
“டமார்”என்ற சத்தம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள் பாவை. என்ன நடந்தது என்பதை யூகிப்பதற்குள் அந்தச் சம்பவம் நடந்தேறிவிட்டது. சாலையோரத்தில் கிடந்த அவளால் எழுந்து நிற்க முடியவில்லை. எழுவதற்கு எத்தனித்தபோதுதான் இடுப்பில் பலமாக அடி பட்டிருப்பதை உணர்ந்தாள்.
என்.ஜி.ஓ. தெருவில், நெரிசல் இல்லாத சாலையில் மதியம் பன்னிரண்டு மணி அளவில் ஆக்டிவாவில் சென்று கொண்டிருந்தாள் பாவை. அவளுக்கு நேரெதிரே ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அதற்குப் பக்கவாட்டில் விலகிச் செல்ல முயன்றபோதுதான், எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளம் வாலிபன் அவள் மீது மோத அவள் நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிட, அவனும் சுதாகரித்துக்கொண்டு எதையும் பொருட்படுத்தாமல் மேலும் அதிவேகமாக பறந்துவிட்டான். தலை கவசம் அணிந்து இருந்ததாலும், பதட்டத்தாலும் இடித்தது யார் என்று பார்க்க முடியவில்லை.
சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. “பொறுமையாகச் செல்வது பல நேரங்களில் அழகானது” என்று யாரோ சொல்வது பாவையின் காதில் விழுந்தது. ஒருவர் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்க, இன்னொருவர், “வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் சொல்லுங்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார். அவள் சுயநினைவை இழக்கவில்லை. ஆனாலும், உடல் முழுவதும் ஒருவித மயக்கம் சூழ்ந்திருந்தது.
நாற்பது வயதைத் தொட்டிருப்பாள் பாவை. இரு பிள்ளைகளின் தாய். நாட்காட்டியின் ஒவ்வொரு தாளை கிழிக்கும்போதும், தன் கவலைகளையும் சேர்த்தே கிழித்தெறிபவள். எப்போதும் சிரித்த முகத்துடனும் நேர்மறையான சிந்தனையோடும் இனிமையாகப் பேசுபவள். நியாயத்தைத் தட்டிக் கேட்பதில் அவளுக்கு நிகர் வேறில்லை. அன்றும் அப்படித்தான் சென்றிருந்தாள்.
சில நிமிடங்களில் நிலைமையை உணர்ந்து, தன் கணவன் சசிதரனை அலைபேசியில் அழைத்து, கீழே விழுந்த விவரத்தைக் கூறினாள். மறுமுனையில் கோபத்தில் மௌனமாய் அலைபேசியை துண்டித்தார் சசிதரன். பத்து நிமிடங்களில் வந்த சசிதரன், “இது உனக்கு வேண்டாத பிரச்சினை. ஏன் சொன்னதைக் கேட்க மாட்டேங்கிறாய்? நீதான் இப்போ கஷ்டப்படணும்” என்று சொல்லிக்கொண்டே, மற்றவர்களின் உதவியுடன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவர் உடனே ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, மூன்று மாதங்கள் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்ல, அதிர்ந்தது கணவன் மட்டுமல்ல, பாவையும்தான். கீழே விழுந்தது வருத்தமாக இருந்தாலும் அதையும் புன்னகையுடன் எதிர்கொண்டாள். உடலின் காயங்களை விட மனதில் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தாள்.
ஒரு மாதத்திற்கு முன்புதான், அவள் ஆசை ஆசையாகப் புதிதாகக் கட்டிய வீட்டின் சமையலறைக்காக ஒரு சிம்னி வாங்கியிருந்தாள். வாங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே பலமுறை பழுதானது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொறியாளர்கள் வந்து, அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைச் சொல்லிச் சென்றார்கள். ஆனாலும், சிம்னி சரியாகவில்லை.
அவள் பலமுறை வாங்கிய கடைக்குச் சென்று, “வேறு சிம்னி மாற்றித் தாருங்கள்” என்று கெஞ்சியும், நியாயமாகக் கேட்டும் பார்த்தாள். எதுவும் பலனளிக்கவில்லை. அதனால், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வேண்டும் என்று முடிவு செய்தாள். நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று தன் கணவனிடம் அடம்பிடித்து அது சம்பந்தமாக வழக்கறிஞரைப் பார்ப்பதற்காகத் தானே சென்றுவிட்டாள்.
வழக்கறிஞரைப் பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் இந்த விபத்து நடந்தது. மனம் தளராத பாவை, படுத்துக்கொண்டே என்னென்ன நோட்டீஸ் தயார் செய்ய வேண்டும், எந்தெந்தப் பொறியாளர்கள் வந்தார்கள், புதிய சிம்னியாக இருந்தாலும் சரி செய்யவே முடியாது என்பதற்கு என்னென்ன காரணங்கள் சொன்னார்கள் என்பதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டாள். வழக்கறிஞரிடம் தொடர்ந்து பேசி, விடாமல் போராடினாள்.
