகளை தேற்றுவதா ? அல்லது தங்கள் நிலைமையை எண்ணி கண்ணீர் சிந்துவதா என ஏதும் புரியாமல் சிலையென நின்னார்கள் பத்மநாபனின் பெற்றோர்.
எல்லாம் முடிந்து பத்து நாளாயிற்று. துக்கம் ஒரு புறம் இருந்தாலும் குடும்பத்தின் நிலைமை லீலாவை, தீவிரமாக சிந்திக்க வைத்தது. கல்லூரியில் முதல் வருடத்தில் ஆதிராவும், இறுதி ஆண்டில் அரவிந்தும் வயோதிகத்தில் மாமாவும், மாமியும், இந்த சூழ்நிலையில் நான் ஏதேனும் செய்யாவிட்டால், மகன் வாழ்வு வீணாகிவிடும் என்று யோசித்த லீலாவிற்கு தன் கணவரின் நண்பர் பாசத்தோடு தன்னை தங்கச்சி என்று உரிமையுடன் அழைக்கும் முஸ்தபா நினைவிற்கு வந்தார். துபாயில் உள்ள அவருடைய ஒரே மகளுக்கு சமையலுக்கு ஆ ள்வேண்டும் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் சொல்லம்மா, என்று லீலாவிடம் ஒருமுறை சொன்னது நினைவில் வந்தது. தன் மாமனாரிடம் மாமா நான் போய் ஒரெட்டு முஸ்தபா அண்ணாவை பார்த்துட்டு வர்றேன் என்று கிளம்பினாள்.
இரண்டு தெரு தள்ளியிருந்த அவர் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை அடித்தாள் லீலா. கதவவை திறந்த நசீமாவும் முஸ்தபாவும் அவளை அன்புடன் அரவணைத்து உபசரித்தனர். என்னம்மா, ஏதும் உதவி தேவையா என கரிசனத்துடன் முஸ்தபா கேட்டார். ஆமாண்ணா, உங்களால் மட்டும்தான் எனக்கு உதவ முடியும் அதற்காகத்தான் நான் உங்களை தேடி வந்தேன் தெரிந்தோ, தெரியாமலோ இன்று என் குடும்பத்தைக் காக்கும் பெரும் பொ றுப்பு எனக்குள்ளது. அவர் ஆசைபடி அரவிந்தும், ஆதிராவும் நன்றாகப் படிக்கவேண்டும் எனில் நானே என் குடும்பத்திற்கு தந்தையுமாக மாற வேண்டும் இல்லையெனில் என் பிள்ளைகளின் வாழ்க்கை திசைமாறிப்போய்விடும் அண்ணா, விசயத்திற்கு வருகிறேன், துபாயில் உள்ள உங்கள் மகள் வீட்டில் சமையலுக்கு ஆள்வேண்டும் என்று கூறினீர்கள் இல்லையா ? நானே செல்கிறேன் அண்ணா என்ற லீலாவை திகைப்புடன் முஸ்தபா பார்க்க, வேறு வழி எனக்கு தெரியவில்லை அண்ணா.., பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நான் என்ன வேலை செய்து என் குடும்பத்தை காப்பாற்ற முடியும் ? எனக்கு நன்றாகத் தெரிந்தது சமையில் மட்டுமே. யாருக்கோ கொடுக்கும் அந்த வேலையை எனக்குக் குடுத்தால் என்னால் என் குடும்பத்தை கௌரவமாக வாழ வைக்க முடியும், தயவு செய்து எனக்கு நீங்கள்தான்தான் உதவவேண்டும் என்ற லீலாவை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் முஸ்தபா தம்பதியர். ஒருபுறம் நண்பரின் குடும்பத்தின் நிலமையை நினைத்து அவர் வருந்தினாலும், லீலாவின் பேச்சிலுள்ள நியாயம் அவளுக்கு கட்டாயம் உதவ வேண்டும் என்று முஸ்தபாவை சிந்திக்க வைத்தது.
செய்கிறேன் என்று சொன்னதோடு நிற்காமல் அவரே முன்னின்று அவள் துபாய் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகக் கூறினார். கண்களில் நீர் பெருக, நன்றி அண்ணா இந்த உதவியை நானும் என் குடும்பமும் என்றுமே மறவாது என்றி கூறி லீலா விடைபெற்றாள்.
