(ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026இல் மூன்றாம் பரிசு ரூபாய் 3000 பெற்ற சிறுகதை)

“எப்பப் பார்த்தாலும் மொபைலை நோண்டிக்கிட்டே இருந்தா எப்பிடி? இப்பிடி இருந்தா ஆபீஸ்ல வேலை நடக்க வேணாமா….? இதென்ன ஆபீஸா… இல்லை சத்திரமா….? கொஞ்சங்கூட பொறுப்பில்லாம..” என்று பேசிக் கொண்டே விக்னேஸ்வரன் ஒவ்வொருவரையும் பார்த்தார். முறைத்தார். வருகைப் பதிவேடுகளைச் சரிபார்த்துக் கொண்டே “வேலையைப் பாருங்கம்மா..” என்று சத்தம் போட்டே சொன்னார். ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாமல் அவரவர் மொபைலை நோண்டிக் கொண்டே இருந்தார்கள்.
வருகைப் பதிவேடுகளை சரி பார்த்து விட்டு அதில் கையொப்பமிட்டு மேலாளருக்கு அனுப்பிய பிறகு மீண்டும் “ஏம்மா, நான் சொல்லுறது காதுல விழலையா…? மேனேஜர் வந்திருவாரும்மா. நெறைய வேலைகள் இருக்கு. வேலையைப் பாருங்க” என்று மீண்டும் சொன்னார்.
இரவு ஏழு மணி, எட்டு மணி, பல நாட்களில் பத்து மணி வரையில் வேலை பார்த்து விட்டுத்தான் செல்வார்கள். உயர் அதிகாரிகளி்ல் சிலர் மனசு வைத்து சாப்பிட ஏதாவது வாங்கித் தருவார்கள். அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையத்தில் இறக்கி விடச் சொல்லி வாகன ஓட்டுநர்களுக்கு உத்தரவு போடுவார்கள். சிலர் இதையெல்லாம் கண்டும் காணாமல் வேலையை முடிச்சிட்டுக் கிளம்புங்க. என்று சொல்லி விட்டுப் போய்விடுவார்கள். எது எப்படியோ இந்த அலுவலகத்தில் வேலை செய்து வாழ்ந்தால் போதும் என்ற திருப்தியில் இவர்கள் வேலை பார்க்கிறார்கள். திருப்தி ஏற்படாதவர்கள் வேறு வேலை தேடிப் போய்விடுகிறார்கள்.
என்ன பொழப்பு இது என்று ரொம்பச் சலித்துக்கொண்டு லலிதா தன்னுடைய சிஸ்டத்தை ஆன் செய்தாள். இதைப் பார்த்த திவ்யா “கொஞ்ச நேரம் போகட்டும்டி. அதுக்குள்ள என்னடி. அவசரக் குடுக்கை” மெதுவாக அடித்தொண்டையில் சொன்னாள்.
“விக்னேஸ் திட்டுறார்டி”
“அந்தாளைப் போகச் சொல்லு. எப்பப் பாரு வேலை வேலைன்னு நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டான். அவரும் ஒரு அல்லக்கைன்னு அப்பப்ப மறந்து போயிருறாரு. 9.30க்கு வேலை செய்யத் தொடங்குனா ராத்திரி எட்டு மணிக்குத்தான் வேலை முடியுது” என்று சொல்லிக்கொண்டே திவ்யாவும் வேலையைத் துவங்கினாள்.
சாந்தி பல முறை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதினாள். எல்லாமே தோல்வியில் முடிந்தது. தேர்வு முடிவு வந்த இரண்டு நாட்கள் கவலைப்படுவாள். அப்புறம் தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள். ”ஏண்டி… டைப்ரைட்டிங் முடிச்சிருக்க. விடோ சர்டிபிகேட் இருக்கு. கொஞ்சம் உண்ணிப்பா பார்த்து படிச்சா பாஸாகலாமில்லை.” என்று மைதிலி மேடம்தான் ஒவ்வொரு முறையும் உற்சாகப்படுத்துவார். தேர்வு முடிவு வந்ததும் “சரி விடுடி. அடுத்தவாட்டி பார்க்கலாம்” என்று ஆறுதல் சொல்வதும் அவர்தான். மைதிலி மேடம்தான் சாந்திக்கு எல்லாமும். “இப்ப எதுக்குடி உம்முன்னு இருக்க? செத்துப் போன உன் புருசன் கனவுல வந்தானா…” என்று கேட்டுக் கொண்டே சாந்தியின் தோளில் கை வைத்து அவளை ஆசுவாசப் படுத்துவார்.