கடைசியாக, அந்த நிறுவனமே சமரசம் செய்துகொள்ள முன்வந்தது. சிம்னியின் மொத்தத் தொகையையும் திருப்பிக் கொடுத்ததோடு, வழக்கறிஞர் கட்டணத்தையும் சேர்த்துக் கொடுத்துவிட்டார்கள். இவை அத்தனையும் பாவையின் விடாமுயற்சியினால் மட்டுமே சாத்தியமானது. இழந்த பணத்தை மீட்டெடுத்ததுடன், நியாயத்தையும் நிலைநிறுத்திவிட்டாள் பாவை.
“பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? அது பார்க்கும் பார்வையில் இருக்கிறது” என்பாள். துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் அதை சாதுரியமாகக் கையாளத் தெரிந்தவள். மனித மனங்கள்தான் எத்தனை விசித்திரமானவை! பேரானந்தத்தின் உச்சத்தில் வரும் கண்ணீர்த் துளிகள், பெருந்துயரத்தின் உச்சத்தில் வரும் புன்னகை, உச்சகட்டக் கோபத்தில் வரும் மௌனம், பேரதிர்ச்சியில் வரும் திகைப்பு!
அன்று அவள் வாழ்விலும் அப்படித்தான் ஒரு செய்தி வந்தது. அந்தப் பேரதிர்ச்சியில் திகைப்புற்று நின்றிருந்தாள் பாவை.
தன் அலைபேசி அழைப்பைக் கேட்டு, “யார் அழைத்திருப்பார்கள்?” என்று எண்ணிக்கொண்டே அறையின் உள்ளிருந்து வந்த பாவையின் கணவன் சசிதரன், பாவையின் அதிர்ச்சியான முகத்தைக் கண்டு, “யார் போனில் பேசியது?” என்று கேட்டுக்கொண்டே அவளை ஆசுவாசப்படுத்தி, சேரில் அமர வைத்தார். சில நிமிட அமைதிக்குப் பிறகு, “வண்டியைக் கண்டுபிடித்துவிட்டார்களாம்” என்று கூறினாள் பாவை, சற்றும் அதிர்ச்சி விலகாமல்.
விபத்து நடந்த அன்றே பாவை சொன்னபடி சசிதரன் புகார் கொடுத்திருந்தார். “வண்டி எண்ணைப் பார்த்தீர்களா?” என்ற காவலரின் கேள்விக்கு பாவையிடம் பதில் இல்லை. கீழே விழுந்த அதிர்ச்சியில் எதுவும் நினைவில் இல்லை. ஆனால், பாவை விடவில்லை. தனது கணவரிடம், “அந்தத் தெருவில் நிறைய கடைகள் உள்ளன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் நிச்சயம் பதிவாகியிருக்கும்” என்று கூறி அனுப்பியிருந்தாள். அதுபோலவே ஒரு கடையின் பதிவில் வண்டி எண் மங்கலாகத் தெரிந்தது. அதை வைத்துத்தான் வண்டியின் உரிமையாளரை காவல்துறை தேடியது.
இன்று இன்ஸ்பெக்டர் அது விஷயமாகத்தான் சசிதரனின் அலைபேசிக்கு அழைத்திருந்தார். இன்ஸ்பெக்டர் என்று திரையில் வந்ததனால் பாவை அந்த அழைப்பை ஏற்றாள். அதில், “விபத்து வழக்கில் வண்டியைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், வண்டியின் உரிமையாளர் வாசுகி என்றும், ஓட்டி வந்தது இருபது வயதான அவரின் மகன் திசாந்தகன்” என்றும் இன்ஸ்பெக்டர் கூறியிருந்தார்.
இந்தத் தகவலைக் கேட்டுத்தான் பாவை அதிர்ந்திருந்தாள். காரணம், வாசுகி அவளது சிறுவயது பள்ளித்தோழி. பாவை குடியிருக்கும் பகுதிக்குச் சற்று தொலைவில்தான் அவர்களும் குடியிருக்கிறார்கள். மகன் சிறு வயதாக இருக்கும்போதே வாசுகி தன் கணவனை இழந்தவள். அவர்களுடையது காதல் திருமணம் என்பதால், இருவர் வீட்டிலும் அவர்களுக்கு ஆதரவு இல்லை. சொத்தும் எதுவும் கிடையாது. அவள் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் மகனை கல்லூரிப் படிப்பை முடிக்க வைத்திருந்தாள். அவனும் கல்லூரி வளாகத் தேர்விலேயே ஒரு நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அதற்காக நண்பர்களுக்கு மதிய விருந்து கொடுத்து, அவர்களுடன் உற்சாகமாக இருந்துவிட்டுத் திரும்பும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது.