வீட்டை அடைந்த லீலா எல்லோரிடமும் தன் முடிவு குறித்துக்கூற, அரவிந்த் மட்டும் வேண்டாம் அம்மா இனி நான் குடும்பத்தை பார்க்கிறேன், நான் ஏதேனும் பகுதி நேர வேலையில் சேர்ந்து என்படிப்பை முடிக்கிறேன், நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அம்மா என்றான். இல்லை அரவிந்த், நான் நன்றாக யோசித்தே இம்முடிவுக்கு வந்தேன். நான் ஒன்றும் தெரியாத வீட்டிற்குச் செல்லவில்லை. சிறு வயதிலிருந்து அவர்கள் குடும்பம் , நம் குடும்பத்திற்கு பழக்கமல்லவா ஒன்றும் நீ பயப்பட வேண்டாம் உன்மேல் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. தாத்தா பாட்டி, ஆதிராவை நீ நன்றாக பார்த்துக் கொள்வாய் , நீ நன்றாகப் படித்து குடும்பத்தின் பொறுப்பு, உன் கைக்கு வரும் வேளை உன் அம்மா உன்னிடம் ஓடிவந்து விடுவேன் என்ற லீலாவை மரியாதையுடன் பார்த்தனர் மாமனாரும், மாமியாரும் தன் தாயை தெய்வமாகவே பார்த்தனர் பிள்ளைகள்.
வயது வந்த பெண்பிள்ளையை வயதானவர்களின் பொறுப்பில் விடுகிறோமே? என்று லீலாவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் பிள்ளைகள் வளர்ப்பில் பத்மநாதனும், லீலாவும் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்ல, பிள்ளைகளின் பெருமைகள் குறித்து எத்தனை யோமுறை அடுத்தவர் சொல்லக் கேட்டு இருவருமே கர்வப்பட்டதுண்டு.
சில்லென்ற ஒரு துளி லீலாவை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. ஐந்து வருடங்கள் ஐந்துயுகம் போல் போயிற்று. முஸ்தபா மகள் மட்டுமல்ல, மொத்த குடும்பமே லீலாவை நன்றாக பார்த்துத் கொண்டதுடன் நல்ல சம்பளமும் கொடுத்தனர். என்னதான் அன்பாக அவர்களின் கவனிப்பில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தன் குடும்பம், பிள்ளைகளை நினைத்து இரவில் தூக்கமற்ற அவளின் தவிப்பு வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது.
போன மாதம் மகன் போனில் அம்மா, நம் கஷ்டம் எல்லாம் தீர் ந்துவிட்டது இனி நீ இங்கேயே வந்துவிடம்மா, எனக்கு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது. ஆதிராவும் நன்றாகப் படித்து தங்க மெடல் பெற்றுள்ளாள். நம் அப்பாவின் கனவை நான் நிறைவேற்றி விட்டேன் அம்மா. உன் உழைப்பிற்கு நான் மரியாதை செய்துவிட்டேன் இனி வரும் காலமெல்லாம் நீ ராணி போல் இருக்க உன்னை என் கண்போல் காப்பேன் அம்மா என்ற போது அந்த ஒரு வார்த்தைக்காகவும் இந்த ஒரு நாளுக்காகவும்தான் நான் இவ்வளவு நாள் காத்திருத்தேனடா என் தங்கமே, என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் லீலா. அன்றைய இரவையும் கண்ணீருடன் கடந்தாள் லீலா. ஆனால் அது ஆனந்த கண்ணீர் தன் குடும்பத்தை தன் மகன் தூக்கிவிடுவான், இனி எனக்கு எந்த கவலையும் இல்லை என்ற நிம்மதி அவளுக்குள் வந்தது.அடுத்து இங்கு வருவதற்கு தயாரான லீலா அதற்குன்டான ஏற்பாடுகளை செய்தாள்.கண்ணீருடன் அவளை வழி அனுப்பி வைத்தது முஸ்தபாவின் மகள் குடும்பம்.
இதோ என் மண்ணிற்கு வந்து விட்டேன். என் உறவுகளுடன் சேரப்போகும் தூரம் அதிகம் இல்லை. இதோ வந்துவிட்டது நான் இறங்கவேண்டிய இடம் என்று சீட்டிலிருந்து இறங்குவற்கு ஆயத்தமான லீலாவின் கண்கள் தன் மகனைத் தேடியது. அதோ என் செல்லம் எனக்காக குடையுடன் காத்திருக்கிறான். விட்டால் பேருந்தில் இருந்து குதிக்கும் ஆவலில் இருந்தவளை நடத்துனர், அம்மா மெதுவா படிக்கட்டு என்ற சொல் கட்டுப்படுத்தியது. தேடி வந்த தாயை ஓடிவந்து கட்டி அணைத்தான் மகன். அந்த அணைப்பில் அவளின் எல்லா துன்பங்களும் கரைந்து, ஓடும் மழைநீரில் காணாமல் போனது. வானம் சிறு தூரலுடன் நின்று போய் கருமேகங்கள் கலைந்து வெளிச்சப்புள்ளி வைத்து கோலம் போட்டது. அது அவளுக்கு வாழ்வின் வசந்த அழைப்பிற்கான அழைப்பிதழ் என்றே தோன்றியது.