“அடுத்த மாசம் நான் வேலைக்கு வர மாட்டேன்”
“எங்க போற?”
“கல்யாணம் முடிக்க போறாளாம்”
“யாரைக் கல்யாணம் பண்ணப் போறாளாம்?”
“ம். உன் புருசனைத்தான்”
“அய்யே….. அந்தாளு நல்லாவே இல்லை. நானே அதிகம். ஒன்னு செய்யலாமா என் தம்பியைக் கட்டிக்கிறயா..?”
“ச்சீ. போ. அட்டக்கருப்பன். எனக்கு வேணாம்.”
“ஆமா. நீ பெரிய ரதியாக்கும். போடி இவளே. ஒனக்கெல்லாம் டே கட்டிங் பார்ட்டிதான் கெடைப்பான். நீ அவனுக்கு ஆம்லெட் போட்டுக் குடுத்தே அழுக்காகப் போற“
”யாரு…?”
மணி பன்னிரெண்டைத் தொட்டது. அலுவலகத்தில் தேநீர் குடிக்கச் சென்றவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது பிரிண்ட் எடுத்த ஒரு பேப்பரோடு ராஜி வேகமா வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்தாள்.
“அய்யோ பிரச்சினை அது இல்லைடி. நான் சொல்ல வர்றது ஆபீஸ் பிரச்சினை”
“என்னாடி சொல்லுற.” பதறியபடியே லலிதா அதை வாங்கிப் பார்த்தாள்.
“நாம நாலு பேரும் பாக்குற சீட்டுக்கு நியூ அப்பாய்ன்மெண்ட் ஆகியிருக்கவங்களோட லிஸ்ட் வந்திருக்குடி. அவங்கெல்லாம் ரெகுலர் ஸ்டாஃப்ஸ். நம்மளத் தொடர்ந்து வேலைக்கு வச்சிக்கிறதுக்கு ஆபீஸ்ல பணமும் இல்லை. ரூல்ஸ்ம் இல்லையாம்”. ராஜி சொல்லச் சொல்ல லலிதா ரெம்பவும் சோகமானாள்.
“அடக் கடவுளே…இந்த வேலையை நம்பித்தான் பையனை இங்கிலீஷ் மீடியம் படிக்க அனுப்புனேன். அந்தாளுக்கும் வேலை சரியாயில்லை. என்னடி செய்ய…?.”
“அட நீ வேற. இந்த வேலையைக் காட்டித்தான் எனக்கு கல்யாணம் பண்ண நெனச்சாங்க… நேத்துக் கூட எங்கப்பா தரகர்கிட்ட சொல்லுறப்ப என் பொண்ணு கலெக்டர் ஆபீசுல வேலை பாக்குது. எப்பிடியும் பெர்மெணன்ட் ஆயிரும். அதனால கவுர்மெண்ட் ஆபீசுல வேலை பாக்குற மாப்பிள்ளையா பாருங்கன்னு சொன்னாரு….. இப்ப நீ வந்து இப்பிடிச் சொல்லுற…. ச்சே.. அதுக்குள்ள ரீலு அந்து போச்சே…..” என்று சொல்லி தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினாள் திவ்யா. பின்னர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, ”ம். சரி விடு. நடக்குறதுதானே நடக்கும்” என்று பெருமூச்சு விட்டாள். மூவரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட சாந்தி எழுந்து வந்தாள். பேப்பரை வாங்கி வாசித்தாள். ஒரு நிமிடம் கண்ணை மூடி மௌனமானாள். நீண்ட பெருமூச்சு விட்டாள். நான்கு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. நீண்ட மௌனம் நிலவியது. ஏதோ யோசனை வந்தது போல லலிதா ராஜியைப் பார்த்து, ”ஏண்டி நம்ம நாலு பேருக்கு மட்டுமா..? இல்லை.. விக்னேசுக்கும் சேர்த்தா…? என்றாள். ராஜி மெயில் பேப்பரை மீண்டும் வாசித்து விட்டு நமக்கு மட்டும்தாண்டி. நாம்தான் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்ஸ். அவரு அஸிஸ்டெண்ட் கேட்டகிரியில வராரு. அதனால தப்பிச்சாரு.” என்றாள்.
