தேவதை – கௌசல்யா ஞானேஸ்வரன்

“தங்க பூவே உன் கண்ணால தான் நின்னேன் நானே… தங்க பூவே ஒரு தேவதை வந்தது என் வழி தானே… வண்ண மானே உன் பின்னால தான் வந்தேன் நானே…”

அனிருத் இசையில் இயர் போனில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தலையை கோதியபடியே இயல்பான லாவகத்துடன் பைக் ஓட்டிக்கொண்டிருந்தான் சூர்யா. மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் சூர்யா, பிரபலமான பொறியியல் கல்லூரியில் படித்து வந்தான். அந்த வயதிற்கே உரிய சுறுசுறுப்பும் முதல் பார்வையிலேயே மற்றவர்களை கவரும் தன்மையும் அவனுக்கு இருந்தது. பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால், அவன் மீது இருவருக்கும் அளவுக்கதிகமான அன்பு.

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்ததால், அதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு சுமார் பத்தரை மணிக்கு வீட்டை நோக்கிப் பைக்கில் வந்து கொண்டிருந்தான். சுற்றுலாவுக்குப் பைக்கிலேயே செல்ல வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை. பாதுகாப்பு அவசியம் என்பதால் காரில் செல்லவே அவனுடைய அப்பா சொல்லியிருந்தார்.

இரவின் அமைதியை ரசித்தபடி, தன்னுடைய பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தவும், தன் அம்மாவிடமிருந்து போன் வரவும் சரியாக இருந்தது.“சூர்யா… இவ்வளவு நேரமாச்சு. எங்க இருக்க?” என்று அம்மா கேட்க, “அம்மா… வந்துட்டு இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுல இருப்பேன். நாளைக்கு பைக் ரைட் ரொம்ப தூரம் போகணும் நினைச்சா ஜாலியா இருக்குமா? அப்பாவை நீங்கதான் கன்வின்ஸ் பண்ணனும்” என்று சொல்லிக் கொண்டே, “அப்பாவுக்கு இஷ்டமே இல்…” எனும் போதே தொடர்பைத் துண்டித்தான்.

மீண்டும் பாடல் ஒலிக்க, அதன் லயத்தில் மெதுவாகத் தாளம் போட்டுக் கொண்டே, நெரிசல் குறைந்த சாலையின் இரவின் அமைதியை ரசித்தபடி பைக்கின் வேகத்தைக் கூட்டினான்.

இவன் வண்டிக்கு முன் நாற்பது முதல் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அழுதுகொண்டே சூர்யாவைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொல்லிக் கையை ஆட்டினார்.

ஒரு நிமிடம் சூர்யா திடுக்கிட்டு பதறி பிரேக் அடிக்க, டயர்கள் கீரிச் என்ற சத்தத்துடன் நின்றன. அவன் காதில் இருந்த இயர் போன் சறுக்கி விழுந்து, வெளியே இருந்து பாடல் கேட்கத் தொடங்கியது. “என்னம்மா ஆச்சு?” சூர்யா கேட்க, அந்தப் பெண் அழுதபடியே, “தம்பி… என் பையன் அஜய். மூணு மணி நேரத்துக்கு முன்னாடி போன் செய்து, இந்த இடத்தில் இருக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்னு சொன்னான். அதுக்கப்புறம் அவன் போன் சுவிட்ச் ஆஃப். ரெண்டு மணி நேரமா வீட்ல தவிச்சிட்டு இருந்தேன். போனை ஆஃப் பண்ற பழக்கம் எல்லாம் கிடையாது. அதனால அவன் சொன்ன இந்த இடத்துல ஒரு மணி நேரமா நின்னுட்டு இருக்கேன். இங்க எனக்கு வேற யாரையும் தெரியாது. என்ன செய்வதுன்னே தெரியல தம்பி…” என்றார்.