“வழக்குத் தொடர்வதா, வேண்டாமா?” என்று பாவையின் மனதில் மிகப்பெரிய போராட்டமே நிகழ்ந்துகொண்டிருந்தது. “விட்டுடு பாவை. அவன் உன் தோழியின் மகன். ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள குடும்பம். இப்பொழுதுதான் ஒரு நல்ல நிலைக்கு வர இருக்கிறார்கள்” என்று சசிதரன் கூறினார். “இல்லைங்க. இதை இப்படியே விட முடியாது. ஒருவேளை அவன் இடித்தவுடன் நின்று, என்ன நடந்தது என்று அறிந்து உதவியிருந்தால்கூட அதைப்பற்றி யோசிக்கலாம். இதை இப்படியே விட்டால் மீண்டும் இந்தத் தவறை அவன் செய்ய மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்றாள் பாவை. “இது வழக்கு, விசாரணை என்று போகும்போது அவனுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும்” என்றார் சசிதரன். பாவை பதில் கூறவில்லை.
அன்று மாலை வழக்கறிஞர் வந்தார். அவரிடம் விவரங்களைக் கூறினாள் பாவை. “மேடம், இரண்டு வழிகள் இருக்கு” என்றார் அவர். “ஒன்று, அலட்சியமாக வண்டி ஓட்டிக் காயப்படுத்தியதற்கான குற்றவியல் வழக்கு. இன்னொன்று, மோட்டார் வாகன விபத்து, இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தின் மூலம் இழப்பீடு கேட்பது. ஆனால் ஒரு சிக்கல் இருக்கு. அந்த வண்டிக்கு காப்பீடு காலாவதியாகி இருக்கு.” “அப்போ இழப்பீடு யார் தருவாங்க?” என்றாள் பாவை. “வண்டி உரிமையாளர்தான்” என்றார் வழக்கறிஞர். “சரிங்க. இதைப் பற்றி யோசித்து ஒரு சரியான முடிவை நாளை கூறுகிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள் பாவை.
அன்று இரவு முழுவதும் பாவையால் சரியாகத் தூங்க முடியவில்லை. மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடந்துகொண்டிருந்தது. “எனக்குப் பதிலாக அங்க ஒரு குழந்தையுடன் பெரியவரோ அல்லது தம்பதியரோ விழுந்திருந்தால்? நட்புக்காக நியாயத்தை விட்டுட்டா, நாளைக்கு நான் யார்கிட்டயும் நியாயம் கேட்கவே முடியாது” என்று பலவிதமான எண்ண ஓட்டங்களுடன் உறங்கச் சென்றாள் பாவை.
வாசுகி காவல் நிலையத்தில் ஒரு ஓரமாக நின்று அழுதுகொண்டிருக்க, திசாந்தகன் இன்ஸ்பெக்டரிடம், “சார், ஏதோ தெரியாமல் நடந்துடுச்சு சார். அங்கே நான் நின்றிருந்தால் எல்லாரும் சேர்ந்து என்னை அடித்திருப்பார்கள் என்று பயந்துதான், அவங்க விழுந்துட்டாங்கன்னு தெரிஞ்சும் நான் நிற்காமல் போயிட்டேன். இனிமேல் இந்த மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக்கிறேன், சார். தயவுசெய்து இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று கைகூப்பிக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மகனின் பரிதாபமான நிலையைப் பார்த்த வாசுகியால் அழ மட்டுமே முடிந்தது. “கடவுளே, நான் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகப் போய்விட்டதே! என் மகனின் வேகத்தினாலும் அஜாக்கிரதையினாலும் அவன் வாழ்க்கையுடன் என் நம்பிக்கையும் வீணாகிப் போய்விட்டதே!” என்று வருந்திய வாசுகி, அப்படியே சரியத் தொடங்கினாள். அம்மாவின் நிலையைக் கண்டு பதறிப்போன திசாந்தகன், “அம்மா!” என்று கதறினான்.
அந்தச் சத்தத்தில் அலறியடித்துக்கொண்டு எழுந்த பாவையை அவளது கணவன் சாந்தப்படுத்தினார். “என்னாச்சு, பாவை?” என்று அவர் வினவ, “ஒண்ணும் இல்லீங்க. குளிச்சிட்டு நம்ம காவல் நிலையம் போயிட்டு வந்துடலாம்” என்று கூறியவள், வேகமாகக் கிளம்பினாள்.