வெளியே டீ குடிக்கச்சென்ற மேனேஜர் உள்ளே வந்தார். “வேலை பாக்காம ஏன் அரட்டை அடிக்கிறீங்க” என்றார். சாந்தி தன்னுடைய இருக்கைக்குச் சென்றாள். மூன்று பேரும் எழுந்து சென்று மேலாளர் முன்னால் நின்றார்கள். ராஜி பிரிண்ட் எடுத்த மெயிலை அவரிடம் தந்தாள். இருக்கையில் அமர்ந்து நிதானமாகப் படித்தார். கண்ணை மூடி யோசித்தார். அப்புறம் பெருமூச்சு விட்டார்.
“ஓ. கே. நம்ம கையில எதுவுமில்லை. அரசாங்க சமாச்சாரம். வர்றவங்க ரெகுலர் ஸ்டாப். அவங்களுக்கு நீங்க வழிவிட்டே ஆகணும். சரி. சாந்தி எங்கம்மா…?” என்று கேட்டுக் கொண்டே சாந்தியின் இருக்கைக்குச் சென்றார்.
“ஏம்மா சாந்தி நீங்கதான சீனியரு..?”
நான்கு பணியிடங்களுக்குப் புதிய நபர்களை நியமிக்கும் விசயம் எல்லோருக்கும் தெரிந்ததால் மொத்த அலுவலகமும் ஒன்று கூடியது. அலுவலகத்தில் தலைமை அதிகாரி இன்னும் வரவில்லை. யாராவது கேட்டால் ”அய்யா முகாம் போயிட்டு மதியம் வருவார்” என்று மேலாளர் சொல்லுவார். இது வழக்கமானது. அன்றும் அதையே சொன்னார். இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு விசயம் தெரிந்தது. நான்கு பேரும் சாந்தியின் இருக்கைக்கு முன் வந்தார்கள்.
”அந்த அட்வான்ஸ் பில்லை ரெடி பண்ணி பைல் போடச் சொன்னேன். முடிக்கவேயில்லையா…? நீ போயிட்டா யாருகிட்ட கேட்குறது…?
நான்கு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே”சம்பளம் சார்” என்று கோரஸாகக் கேட்டார்கள்.
கொஞ்சம் நிதானித்துக் கண்ணை மூடி யோசித்து பிறகு சொன்னார் “இன்னக்கி வரையில் சம்பளம் கிடைக்கும். நாளைக்கு இல்லை. ஒரு வாரம் சம்பளம் இல்லாம வேலை செய்யுங்க. புதுசா வர்றவங்க வேலை பழகினதற்குப் பெறகு நீங்க வரவேண்டாம்.” எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
“புரியுது சார். சம்பளம் இல்லாம வேலை செய்ய முடியாது சார்” சாந்திதான் சொன்னாள். சாந்தியை உற்றுப் பார்த்தவாரே “நான் வேலை செய்யச் சொல்லலை. கத்துக் குடுக்கச் சொல்லுறேன்” என்றார்.
“ரெண்டும் ஒண்ணுதான் சார். வேலை செஞ்சாலும் பசிக்கும். கத்துக்குடுத்தாலும் பசிக்கும்.”
சாந்தியிடமிருந்து வந்த பதிலை உள்வாங்கி அதற்கு மறுமொழி சொல்ல இயலாமல் மேனேஜர் தினறி நின்றார். அலுவலகத்தில் எல்லோரும் அமைதியாக நின்றார்கள்.
சாந்தியின் வேகத்தைப் பார்த்துக்கொண்டே மேனேஜர் நின்றார். மற்றவர்களும் நின்றார்கள்.