சூர்யாவுக்கு அந்த அம்மாவைப் பார்க்கும் பொழுது தனது அம்மாவின் நினைவு வந்தது. “உங்க பையன் போட்டோ இருக்காம்மா?” என்று கேட்டவுடன்,“இருக்கு தம்பி” என்று அவர் போனில் அஜய்யின் புகைப்படத்தைக் காட்டினார்.

புகைப்படத்தைப் பார்த்த சூர்யாவுக்கு அந்த முகம் எங்கேயோ பார்த்தது போல இருந்தது. அப்போது சூர்யாவிற்கு நண்பன் நந்தனிடமிருந்து கால் வந்தது.

நான்காம் ஆண்டு மாணவனான நந்தனுக்கு கல்லூரியில் ஏராளமான நண்பர்கள் இருந்தனர். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதோடு, யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உடனே ஓடிச்சென்று உதவும் குணம் கொண்டவன்.

அவர்களுடைய கல்லூரியில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்காக நாடகம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதன் ஒருங்கிணைப்பு செய்யும் பொறுப்பு இருவரிடம் இருந்ததால், அவ்வப்போது சூர்யாவும் நந்தனும் பேசிக் கொள்வார்கள். அதற்காகத்தான் இப்போதும் நந்தன் அழைத்திருந்தான். ஆனால், அது பற்றி பேசும் முன்பே சூர்யா, அஜய்யின் புகைப்படத்தை அனுப்பி, “இவன் யார்?” என்று கேட்டான்.

“டேய்… இந்தப் பையன் நம்ம காலேஜ்லதான் படிக்கிறான். ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட். பேரு அஜய். அவனை மூணு மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு கும்பல் சேர்ந்து அடிச்சிருக்காங்க. உடம்பெங்கும் பலத்த காயம். கீழே விழுந்த பிறகும் அவனை விடாமல் அடிச்சிருக்காங்க. அங்கிருந்த சில மாணவர்கள் தடுத்து, உடனே மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்காங்க. இப்போ அவசர சிகிச்சைப் பிரிவுல சிகிச்சை நடக்குது.” “இதற்கெல்லாம் காரணம் ரஞ்சித். பைனல் இயர் ஸ்டூடண்ட். அவனுக்கு பின்னாடி பக்கபலமா இருப்பது அவனது அரசியல் குடும்பம் தான். அதைத் தவறுதலாக மிஸ் யூஸ் பண்ணிட்டு இருக்கான்.”

சூர்யா அதிர்ச்சியடைந்தான். சில மணி நேரங்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த ஒரு மாணவன், இப்போது உயிருடன் போராடிக்கொண்டிருக்கிறான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

“அஜய் அம்மா என் கூடதான் இருக்காங்க. எந்த மருத்துவமனை?”குரல் தளர்ந்து இருந்தது.“அரசு மருத்துவமனை. நீ உடனே அஜய்யோட அம்மாவை அழைச்சுக்கிட்டு அங்கே போ. நான் அங்கே வர்றேன்.”

சூர்யாவின் அம்மாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வர, உடனே தொடர்பு கொண்டான்.
“சூர்யா…எங்க இருக்கப்பா?”
“அம்மா… நான் ஒரு ஸ்கூல் ஃப்ரெண்டைப் பார்க்க வந்திருக்கேன். அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. கொஞ்சம் உதவி பண்ணிட்டு இருக்கேன். வந்துட்டு எல்லாத்தையும் சொல்றேன்.” “சரி. பத்திரம்” என்று அம்மா சொன்னவுடன் தொடர்பைத் துண்டித்தான் சூர்யா.

அஜய்யின் அம்மாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றான்.

அங்கு ஏராளமான மாணவர்கள் திரண்டு நின்றிருந்தனர். “அஜய் உயிரோடு வேண்டும்…” “அவனுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது…” என்று மாணவ, மாணவியர் பதற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு மாணவி ரூபிகா அழுதுகொண்டே, “அஜய்… உனக்கு எதுவும் ஆகக்கூடாது. நீ எப்பவும் நியாயத்துக்காகப் பேசுவியே. உனக்கு நியாயம் கிடைக்கணும்” என்று உச்சஸ்தானக் குரலில் கத்திக் கொண்டிருந்தாள்.