இருவரும் காவல் நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கே பாவை கண்ட கனவில் பாதி நனவாகிக்கொண்டிருந்தது. ஒருபுறம் வாசுகி விம்மிக்கொண்டிருக்க, மறுபுறம் திசாந்தகன் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“வாங்க மேடம். இதோ, உங்க மேல வண்டியை இடித்துவிட்டு நிற்காமல் போன பையனை வண்டியோட சேர்த்துப் பிடிச்சிட்டோம்” என்று இன்ஸ்பெக்டர் கூறியதைக் கேட்டு, திரும்பிய வாசுகிக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாவை மேலயா நம் மகன் வண்டியை மோதிவிட்டான்? ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், மனதில் லேசாக ஒரு நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது. இடுப்பில் வலியுடன் மெதுவாக நடந்த பாவை முழுவதுமாக உடைந்துபோயிருந்த வாசுகியை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டபோது, அவள் கையில் தெரிந்த நடுக்கம் பாவையை ஏதோ செய்தது.
நேராக இன்ஸ்பெக்டரிடம் சென்ற பாவை, திசாந்தகனின் தோளை பற்றியவாறே “சார், இவன் என் உயிர் தோழியின் மகன். அவளுடைய கனவே இவன்தான். அவளுடைய கனவை உடைக்க விரும்பவில்லை. என் புகாரை வாபஸ் வாங்கிக்கிறேன். இவனுடைய அம்மாவிற்காக இதோட இந்தப் பிரச்சினையை விட்டுடலாம் சார்” என்று கூறினாள்.
“நீங்க இவ்வளவு தூரம் சொல்வதனால் விடுகிறேன், அம்மா.” என்று கூறிய இன்ஸ்பெக்டர், வாசுகியிடம் “இனிமேல் உங்க பையன் மேல எந்தக் கம்ப்ளைன்ட்டும் வராமல் நீங்க பார்த்துக்கணும்” என்றார். திசாந்தகனுக்கும் புத்திமதி கூறி எல்லோரையும் அனுப்பிவைத்தார்.
வெளியே வந்த பாவையிடம் ஓடிச்சென்ற திசாந்தகன், “அம்மா, தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்களை அப்படியே விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்திருக்கணும். பயத்தினால் நான் போயிட்டேன்மா. இனி என்னைக்கும் என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு தவறு செய்ய மாட்டேன்” என்று கைகளைக் கூப்பிச் சொன்னான்.
“தவறு என்பதை நீ எப்போது உணர்ந்தாயோ, அதுவே நல்ல மாற்றத்திற்கான முதல் படி. அதே மாதிரி, நீ எனக்கு ஒரு வாக்குறுதி தரணும். பொறுமையாகச் செல்வது பல நேரங்களில் அழகானது என்பதை எந்தச் சூழ்நிலையிலும் நினைவில் வைத்து, அதே சமயம், நம்மால ஒரு தவறு நடந்தால் அந்த இடத்தைவிட்டு ஓடிப்போகாமல், முடிந்தவரை ஒரு சின்னப் பிராயச்சித்தமாவது செய்யணும். இந்த வாக்குறுதியை நீ எனக்குக் கொடுக்கணும்” என்றாள். “கண்டிப்பாக, மா” என்று சொல்லிக் காலில் விழுந்தான்.
“சரி, எழுந்திரு. வெற்றி உனக்கு உலகத்தை அறிமுகப்படுத்தும் தவறு உலகத்தை புரிய வைக்கும் ” என்று கூறிய பாவை, வாசுகியைப் பார்த்து, “நீ எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். உன் மகன் கண்டிப்பாக நல்ல பையனா இருப்பான். உன்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் வசந்தம் வரும்” என்று ஆறுதல் கூறினாள். அதன்பிறகு, பாவை தம்பதியினர் வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்ததும் பாவையைப் பெருமையுடன் பார்த்தார் சசிதரன்.
“என்னங்க, அப்படி பார்க்கிறீங்க? எப்ப பார்த்தாலும் நீதி, நேர்மைன்னு பேசுறவ திடீர்னு பல்டி அடிச்சிட்டாளேன்னு யோசிக்கிறீங்களா?” என்று கேட்ட பாவை,“மன்னிக்கிறதுகூட ஒரு விதத்தில் தண்டிக்கிற மாதிரிதான். என் மகன் தப்பு செஞ்சா நான் மன்னிக்க மாட்டேனா?” என்று கேட்ட பாவை சில கணம் அமைதிக்குப் பிறகு, மெல்லிய குரலில் சொன்னாள்:
“நீதிக்கும் வாழ்வியலுக்கும் இடையேயான போராட்டத்தில் ஜெயித்தது என்னவோ, எதார்த்தத்தை உள்வாங்கிய வாழ்வியல்தாங்க.” என்று சொன்னதும், புன்னகையுடன் தலையசைத்து ஆமோதித்தார் சசிதரன். பேரானந்தத்தின் உச்சத்தில் வரும் கண்ணீர் துளிகளுடன்.
(ஈரோடு வாசல் – படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் சிவகாமி, சரஸ்வதி , கௌசல்யா ஞானேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து எழுதிய சிறுகதை)