அஜய்யின் அம்மா பதற்றத்துடன், “என் பையனை நான் பார்க்கணும் தம்பி… என்னை அவன் கிட்ட கூட்டிட்டுப் போங்க…” என்று சூர்யாவிடம் கதறினாள்.

“அம்மா… டாக்டர் சிகிச்சை பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நந்தனும் அங்கே வந்தான்.

சூர்யாவின் அம்மாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வர, எடுக்கும் மனநிலையில் சூர்யா இல்லாததால் நந்தன் போனை எடுத்துப் பேசினான். “அம்மா, சூர்யா என் கூடதான் இருக்கான். நீங்க பயப்படாதீங்க” என்று இயல்பாகப் பேசினான் நந்தன்.

அவசர சிகிச்சைப் பிரிவின் முன்பு, கண்களில் வழியும் நீர் கன்னங்களில் வழிந்து மூக்கிலும் வழிய, துடைக்கும் திறனற்று அஜய்யின் அம்மா நின்றுகொண்டிருந்தார்.அஜய்யின் அம்மாவைப் பார்க்க சூர்யாவிற்கு மிகவும் மனது கஷ்டமாக இருந்தது.

“டாக்டர்… என் பையனை ஒரு தடவை பார்க்க விடுங்க டாக்டர்…” என்று கெஞ்சினார். “அம்மா, இப்போ அவசர சிகிச்சை நடந்துகிட்டு இருக்கு. கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்று சொன்னதும், கைகளைக் கூப்பியவாறு கடவுளை வேண்டி, செய்வதறியாது நின்றுகொண்டிருந்தார்.

சில மணிநேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.
“அஜய்க்கு நினைவு திரும்பியிருக்கிறது. இப்போதைக்கு நிலைமை ஓரளவுக்குச் சீராக இருக்கிறது. தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும். உடனடியாக உயிருக்கு ஆபத்து இல்லை” என்று டாக்டர் சொல்லவும்,

“எங்க குலசாமி எம் பையனைக் காப்பாத்திடுச்சு” என்று சொல்லி, கைகளை மேல் நோக்கிக் கூப்பி, தலையையும் உயர்த்திக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அஜய்யின் அம்மா. பின் கண்ணீருடன் டாக்டருக்கு நன்றி சொல்லி உள்ளே சென்றார்.

மருத்துவ உபகரணங்களுடன், படுக்கையில் காயங்களுடன் கிடந்த அஜய் கண்களைத் திறந்து தன் அம்மாவைப் பார்த்தான். “பயப்படாதீங்கம்மா” என்றான் ஆறுதலாக.

வெளியில் நின்றிருந்த நந்தன் மற்றும் சூர்யாவிடம் மாணவி ரூபிகா, “அண்ணா, அஜய் எப்பவும் நியாயத்துக்காகத்தான் பேசுவான். என்னை ஒரு சீனியர் தொடர்ந்து கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தான். அதை அஜய் தட்டிக் கேட்டான். அதற்குப் பிறகும் என்னை அவன் தொடர்ந்து டீஸ் செய்து கொண்டே இருந்தான். இது மட்டும் இல்லாம நிறைய தவறுகள் செய்திருக்கான். அதனால் அவனை அடிச்சுட்டான். பிறகு அந்த சீனியர் மாணவர்கள் குரூப்பா சேர்ந்து இவனை அடிச்சுட்டாங்க” என்று சொல்லி, “சூர்யா அண்ணா, நீங்க எனக்கு உதவி இருக்கீங்க. காலேஜ் பீஸ் கட்டுவதற்கு. நன்றிங்க அண்ணா” என்றாள் குரல் ததும்ப.

சூர்யா எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக நின்றான். செவிலியர் வெளியே வந்து,“அம்மா, கொஞ்ச நேரம் இருந்துட்டு வெளிய வரட்டும். அப்புறம் நீங்களும் பார்க்கலாம்” என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களும் உள்ளே சென்றனர். பார்த்ததும் நந்தனிடம் அஜய் மெதுவாகப் புன்னகைத்து, பின் சூர்யாவிடம், “நீங்க… என்னை மறந்துட்டீங்களா அண்ணா?” என்றான்.

அந்தக் குரலைக் கேட்டதும் சூர்யாவுக்கு நினைவு வந்தது. சில நாட்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அஜய் சூர்யாவிடம் உதவி கேட்டிருந்தான். அப்போது சூர்யா அவனுக்குப் பணம் கொடுத்திருந்தான். அந்தப் பணத்தை வைத்து ரூபிகாவின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தியிருப்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.

“ஓ அஜய்?” என்று கட்டை விரலைமடித்து தலையை சாய்த்து இரு விரலை நீட்டி ஆர்வமாகச் சொல்ல, அஜய் புன்முறுவலோடு மெதுவாகத் தலையசைத்தான்.சூர்யாவின் மனம் கனத்துப் போனது.

வெளியே வந்ததும் அஜய்யின் அம்மா சூர்யாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தம்பி… என் பையன் எங்க இருக்கான்னே தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தப்போ, நீங்கதான் அவனைத் தேடி என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்க. நீங்க கடவுள் மாதிரி வந்து என் பையனை என்கிட்ட சேர்த்துட்டீங்க. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல தம்பி…” என்றாள்.

சூர்யாவால் எதுவும் பேச முடியவில்லை.“அம்மா, நீங்க என் அம்மா மாதிரி” என்று மட்டும் நா தழுதழுக்கச் சொன்னான்.

அவனுடைய மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. உயிர் எவ்வளவு மதிப்புமிக்கது! ஒரு சிறிய கோபம், ஒரு சண்டை, ஒரு விபத்து என்று எத்தனை உயிர்கள் போய்விடுகின்றன! சிலர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கும் செல்கிறார்கள்.

“நம்ம உயிருக்கு நாமே முக்கியத்துவம் கொடுக்காம இருந்துட்டோமே…” என்று நினைத்தான்.

தன்னைப் பற்றியும், தன் பாதுகாப்பைப் பற்றியும் அப்பாவும் அம்மாவும் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதை அன்றுதான் அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே அம்மாவுக்கு போன் செய்தான்.
“அம்மா, பைக்கை ஓட்டிக்கிட்டு வரும் வழியில ஒரு அம்மா அழுதுகிட்டு நின்னாங்க. அவங்க பையன் காணாம போயிருந்தான். அந்தப் பையன் நம்ம காலேஜ்லதான் படிக்கிறான். அவனை ஒரு கும்பல் அடிச்சுட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தாங்க. அவங்க அம்மாவை நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன்.”
சில நொடிகள் அமைதியாக இருந்த அம்மா,
“அப்பா பைக்குல போக வேண்டாம்னு சொன்னது உன் பாதுகாப்புக்காகத்தான். ஆனா இன்று நீ ஒரு அம்மாவுக்கு உதவி பண்ணியிருக்கே. அது போதும். காலையில டூர் போறதைப் பற்றி அப்புறம் பேசிக்கலாம். நீ முதல்ல பாதுகாப்பா வீட்டுக்கு வா” என்றார்.

சூர்யாவின் கண்களில் கண்ணீர் வந்தது.மருத்துவமனையின் வெளியே இருந்த மாணவர்களுக்கும் அஜய்யின் உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்தது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சிலர் மகிழ்ச்சியுடன் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

ரூபிகா அஜய்யைப் பார்த்தபடியே,“அஜய்… நீ சொன்ன மாதிரி நியாயம் ஜெயிச்சிருச்சுடா…” என்றாள்.

சூர்யா வெளியே வந்தபோது, அவன் பைக்கிலிருந்து கீழே விழுந்திருந்த இயர் போனைப் பார்த்ததும், கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பாடல் வரிகள் அவன் நினைவுக்கு வந்தன.
“ஒரு தேவதை வந்தது என் வழி தானே…”
அந்த வரி இப்போது அவனுக்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்தது.

Leave a Reply

Categories